உலகிலேயே சிறந்த கவிதை – நா.வே.அருள்



விவசாயியின் சாபம் மண்ணாலானது

ஆனாலவன் அவ்வளவு லேசில் சபிப்பதில்லை

 

வெளியே தெரிவதில்லை

எனினும்

விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல

அவன் ரௌத்ரம் பிரம்மாண்டமானது

 

காட்சிகளின் விதைகளாக இருக்கும் அவனது

கருவிழிகளிலிருந்துதான்

விருட்சங்கள் வேர்விடுகின்றன.

 

உலகிலேயே சிறந்த நிலப்பரப்பு

விவசாயியின் இதயம்தான்.

 

அவனது நெற்றியின் தேசியக் கொடியில்தான்

அசோகச் சக்கரங்கள் உருள்கின்றன.

 

அன்பு ஊற்றெடுக்கும் விவசாயியின் கிணற்றில்

பாசனத்துக்குப் பஞ்சமேயில்லை.

 

உலகிலேயே மிகச் சிறந்த கவிதை

வயல்களின் தாள்களில் விவசாயி எழுதும்

உழவுதான்.

 

விவசாயி எழுதும் கவிதைகளைப் படிக்காமலேயே

கிழித்துப் போடுபவன்தான்

உலகிலேயே மோசமான சர்வாதிகாரி.

 

விவசாயிக்கு

எவ்வளவு பெரிய மலைப்பாம்பும்

ஒரு மண்புழுதான்.

 

சேறுதான் விவசாயியின் சிம்மாசனம்

புரியாதவர்களுக்கோ புதைசேறு

பூமியைப் புரட்டிப்போட வரும் புல்டோசர்களைக் கூட

அது புசித்துவிடும்!

நா.வே.அருள்