அறிவியல் கதைகளின் நிறம் கருப்பு!
ஆயிஷா இரா.நடராசன்
அறிவியல் புனைகதை உலகின் இன்றைய முடிசூடா மன்னர்கள் அப்ரோ அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கருப்பின எழுத்தாளர்கள் தான் என்று சொன்னால் நம்புவது கஷ்டம். சென்ற ஆண்டு மட்டும் 12 சர்வதேச விருதுகளில் 10 விருதுகளை அவர்கள் தட்டிச் சென்றார்கள்.. கருப்பின எழுத்தாளர்கள் இனம் அடையாளம் மற்றும் காலனித்துவம் போன்ற கருப்பொருட்களை மட்டுமல்ல அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை என்பதை நோக்கி அறிவியல் தங்களை எடுத்துச் செல்லும்.. என்கிற ஆழமான புரிதலோடு அந்த துறையை வடிவமைத்து வருகின்றனர்.
வரலாறு இதுவரை எத்தனையோ கருப்பின சாதனையாளர்களை இருட்டடிப்பு செய்துள்ளது.. அறிவியலும் அதற்கு சற்றும் விதிவிலக்கல்ல.. அறிவியலின் பிரதான கண்டுபிடிப்புகள் பலவற்றை உண்மையில் கண்டுபிடித்தவர்கள் கருப்பின அறிவுஜீவிகள் தான் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.. உண்மையான தொழுநோய் சிகிச்சை முறையை கண்டுபிடித்த அலீஸ் பால்.. நீராவி படகை வடிவமைத்து பிற்காலத்தின் ரயில்வே துறைக்கு வித்திட்ட பெஞ்சமின் மான்ட்கோமெரி.. டெலிகிராப் என்று நாம் அழைக்கின்ற கம்பியில்லா தந்தி தந்தி முறையை உண்மையில் கண்டுபிடித்த கிராண்ட் வைல்ட் உட்ஸ்.. இப்படி அவர்களிடமிருந்து பல கண்டுபிடிப்புகள் வெள்ளையர்களால் பிடுங்கி கொள்ளப்பட்ட வரலாறு தனியாக எழுதப்பட வேண்டும்.. எடிசனின் மின்சார பல்பு.. கிரஹாம்பெல் தொலைபேசி என்று மிகப்பிரபலமான கண்டுபிடிப்புகளின் பின்னாலும் அவர்களுடைய உதவியாளர்களாக இருந்த கருப்பின மா மனிதர்களின் பெயர்கள் இருப்பதை கொஞ்சம் உற்றுப் பார்த்தால் விளங்கும்.

கருப்பின ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் சமூகக் கட்டமைப்புகளின் விமர்சனத்துடன் சமூக மாற்றத்தின் மீதான அளவற்ற ஆர்வம் முதலீடு ஆகியவற்றின் அடிப்படைகளோடு கருப்பு அறிவியல் புனைகதை வளர்ந்து வருகிறது. அது தொழில்நுட்பத்தால் நுட்பமான முறையில் வளர்த்தெடுக்கப்படுகிறது.. தொழில்நுட்பத்தின் நவீன அம்சத்தை வழிநடத்தவும் செய்கிறது. ஒரு ஆச்சரியமான வித்தியாசம் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டும்.. தொடக்கத்தில் இருந்தே உலகத்தின் ஏனைய அறிவியல் கதையாடல்கள் அம்சங்களோடு கருப்பின அறிவியல் கதையாடல் அம்சம் வேறுபட்டது.. கருப்பு அறிவியல் புனைகதை பெரும்பாலும் தொழில்நுட்பத்தை உள்ளார்ந்த நன்மையாக கருதுவதில்லை. அதற்கு பதிலாக தொழில்நுட்பத்துடனான மனித ஈடுபாட்டை அது தீவிரமாக ஆராய்கிறது.. அது மனிதனின் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு வழங்கப்படுகின்ற தொழில்நுட்பம் சார்ந்த அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.. அதனாலேயே மூன்றாம் உலக நாடு மக்களாகிய நமக்கு அது மிக நெருக்கமாக இருக்கிறது.
தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் ஜெஸ்ஸ் நெவின்ஸ் குறிப்பிடுவது போல கருப்பின ஊக அறிவியல் புனைகதையின் முழுமையான துல்லியமான வரலாற்றை எழுதுவது என்பது சாத்தியமில்லாதது. நம்முடைய இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல.. ஆனால் நம்முடைய திசை எட்டும் தொடருக்காக நான்கு திருப்புமுனை கருப்பின அறிவியல் கதை உலக நாவல்களை திரும்ப வாசித்த அனுபவத்தின் வழியே நான் ஒன்றை புரிந்து கொண்டேன்.. தொடக்க கால அறிவியல் புனை கதை என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட இலக்கிய இதழ்கள் மூலம் வெளியிடப்பட்டதால் பெரும்பாலும் கருப்பின எழுத்தாளர்களுக்கு எத்தகைய வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே அதற்கான காலவரிசையை உருவாக்குவது சாத்தியமில்லை. ஏனெனில் அதன் ஆசிரியர்கள் எந்த வெளியீட்டிலும் சேர்க்கப்படவில்லை..
கருப்பு ஊக இலக்கியம் என்கிற ஒரு சொல்லாக்கம் இன்றைக்கு உலகளாவிய ஆப்பிரிக்க மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க புலம் பெயர்ந்தோர்ரின் கலாச்சாரம் சிந்தனை தொன்மங்கள் தத்துவம் மற்றும் உலக கண்ணோட்டங்களை உள்ளடக்கிய அறிவியல் கதைகளாக இருப்பதை பார்க்கிறோம் கருப்பின தேசியவாதத்தின் தந்தை என்று அறியப்பட்ட மார்டின் டெலனி, ‘பிளேக்-அல்லது அமெரிக்காவின் குடிசைகள்’ என்கிற ஒரு தொடரை வெளியிடத் தொடங்கினார். டெலனி ஒரு விஞ்ஞானியாகவும் ஆய்வாளராகவும் சர்வதேச அளவில் அறியப்பட்ட கருப்பின அறிவுஜீவி ஆவார் .. வருடம் 1859.. அந்த ஆண்டுதான் உலகின் முதல் கறுப்பின இலக்கிய இதழ் என்று அழைக்கப்படும் தி ஆங்கிலோ ஆப்ரிக்கன் மேகஸின் வெளிவர தொடங்கியது.. ஒரு அறிவியல் புனைகதை பாணியிலான மாற்று வரலாற்று நாவலுக்கு மிக நெருக்கமானது என்று இன்றைக்கு அந்த தொடர் அறியப்படுகின்றது..
கறுப்பின விஞ்ஞானிகள் மற்றும் கோட்பாட்டாளர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை உலகமே புறக்கணித்து கொண்டிருந்த நாட்களில் ஆங்கிலோ ஆப்ரிக்கன் இலக்கியமாக பிளேக் வெளிவந்தது ஆச்சிரியம் ஆகும்.. இந்த தொடர் 17 மாதங்கள் வெளிவருவதற்கு மிக கடுமையாக போராட வேண்டியிருந்தது.. டெலனிக்கு உயிரை பறிக்கும் அச்சுறுத்தல்கள் விடப்பட்டன என்கிறது வரலாறு .. இதழ் எங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.. எங்கே அச்சிடப்படுகிறது என்கிற தகவல்கள் பகிரப்படவில்லை.. என்று கூறி அமெரிக்க அரசாங்கம் இதழுக்கு தடை விதித்தாலும் கருப்பின மக்களின் வாசிப்புவெறி ஒவ்வொரு இதழும் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள்.. தனிச்சுற்று என்கிற பெயரில் அனைவராலும் வாசிக்கப்பட்டது.. இன்னும் சொல்ல போனால் இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சிறுபத்திரிகைகள் தனிச்சுற்றுக்கு மட்டும் என்கிற சொல்லாக்கத்தை பயன்படுத்துவது அங்கிருந்து வந்ததுதான் என்பதையும் இங்கு நான் பதிவு செய்ய வேண்டும்.

பிளேக் கதை சொல்லி ஒரு விஞ்ஞானி.. அதே சமயம் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல அறிவுஜீவிகளின் உண்மை சம்பவங்களை முன்வைத்து பிளேக் கதையாடலாக கட்டமைக்கப்பட்டது.. தரவு சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்த நூலாசிரியரின் கவனம் அன்றைய அறிவியலை நிராகரிப்பதாக இருந்தது. டெல் அணியின் முக்கிய கரு பொருட்களில் ஒன்று மனித இனம் முழுமைக்குமான ஒற்றை உயிர்கரூ எப்போது உருவானது என்பது குறித்த ஒட்டுமொத்த மனிதர்கள் அந்த ஒரு கருவிலிருந்து வந்தவர்கள் தான்.. என்கிற அறிவியல் புனைவாக அது சார்ந்த அறிவியல் மற்றும் கணித பங்களிப்புகளுடன் ஒரு அறிவியல் புனைகதைக்கே உரிய அனைத்து சாரங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.
தனது வெள்ளையின சகாக்களை போல தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விடுதலை திறனில் மிகக் குறைவான நம்பிக்கை கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்க கற்பனாவாத எழுத்தாளர்கள் அறிவியல் கற்பனாவாதத்தின் முழுமையான பரிபூரணத்தை விட தனிநபர் மற்றும் கூட்டு சிந்தாந்த பார்வை மாற்றம் செயல்முறை விடுதலை போன்றவற்றில் கவனம் செலுத்தினர்.. எதிர் அறிவியல் எதிர் சமூக கலாச்சாரம் நோக்கிய ஆழமான இலக்கிய புரிதல் இல்லாமல் இந்த இலக்கியங்களை வாசிப்பது கூட சாத்தியமற்றதாக இருந்தது.. அறிவியல் புனை கதை என்கிற பெயரில் புரியாத அறிவியலை பக்கம் பக்கமாக எழுதி குவித்துக் கொண்டிருந்த ஏனைய எழுத்துகளோடு ஒப்பிடும் பொழுது மிக சாதாரண ஒரு அறிவியல் கன உலகை அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.. தாங்கள் சார்ந்திருக்கும் கருப்பின சமூகத்தின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்களை-ஸ்லாங்-பயன்படுத்தி தங்கள் சொந்த மண்ணின் கதைகளாக அவர்கள் அவைகளை உருவாக்கினார்கள்.
கருப்பின அறிவியல் புனைகதை மற்றும் ஊக புனைகதை வகையை ஆராய்வது என்பது.. எதிர்காலத்தின் கற்பனாவாத சாத்தியம் உள்ள அறிவியலை ஆராயும் அதே சமயம் மானுட விடுதலை என்கிற ஒரு செழுமையான சிந்தனையையும் தூண்டும் அம்சமாகும்.. பல முன்னோடிகள் படைப்பாளர்களை நாம் அந்த வரிசையில் வைத்து பார்க்க முடியும்
- சாமுவேல் ஆர் டெலாணி .. மேலே குறிப்பிட்ட பிளேக் மட்டுமல்ல,பேபல்17 மற்றும் டால்கிறேன்.. ஆகிய படைப்புகளுக்காக அறியப்படும் மாமனிதர்.. தொடக்க கால கருப்பின அம்சங்களை அடிப்படையாக வைத்த அற்புதமான அறிவியல் புனை கதைகளை இந்த உலகிற்கு வழங்கியவர். இறந்து போன பல ஆண்டுகள் கழித்து தான் இந்த கதைகள் வெளிச்சத்திற்கு வந்தன.. இந்த கதைகளினூடாக அவர் சூப்பர்நோவா என்று இன்றைக்கு நாம் அழைக்கின்ற வகையிலான கோள்களை குறித்து சிறப்பான கற்பனாவாத அம்சங்களை அறிவியல் விதிகளுக்கு உட்படுத்தி பதிவு செய்தவர்.. கறுப்பின மக்கள் உருவாக்கும் சமூக கோள் அனைவரையும் எப்படி சமமாக நடத்தும் என்பதை சிலிர்த்துப் போகும் அளவிற்கு பதிவு செய்யும் கருப்பொருட்கள் கொண்டவை இவருடைய எழுத்துக்கள்
- எப்போதும் இந்த துறையில் வைத்து பேசப்படுகின்ற அற்புதமான இன்னொரு பெரிய ஆளுமை அக்டோவியா பட்லர்.. கைண்ட்ரேட்.. மற்றும் பாரபில் போன்ற பிரம்மாண்ட தொடர்களுக்காக அறியப்பட்டவர்.. எத்தனையோ தடைகளை உடைத்து நவீன கருப்பின அறிவியல் புனை கதைக்கு என்று அடித்தளமிட்ட புகழ் மிக்க ஆளுமை.. உலக அளவில் புகழ் பெற்ற முதல் கருப்பின பெண் அறிவியல் புனைகதை எழுத்தாளர்.. இனவெறி பாலின ஒடுக்குமுறை அதிகாரம் காலநிலை மாற்றம் சமூக ஏற்றத்தாழ்வு என்று இவருடைய எழுத்துக்கள் அறிவியலை மட்டுமே பேசவில்லை அரசியலையும் சேர்த்து முன்வைப்பவை.. அறிவியல் புனைகதை உலகின் வெள்ளை ஆதிக்கத்தை கடுமையாக விமர்சித்தவர். ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி எல்லாம் உயிர்ப் அழைக்கிறார்கள் என்கிற கேள்வி இவருடைய எழுத்துக்கள் முழுவதும் எதிரொலிப்பதை நாம் பார்க்கலாம்.. அக்டோவியா பட்லர் இன் எதிர்கால உலகங்கள் சொர்க்கபூமிங்கள் அல்ல மாறாக அதிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்கின்ற ஆய்வுக்கூடங்கள்..
- அடுத்து வருபவர் கிரிஸ்டோபர் ரீட். உலக அளவில் அங்கீகாரம் பெற்ற முதல் கருப்பின அறிவியல் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர் இவர் இனம் பாலினம் மொழி அதிகாரம் ஆகியவற்றை பற்றி புதிய சிந்தனைகளை முன்வைத்தவர் அறிவியல் புனைகதை அரசியல் அற்றதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சவாலுக்கு உட்படுத்தியவர் பின்னர் வந்த பல கருப்பின எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இவர் அறியப்பட்டவர் மொழிதான் அதிகாரத்தை உருவாக்குகிறது.. என்கிற புதிய சிந்தனையோடு மக்கள் நடுவே இருக்கும் மொழியின் அடிப்படைகளை மாற்றும் அறிவியல் கதை மிக பிரபலமானது..
- சமகால எழுத்தாளர்கள் என்று பார்த்தால் என் கே ஜெமிசன் அனைவரையும் முந்திக்கொண்டு முன்னால் நிற்கிறார். புரோக்கன் எர்த் என்கிற மு-தொகுப்பு நாவலுக்காக ஹூகோ விருதை தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற முதல் எழுத்தாளர்.. புரோக்கன் ஏர்த் என்கிற இந்த ஒரு நாவல் தொடர் அறிவியலை விடுதலைக்கான ஒரு சாதனமாகவும்.. புவியின் மீது பாய்ந்து வரும் வெள்ளிக் கிரக வாசிகளை பொறுத்தவரையில் மனிதன் யாவரும் ஒற்றை அடையாளத்தோடு அணுகப்படுவதை.. ஒரு பகடியாக முன்வைக்கும்.. எழுத்துக்கள் அரசியல் முக்கியத்துவம் கொண்டவை சமூக ஒடுக்குமுறை மற்றும் அதிகார அமைப்புகளை ஆழமாக ஆராய வைக்கும் சிந்தனை பெருக்கு இவருடைய எழுத்துக்கள் சுற்றுச் சூழல் அழிவு இனவெறி சமூக நீதி ஆகியவற்றை எதிர்கால கதைகளின் வழியே பிரதிபலிக்கும் புதிய வகை எழுத்துக்கள் இவருடையவை.. ஒடுக்குமுறை என்பது சில தனிநபர்களின் தவறல்ல ஒரு முழு சமூக அமைப்பின் விளைவு என்பதை இவருடைய படைப்புகள் சுட்டிக் காட்ட தவறுவதில்லை..
- நேடி உக்கார ஃபோர்.. அடுத்து வரும் அற்புத எழுத்தாளர்.. ஆப்பிரிக்க கலாச்சாரத்தை எதிர்காலத்தின் மையமாக வைத்து இவருடைய கதைகள் அறிவியல் ரீதியில் புனையப்படுகின்றன அறிவியலையும் பாரம்பரிய அறிவையும் இணைக்கின்ற பாலமாக இவருடைய எழுத்துகளைப் பார்க்கிறோம். எதிர்காலத்தில் இருப்பது மட்டுமல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பது நிலைப்பாடு.. இவருடைய பிண்டி மற்றும் மரணத்தைப் பார்த்து அஞ்சுபவர் யார் போன்ற நாவல்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.. மருத்துவ உலகின் எதிர்கால அறிவியல் குறித்த இவர் பதிவுகளில் இருந்து பல புதிய கண்டுபிடிப்புகள் எழுந்திருப்பதை இந்த உலகம் பதிவு செய்திருக்கிறது.. இப்போது ஸ்டண்ட் என்று வைக்கப்படுகின்ற இருதய போலி குழாய் இவர் கதையிலிருந்து எடுக்கப்பட்ட அம்சம் தான் என்றால் நம்ப முடிகிறதா…
- அடுத்து நான் ஷேரி ரேணி தாமஸ் ஐ முன்மொழிவேன்.. மறக்கப்பட்ட கருப்பின அறிவியல் புனைகதை எழுத்தாளர்களெல்லாம் மீண்டும் எடுத்து வந்து இந்த உலகிற்கு அறிமுகம் செய்த தீவிரமான இலக்கிய செயற்பாட்டாளர் அதேசமயம் கருப்பின அறிவியல் புனைகதைக்கு நீண்ட வரலாறு இருப்பதை தனிப் புத்தகமாக எழுதியவர்.. டார்க் மேட்டர் என்கிற தலைப்பில் இவர் எழுதிய ஒரு அறிவியல் புனை கதை நாவல் உலக இயற்பியலாளர் அரங்கையே உலுக்கி போட்டது. ஒரு நூற்றாண்டு முழுவதும் வெளியிடப்பட்ட கருப்பின எழுத்தாளர்களின் அறிவியல் கதைகளை ஒரு பிரம்மாண்டமான தொகுப்பாக கொண்டு வந்தவர்.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.. ஆனால் மூன்று தனித்தனி வகையான அறிவியல் புனைகதை போக்குகளை கருப்பின அறிவியல் கதைகள் இன்று கொண்டிருப்பதை பார்க்கலாம்..
- ஆப்ரோ எதிர்கால வாதம்: 1990 களில் உருவாக்கப்பட்ட ஒரு பாதை அறிவியல் புனைகதை தொழில்நுட்பம் மற்றும் ஆப்பிரிக்க புலம் பெயர் வரலாறு ஆகியவற்றை இந்த துறை ஒன்றிணைக்கிறது இந்த தளத்தில் உள்ள எழுத்தாளர்கள் குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டங்களில் கருப்பின மக்களின் அனுபவத்தை ஆராய்வதற்காக எதிர்காலத்தை பயன்படுத்துகின்றனர்.. இதன் நோக்கம் என்று பார்த்தால் பல கதைகளில் இருந்து பெறப்படும் அது.. என்னவென்றால் தங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்தல் ஒடுக்குமுறை அமைப்புகளை கேள்விக்கு உட்படுத்துதல் மற்றும் அடையாளத்தை ஆராய அறிவியல் புனைகதை கூறுகளை பயன்படுத்துதல் என்பதாகும்.. நாம் மேலே குறிப்பிட்டிருக்கும் ஆக்டோவியோ பட்லர், சாம் டெலனி போன்றவர்களை இந்த துறையில் கொண்டுவருகிறார்கள்.. தற்போது இந்த துறையில் ஏராளமானவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்..
- ஆப்பிரிக்க எதிர்கால வாதம்: இது சற்று வித்தியாசமானது அமெரிக்காவுக்கு வெளியே உருவானது.. நைஜீரியா அமெரிக்கா எழுத்தாளரான நெடி உக்காரஃபோர் என்னம்மா மனிதரால் பிரபலப்படுத்தப்பட்டது இது மேற்கத்திய அல்லது அமெரிக்கா புலம்பெயர் அனுபவத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கலாச்சாரம் வரலாறு மற்றும் புராணங்களில் இந்த அறிவியல் புனைகதை உலகம் ஆழமாக வேரூன்றியது.. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த அடிமை வர்த்தகத்தின் கண்ணோட்டத்திலிருந்து பெரும்பாலும் விலகி ஆப்பிரிக்க கண்டத்தை மற்றும் அதன் மக்களை மையமாகக் கொண்ட மேற்கத்திய அல்லாத அண்டவியல் கோட்பாடுகள் உள்ளூர்மயமாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலங்கள் விரிவாக பேசப்படுகின்றன.. இன்றைக்கு பிரபலமாக அறியப்படும் டேவிட் தாம்சன் மற்றும் சுயி டேவிஸ் ஓகும்போவா போன்றவர்களின் எழுத்துக்கள் இந்த வகையைச் சார்ந்தவை.. அமெரிக்கா கண்டுபிடிப்புகள் குறித்து இவர்கள் எழுதுவதே இல்லை மாறாக ஆப்பிரிக்க கண்டத்தின் இருள் சூழ்ந்த வெளியில் தெரியாத உள்ளூர் அறிவியலை புனிதப் படுத்தும் எழுத்துக்கள் இவை..
- தொலைநோக்கு சமூக நீதி அறிவியல் புனை கதை: இந்த போக்கு தீவிர சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக அறிவியல் எழுத்து களை பயன்படுத்துகிறது சில சமயங்களில் சோழர் பங்க் அல்லது இயக்கம் சார்ந்த புனைகதைகள் உடன் தொடர்புடைய இந்த எழுத்தாளர்கள் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளுக்கு நேரடியான மாற்று வழிகளை ஆராயும் கதைகளை உருவாக்குகிறார்கள்.. இந்த கதைகள் பெரும்பாலும் சிறைச்சாலையில் இருந்தே வெளிவந்தவை முதலாளித்துவம் அல்லது பருவநிலை பேரழிவு இல்லாத உலகங்களை கற்பனைசெய்து புதிய விதிகளின் கீழ் சமூகங்கள் எப்படி தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும் அதன் வழியே செழித்து வளர முடியும் என்கிற நம்பிக்கைவாதம் பேசுகின்ற எழுத்துக்கள் இவை.. அட்ரியன் மேரி பிரவுன் இந்த வகை எழுத்துகளின் பிரதான படைப்பாளி வாலிடா ம்ரிஷா அவரோடு இணைந்து பணியாற்றி வருகிறார்..
நாம் கேட்கலாம். அடிமைத்தனம் ஒரு அறிவியல் புனைகதை அனுபவமா? பல அறிஞர்கள் கூறுவது என்னவென்றால் கட்டாய இடம்பெயர்வு மொழி இழப்பு அடையாள இழப்பு மனிதர்களை சொத்தாக பாவித்து அடிமை செய்தல் இவை அனைத்தும் ஒரு அறிவியல் புனைகதை உலகில் நிகழ்வதை போலவே இருந்தன.
ஆக ஆப்ரோ எதிர்கால வாதம் இந்த வரலாற்றை மீட்டெடுத்து புதிய எதிர்காலத்தை கற்பனை செய்கிறது.. இவர்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால்.. பொதுவான அறிவியல் புனை கதை வாசகர்கள் ஏலியன்களுடன் அதாவது பிற கோள்களில் இருந்து இங்கே வருகின்ற ஏனைய கிரகவாசிகளுடன் எளிதில உணர்வு பூர்வமாக இணைகிறார்கள்.. ஆனால் பூமியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கறுப்பின மக்களுடன் இணைவதில் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்.. இந்த கேள்வி இவர்களுடைய அனைத்து எழுத்துக்களிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.. நம்முடைய மண்ணை சார்ந்த தலித் இலக்கிய அடிப்படைகளின்.. விளிம்பு நிலை மக்களின் எழுத்துகளில் பொதிந்து இருக்கும் அடிப்படைகளின் ஊடாக இத்தகைய கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.
தொழில்நுட்பம் ஒரு போதும் நடுநிலையானது அல்ல என்பது கருப்பின அறிவியல் எழுத்தாளர்களின் நிலைப்பாடு. தொழில்நுட்பத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்.. அதன் வழியே கண்காணிக்கப்படுவது யார்.. தொழில்நுட்பத்தின் பலனைப் பெறாதவர்கள் யார்.. அவர்கள் தான் இவருடைய நாவலின் கதாநாயக அந்தஸ்து பெற்றவர்கள். இன்றைய செயற்கை நுண்ணறிவு தரவு கண்காணிப்பு டிஜிட்டல் முதலாளித்துவம் போன்ற விவாதங்களோடும் தொடர்புடையவையாகும்.. அப்பாவித்தனமாக தன்னுடைய கைபேசிகளில் ஒரு உலகம் இருக்கிறது என்று நம்புகின்ற ஒருவனுடைய தேர்தல் ஓட்டு எப்படி களவாடப்பட முடியும் என்பதற்கு தமிழ் நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தல் ஒரு உதாரணமாகும்..
கருப்பின அறிவியல் கதையாடல் உலகம் மேலும் ஒரு அம்சத்தில் நம்மவோடு மிக நெருக்கமாக பயணிக்கிறது. எதிர்காலத்தை கற்பனை செய்வதே ஒரு பெரிய போராட்டமாக அது முன்வைக்கிறது. பல நூற்றாண்டுகளாக கருப்பின மக்கள் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்படவே இல்லை.. நாமும் எதிர்காலத்தின் ஒரு அங்கமாக இருப்போம் என்பதை கற்பனை செய்வதே ஒரு அரசியல் ஆக மாறுகின்றது.. மூன்றாம் உலக நாடுகளின் ஆக கீழானநிலையில் வைத்து பார்க்கப்படுகின்ற வர்ணாசிரம சனாதன ஒடுக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்குமே தாங்கள் எதிர்காலத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கான போராட்டம் தொடருகிறது என்பதை இந்த இடத்தில் அடிக்கோடு இட வேண்டும்.

சாதாரண அறிவியல் புனை கதைக்கும் கருப்பின அறிவியல் புனை கதைக்கும் உள்ள வித்தியாசத்தை.. நம்மால் எளிதில் அடிக்கோடு இட முடியும்…
சாதாரண அறிவியல் புனைகதை தொழில்நுட்ப முன்னேற்றத்தை போற்றுகிறது.. கருப்பின அறிவியல் புனைகதை தொழில்நுட்பம் யாருக்காக உருவாக்கப்பட்டது அது யாருக்காக வேலை செய்கிறது என்பதை கேள்விக்கு உட்படுத்துகிறது..
பொதுவான அறிவியல் புனைகதை உலகம் எதிர்காலம் நடுநிலையானது என்று கருதுகிறது.. ஆனால் கருப்பின அறிவியல் புனைகதை உலகம் எதிர்காலத்திலும் அதிகாரமும் இனவெறியும் வேறு வேறு அம்சங்களில் தொடரலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது
சாதாரண அறிவியல் புனைகதை உலகத்தைப் பொறுத்தவரையில் விண்வெளி ஒரு சாகச மேடை.. ஆனால் கருப்பின எழுத்தாளனுக்கோ விண்வெளி என்பது இடம்பெயர்வு மற்றும் விடுதலையின் குறியீடு..
தனிமனித கதாநாயக மையமிட்டு சாதாரண புனைகதை உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.. செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து பூமியை ஆக்கிரமிக்க துடிக்கின்ற கொடூரமான கூட்டத்தை ஒரு தனி மனிதன் எதிர்கொண்டு தன் புத்திசாலித்தனத்தின் மூலம் பூமியைக் காப்பாற்றுகிறான் என்று 1,00,000 கதைகள் உள்ளன.. ஆனால் இதே விஷயத்தை அணுகுகின்ற கருப்பின அறிவியல் புனைகதை உலகம் ஒரு சமூகத்தின் கூட்டுவாழ்வு மையமாக போராட்டத்தை வைக்கிறது.. என்பதற்கான உதாரணங்கள் நிறைய உள்ளன.
பொதுவான காலத்தை வரலாற்றில் இருந்து பிரித்து திகைக்க வைக்கின்ற ஒன்றாக சாதாரண அறிவியல் புனைக்கதைகள் உருவாக்கப்படும் பொழுது அடிமைத்தனமும் காலனித்துவம் எப்படி எதிர்க்காலத்தை வேறு வேறு ரூபங்களில் ஆக்கிரமிக்க துடிக்கின்றன என்கிற அரசியலை கருப்பின அறிவியல் புனை கதைகள் பேசுகின்றன
எல்லாவற்றையும்விட முக்கியமாக தொழிநுட்பத்தை ஆச்சர்யம் கொள்ளத்தக்க கொண்டாடத்தக்க ஒன்றாக பொதுவான அறிவியல் புனை கதை உலகம் தொடர்ந்து அணுகுகின்ற நேரத்தில் தொழில்நுட்பம் ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக மாறலாம் என்று தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருப்பது கருப்பின அறிவியல் புனைகதை உலகம் மட்டுமே..
எத்தனை விடுதலை பேசினாலும் பாலின சமத்துவம் என்று வருகின்ற பொழுது பெண் இரண்டாம் இடத்தில் வைத்து எப்போதும் புனையப் படுகின்ற ஒரு இலக்கியமாக பொதுவான அறிவியல் புனைகதை உலகம் உள்ளது.. கருவிகளுக்கு கொடுக்கப்படும் இடம் கூட பெண்களுக்கு வழங்கப்படுவது இல்லை.. ஆனால் கருப்பின அறிவியல் புனைகதை உலகத்தின் பெரும்பாலான கதைகள் பாலின சமத்துவம் என்கின்ற அடித்தளத்தின் மீது கட்டமைத்து எழுப்பப்படுபவை அவை ஆகும்.
அக்டோவியா பட்லர் அம்மையாரின் பேபல் ஆஃப் தி சாயர்.. நாவலின் நாயகி லோரன் ஓலாமினா.. சமத்துவமின்மை தனியார் மயம் சொத்து சேர்க்கும் வெறி வன்முறை மற்றும் காலநிலை சீர்கேடுகளால் சிதைந்து கொண்டிருக்கும் எதிர்கால அமெரிக்காவில் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.. அவளைச் சுற்றியுள்ள அனைவரும் முன்பிருந்த அடிமை உலகமே சிறப்பானது பழைய உலகத்தை எப்படியாவது மீட்டு எடுக்க வேண்டும் என்று நேரடியாக உளற தொடங்குகிறார்கள்.. ஆனால் லாரன் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவை உருவாக்குகிறார் அதன் பெயர் எர்த் சீட அல்லது புவி விதை..
மனித மனங்களில்.. மாற்றம் என்பதே கடவுள்.. என்கிற புதிய சிந்தனையை அது விதைக்கிறது உலகம் சீரழிகிறது நாம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்கிற நினைவிலிருந்து மாற்றத்தை தடுக்க முடியாது ஆனால் மாற்றத்தை எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாக நாம் மாற வேண்டும்.. மீட்பர் வந்து காப்பாற்றுவார் என்பது பழைய கதை.. அதை காப்பாற்றும் ஒரு அமைப்பை நாமே ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.. என்று லாரன்.. கண்டுபிடிக்கும் புதிய தொழிநுட்ப பகடி.. கருப்பின அறிவியல் புனை கதைகளின் அடையாளத்தை தெளிவாக முன்வைக்கும் ஒரு உதாரணமாகும்.
நன்றி: திசைஎட்டும் காலாண்டிதழ்.
📚 எழுதியவர் :

✍🏻 – ஆயிஷா இரா.நடராசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Very very useful