இந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி வெளிவந்துள்ள ஆங்கில திரைப்படம்.
வீடில்லாதவர்களுக்காக 1998 முதல் ஆண்டு தோறும் நடத்தப்படும் கால்பந்துப்
போட்டியை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தியா ஷராக் என்பவர்
இயக்கியுள்ள இதற்கு ஃப்ராங்
திரைக்கதை எழுதியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் போட்டி, அந்த ஆண்டு
இத்தாலியிலுள்ள ரோமில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள இங்கிலாந்து அணி
புறப்படுகிறது. அதன் பயிற்சியாளர் வயதானவர். மனைவியை இழந்த சோகத்தை
மறப்பதற்காக பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளார். எப்படியாவது முதல்
பரிசை வென்றுவிட வேண்டும் என்பதே அவரது கனவு. அணியில் உள்ள ஒவ்வொருவரும்
ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள். நாதன் போதை மருந்துக்கு அடிமையாகி வீட்டை
விட்டு துரத்தப்பட்டவன். அதிலிருந்து மீள்வதற்காக மாற்று மருந்து
எடுத்துக்கொண்டிருக்கிறான். இன்னொருவன் தன் சிறு குழந்தையை இரண்டு நாள்
தனியாக விட்டுவிட்டு போனவன். மூன்றாமவன் பெரும் தொகையை வாங்கி அதை
தொலைத்தவன். நான்காமவன் சிரியா-துருக்கியில் நடைபெறும் குர்த் இனப்
போரில் நாடு விட்டு வந்தவன்.
புறப்படுவதற்கு முந்தய நாளில் வின்னி எனும் நபர் பயிற்சியாளர் மாலின்
கண்களில் தென்படுகிறான். அவனது கால்பந்து திறமை அவருக்கு தெரியும்.
அவனையும் தங்கள் அணியில் விளையாட அழைக்கிறார். தான் வீடில்லாதவன் இல்லை
என்றும் தனக்கு வேலை, கார், மனைவி குழந்தைகள் இருக்கின்றன என்றும் கூறி
அவன் மறுக்கிறான்.
ஆனால் அவன் பார்க்கும் பகுதி நேர வேலை அடுத்த சில தினங்களுக்கு இல்லை
என்று தெரிய வந்ததும் அவனும் அணியில் இணைந்து கொள்கிறான்.
வெற்றி பெறும் என்று பேசப்பட்ட தென் ஆப்பிரிக்க அணியில் ஒருவன் வேறு
நாட்டை சேர்ந்தவன் என்பதால் விசா மறுக்கப்படுகிறது. அதிகாரியிடம் வாதாடி
அவர்கள் ரோமிற்கு வரும்போது முதல் நாள் போட்டி முடிந்து விடுகிறது. அதில்
பெறவேண்டிய மூன்று புள்ளிகளை இழந்து விடுகிறார்கள்.
ஜப்பான் நாட்டு அணி வயதானவர்கள், சோர்வானவர்கள் என வித்தியாசமாக உள்ளது.
ஆனால் பயிற்சியாளர் இள வயதுப் பெண். அவள் அவர்களை தனது வலிமையான
அறிவுரையால் உற்சாகமூட்ட முயற்சி செய்கிறாள். ஆனாலும் அவர்கள்
அதையெல்லாம் கேட்காமல் ஊர் சுற்றி பார்த்துவிட்டு அதிக கோல்களை விட்டுக்
கொடுக்கிறார்கள்.
அமெரிக்க அணி முழுவதும் பெண்களால் ஆனாது. அதில் ஒரு பெண் அமெரிக்காவில்
தஞ்சமடைந்திருக்கும் அகதி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் குடியுரிமை
கிடைக்கும்.
இப்படி பலதரப்பட்ட அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணியின் நாதனும்
வின்னியும் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். ஒரு போதை நபருடன் தங்க
முடியாது என்று கூறி அவன் பூங்கா பெஞ்சில் உறங்குகிறான். இதனால்
மனமுடைந்த நாதன் போட்டி முடியுமுன்னே இங்கிலாந்து திரும்பி விடுகிறான்.
அணியினர் வின்னியை கோபித்துக் கொள்கின்றனர். அவனும் வருத்தத்தில் நகரை
சுற்றி வருகிறான். ஏற்கனவே பெரிய அணியில் உறுப்பினராக இருந்தது, அதில்
தான் சரியில்லை என்று விலக்கப்பட்டது, இப்போது தன்னால் ஒரு அணி
பாதிக்கப்படுவது எல்லாம் சேர்ந்து அவனை வருத்துகிறது.
இறுதியில் இங்கிலாந்து மூன்றாம் இடத்தையே பெறுகிறது. அமெரிக்க அணி
தோற்றாலும் அந்தப் பெண் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்படுகிறாள். ஒரு
பல்கலைகழகம் அவளை ஏற்றுக்கொள்கிறது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க
அணியில் வின்னி சேர்த்துக் கொள்ளப்படுகிறான். அது வலிமையான இத்தாலி அணியை
வெல்கிறது.
படத்தில் சில பாத்திரங்கள் சிறப்பாக படைக்கப்பட்டிருக்கின்றன. போதைக்கு
ஆளான நாதனின் ஒரு வெகுளியான தோற்றம், அவன் தாயாரின் அன்பு, இதற்கு
நேர்மாறாக வின்னியின் இறுக்கமான உணர்வுகள், வீடில்லாதவர்களைவிட தான்
உயர்ந்தவன் என்கிற ஈகோ, இறுதியில் தன் மகள் தான் போற்றும் மனிதர் தன்
தந்தைதான் என்று விழாவில் பேசியது போன்றவை சிறப்பாக உள்ளன. அதேபோல்
வாதாடி வாதாடியே தன் அணிக்கு எல்லாவற்றையும் சாதகமாக்கும் தென்
ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக வரும் சற்று நகைச்சுவை கலந்த
பாத்திரம். போட்டியின் ஒருங்கிணைப்பாளராக வரும் இத்தாலியப் பெண்
பாத்திரம் கலகலப்பான விதத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம்
இங்கிலாந்து பயிற்சியாளருக்கு அறிவுரை கூறும்போது அவர் பக்குவப்பட்ட
நபராகவும் இருக்கிறார்.
வீடில்லாதவர்கள் என்பவர்களை வெறும் ‘கருப்பு வெள்ளையாக பார்க்கக்கூடாது’;
அவர்கள் பலதரப்பட்டவர்கள் என்கிறார்கள் இந்த படக்குழுவினர். உண்மை
நபர்களின் கதை அடிப்படையிலேயே இந்த பாத்திரங்கள்
படைக்கப்பட்டிருக்கின்றனவாம்.
குர்த் இனப் போரில் எதிரெதிர் அணியில் சண்டையிட்ட இருவரில் ஒருவர்
இத்தாலி அணியிலும் இன்னொருவர் இங்கிலாந்து அணியிலும் உள்ளனர். எனவே
அந்தப் போட்டியில் தான் விளையாட முடியாது என்று சொல்லும் இங்கிலாந்து
வீரர் தன் அணி தோற்பதை பார்க்க முடியாமல் விளையாடுகிறார். போட்டியின்
முடிவில் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொள்கின்றனர். மனிதனை போர்
பிரிக்கிறது; விளையாட்டு இணைக்கிறது என்று காட்டுகிறார்கள்.
வீடில்லாதவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் கால்பந்துப் போட்டி ஒரு
பகுதிதான் என்று அதை நடத்தும் கழகம் கூறுகிறது.
உண்மையில் வீடில்லதவர்களின் பிரச்சினை மிகப் பெரியது. உலகில் 15
கோடிப்பேர் வீடில்லாதவர்கள்.(மக்கள்தொகையில் 2%). சரியான
வீடில்லாதவர்கள். 160 கோடி.(மக்கள்தொகையில்20%) . வீடில்லாதவர்கள்
கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் 235000, ஒரு இரவில் ஆஸ்திரேலியாவில் 120000,
இந்தியாவில் 17.7 இலட்சம் பேர், பிலிப்பைன்ஸில் 3.2% பேரும் பிரிட்டனில்
280000 பேர் . தென் ஆப்பிரிக்காவில் 60% பேர் குடிசைகளிலும்
வாழ்கிறார்கள். வீடில்லதவர்களில் 30% பேர் ஐரோப்பாவில் உள்ளனர்.
,சீனாவில் 26 இலட்சம்பேர் வீடில்லாதவர்களாக கருதப்படுகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் போர் மட்டுமோ போதைப்பழக்கம் போன்ற தனி நபர்
பிரச்சினைகள் மட்டுமோ அல்ல. உலகின் செல்வம் ஒரு சிலர் கைகளில்
குவிவதுதான். அதை இது போன்ற படங்கள் வெளிச்கதிற்குக் கொண்டு வராது.
வீடற்றவர்களின் அவலத்தை சித்தரிப்பதும் இதன் நோக்கம் இல்லை. மனிதக்
குறைபாடுகளையும் மாண்புகளையும் சுட்டிக்காட்டுவதை பாரட்டலாம். மேலும்
பிரச்சினையை முன்னுக்குக்க் கொண்டு வருவதற்கு இப்படிப்பட்ட கலைப்
படைப்புகள் உதவலாம்.
எழுதியவர்
ரமணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.