அலிஸ் வாக்கர் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் தனித்துவமாக விளங்குபவர். ஆணாதிக்கம், நிறவெறி என இரண்டுவகை கொடுமைகளுக்கு ஆளாகும் கறுப்பினப் பெண்களின் துயரம் மற்ற பெண்களின் துயரத்திலிருந்து மாறுபட்டது என்பதால் ஃபெமினிசம் என்ற கருத்தாக்கத்தின் போதாமையை உணர்ந்த அவர், கறுப்பினப் பெண்களின் விடுதலைக்கான கருத்தாக்கமாக ’வுமனிசம்’ என்ற புதிய சிந்தனையை முன்மொழிந்தார். தன்னுடைய கோட்பாட்டை மக்களிடையே எடுத்துச்செல்ல ‘மிஸ்’ என்ற பெண்ணிய இதழை நடத்தினார். ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியத்தின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்த ஜோரா நீல் ஹர்ஸ்டன் மீதிருந்த அதீத மரியாதையினால் அவர் படைப்புகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு ‘ஜோரா ஹர்ஸ்டனைத் தேடி’ (In Search of Zora Hurston) என்ற கட்டுரையை வெளியிட்டார்.
அலிஸ் வாக்கர் எழுத்தாளராக மட்டுமின்றி களத்தில் இறங்கிப் போராடும் செயற்பாட்டாளராகவும் இருக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக் நாட்டின் மீது அநீதியான போரைத் தொடுத்தபோது போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமைக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இஸ்ரேலை ’ஜியானிஸ’ வெறிபிடித்த நாடு என்று கருதிய அவர், உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ’தி கலர் பர்ப்பிள்’ நாவலை ஹிப்ரூ மொழியில் மொழிபெயர்க்க அனுமதி தரவில்லை. இராக் போரின்போது அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய செல்சி மேனிங் என்ற பெண் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தார். ‘அமைதி மற்றும் விடுதலைக் கான சர்வதேச பெண்கள் குழு’வின் தீவிர உறுப்பினராக இன்றளவும் செயல்பட்டு வருகிறார்.
தி கலர் பர்ப்பிள் நாவல் 1982இல் வெளிவந்தபோது, மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல விருதுகளையும் வென்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத்தீர்ந்தன. அமெரிக்காவில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நூறு நாவல்களின் வரிசையில் 17ஆவது இடத்தை அந்த நாவல் பிடித்தது. நாவலில் சித்தரிக்கப்பட்ட பாலியல் காட்சிகள், ஓரினச்சேர்க்கை, கறுப்பின ஆண்கள் இழைத்திடும் குடும்ப வன்முறை ஆகியன குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. விமர்சனங்களையெல்லாம் மீறி நாவல் வெற்றி பெற்றதற்கு, அலிஸ் வாக்கர் தான் சொல்ல விரும்பியதை நேர்மையுடனும், துணிவுடனும் சமரசங்கள் ஏதுமின்றி சொன்னதே காரணமாகும். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் சொல்லொண்ணா துயரத்தைச் சித்தரிக்கும் ’தி கலர் பர்ப்பிள்’ நாவல் வெறுப்பை விதைக்காமல் அன்பையும், அமைதியையும் மட்டுமே விதைக்கிறது. கருஞ்சிகப்பும், நீலமும் கலந்த பர்ப்பிள் நிறம் செழிப்பு, வீரம், விவேகம், கம்பீரம், பெருமை, நேர்மை, காதல், அமைதி, புனிதம் எனப் பல மனித மாண்புகளின் அடையாளமாக விளங்கிடும் வண்ணமாகும். நாவலின் நாயகி செலி தன் அன்புச் (ஓரினச்சேர்க்கையாளர்) சிநேகிதியுடன் தங்கவிருக்கும் அறையின் பர்ப்பிள் நிறம் கண்டு பூரிப்படைகிறாள். ஆம்; பர்ப்பிள் நிறம் காமத்திற்கும் அடையாளமாகும் என்பதால்! நாவலில் செலியின் துயர்மிகு வாழ்க்கை வரலாற்றை அலிஸ்வாக்கர் உன்னத உரைநடைக் காவியமாக வடித்துள்ளார். தனக்கு ஏற்படும் துயரங்களை எல்லாம் பொறுமை, எளிமை, அன்பு, போன்ற அரிய குணங்களினால் எதிர்கொண்டு செலி இறுதியில் சகமனிதர்களின் மனதை வென்று காட்டுகிறாள்.
கடிதங்களின் மூலம் நாவலை சொல்லிச் செல்வது என்ற உத்தியில் (Epistolary Novel) அலிஸ் வாக்கர் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். ஆங்கில இலக்கிய வெளியில் சாமுவேல் ரிச்சர்ட்சன், மேரி ஷெல்லி, ப்ரேம் ஸ்டோக்கர் போன்றோர் ஏற்கனவே கடிதம் வழி நாவலின் நிகழ்வுகளை நகர்த்திச் செல்லும் பாணியைப் பின்பற்றியுள்ளனர். நாவலில் இருக்கும் மொத்தம் 90 கடிதங்களில் முதல் ஐம்பது கடிதங்கள் நாவலின் நாயகி செலியால் கடவுளுக்கு எழுதப்படுகின்றன என்பது வியப்பிற்குரியதல்லவா? இந்த ஐம்பது கடிதங்களிலும் செலி தன்னுடைய கையெழுத்தை இடவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தாத அவளின் அடக்கம் மட்டுமே அதற்கான காரணம். மீதமிருக்கும் நாற்பது கடிதங்கள் செலியும் அவளின் பாசமிகு தங்கை நெட்டியும் அவர்களுக்குள் எழுதிக்கொண்ட கடிதங்களாகும். நெட்டிக்கு எழுதிய கடிதங்களில் செலி தன்னுடைய கையொப்பத்தை இடுவது அவளது வளர்ச்சி, மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும். அனைத்துக் கடிதங்களும் தேதி குறிப்பிடப்படாமலேயே எழுதப்பட்டுள்ளன. கடிதங்கள் சில ஆண்டுகள் இடைவெளியில் கூட எழுதப்படுகின்றன. எனவே வாசகர்கள் மிகுந்த கவனத்துடனேயே வாசித்திட வேண்டும்.
செலி கடவுளுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேசிடும் கொச்சையான மொழியில் இலக்கண விதிகளை எல்லாம் மீறி எழுதப்படுகின்றன. இருப்பினும் செலியின் உள்ளத்திலிருந்து புறப்படும் நேர்மையான வார்த்தைகள் என்பதால் அவற்றில் புனிதத்துவம் மேலிடுகிறது. செலி தன்னுடைய கடிதங்கள் மூலம் கடவுளிடம் உரையாடுகிறாள். பேசும் மொழியிலான செலியின் இக்கடிதங்களை உரக்கப் படித்திடுவோமேயானால், அவை கவித்துவமாகக் காணப்படுவதை உணரலாம். சில கடிதங்களில் மெல்லிய நகைச்சுவையும் மிளிர்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தென்அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வாழ்ந்திடும் கறுப்பின மக்களின் வாழ்வியலை அலிஸ் வாக்கர் மிக அழகான சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார்.
செலியின் பதினான்கு வயதில் தொடங்குகின்ற நாவலின் ஆரம்பத்தில் குதிரைவண்டிகளில் பயணிக்கும் கதாபாத்திரங்கள், இறுதியில் கார்களில் பயணிப்பதிலிருந்து காலமாற்றத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். நாவல் வெளியில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடமாடுவதைக் காண்கிறோம். அவர்கள் யாவரும் தவிர்க்க முடியாத பாத்திரங்களாக நாவலில் தங்களுக்கான பங்கினை ஆற்றிச் செல்லும் பருமனான கதாபாத்திரங்களாகவே இருக்கின்றார்கள். வெகுளிப் பெண்ணாக, தனக்கு நேரும் கொடுமைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளும் செலி படிப்படியாக வளர்ந்து நாவலின் இறுதியில் முதிர்ச்சியும், தெளிவும் பெறுவதைப் பார்க்கிறோம்.
நோய்வாய்ப்பட்ட அவள் தாய், தாயின் வக்கிர மனம் கொண்ட இரண்டாம் கணவன் அல்போன்ஸ் இவர்களுக்கிடையில் தங்களின் பால்யகால வாழ்வை செலியும், அவள் தங்கை நெட்டியும் கழிக்கிறார்கள். அதிலும் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் அல்போன்ஸ் மகளாகப் போற்றி வளர்க்க வேண்டிய செலியை தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி அவளை இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக்குகிறான். முதலில் பிறந்த பெண் குழந்தை, இரண்டாவது பிறந்த ஆண் குழந்தை என்று இருவரும் பிறந்த உடனேயே இறந்துவிட்டதாக அவன் பொய் சொல்கிறான்.
ஆல்பர்ட் என்பவன் இளையவள் நெட்டியைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி அல்போன்ஸிடம் கேட்டு வருகிறான். அல்போன்ஸ் மூத்தவள் செலியை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கிறான். செலியின் துயர் தொடருகிறது. ஆல்பர்ட் தன் முதல் மனைவி மூலம் பெற்றெடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கான ஆயாவாகவே செலியைப் பாவிக்கிறான். அவ்வப்போது அவனின் பாலியல் இச்சைக்கும் ஆளாகவேண்டும். செலியின் சீக்காளியான தாய் இறந்ததும் நெட்டியால் அந்த வீட்டில் அல்போன்ஸுடன் இருக்க முடியவில்லை. தன் அக்காவுடன் சேர்ந்து வாழவந்த நெட்டியை ஆல்பர்ட் அனுபவிக்க முயலுகிறான். அடுத்த நொடியே செலியின் வீட்டிலிருந்து நெட்டி வெளியேறுகிறாள். தொடர்ந்து கடிதம் மூலம் தொடர்பு கொள்வேன் என்று சொல்லிச் சென்றவளிடமிருந்து கடிதம் ஏதும் வராதது கண்டு செலியின் மனது துடிக்கிறது.
ஆல்பர்ட் தன்னுடைய காதலி சக் ஆவரி என்ற மேடைப் பாடகியை வீட்டுக்கு அழைத்து வருகிறான். சக் ஆவரி கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான வாழ்வைத் தனக்கென்று தேடிக்கொண்டவள். அரைகுறை ஆடையுடன் அவள் மேடையிலேறிப் பாடுவதைக் கேட்க பெருங் கூட்டம் வருகிறது. நிறைய சம்பாதித்துச் செல்வச் செழிப்புடன் வளம் வருகின்ற அவளுடைய கவர்ச்சியில் ஆண்கள் மயங்கினர். சக் ஆவரியின் அழகில் மயங்கி செலியும் தன்னுடைய மனதைப் பறிகொடுக்கிறாள்! செலி – சக் ஆவரி இருவரும் ஓரினச்சேர்க்கையில் இன்பம் காண்கிறார்கள்.
ஆல்பர்ட்டின் மகன் ஹார்ப்போ திருமணம் முடித்து சோஃபியா என்ற பெண்ணுடன் வருகிறான். தன் தந்தை செலியை அடித்து உதைப்பதுபோல் சோஃபியாவையும் அடித்துப் பணியவைக்கலாம் என்று நினைக்கிறான். ஆனால் சோஃபியா அவனை நையப்புடைத்து அவனுக்குப் பாடம் புகட்டுகிறாள். சக் ஆவரி, சோஃபியா போன்ற பெண்களிடமிருந்து செலி சிறிது சிறிதாக துணிச்சலைக் கற்றுக் கொள்கிறாள்.
ஒரு நாள் செக் ஆவரியிடம் தன் தங்கை நெட்டியைப் பற்றியும், பிரிந்து சென்ற அவளிடமிருந்து கடிதங்கள் ஏதும் வராமல் இருப்பது குறித்தும் கூறுகிறாள். நெட்டி எழுதிய கடிதங்கள் ஆல்பர்ட்டின் டிரங்பெட்டியில் இருப்பதை சக் ஆவரி தெரிவிக்கிறாள். இதுநாள்வரை ஆல்பர்ட் ஒளித்துவைத்திருந்த நெட்டியின் கடிதங்களை எல்லாம் படித்து செலி ஆனந்தம் அடைகிறாள். கடிதம் மூலம் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு, நெட்டிக்கு கடிதம் எழுதத் தொடங்குகிறாள்.
நாவல் அடுத்த கட்டமாக நெட்டியின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. செலியின் வீட்டிலிருந்து தப்பிச் சென்ற நெட்டி சாமுவேல்-கொரின் தம்பதிகளிடம் அடைக்கலம் அடைகிறாள். அந்த தம்பதிகள் ஒலிவியா, ஆடம் என்ற இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். மதப்பிரச்சாரம் செய்வதற்காக ஆப்பிரிக்கா செல்லவிருக்கும் சாமுவேல்-கொரின் தம்பதிகள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் செவிலியாக நெட்டியையும் ஆப்பிரிக்காவிற்கு தங்களுடன் அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள். நியுயார்க்கிலிருந்து கப்பலேறி இங்கிலாந்து சென்று அங்கிருக்கும் மிஷனரி அலுவலகத்தின் அனுமதி கடிதத்துடன் ஆப்பிரிக்கா செல்ல வேண்டும். நியுயார்க் நகரில் கறுப்பின மக்கள் குடியிருப்பதெற்கென ஒதுக்கப்பட்டுள்ள ஹார்லெம் பகுதியில் அவர்கள் தங்குகிறார்கள்.
நியுயார்க் நகரின் பிரம்மாண்டத்தையும், அழகையும் விவரித்து எழுதியதே நெட்டி தன் சகோதரி செலிக்கு எழுதிய முதல் கடிதம் ஆகும். ஆனால் ஆல்பர்ட் செய்த வஞ்சனையால் செலி பல ஆண்டுகள் கழித்தே அந்த கடிதத்தைப் படிக்க நேருகிறது. சக் ஆவரியின் உதவியின்றி அதுவும் சாத்தியமாகி இருக்காது.
ஆப்பிரிக்காவில் கிறித்துவத்தைப் பரப்புவதற்காக அமெரிக்க மண்ணிலிருந்து சாமுவேல் தனது குடும்பத்துடன் லைபீரியாவின் கடற்கரை நகரமான மன்றோவியாவில் வந்து இறங்குகிறார். நிறத்தில் மட்டும் ஒன்றுபட்ட இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியது. மதம், மொழி, கலாச்சாரம் என அனைத்திலும் மாறுபட்ட இவர்களால் ஆப்பிரிக்காவின் பூர்வகுடிகளிடம் எளிதில் ஒன்றிணைய முடியவில்லை. அன்பும், பண்பும் நிறைந்த சாமுவேல் கடமை உணர்ச்சியுடன் செயல்பட்டதாலும், நெட்டி ஒரு நல்லாசிரியராகத் திகழ்ந்து ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பித்துக் கொடுத்ததாலும் ஆப்பிரிக்க மக்களின் மனதில் அவர்களால் இடம் பிடிக்க முடிந்தது.
ஒலிவியா, ஆடம் இருவரும் நெட்டியின் முகச்சாயலில் இருந்ததால் கொரின் மனதில் சந்தேகம் எழுந்தது. சாமுவேல் மூலம் நெட்டிக்குப் பிறந்த குழந்தைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் அவள் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. சந்தேகம் என்ற நஞ்சு தலைக்கு ஏறியபின் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. எரிச்சலடைகிறாள். சாமுவேலையும், நெட்டியையும் சேர்ந்திருக்கவிடுவதில்லை. பிரித்தேவைக்கிறாள். ஒரு நாள் குழந்தைகளைத் தத்தெடுத்த பின்னணியை சாமுவேல் விளக்குகிறார். ஜார்ஜியா மாநிலத்தில் அல்போன்ஸ் என்ற ஒருவரிடம் அந்த இரண்டு குழந்தைகளையும் பெற்றதாகச் சொல்கிறார். இதனால் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு சந்தேகம் தீருகிறது. கொரின் மனதில் அமைதி குடியேறுகிறது. அல்போன்ஸ் அவரிடம் கொடுத்த குழந்தைகள் செலி பெற்ற குழந்தைகள் என்பதும் தெளிவாகிறது. குழந்தைகள் இருவரும் தங்கள் சித்தி நெட்டியின் முகச்சாயலைக் கொண்டிருப்பதில் வியப்பேதும் இல்லையே?
நெட்டிக்கும் தான் இதுநாள்வரை பாசத்துடன் வளர்த்த குழந்தைகள் தன் அன்புச் சகோதரியின் குழந்தைகள் என்பதறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஆடம் ஆப்பிரிக்கப் பெண் டாஷி என்பவளை மணக்கிறான். தன் காதலியின் விருப்பத்திற்காக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தின்படி முகத்தில் பச்சை குத்திக்கொள்கிறான். இதற்கிடையில் கொரின் நோய்வாய்ப்பட்டு ஆப்பிரிக்காவில் மரணிக்கிறார். சாமுவேலும் நெட்டியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆப்பிரிக்க வாழ்க்கையை முடித்துவிட்டு அனைவரும் அமெரிக்கா திரும்புகிறார்கள். சகோதரிகள் இருவரும் முப்பதாண்டு கால இடைவெளிக்குப்பின் இணைகிறார்கள். இழந்த குழந்தைகளை மீண்டும் பெற்றது கண்டு செலி பூரிப்படைகிறாள்.
அல்போன்ஸ் இறந்ததும் அவனுடைய சொத்துக்கள் எல்லாம் செலி, நெட்டி சகோதரிகளுக்குச் சேருகின்றன. செலியிடம் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவள் பழைய அப்பாவிப் பெண் அல்ல. சக் ஆவரியிடமிருந்தும், சோஃபியாவிடமிருந்தும் அவள் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளாள். தன்னிடமிருந்த தையற்கலையில் தேர்ச்சி பெற்று மிகப் பெரிய ஆடைகள் டிசைனராகப் பரிணமிக்கிறாள். ஆல்பர்ட் இழைத்த கொடுமைகளை எல்லாம் மறந்து, அவனை மன்னிக்கிறாள். அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்கிறாள். பர்ப்பிள் வண்ணமாகப் பிரகாசிக்கிறாள்.
பெ.விஜயகுமார்.
————————————————
தி கலர் பர்ப்பிள் நாவலைப் படித்ததாகவே உணரவைத்துவிட்டீர்கள் விஜயகுமார். மகிழ்ச்சி. அற்புதமான நாவலை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அருமை.
You have introduced me one more book to read compulsorily.