The work of tamilization of the capital book that overcame the age of three-quarters of a century

மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் தமிழில் இருவரால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது. தியாகு ஆயுள்சிறைக் கைதியாக இருந்த சமயத்தில் அதனை மொழிபெயர்த்தார். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகத்தில் பணியாற்றிவந்த தோழர் கிருஷ்ணையா தமிழகம் வந்தபின் என்சிபிஎச் நிறுவனம் அவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு மூலதனத்தை வெளியிட்டது.

இதேபோன்று தோழர் க.ரா.ஜமதக்னி அவர்கள் 1981இலேயே மூலதனத்தின் 6 தொகுதி களையும் தமிழாக்கம் செய்தார். 1998இல் அது வெளியானது. எனினும் பல தோழர்களுக்கு ஜமதக்னி மொழியாக்கம் செய்திருப்பது இன்றளவும் தெரியவில்லை.மூலதனம் நூலை மொழிபெயர்த்த - ஜமதக்னி (மதிப்புரை ச.வீரமணி ) - Book Day

தோழர் ஜமதக்னி 74 வயதுக்கும் மேல் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கம்யூனிஸ்டுக்கே இருக்கக்கூடிய வைராக்கியத்துடன் பத்தாயிரம் பக்கங்களை நான்கு ஆண்டுகளில் எழுதி முடித்திருக்கிறார். அவரது அயராத பணி குறித்து ‘மூலதனம்’ தமிழ் வெளியிட்ட பதிப்பாசிரியர்களின் ஒருவரும் அவருடைய மருமகனும், பொருளாதாரப் பேரா சிரியருமான மு.நாகநாதன், மூலதனம் நூலில் கூறியிருப்பதிலிருந்து சில பகுதிகளை காண்போம்.

இரண்டு மேதைகளின் சாதனை

1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி அதிகாலையில் இரண்டு மணிக்கு மார்க்ஸ் மூல தனத்தின் முதல் தொகுதி அச்சுப்பணிகளைத் திருத்தி முடித்தார். மூலதனத்தின் முதற் தொகுதி வெளியிட்ட பிறகும்கூட அதைத் தொடர்ந்து திருத்திக் கொண்டிருந்தார். பயிற்சிமிக்க, ஆழ்ந்த புலமைமிக்க, வாசகர்களின் கண்களுக்குக்கூட தெரியாத தகவல்கள் மார்க்சுக்கு மட்டுமே தெரிந்தன. அந்த அளவுக்கு நுண்மான் நுழை புலம் மிக்கவராக மார்க்ஸ் விளங்கினார். மார்க்சு டைய இப்படைப்பிற்கு ஏங்கல்ஸ் எப்படியெல்லாம் உதவினார் என்பதை மார்க்ஸ் எங்கல்சுக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறியமுடிகிறது.

“இத்தொகுதியின் பணி முடிந்துவிட்டது. உங்கள் உதவியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களு டைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதி களையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான பணி களை என்னால் ஒரு போதும் செய்திருக்க இயலாது. நன்றிப்பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவு கிறேன.”

ஏங்கெல்சுக்கும் மார்க்கக்கும் இருந்த நட்பு நெஞ்சத்து அகநக நட்ட நட்பு போன்றது ஆகும். நவில்தொறும் நூல் நயம் போல வளர்ந்த அப்பண்பாளர்களின் நட்பின் காரணமாகத்தான் மூலதனம் உலகிற்கு கிடைத்தது எனில் மிகை யாகாது. நூல்களை நவின்று பயின்ற இரண்டு மேதைகளின் சாதனையே மூலதனமாகும். மார்க்சால் எழுதப்பட்ட மிகைமதிப்பின் மூன்று தொகுதிகளும் சோவியத் ஒன்றியத்தில் பாதுகாக்கப்பட்டு மாஸ்கோவில் உள்ள மார்க்சிய லெனினிய ஆய்வு மையத்தால் 1963ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு 1968ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மார்க்சின் பொருளியல் திறனாய்வின் வெளிப்பாடே மிகைமதிப்பாகும்.

74 வயதில்…

இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆறு நூல்களையும் மார்க்சிய சிந்தனையாளர் க.ரா. ஜமதக்னி 1977ஆம் ஆண்டு மொழி பெயர்க்கத் தொடங்கினார். தினமும் பக்கத்திற்குப் பக்கம், வரிக்குவரி மொழிபெயர்த்து பலமுறைகள் என் போன்ற பொருளாதாரம் பயின்றோரிடம் விளக்கம் அளித்து மொழியாக்கத்தைத் தொடர்ந்தார். க.ரா. ஐமதக்னி தன் கைப்பட 10,000 பக்கங்கள் எழுதினார். அவர் இப்பணி யைத் தொடங்கும்போது அவருக்கு வயது 74. அவர் இப்பணியை முடித்தபோது அவருக்கு வயது 78 நிறைவுற்றது. 1930ஆம் ஆண்டில் உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்றபோது சென்னை மத்திய சிறையில் பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலுடன் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றவர். மார்க்சிய நெறியினை அவரிடம்தான் முதன்முதலாகக் கற்றதாகப் பலமுறை ஐமதக்னி கூறியுள்ளார். 1936இல் காங்கிரசு சோசியலிஸ்ட் கட்சி உருவான போது வட ஆற்காடு மாவட்டத்தில் பொதுக் காரிய தரிசியாக இருந்தவர். கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானபோது அதன் நிறுவன உறுப்பினராக வும் இருந்து கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்தவர். 1938இல் மார்க்சியம் அல்லது சமூக மாறுதலின் விஞ்ஞானம், இந்தியாவில் சோசலிசம், அபேத வாத பாட்டுகள் ஆகிய நூல்களை எழுதி வெளி யிட்டார்.

1941ஆம் ஆண்டிலேயே மூலதனம் முதல் புத்தகத்தைச் செம்மையாகப் பயின்று சிறையிலி ருந்த அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர் களுக்கும் மார்க்சிய வகுப்பை எடுத்தவர். அதே ஆண்டில் காமராசர் கோவை சிறையிலிருந்த போது திரு. ஐமதக்னி நடத்திய மூலதன வகுப்பில் கலந்துகொண்டதாக நெருக்கடி நிலையின் போது நானும் திரு. ஜமதக்னி அவர்களும் தலை வர் காமராசரைச் சந்தித்தபோது நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜமதக்னி அவர்கள் சமஸ்கிருதம், இந்தி, ஆங்கில மொழிகளில் புலமை மிக்கவராக விளங்கினார். க.ரா. ஜமதக்னி 9 ஆண்டுகள் சிறையில் வாழ்ந்தவர். அவரது மனைவி லீலாவதி 4 ஆண்டு களும், அதுபோன்றே அவரது மாமியார் சட்ட மன்றத்தில் இடம்பெற்ற முதல் பெண்மணி கடலூர் அஞ்சலை அம்மாள் 8 ஆண்டுகளும், மாமனார் முருகப்பா 6 ஆண்டுகள் என்றும் குடும்ப உறுப்பி னர்கள் அனைவரும் வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் கொடுமைகளை மகிழ்வுடன் ஏற்றவர்கள். இந்த பெரும் பெருமையை க.ரா. ஜமதக்னியும் அவரது குடும்பத்தினரும் பெற்றுள்ளனர் என்பதை சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நினைவு கூர்வது சாலப்பொருத்தமே.

 

ஓய்வென்பது படிப்பதே…

பெரியவர் க.ரா. ஜமதக்னி நேரத்தை வீணாக்க மாட்டார். காலையிலிருந்து மாலை வரை புத்த கங்களைப் படிப்பது, குறிப்பு எடுப்பது அவரின் அன்றாட நிகழ்ச்சிகளாகும். ஓய்வு நேரம் என்பது அவரின் வாழ்வில் பெரிமேசன் எழுதிய ஆங்கில நூலைப் படிப்பதேயாகும். ஒவ்வொரு படிக்கும் போதும் நூலைப்படிக்கத் தொடங்கிய நாளையும், முடித்த நாளையும் குறிப்பிட்டு, அந்நூலில் உள்ள முக்கிய கதாபாத்திரம் கூறிய முக்கியச் சொற்றொடரை எழுதிவிட்டு க.ரா. ஜமதக்னி என்று கையெழுத்திடுவார். பெரிய ஆங்கில அகராதியில் எந்தெந்த எழுத்திற்கு அதிகச் சொற்கள் என்று எண்ணி முதல் பக்கத்தில் குறித்து வைப்பார். எழுபது அகவையைத் தாண்டிய நிலை யிலும் ஜமதக்னி, காரல் மார்க்சின் மூலதனம் மற்றும் மிகைமதிப்பு நூல்களின் 6 பகுதிகளை யும் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பி னார். என்னிடமும் தன் மகள் சாந்தியிடமும் விவா தித்தார். இரவு பகல் என்று பாராமல் 4 ஆண்டு கள் தொடர்ந்து உழைத்து 10,000 பக்கங்கள் எழுதி மூலதனம் மொழிபெயர்ப்புப் பணியினை முடித்தார்.

அறிவுப் பசிக்கு மார்க்சிய உணவு

அவரிடம் என் நண்பர்களும், மருத்துவர் களும் ஓய்வு எடுத்துக்கொண்டு மெதுவாக எழுதலாமே என்று அடிக்கடி வலியுறுத்துவர். அதற்கெல்லாம் அவர் கூறிய பதில் வருமாறு: “விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தேன். இந்தியா விடுதலை பெற்றது. அப்போராட்டத்தில் சிறை புகுந்தபோது பொதுவுடைமைச் சிற்பியான சிங்காரவேலுவைச் சந்தித்தேன். முதுமைப் பருவத்தில் காச நோயால் அவதியுற்ற சிங்காரவேலருக்குச சிறையில் எல்லாப் பணிகளையும் செய்தேன். அப்போது காங்கிரசு இயக்கத் தலைவர்கள் “சிங்காரவேலு விடம் பேசாதே; உனக்கு விஷத்தை (பொது வுடைமை நெறியை) ஊட்டி விடுவார் என்று கூறுவார்கள். பொதுவுடைமைச் சிற்பியோ சிறை யில் தனக்குத் தரப்பட்ட மாமிச உணவை எனக்கு அன்புடன் அளிப்பார். அறிவுப் பசிக்கு மார்க்கிய உணவை ஊட்டினார். எனவே வாழ்நாள் முடிவதற்குள் காரல் மார்க்சின் மூலதனத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தருவது எனது தலையாய கடமையாகும்.” தாம் கூறியபடியே ஜமதக்னி அவர்கள் மார்க்சின் மூலதனத்தை 1981 சனவரித் திங்களில் மொழிபெயர்ந்து முடித்தார். “எனது பணி இவ்வுலகில் முடிந்து விட்டது” என்றும் அடிக்கடி கூறலானார்.

தமிழுக்குச் செய்யும் தொண்டு நாட்டுக்கு நன்மையல்லவா?

இனி க.ரா. ஜமதக்னி 25.03.1980 தன் நண்பர் தோழர் சண்முகத்திற்கு எழுதிய மடலில். நான் நாட்டிற்கு 1947இல் இருந்து ஒரு தொண்டும் புரியவில்லை என்று சொல்லற்க. தமிழிற்குச் செய்த தொண்டு நாட்டிற்கு நன்மை யல்லவா? உடம்பு உழைப்பை கம்யூனிசத்திற்குக் கொடுக்கவில்லை. உண்மைதான். உடம்பும் வளையாதது ஒரு காரணம். ஆனால் மார்க்ஸிய இலக்கியங்களைப் பயிலாமல் இல்லை. அதன்பயன்தான் மூலதனம் 6 புத்தகங்கள், 3600 பக்கங்கள். 600 பக்கம் இன்னும் பாக்கி. இதற்கிடையே முதற் புத்தகத்தைச் செம்மைப் படுத்திப் பெயர்த்து எழுதி வருகிறேன். என் மருமகன் Dr. PhD. பொருளாதாரம், பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். அவர் அதனைப் பிரசுரம் செய்யவுள்ளார். என் மகள் பொருளாதாரம் M.A. எதிராஜ் கல்லூரியில் பேராசிரியை. ஒரு நொடியும் வீணாக்காமல் எழுதிக் கொண்டி ருக்கின்றேன். இது தமிழ்நாட்டில் எவரும் செய்யாத தொண்டு. இந்த ஏப்ரல் 14 வந்தால் 78ஆம் வயதில் காலை வைக்கின்றேன். இன்றைக்கி ருந்தாரை நாளைக்கு இருப்பர் என்றெண்ண வோதிடமில்லையே என்ற பெரியார் சொல்லை நம் கம்யூனிசம் பொய்யாக்காதே. காரல் மார்க்ஸ் சொன்னார், அழகாக. ஒவ்வொரு நாளும் மனிதன் இடுகாட்டை நோக்கிச் செய்யும் பயணத்தில் 24 மணிகளைக் குறைத்திடுகின்றது. என்று கூறியிருக்கிறார் என்றால் அவருள் கனன்ற அறிவின் தாகம் எத்தகையது என புரிந்து கொள்ளலாம்.

 

நூலின் தகவல்: 

நூல் : மூலதனம்

ஆசிரியர் :  காரல் மார்க்ஸ்

தமிழில் :க.ரா.ஜமதக்னி 

 

எழுதியவர் 

ச.வீரமணி

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *