The Biggest Little Farm என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். கிளாசிக் நாவல்களை வாசிக்கையில் ஏற்படும் மன எழுச்சிக்கு நிகரான உணர்வினை அடைந்தேன். ஒரு டாகுமெண்டரி திரைப்படம் என்பதைத் தாண்டி இயற்கையோடு இணைந்து வாழுவதற்கான ஆதார பாடம் என்றே இதனைக் கூற வேண்டும்.
கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் வசித்து வந்த ஜான் மற்றும் மோலி செஸ்டர் நகரவாழ்க்கையிலிருந்து விலகி புதிய பாதையில் பயணிக்க முயன்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் வளர்ப்பு நாய் டோட்.
ஜான் ஒரு ஒளிப்பதிவாளர். கானுயிர்கள் பற்றிய ஆவணப்படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். மோலி செஸ்டர் ஒரு சமையற்கலைஞர். மரபான முறையில் ஆரோக்கிய உணவு களைச் சமைப்பதில் முன்னோடி. அதற்காக அவர் பல்வேறு விதமான காய்கறிகள் பழங்கள் கீரைகளைத் தேடி அலைகிறார். பெருநகர வாழ்க்கையில் இவை சரியாகக் கிடைப்பதில்லை என்பதால் தாங்களே ஒரு தோட்டம் அமைக்கலாம் என்று முயற்சிக்கிறார்
ஒரு நாள் ஜான் இருநூறுக்கும் மேற்பட்ட நாய்களைப் பராமரித்து வரும் ஒரு பெண்ணைப் பற்றிய ஆவணப்படத்திற்காக ஒளிப்பதிவு செய்யச் செல்கிறார். சென்ற இடத்தில் டோட் என்ற கறுப்பு நாய் பிடித்துப் போகவே அதைத்தானே வளர்ப்பதாக வீட்டிற்கு அழைத்து வருகிறார் . அந்த நாயை தங்களின் பிள்ளை போலவே அவர்கள் வளர்க்கிறார்கள்.
இந்த நாய் அச்சப்படுத்துகிறது. பயங்கரமாகக் குரைக்கிறது என அண்டைவீட்டார் காவல்துறையில் புகார் தருகிறார்கள். ஜானும் மோலியும் அந்த நாயை தங்களுடன் வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வேறு இடம் மாற முடிவு எடுக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வெளியே ஒரு மணி நேரப் பயணத்தில் கட்டாந்தரையாக உள்ள நிலத்தை விலைக்கு வாங்குகிறார்கள். 240 ஏக்கர் நிலமது. அந்தக் கறட்டு நிலத்தில் என்ன செய்ய முடியும் என அவர்களுக்குத் தெரியவில்லை. அந்த நிலத்தின் ஊடே சிறிய நீர்த்தேக்கம் காய்ந்து போயிருந்தது. கைவிடப்பட்ட பாழ்நிலம் போலிருந்தது அந்த இடம்.
தான் விரும்பியபடியே பெரிய பண்ணை ஒன்றை அங்கே உருவாக்க வேண்டும் என மோலி நினைத்தார். அந்தப் பண்ணையில் விதவிதமான பழ மரங்கள். ஆடு மாடு கோழி வாத்து உள்ளிட்ட பிராணிகள் யாவும் வசிக்க வேண்டும் என விரும்பினார்.
அந்தக் கட்டாந்தரையில் எதுவும் முளைக்காது, முட்டாள்தனமான முயற்சி என அந்தப் பகுதி விவசாயிகள் சொன்னார்கள். ஆனால் ஜானும் மோலியும் தங்களால் அங்கே பெரிய பண்ணையை உருவாக்க முடியும் என நம்பினார்கள். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள்.
மரபான முறையில் நிலத்தைச் சீர்திருத்தம் செய்வதற்கு ஆலோசகராக ஆலன் யார்க் என்ற இயற்கை வேளாண் அறிஞரை அழைத்து வருகிறார்கள். அவர் நிலத்தைப் பரிசோதித்து மண் உயிர்ப்புடன் இல்லை. முதலில் அந்த மண்ணை விழிப்படையச் செய்ய வேண்டும். ஆகவே நிலத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை உருவாக்குவதற்கான பணிகளைத் துவக்குவோம் என்கிறார்.
கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி நிலத்தினைப் பதப்படுத்துகிறார்கள். இயற்கையான உரங்களைத் தயாரித்து நிலத்தில் போட்டு மண்ணை வளப்படுத்த ஆரம்பிக்கிறார் ஆலன். இந்தப் பணியினை முழுமையான ஆவணப்படுத்தியிருக்கிறார் ஜான்.
நிலம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பெற ஆரம்பிக்கிறது. அந்த நிலத்தில் அவர்கள் 75 வகையான பழ மரங்களை நடவு செய்கிறார்கள் அத்தோடு கோழி, வாத்து, ஆடு, மாடு என வெவ்வேறு விலங்குகளைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். எம்மா என்ற பெண் பன்றியும் அங்கே வந்து சேருகிறது.
அந்தப் பண்ணை எப்படிச் சீராக வளர்ச்சியடைகிறது. அந்த வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள். அதற்கு அவர்கள் கண்டறிந்த தீர்வுகள் இவற்றையே ஆவணப்படம் விவரிக்கிறது.
ஜான் மற்றும் மோலியோடு நாமும் அந்தப் பண்ணை உருவாக்கத்தின் சாட்சியாகிவிடுகிறோம் என்பதே இதன் தனிச்சிறப்பு.
ஒரு நாயினைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் மேற்கொண்ட புதிய வாழ்க்கை பயணம் இன்று பெரும் பண்ணையாக உருக்கொண்டுள்ளது. ஜானும் மோலியும் இந்தப் பண்ணைக்காகக் கடினமாக உழைக்கிறார்கள். மெல்ல அவர்களின் கனவு நனவாகிறது.
பண்ணையில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்பிரச்சனை உருவாகிறது. வாத்து கழிவுகளால் நீர்த்தேக்கம் மாசுபடுகிறது. இதனால் மீன்கள் இறந்துபோகின்றன. இதற்கு மாற்றாக வாத்துகளை வெளியே கொண்டுவிடுகிறார்கள். வாத்துகள் நத்தைகளைப் பொறுக்கி தின்கின்றன. இதனால் நத்தைகள் பெருகுவது கட்டுப்படுகிறது. பண்ணை என்பது பல்வகை உயிரினங்கள் ஒன்றாக வாழும் ஓர் உயிர் சுழற்சி என்பதைச் சரியாகக் காட்டுகிறார்கள்.
பண்ணைக்குப் புதிய விருந்தினராக வரும் எம்மா என்ற பன்றி 17 குட்டிகளை ஈனுகிறது. அந்தப் பன்றியும் அதன் குட்டிகளும் வளர்கின்றன. இந்தப் பன்றியால் புதிய பிரச்சனை உருவாகிறது. அதைச் சரி செய்கிறார்கள். திடீரென ஓநாய் புகுந்து கோழிகளைக் கொன்று குவிக்கிறது. அதைக் கண்டறிந்து ஓநாயை விரட்டி சுடுகிறார் ஜான்.
பண்ணையில் ஏதாவது புதிய பிரச்சனை தோன்றும் போதும் இரண்டடி பின்னால் தள்ளி நின்று நிதானமாக அந்தப் பிரச்சனை எப்படி உருவானது என்று யோசிப்பேன். வழி தானாகக் கிடைத்துவிடும் என்கிறார் ஜான்.
எம்மா என்ற பெண் பன்றிக்கும் க்ரீஸி என்ற சேவலுக்குமான நட்பு அலாதியானது. பன்றியின் மீது ஏறி நிற்கும் சேவலின் புகைப்படத்தைப் பன்றி லாயத்திலே ஒட்டிவிடுகிறாள் மோலி..
திடீரென ஒரு ஆண்டு மழையில்லாமல் போகிறது. மரங்கள் காய்ந்து போகின்றன. இன்னொரு முறை பறவைக்கூட்டம் பழங்களைக் கடித்து நாசமாக்கி விடுகிறது. அத்தனை பழங்களையும் கோழிகளுக்கு உணவாகப் போடுகிறார்கள்
கோழி முட்டை துவங்கி பழவகைகள் வரை விற்பனைக்குக் கொண்டு போகிறார்கள். பண்ணை வாழ்க்கை அவர்களுக்கு இயற்கையைப் புரிந்து கொள்ள வைப்பதுடன் உயிர் சுழற்சியின் ஆதாரத்தை அறியச்செய்கிறது.
இயற்கை வேளாண்மை வழிகாட்டியான ஆலன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார். அவர் சொல்லும் ஆலோசனைகள். மாற்று முயற்சிகளை அப்படியே நடைமுறைப்படுத்துகிறாள் மோலி. பண்ணை கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் கொள்கிறது. ஆனால் பாதியில் ஆலன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார். இந்த இழப்பை மோலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பண்ணையின் ஒரு பகுதிக்கு ஆலன் பெயரைச் சூட்டுகிறாள்.
ஒரு முறை காட்டுத்தீ பண்ணையைத் தாக்குகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் எல்லா விலங்குகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். அவர்களும் சொற்ப பொருட்களுடன் நிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள். பின்பு காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டபிறகு அவர்கள் பண்ணைக்குத் திரும்புகிறார்கள்
இன்று அந்த இடம் உலகின் அழகிய பண்ணையாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் அதைக் காண வருகிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பண்ணையில் இப்போது 200 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் இருக்கின்றன. பறவைகளின் எண்ணிக்கையையும் மிகவும் அதிகரித்துள்ளது. 140க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அங்கே வந்து போகின்றன.
இந்த ஆவணப்படம் நம்மாழ்வாரைப் பற்றிய நினைவுகளை மேலோங்கச் செய்தது. அவரும் இது போலவே வறண்ட நிலத்தில் அழகான பண்ணையை உருவாக்கினார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக வறண்ட கரிசல் நிலத்தில் எனது கிராமவாசிகள் எப்படி விவசாயம் செய்திருப்பார்கள் என்றும் யோசிக்க வைத்தது.
கரிசல் நிலத்திலே வீடு அமைத்துத் தங்கிக் கொண்டு விவசாயம் பார்த்த குடிகளின் கடந்தகாலம் இப்படி முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் முழுமையாக மனித உழைப்பை மட்டுமே நம்பிய கரிசல் விவசாயிகள் கண்டறிந்த வேளாண் முறைகளும் மரபான அறிவும் பாசன முறைகளும் அப்படியே மறைந்துவிட்டது வேதனைக்குரியதே.
இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் வானில் ஒளிரும் பால்வீதியைப் பார்த்தபடியே ஜான் இந்தப் பிரபஞ்சத்தின் அழகைப் பற்றியும் தன் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தும் சிறுதுளிகளே என்பதையும் அழகாக எடுத்துச் சொல்கிறான்.
விவசாயத்திற்குத் திரும்புதல் என்பது ஒரு கனவு. பெருநகர வாசிகள் பலருக்கும் அந்தக் கனவு இருக்கவே செய்கிறது. ஆனால் அது எளிதான விஷயமில்லை. விவசாயம் சவாலானது, முழுமையாக உங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே சாத்தியம் என்பதை இப்படம் புரிய வைக்கிறது. கைகூடாத கனவு என்ற ஒன்றே கிடையாது. ஜானும் மோலியும் தங்களின் கனவினை நனவாக்கியவர்கள் என்ற நம்பிக்கையைப் படம் உருவாக்குகிறது.
தானே ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் தனது பண்ணை வாழ்க்கையைத் துவங்கிய நாள் முதல் இன்றுவரை முழுமையாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் ஜான். எத்தனை எத்தனை அழகான காட்சிகள். தேனீக்கள் கூட்டமாக வருவதும், பறவைக்கூட்டங்களும் இரவில் நடமாடும் குழி எலிகளைப் பற்றிய காட்சிகளும், ஓநாய் வேட்டையும் அவர் ஒரு கானுயிர் ஒளிப்பதிவாளர் என்பதை அடையாளப்படுத்துகிறது.
மோலி ஒரு காட்சியில் சொல்கிறாள்
“எங்கள் பண்ணை வாழ்க்கையில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது, இந்த ஒத்திசைவும் லயமும் தான் பண்ணையை உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறது. இயற்கையின் இந்த லயமே பண்ணை வாழ்வின் ஆதாரம்“
பண்ணை வாழ்க்கையின் லயத்தை மட்டுமில்லை. தன் வாழ்வின் லயத்தையும் ஜானும மோலியும் கண்டறிந்துவிட்டார்கள் என்பதே இப்படம் சொல்லும் உண்மை.
-நன்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளம்