(நாடு முழுதும் கோரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய காலத்திலும், ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவுடன் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.)

2014க்குப் பின்னர் ஒரு முஸ்லீமாக இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. நாட்டின் நடவடிக்கைகளை மிகவும் இலேசா விமர்சித்தால் கூட அரசாங்கத்தையே விமர்சித்ததாகும் என்பது போன்ற கண்டனங்களுடன், இவ்வாறு விமர்சிப்போர் ‘பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும்’ என்று வெறுப்பைக் கக்கும் விஷப் பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் அதிகரித்திருக்கின்றன. ஏன், நம் பிரதமரே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் யார் என்பது அவர்கள் அணிந்திருக்கும் உடைகளிலிருந்தே நன்கு தெரிகிறது என்று மறைமுகமாகக் குத்தல் பேச்சை வெளிப்படுத்தியதை அறிவோம். குண்டர் கும்பல்கள், 2015 செப்டம்பருக்கும் 2019 ஏப்ரலுக்கும் இடையே, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பல வழக்குகளில் குற்றமிழைத்த குண்டர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்தக் கால கட்டத்தில் மதக் கலவரங்கள் இல்லை என்று பாஜகவினர் மகிழ்ச்சியடைந்துள்ள போதிலும், குண்டர் கும்பல்களின் கொலைபாதகச் செயல்கள் புதிய வழக்கமாக மாறி இருந்தன.இவை பல விதங்களில், இரு சமூகத்தினரிடையேயும் வகுப்புக் கலவரங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.குண்டர் கும்பல்களின் கொலைவெறியாட்டங்களுக்கு ஒரேயொரு சமூகத்தினர் மட்டுமே பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், இவ்வாறு கொலைபாதகச் செயல்களில் ஈடுபடுவோரே, தாங்கள் புரிந்திட்ட கொலைபாதகச் செயல்களை வீடியோக்கள் மூலமாக சமூக ஊடகங்களில் பரப்பியதாகும். ஏனெனில் இதனால் தங்களுக்கு எவ்விதமான தண்டனையும் வந்திடாது என்று முழுமையாக அவர்கள் நம்பினார்கள்.

Image

2019 செப்டம்பர் 25 அன்று புதுதில்லியில் குண்டர் கும்பல்களின் கொலைகள் மற்றும் இதர பிரச்சனைகளுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டம்

ஒரு சில வழக்குகளில் நீதித்துறை குண்டர்களுக்குத் தண்டனை வழங்கினாலும், ஆட்சியாளர்கள் அவ்வாறு தண்டித்தவர்களைக் காப்பாற்றிட ஓடோடி வருகின்றனர். 2017இல் ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடை வர்த்தகர் அலிமுதீன் அன்சாரியைத் தாக்கிய குண்டர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது, அவர்களை உடனடியாகப் பிணையில் விடுவித்தும், அவர்களுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, இனிப்புகள் வழங்கி, மாலைகள் அணிவித்து,ஹீரோக்கள் போன்று அவர்களை வரவேற்றதையும் பார்க்க முடிந்தது. (மே மாதத்தின் துவக்கத்தில், மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் இந்தியா வந்து இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் உமிழப்படுவதைக் கண்டித்தது. இக் குழுவினரைச் சந்தித்த மத்திய அரசின் குழுவில் இதே சின்கா, ஓர் அங்கமாக இருந்தார். கூட்டத்தின் நோக்கம், கோவிட்-19 காலத்தில் சமூகத்தினரிடையே நம்பிக்கையை ஊட்டுவதும், அவர்களின் ஆதரவினைக் கோருவதும் ஆகும்.) நாட்டின் கவனமும், அரசாங்கத்தின் கவனமும் மிகவும் கொடூரமான வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் கவனம் செலுத்த வேண்டிய இத்தருணத்தில், அதன்மூலம் உயிரிழப்பைக் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டிய இத்தருணத்தில், ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவுடன், நாட்டில் மிகப்பெரிய அளவில் இருக்கும் சிறுபான்மையினருக்கு எதிராக, சமூகத்தில் ஒரு பிரிவினர்,  வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு காலனிக்குள் நுழைந்த காய்கறி விற்பவரை, “எப்படி நீ எங்கள் காலனிக்குள் நுழையலாம்?” என்று கேட்டு, ஒரு பாஜக எம்எல்ஏதுன்புறுத்தியிருக்கிறார்.இதேபோன்று தில்லியிலும் ஒரு காலனியில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.ராஜஸ்தானில் ஒரு மருத்துவமனையில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் அவர் ஒரு முஸ்லீம் என்பதுதான்.அருணாசலப் பிரதேசத்தில் டிரக் ஓட்டுநர்களுக்கு அனுமதி கிடையாது. தில்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், சபருல் இஸ்லாம், ட்விட்டர் பதிவு ஒன்றிற்கு எதிராக, தில்லிக் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரைக் கைது செய்திருக்கின்றனர்.

Image

சஃபூரா சர்கார் (Safoora Zargar)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய, நான்கு மாத கர்ப்பிணிப் பெண்ணாக உள்ள,  சஃபூரா சர்கார் (Safoora Zargar) என்னும் செயற்பாட்டாளரை மிகவும் கொடுங்கோன்மையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றனர்.

இதேபோன்றே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மீரான் ஹைதர், கலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான், அசிஃப் இக்பால் போன்றவர்களும் வட கிழக்குத் தில்லியில் வன்முறையைத் தூண்டியவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு எவரொருவரும் விட்டுவைக்கப்படவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில், அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புவோரை, தேசத்துரோகிகளுக்கு இணையாகப் பார்ப்பதற்கு மெய்ப்பு தேவை என்று எவரேனும் கேட்டால் அவர்களுக்கு, அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமைகள் தேவை என்பதற்காக அமைதியானமுறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் திரும்பத் திரும்பக் கைது செய்யப்பட்டு வரும் இவைகளே சாட்சியங்களாகும்.

Image

மார்ச் 31 அன்று கோவிட் 19 சோதனைக்காக மக்கள் வெளியேற்றப்பட்ட புதுதில்லியில் உள்ள  நிசாமுதீன் மையத்தில்

பிரதமர் நரேந்திர மோடியால் மார்ச் 24 அன்று தேசம் தழுவிய சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட ஒருசில நாட்களுக்குள், கோவிட் 19-குரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, அரசியலுடன் சம்பந்தப்படாத முஸ்லீம் ஸ்தாபனமான தப்லிகி ஜமாத்துதான் காரணம் என்று பாஜக தலைவர்களாலும், அவர்களின் எடுபிடி ஊடகங்களாலும் அந்த ஸ்தாபனம் வேட்டையாடப்பட்டது. தப்லிகி ஜமாத், மார்ச் 13-15 தேதிகளில் நிஜாமுதீனில் உள்ள அதன் தலைமையகத்தில் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், கிர்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, குவைத், இலங்கை முதலான நாடுகளிலிருந்தும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாநாட்டை, மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தலிபானுடன் இணைத்துப் பேசியதைப் பார்க்க முடிந்தது. தப்லிகி மாநாட்டுக்கு, தெலங்கானாவிலிருந்து வந்திருந்தவர்களில் ஆறு பேர் இறந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஆட்சியாளர்கள், இவ்வாறு கோவிட்-19 பரவுவதற்குக் காரணம் தப்லிக் மாநாடுதான் என்றும், குறிப்பாக முஸ்லீம்கள்தான் என்றும் மிகைப்படுத்தும் அளவிற்குச் சென்றது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையில் உள்ள தில்லி அரசாங்கமும், கோவிட்-19 தொடர்பாக நாள்தோறும் வெளியிடப்படும் மருத்துவச் செய்திக்குறிப்பில், நிசாமுதீன் மைய நிகழ்வு என்று சிறப்புப் பிரிவு ஒன்று தனியே வெளியிடப்பட்டு வந்தது. மத்திய அரசாங்கத்தின் பல்வேறு தோல்விகளையும் மக்களிடமிருந்து மறைத்து, திசைதிருப்பும் நோக்கத்துடன், இவ்வாறு தப்லிகி மாநாட்டை இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

மே 13 அன்று, மத்திய சுகாதார அமைச்சர், கோவித்-19 அச்சுறுத்தலை,மருத்துவ அவசரநிலை இல்லை என்று கூறித் தள்ளுபடி செய்திருந்தார். இவர்களின் இத்தகைய பிரச்சாரம், தப்லிக் மாநாட்டைக் களங்கப்படுத்தும் விதத்திலும், இதன் பேரில் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரின்மீதும் இவர்கள் விடாது மேற்கொண்டுவந்த பிரச்சாரம், இவர்கள் ஊகித்தவிதத்திலேயே பலன் கொடுத்திருக்கிறது. இமாசலப்பிரதேசத்திலிருந்து தப்லிகி மாநாட்டுக்கு வந்த ஒருவருக்கு, குரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு தொற்று இல்லை என்று ‘நெகடிவ்’-ஆக அறிக்கை வந்தபின்பும், அவரை, அவர் கிராமத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதால் அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

ஊடகங்கள் பெரிய அளவில் இந்தக் கதையைக் கண்டுகொள்ளவில்லை. தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கோவிட்-19 சோதனைக்குப்பின் நலம்பெற்றுத் திரும்பியபின், தங்கள் ரத்தத்தை, பிளாஸ்மா சிகிச்சைக்காக நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள். இதனையும், ஊடகங்கள் அடக்கியே வாசித்தன.

தப்லிகி ஜமாத்திற்கு எதிராக இஸ்லாமிய வெறுப்பு வகைதொகையின்றி கட்டவிழ்த்துவிடப்பட்டது.தில்லியில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் அவர்களின் ஆதார் அட்டைகளைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.அவர்கள் முஸ்லீம்கள் பெயர்களுடன் இருந்தார்கள் என்றால், அவர்கள் உள்ளே நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.இந்த நிலை, சிறுபான்மையினர் குழு தலையிடும்வரை நீடித்தது. உத்தரப்பிரதேசத்தில், பாஜக எம்எல்ஏ தியோரியா சுரேஷ் திவாரி, முஸ்லீம்களிடமிருந்து காய்கறிகள் வாங்குவதற்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்திருக்கிறார். பின்னர் இதுகுறித்து இவரிடம் கேட்கப்பட்டபோதுகூட இவ்வாறு கூறியதற்காக அவர் மன்னிப்புக் கேட்காமல் அழுத்தமாகவே இருந்தார். அவருடைய நண்பர், பிரிஜ் பூஷன் ராஜ்புத், அவருடைய காலனிக்குள் ஒரு முஸ்லீம் வியாபாரம் செய்பவர் நுழையும்போது, “இனி இங்கே உன்னைப் பார்க்கக்கூடாது,” என்று அச்சுறுத்திக்கொண்டிருப்பது கேமாராவில் படமாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு திவாரிக்கும், ராஜ்புத்துக்கும் ஒருவரை சமூக விலக்கு அளிப்பதற்கு மட்டுமல்ல, அவமானப்படுத்துவதற்கும் அவர் ஓர் முஸ்லீமாக இருந்தால் மட்டுமே போதும்.

Image

தீபக் பண்டெலே (Deepak Bundele)

மத்தியப் பிரதேசத்தில், பேதுல் மாவட்டத் தலைநகரில், தீபக் பண்டெலே (Deepak Bundele) என்னும் வழக்குரைஞர், தேசம்தழுவிய சமூக முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, மருந்துகள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அவரை, 144 தடை உத்தரவு இருக்கும்போது எப்படி வெளியே வரலாம் என்று மத்தியப்பிரதேசப் போலீஸ் அதிகாரிகள் முதலில் கடுமையாகத் திட்டியிருக்கின்றனர், பின்னர் தாக்கியிருக்கின்றனர். பண்டெலெ தன் நண்பர் ஒருவருடன் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவம்-சட்டம் சார்ந்த புகாரைப் பதிவு செய்திருக்கிறார்.பின்னர் பண்டெலே மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடமும் புகார் தாக்கல் செய்திருக்கிறார்.மனித உரிமைகள் ஆணையத்திற்கும், முதலமைச்சருக்கும் கடிதங்களும் எழுதி இருக்கிறார். இதன்பின்னர் போலீசார் அவரை அணுகி நடந்த செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், தவறான அடையாளத்தால் பாதிக்கப்பட்டுவிட்டீர்கள் என்றும் கூறி, அவர் அளித்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். இந்த சமயத்தில், பண்டெலே அவர்கள் கூறியவற்றையெல்லாம் பதிவு செய்துள்ளார்.அதில் அவர்கள், “நீங்கள் தாடி வைத்திருந்ததால், உங்களை முஸ்லீம் என்று நினைத்துவிட்டோம்,” என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

அடுத்ததாக, மீரட்டில் வேலண்டிஸ் புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு நிகழ்வு. அது, இந்தி நாளிதழ் ஒன்றில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் செய்திருக்கிறது: “அனைத்து முஸ்லீம் நோயாளிகளும், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக வருபவர்களும் கோவிட்-19 தொற்று குறித்து சோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை ‘நெகடிவ்’ என்று வந்திருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.” ஆனால் இதேபோன்று எவ்விதமான நிபந்தனைகளும் இதர மதச் சமூகத்தினருக்கு விதிக்கப்படவில்லை. இது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோயாளிகளுக்கான உரிமைகள் சாசனத்தை மீறிய செயல் என்கிற உண்மையை மருத்துவமனை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.இது மிகவும் தெள்ளத்தெளிவான இஸ்லாம் வெறுப்பு மனோபாவம் (Islamophobia) ஆகும். இவை போன்றவை, வேலண்டிஸ் மருத்துவமனை நிர்வாகம், பேதுல் காவல்துறையினர், தியோரியா எம்எல்ஏ, மற்றும் எண்ணற்றவர்கள் முஸ்லீம்கள் உணவில் துப்புவதுபோலவும், தும்முவது போலவும் போலி வீடியோக்களைத் தயாரித்து சமூக ஊடகங்களில் பரப்பியது போன்றவை மீது நடவடிக்கைகள் எடுப்பதற்காக நாட்டிலுள்ள நீதிமன்றங்களின்முன் கொண்டுவரப்படவே இல்லை.

France: Thousands demonstrate against Islamophobia | News | 

மேற்கு ஆசியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்திடும்போதெல்லாம், அந்நாடுகள் விரைந்து செயல்பட்டு, அவ்வாறு வெறுப்பை உமிழ்ந்தவர்களைக் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுத்ததோடுமட்டுமல்லாமல், அவர்களின் பணியை அல்லது பதவியை நீக்கும் விதத்திலும் அவர்களைத் தண்டித்திருக்கின்றன.  அதேபோன்று எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்வதற்கான முயற்சிகள் இந்தியாவில் கிடையாது. பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குரோனா வைரஸ் தொற்று சாதியையோ, இனத்தையோ பார்க்காது என்று குறிப்பிட்டுவிட்டு, அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக மிகவும் தாமதமாகத் தாக்கத்தை ஏற்படுத்துவிதத்தில் நடந்துகொண்டுள்ளார். அதற்குள் அவ்வாறு வெளிவந்த வெறுப்புப் பிரச்சாரங்கள் ஏராளமான அளவில் தேசத்தை ஏற்படுத்தி இருந்தன.

சர்வதேச ஏஜன்சிகள் பல, கோவிட்-19 தொற்றுக் காலத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பழிவாங்கப்படுவது குறித்தும், திட்டமிட்டமுறையில் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது குறித்தும், கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. உயர்மட்ட ஐ.நா.ஸ்தாபனத்தின் அதிகாரி ஒருவர், இந்தியாவின் அமைதி மற்றும் அனைவருக்குமான சமூக நல்லியல்புகளுடன் கூடிய நீண்ட நெடிய வரலாற்றை உயர்த்திப்பிடித்துள்ள அதே சமயத்தில், அத்தகைய இந்தியாவில் இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருப்பதற்குப் பின்னால், சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக, “வெறுப்பை உமிழ்தலும், பாகுபாடு காட்டப்படுதலும் அதிகரித்திருக்கிறது” என்று கூறி பல்வேறு நிகழ்வுகளையும் குறிப்பிட்டு, கவலை தெரிவித்திருப்பதற்கான சாட்சியம் வந்திருக்கிறது. ஐ.நா.ஸ்தாபனத்தின் செகரடரி-ஜெனரலின்கீழ் உள்ள இனப்படுகொலைகள் மீதான ஐ.நா. சிறப்பு ஆலோசகர், அடாமா டிய்யிங் (Adama Dieng), “இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பை உமிழ்தல் மற்றும் பாகுபாடு காட்டப்படுதல் ஆகியவை அதிகரித்திருப்பது குறித்து வரப்பெற்றுள்ள செய்திகள் கவலை அளிப்பதாகக்” கூறியிருக்கிறார். அடாமா டிய்யிங் மட்டும் இவ்வாறு கவலையைப் பகிர்ந்துகொள்ளவில்லை.அவருடைய வேதனையையும் பயத்தையும் (his anguish and apprehension), 100 கோடி பேர் பகிர்ந்திருக்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், முஸ்லீம் அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினருடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், மத்திய அரசாங்கமும் இதேபோன்று பகிர்ந்திருப்பது, சரியான திசைவழியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம்.

(நன்றி: Frontline, June 5, 2020)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *