பெருவெடிப்பும் பிரபஞ்ச வெளியும் (The Big Bang and the Universe)
அறிவியலாற்றுப்படை
பாகம் 2
உலகம் பிறந்தது எனக்காக என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் பாட முடியாத காலம் அது. அவ்வளவு ஏன்? இயற்கை என்ற ஒன்று இல்லாத காலம். கரப்பான் பூச்சியோ ஆமையோ மனிதர்களின் இயலாமையைப் பார்த்து பரிகசிக்காத காலம். கடல் இல்லை. மலை இல்லை. காடு இல்லை. ஒன்றுமே இல்லை. அவ்வளவு ஏன் பூமியோ சூரியக்குடும்பமோ, பால்வீதியோ இல்லை.இவை எல்லாம் பிறக்காத அந்த நேரத்தில் நடந்தவற்றை அறிவியல் கணித்துள்ளது. ஆம் பெருவெடிப்பு என்று வர்ணிக்கப்படும் அந்த சம்பவமே இன்றைக்கு நாம் வாழும் பூமி, சூரியக்குடும்பம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் மூலகாரணம்.
சரி அந்த சம்பவம், சம்பவம் என்று சொல்வதைப் பற்றி இந்த பகுதியில் கொஞ்சம் பார்ப்போம். அதற்கு முன்பாக அறிவியலின் இரண்டு முக்கியமான கோட்பாடுகளைப் பார்ப்போம். அவ்வப்போது அறிவியலை சரியான திசைவழியில் செல்ல உதவியவை இவை.
ஒன்று ஆற்றல் மாறாக்கோட்பாடு. இன்றைக்கு செல்லிடப்பேசியில்லா வாழ்க்கை சாத்தியமில்லை என்று சொல்லுமளவுக்கு ஆகியுள்ளது. செல்லிடப்பேசிக்கு சார்ஜ் இல்லையென்றால் நாம் பாதி சார்ஜில்லாமல் ஆகிவிடுகிறோம். செல்லுக்கு சார்ஜ் மின்சாரத்திலிருந்து கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்கும் மின்சாரம் அணுவிலிருந்தோ,நீரிலிருந்தோ,நிலக்கரியிலிருந்தோ கிடைக்கிறது அல்லவா. ”ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒருவகை ஆற்றலானது மற்றொரு ஆற்றலாக மாறும். என்பதே ஆற்றல் மாறாக் கோட்பாடு”. அறிவியல் ஒருவகை ஆற்றலை மறுவகை ஆற்றலாக மாறுவதாலேயே பிரபஞ்சத்தில் பலவும் இயங்குகின்றன. நடுவில் மனிதர்களும் அதனைப் பயன்படுத்தக் காலம் முழுவதும் கற்றுக்கொடுத்துகொண்டு வருகின்றனர்.
மற்றொரு கோட்பாடு பொருண்மை அழியா விதி. அதாவது இன்றைக்குப் பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் அனைத்துவகையான பொருண்மையையும் முற்றிலுமாக எந்த சக்தியாலும் அழித்துவிடமுடியாது. அதுபோலவே ஆக்கவும் முடியாது. முப்பது கோடி மக்கள் வாழ்ந்த இந்தியாவில் இன்றைக்கு 120 கோடி மக்கள் வாழ்ந்தாலும் பூமி அனைவரையும் தாங்குவதற்கான காரணம் இதுவே.
அதாவது வேதியியல் வினையில் ஈடுபடும் பொருட்களின் நிறையும் அவ்வாறு வினையால் உருவாகும் பொருட்களின் நிறையும் சமமாகவே இருக்கும் என்பதே பொருண்மை அழியா விதி. இந்த விதியை ஆண்டன் லாவாய்சியர் என்பவர் பல்வேறு ஆய்வுகள் செய்துகாட்டி விளக்கினார்.
இன்றைக்கும் பாடநூல்களில் இருக்கும் ஒரு பிரபலமான சோதனையை வைத்து இதனைப் புரிந்துகொள்ளலாம். 5 கிராம் பேரியம் குளேரைடு கரைசலை 100 மி.லி நீரில் கரைத்து கரைசல் ஒன்றைத் தயார் செய்துகொள்ளவேண்டும். சிறிதளவு சோடியம் சல்பேட் கரைசலையும் தயாரித்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசல்களில் பேரியம் குளேரைடு கரைசலை ஒரு சோதனைக் குழாயிலும், சோடியம் சல்பேட் கரைசலை ஒரு கூம்புக்குடுவையிலும் எடுத்துக்கொள்வோம்.கூம்புக்குடுவையில் சோதனைக்குழாயை ஒரு நூல் கொண்டு கட்டித் தொங்கவிடுவோம். இந்த அமைப்பின் நிறையை அளவிட்டுக்கொள்வோம். பின்னர் கூம்புக்குடுவை மற்றும் சோதனைக்குழாய் இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலக்கச் செய்து வேதிவினையில் ஈடுபடச் செய்வோம். வேதிவினைக்குப் பின்னர் குடுவையின் நிறையை அளவிடுவோம். இரண்டும் சமமாகவே இருக்கும். இந்த அடிப்படையில் சூழலில் இருக்கும் பொருண்மை எப்போது நிலையாகவே இருக்கும் என்பதே விதி.
சரி இன்றைக்கு நாம் வாழும் பூமி அது அமைந்துள்ள சூரியக்குடும்பம், சூரியக்குடும்பம் அமைந்துள்ள பால்வீதி. பால்வீதி போல பல்வேறு விண்மீன் திரள்கள், கணக்கிலடங்கா எனைய விண் பொருட்கள் இவையெல்லாம் பொருண்மையால்தான் ஆனவை. சரி இந்த பொருட்களுக்கான பொருண்மை எங்கிருந்து வந்தது. அதாவது எதுவுமே இல்லாத நிலையில் உலகில் பொருட்கள் எங்கிருந்து தோன்றின. இந்த கேள்விக்கு விடை தெரியாமல் அறிவியல் திண்டாடிக்கொண்டிருந்தது.
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான பஞ்சாயத்து அது. இன்றைக்கிருப்பது போல எண்ணற்ற தனிமங்களோ அல்லது மூலக்கூறுகளோ கண்டறியப்படவில்லை. அவ்வளவு ஏன் கணக்கற்ற விண்மீன் திரள்கள் இல்லை. மொத்தத்தில் எதுவுமே இல்லாத சூனிய நிலை. சூனியம் என்று சொன்னால் பில்லி சூனியம் என்று நினைவுக்கு வந்துவிடப்போகிறது.
இது சுமார் 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.அப்போது பிரபஞ்சம் மிகவும் வெப்பமான தீப்பிழம்பாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. அதில் ஒரு சமச்சீரில்லாத தன்மையும் நிலவியது. இந்த காலகட்டத்தில் ஒரு நாள் டிராபிக் போலீசில்லாத சிக்னலில் வாகனங்கள் அதனதன் இஷ்டத்துக்கு இயங்குவது போல விரிவடையத் தொடங்கியது. பெருவெடிப்பாக நிகழ்ந்த இந்த வெப்பம் மிகுந்த நிகழ்வினை பெருவெடிப்பு என அறிவியலாளர்கள் வர்ணிக்கின்றனர். இவ்வாறு வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றின. பிறகு ஈர்ப்பு விசை தோன்றியது. அணுத்துகள்களான குவார்க்குகளும் தோன்றின. இதன்மூலம் புரோட்டான், நியூட்ரான் போன்றவைகளும் தோன்றின. இதன்பின்னர் ஹைட்ரஜன், ஹீலியம் இலித்தியம் போன்றவை உண்டாகின. இப்படியானவர்கள்தான் பிரபஞ்சத்தின் சீனியர்கள். இதற்குப் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் விண்மீன்களும் விண்மீன் திரள்களும் தோன்றின. அப்படி தோன்றிய ஒரு விண்மீன் திரள்தான் நமது பால்வீதி மண்டலம். அந்த பால்வீதியில் ஒரு புள்ளிதான் நமது சூரிய குடும்பம். அந்த சூரிய குடும்பத்தில் ஒரு கோள்தான் நமது பூமி. அதிலுள்ள பல்வேறு கண்டங்களில் ஆசியாவில்,இந்தியாவில்,தமிழ்நாட்டில், செங்கற்பட்டில் ஒரு கிராமத்தில்தான் நாம் வாழ்கிறோம். இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என இப்போது விளங்கியிருக்கும்.
சரி முதலில் பார்த்த இரண்டு கோட்பாடுகளுக்கு மீண்டும் வருவோம். ஆற்றல் மாறாக் கோட்பாட்டின்படி இந்த பிரபஞ்சம் ஒன்றிலிருந்து மற்றொன்றாக பரிணமித்தது. சரி பொருண்மையேயில்லாத இடத்திலிருந்து இவை எவ்வாறு பரிணமித்தன என்ற கேள்விக்கும் அறிவியல் பதிலளித்துவிட்டது. இன்றைக்கு CERN உள்ளிட்ட ஆய்வகங்களில் நடைபெற்றுவரும் ஆய்வுகள் பதிலளித்துவருகின்றன.
பிரபஞ்சத்தின் அளவை விரிவாகக் காணவே இவ்வளவு அறிவியலை விளக்கவேண்டியதாக போனது. அறிவியலின் பரிணாமவளர்ச்சியில் மனிதர்களின் வரவிற்குப் பிறகு மனிதர்களின் சுயநலம் அதிகமானாலும் அறிவியல் பொதுநலம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அறிவியல் ஒரு நேர்மையான சேவகன். சரியாக இயக்கும்வரை சரியான பலனே அளித்துக்கொண்டு வருகிறது. அறிவியல் காலம் முழுவதும் போராடுவதை மனிதர்கள்தான் எழுதி வைத்துள்ளனர் என்பதும் கூடுதல் சுவாரஸ்யமான செய்தி. அடுத்து பூமியின் கதையைப் பார்போம்.
படை எடுப்போம்….
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: தொடர் 1: அறிவியலாற்றுப்படை – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Nice narration. Good Going.
பேரண்டத்தின் கதை எப்போதுமே என்னை வசீகரிப்பது. சிறப்பான அடுத்த அடி.
Pingback: அறிவியலாற்றுப்படை 3: பூமியின் கதை - என்.மாதவன்