உலகம் முழுதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கோவிட் – 19 நோயை சிறப்பாகக் கையாள்வதற்கான வெவ்வேறு வழிமுறைகளைக் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். எனினும், ஒரு திட்டவட்டமான வழிமுறை இன்று வரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. எனவே, இந்த வைரசை நேரடியாக எதிர்கொண்டு செயலிழக்க வைக்கும் வண்ணம் ஒரு மருந்தை உருவாக்குவதே தற்போதைய இலக்காக உள்ளது.
பொதுவாகவே, வைரசுகளுக்கு எதிரான மருந்துகளை உருவாக்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, எந்த ஒரு வைரசாய் இருப்பினும், அதனால் தானாக தன்னைப் பெருக்கிக் கொள்ள முடியாது. மனித உடலிலோ, அல்லது விலங்கு உடலிலோ உள்ள உயிருள்ள செல்களின் உதவியுடனேயே அதனால் செயல்பட முடியும். ஆகவே, வைரசுகளுக்கு எதிராகத் தயாரிக்கப்படும் மருந்தானது அவ்வைரசினை மட்டும் தாக்காமல், நமது உடலில் உள்ள செல்களையும் சேர்த்துத் தாக்கக் கூடும்.
இரண்டாவது, ஆண்டிவைரல் மருந்துகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகையில், நாளடைவில் வைரசுகள் அம்மருந்துகளின் செயல்திறனை தவிர்ப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும். இதனால், புதுப்புது வகையான (strain) வைரசுகள் உருவெடுக்கக் கூடும்.
வைரஸ்கள் டி.என்.ஏ அல்லது ஆர்.என். ஏ வை மரபியல் பொருளாகக் கொண்டிருக்கும். பொதுவாக வைரசுகள் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் நிகழ்வில் அவ்வப்போது சில பிழைகள் நேரக் கூடும். இவ்வாறு நேரக்கூடிய பிழைகளே வகைமாற்றம் (mutation) எனப்படும் பிறழ்வு நிகழ்வுகளுக்கு வழி வகுக்கின்றன. டி.என்.ஏ வைரசுகளில் இந்தப் பிறழ்வு நிகழ்வானது சிறிய அளவிலேயே நடக்கின்றது.
காரணம், டி.என்.ஏ வைரசுகளில் உள்ள டி.என்.ஏ பாலிமரேஸ் என்னும் நொதி, இவ்வாறு ஏற்படும் பிழைகளைக் கண்டறியும் திறன் கொண்டது. மாறாக, ஆர்.என்.ஏ வைரஸ்களில் உள்ள பாலிமரேஸ் நொதிக்கு இந்தத் திறன் இல்லை. கரோனா வைரஸ் ஆர்.என்.ஏ வைரசாய் இருப்பினும், இந்த விதிமுறையிலிருந்து அது விலகி நிற்கிறது. ஏனெனில், கொரோனா வைரசில் கூடுதலாக எக்சோரைபோநியூக்ளியேஸ் (Exoribonuclease) எனும் பிழைகளை கண்டறியக்கூடிய ஒரு நொதியும் உள்ளது.
சமீபத்தில் கிலியாடு சயின்ஸஸ் எனும் அமெரிக்க மருந்து தயாரிக்கும் நிறுவனம் ரெம்டெசிவிர் என்னும் மருந்தை கோவிட் – 19 நோயாளிகளுக்குச் செலுத்தி, அதனை சோதனைக்கு உட்படுத்தி உள்ளது. இந்த சோதனையின் முடிவில் சற்றே சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது.
சார்ஸ் கோ வி 2(SARS Cov 2) வைரசில் 4 முக்கிய புரதங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஸ்பைக் (spike) எனப்படும் புரதம், வைரசு உடலின் செல்களுக்குள்ளே நுழைவதற்கு வழிவகுக்கின்றது. இந்த ஸ்பைக் புரதமானது செல்களிலுள்ள ஏ.சி.இ. 2 (ACE 2) எனும் நொதியுடன் பிணைந்து கொள்கிறது. இந்தப் பிணைப்பின் வாயிலாகவே வைரசு செல்களின் உள்ளே முழுமையாகச் சென்றடைகிறது. அதன்பின்பு இந்த வைரசு தனது ஆர்.என்.ஏ. வை வெளியேற்றி தனது பாலிமரேஸ் நொதியைக் கொண்டு அதனை பெருக்கிக் கொள்கிறது. இவ்வாறு புதுப்புது வைரசுகள் உருவாகி அவை அருகில் இருக்கும் மற்ற செல்களை தாக்கிக் கொண்டே செல்கின்றன.
ரெம்டெசிவிர் எனும் இம்மருந்து உடலில் செலுத்தப்படும் முன்பு செயலற்றதாகவே இருக்கும். செலுத்தப்பட்ட பிறகு நமது செல்களிலுள்ள ஒரு சில நொதிகளே இம்மருந்தைச் செயலாக்கி ரெம்டெசிவிர் டிரை பாஸ்பேட் (Remdesivir triphosphate) ஆக மாற்றும். பொதுவாக, சார்ஸ் கோ வி 2 வைரசின் பெருக்கல் நிகழ்வில் அடினோசைன் டிரை பாஸ்பேட் என்னும் பொருள் உபயோகிக்கப்படும்.
ரெம்டெசிவிர் டிரை பாஸ்பேட் செலுத்தப்பட்ட பிறகு, இந்த வைரசு அடினோசின் டிரை பாஸ்பேட்டுக்கு பதிலாக ரெம்டெசிவிர் டிரை பாஸ்பேட்டை தன்னுடன் தவறுதலாக இணைத்துக் கொள்கிறது. இந்த மாற்று நிகழ்வு செல்லின் உள்ளே எப்பொழுதும் நிகழும் இடத்தில் நிகழாமல் சிறிது இடைவெளிவிட்டு நிகழ்கிறது. இந்த இடமாற்றத்தால் பிழைகளைக் கண்டறியும் தன்மை கொண்ட எக்ஸோரைபோ நியூக்ளியேஸ் நொதியும் இத்தகைய பிழையுள்ள மாற்று நிகழ்வை கண்டறியத் தவறுகிறது.
இறுதியில், சார்ஸ் கோ வி 2 வைரஸ் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றது.
இது ஒரு புறம் இருந்தாலும், சார்ஸ் கோ வி2 வைரசு, நோயின் தீவிரத்தை அதிகரிக்கும் வண்ணம் பெருகியிருக்கும் பட்சத்தில், ரெம் டெசிவிர் சிறப்பான முறையில் செயலாற்றுமா என்ற கேள்வி எழுகிறது.
ரெம்டெசிவிர் முதன்முதலில் எபோலா நோயைக் குணப்படுத்தும் நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டது. அது மூன்றாம் கட்டச் சோதனையில் தேர்ச்சி அடையவில்லை எனினும், எபோலா நோயாளிகளில் ஓரளவு நல்ல மாற்றத்தை உண்டாக்கியது.
அண்மையில் அமெரிக்காவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அலர்ஜிக் அண்ட் இன்ஃபெக்சிஷியஸ் டிசீஸஸ், ரெம்டெசிவிரின் செயல்திறனைக் கோவிட் 19 பாதிக்கப்பட்டவர்களில் செலுத்தி சோதனை செய்தது. சோதனையின் முடிவில் இம் மருந்தின் செயல்திறன் ஓரளவு நம்பிக்கை அளிக்க கூடியதாகவே இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்டிரேஷன் ரெம் டெசிவிருக்கு அவசர ஒப்புதல் அளித்தது. எனினும், இவ்வகை ஒப்புதலை முற்றிலும் முறையான ஒப்புதலாகக் கருதமுடியாது.
சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் ரெம் டெசிவிரின் செயல்திறனைச் சோதனைக்கு உட்படுத்தினர். இச் சோதனையின் முடிவை ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டனர். ஆனால் இதன் முடிவுகள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளுடன் முற்றிலும் முரண்பட்டது. அதாவது, ரெம்டெசிவிர் மருந்து கோவிட் – 19 நோயாளிகளில் மதிக்கத்தக்க அளவில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை எனச் சீனா நடத்திய இந்த ஆய்வு தெரிவித்தது.
ஆகவே, இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே ரெம்டெசிவிரின் செயல்திறனைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
நிரஞ்சனா ராஜலட்சுமி
கால்நடை நுண்ணுயிரியலாளர்
நன்றி: The Wire Science
Very scientific… Congrats