The definitive version of the Herman Brock novel Article By S. Devadoss ஹெர்மன் ப்ரோக் நாவலின் அறுதி வடிவம் - சா. தேவதாஸ்

கடவுளர் தெய்விக மானவரல்ல என்பதை
அறிய சிரிப்பெழுந்தது, கடவுளரிடம்
சிரிப்பை வரவழைத்தது மனிதரே
மனிதரிடம் சிரிப்பை மூட்டியது மிருகங்கள் என்பது போல…

சிரிப்பில் விலங்கு, மனிதன், கடவுள் மூவரையும் ஒருங்கிணைத்து விடும் ஹெர்மன் ப்ரோக் ஆஸ்திரிய நாட்டு நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாளர், நாடகாசிரியர் (1886-1951). பொறியாளராகப் பயிற்சி பெற்று,  தந்தையின் ஜவுளித் தொழிலை நிர்வகித்து, பின் எழுத்தாளரானவர். யூதராயிருந்து கத்தோலிக்கரானவர். 1938இல் ஆஸ்திரியா, ஜெர்மனி வசமானதும் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஹெர்மன், ஜேம்ஸ் ஜாய்ஸ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் தலையீட்டால், விடுபட்டு, இங்கிலாந்து வந்து, பின் அமெரிக்காவில் தங்கி இயங்கியவர். அதுவரை நாவலின்  உச்சம் என்றால் ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலீஸஸ்தான். ஹெர்மனின் Sleepwalkers, The Death of Uirgiltக்குப் பின் யுலீஸஸைத்தாண்டி ஓரடி எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது.

ஒரு வாக்கியம், ஆறேழு வரிகள் ஒரு பத்தி என நீண்டு செல்ல, முடிவி்ல்லாத எண்ணவோட்டங்களாக போய்க் கொண்டேயிருக்கிறது அவரது எழுத்து. ஒரு தொடரை, வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதே அவ்வெழுத்தாளருடன் கலைஞனும் தத்துவாசிரியனும் தீர்க்கதரிசியும் இசைவாணனும் இணைந்து கொள்கின்றனர். அரும்பும் அழகிலிருந்து இசைப்பாடலாக புலம்பித் திரியும்….. வரை பரவசக் காட்சிகள், தீவிர சிந்தனைத் தெறிப்புகள், தத்துவ விசாரம், ஆன்மாவின் வேட்கை என விரிந்து செல்கிறது. படைப்பின், பிரபஞ்தத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான வரலாற்றின் கதி, தத்துவப்போக்கு, மனித உச்சம் அதவ பாதாளம் என அனைத்தும் துவக்கமாகின்றது. கவிதையும் உரைநடையும் இணைந்து உறைந்து கிடக்கும் பனிக்கட்டியைக் காட்டும்போது, தெறித்து வீழும் எரிமலைப் பிழம்பையும் தகிக்கச் செய்து விடுகிறார்.

ஈஸிட் என்னும் காப்பியத்தை கவிதையில் வடித்த விர்ஜிலின் இறுதி 18 மணிநேரங்களை தன் நாவலின் காலமாக பின்புலமாக்கி, தன் நிறைவுறாத பிரதியை எரித்து விடும் முனைப்பில் உள்ள விர்ஜிலையும் அப்பிரதியை எப்படியேனும் பாதுகாத்து வெளியிட்டுவிடும் முனைப்பில் உள்ள மன்னன் அகஸ்டஸையும் உரையாட வைக்கின்றார் ஹெர்மன்.

ஒட்டுமொத்த வாழ்வையும் தன் பிரதியில் உள்ளடக்கிட விரும்பும் அதே வேளையில் ஒட்டு மொத்த வாழ்விலிருந்து விடுபட்டுவிடும் வைராக்கியமும் இங்கே சேர்ந்து விடுகின்றது. ‘‘ஒரு சிந்தனை ஒரு கணம் – ஒரு வாக்கியம்’’ என்ற ரீதியில் ஹெர்மன் தியானிக்கிறார் இப்பிரதியில் சற்று கவனம் பிசகினாலும் இப்பிரக்ஞையோட்டம் பிடிபடாது நழுவிப் போகிறது, அதன் திசைவழியை அறிய இயலவில்லை. எதுவும் கருத்துக்களாக இல்லாததால், சுலபத்தில் உள்வாங்கிக் கொள்ள இயலாததாக, தர்க்கத்தில் சிக்காததாக இருந்து விடுகிறது.

மொழியில் சிக்கவோ விவரிப்பில் பிரச்சனைகளோ இல்லாமல் தெளிவாகவே எடுத்துரைக்கிறார் ஹெர்மன். ஆனால் அது அனுபவ விவரிப்பாக இல்லை. கருத்துக்களின் மோதலாக முரணாக இல்லை. சிந்தனையின் வடிவம் மொழியின் வெளிப்பாடு பெறும் முன்னரே, பிரக்ஞையோட்டத்தைக் கைப்பற்றிடும் எத்தனமாகி விடுகிறது. அப்போது உரைநடை கவிதையின்  நெருக்கமும் நெகிழ்ச்சியும் கொண்டு விடுகிறது. இங்கே வெளிப்பாட்டினை விடவும் பதிந்தால் போதும் என்ற நெருக்கடி அவசரம், மரணத்தின் மிதவையில் திரும்பிக் கொண்டிருக்கும் விர்ஜில், எண்ணவோட்டங்களின் அலையடிப்பில் அகமன நினைவோட்டங்களில் ஆழ்ந்தவராக இருக்கிறார். சிலுவைப்பாடுண்ட கிறித்துவின் தனிமையும் அத்தீவிரத்தில் மின்னல் வெட்டில் பிரக்ஞை உச்சத்தில் பொறி பறந்திடும் கீற்றுக்களும் இங்கே நெருக்கம் காண்கின்றன.

ஆயுள் முழுதும் உடல் நலமின்றியும் தன்பால் காமத்தினராயும் விளங்கிய, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விர்ஜில் (கி.மு.10-19), மன்னன் அகஸ்டஸின் வேண்டுதலால், தனது இறுதி 11 ஆண்டுகளில் ஈனிடை எழுதிக் கொண்டிருக்கிறார். ரோமானியரின் தேசிய இலக்கியமாக விளங்கப்போகும் அது, ட்ராய் நகரம்  வீழ்ந்ததும், வீரன் ஈனியஸ் அகதியாகி, இத்தாலிய இளவரசன் டர்னஸுடன் சண்டையிட்டு, ரோம்நகரம் நிர்மாணம் ஆவதற்கு காரணமாயிருப்பதை விவரிக்கிறது.

கி.மு. 19 இல் தனது கையெழுத்துப் படியை திருத்திச் சரி செய்ய, கிரேக்கம் சென்ற விர்ஜில், ஏதென்ஸில் அகஸ்டஸைச் சந்திக்கிறார். ரோம் திரும்பிவிட முடிவெடுத்த வேளையில், காய்ச்சல்கண்டு பிரண்டிஸியம் துறைமுகத்திலேயே இறந்துபோகின்றார்.

தனது பிரதி முழுமைபெறாது இருப்பதால் அதனை நூலாக வெளியிட வேண்டாம் என மன்னனிடம் வாதிடுகிறார். 11 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய காவியத்தை வெளியிட விரும்பாததற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் எனச் சந்தேகம் வருகின்றது மன்னன் அகஸ்டஸுக்கு. அது தனது முடிவில்லை, கடவுளின் முடிவு என்று சொல்லிப் பார்க்கிறார் விர்ஜில். மன்னன் சமாதானமாகவில்லை.

உங்கள் கவிதையில் மிக உயரிய விஷயஞானம் உள்ளது. நூல் முழுவதும் ரோம் பிரகடனம் செய்யப்படுகிறது. கடவுளர், வீரர், குடியானவர்  ஆகியோருடன் ரோமினைப் புரிந்து கொள்கிறீர்கள். அதன் கீர்த்தியையும், பக்தியையும் விவரிக்கிறீர்கள். ரோம் முழுமையினையும் ட்ரோஜன் மூதாதையரிலிருந்து அதன் காலகட்டத்தினையும் உள்ளடக்குகிறீர்கள். இது போதாதா…? என்று குறுக்கீடு செய்கிறான். ஒரேயொரு பார்வையில் தனியொரு படைப்பில் தனியொரு கண்ணோட்டத்தில் வாழ்வனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறீர்கள். இது போதா? என்கிறான். வாழ்வைப் புரிந்து கொள்வதை நோக்கியது உங்கள் இலக்கில்லை எனில் வேறு எதுவாக இருக்க முடியும் என்கிறான். மரணத்தைப் புரிந்து கொள்வதை நோக்கியது என்கிறார் விர்ஜில்.

எப்படி? வாழ்வின் அளப்பரிய அர்த்தம், மரணத்தால் வெளிப்படும் அர்த்த முழுமையிலிருந்த வர முடியும் எனது செயல்பாடு கவிதையாயிருக்கும் பட்சத்தில் அது தான், இலக்கு ஏனெனில் அது தான் தூய கவிதையின் இலக்கு.

விர்ஜில் இறந்ததும் முழுமையாகாமல் விடப்பட்டிருந்த வரிகள் சரி செய்யப்பட்டும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் ஈனிடை வெளியிட ஏற்பாடு செய்தார் என்கிறது வரலாறு.

அகதியாகும் ஈனியஸ் ரோமின் நிர்மாண வீரனாக, ஈனிடின் நாயகனாக இருப்பதில் தன்னை அடையாளங் கண்டு கொள்ளும் ஹெர்மன், தன்னுயிர் பரிதவிக்கையிலும் எழுத்தின் நாணயத்திற்காக உண்மைக்காக நோக்கத்திற்காக இறுதிக் கணம் மட்டும் போராடிப் பார்க்கும் விர்ஜிலிடமும் தன்னைக் கண்டு கொள்ளவே செய்கிறார். அவரது வாழ்வும் அவரது எழுத்தும் அதுவாக அமைந்து போனதால். அவசரத்தில் கொந்தளிப்பில் எழுதும்போதும் நாவலின் முழுமையினைக் கைப்பற்றி விடுவதிலேயே கவனம் குவிப்பு கொண்டிருந்தார்.

மிலன் குண்டேரா வாதிடுவதன் நாவல்கலையின் சாரத்தை நிறைவேற்றுபவராக ஹெர்மன் ப்ரோக்கும் ராபர்ட் மூஸிலும் உள்ளனர். இருவரும் ஆஸ்திரிய நாவலாசிரியர்கள். நாவலிடத்தே அளப்பரும் பொறுப்புகளைத் தந்து, கவிதை, மாயப்புனைவு, தத்துவம், செறிவான வாசகம் கட்டுரை என அனைத்தையும் ஒன்றிணைத்துவிடும் அளப்பரும் ஆற்றல் கொண்டதாக ஆக்கிவிடுவார் ஹெர்மன். “நாவல் மட்டுமே கண்டறியக் கூடியதை” கண்டறிந்திட முற்பட்டவர்.

அத்துடன் தன் பிற்கால வாழ்வில் அய்ரோப்பிய அகதிகளுக்கு உதவிடும் அமைப்பை நிறுவிடும் அக்கறையும் ஆர்வமும் மிகுந்திருந்தவர் ஹெர்மன்.

மரணம் பற்றிய தனது அறிவின் மூலமாக முடிவிலியை உணர்ந்து கொள்பவனே, படைப்பினைத் தக்க வைத்துக் கொள்பவனாக, ஒட்டுமொத்தப் படைப்பில் தனியொரு பகுதியினையும் தனியொரு பகுதியில் ஒட்டு மொத்தப் படைப்பினையும் தக்க வைத்துக் கொள்பவனாக மாறுகிறான். ஏனெனில் பகுதியால் தன்னை தக்க வைத்துக் கொள்ள இயலாது. தனது சட்டப்பூர்வ சூழலினூடேதான் தனது உணர்த்துதல்களில் மட்டுமே அதனை தக்க வைத்துக் கொள்ள இயலும்…” என்பது போன்று ஒவ்வொரு பத்தியினையும் செதுக்கிச் செதுக்கி தன் நாவல் என்னும் பிரும்மாண்ட சிற்பத்தை உருவாக்கி நிறுத்துகிறார் ஹெர்மன்.

Water, Fire, Earth, Air என்னும் நான்கு பதிகளாக ஒரு இசைக் கோவையை அமைத்து, சந்தத்துடன் இணக்கத்துடன் இணைத்து மாபெரும் இசைக் கோவமாக இசைக்கவிடுகிறார் ஹெர்மன்.

ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ழீன் ஸ்டார் அண்டர் மெயர் ஒரு கவிஞர்  4 ஆண்டு கால ஈடுபாட்டில், உழைப்பில் இதனை முடித்துள்ளதாகக் கூறுகிறார். இந்த நாவலை எழுதுவது சவாலான நடவடிக்கை எனில், மொழி பெயர்ப்பதும் சவாலான நடவடிக்கையே.

இந்நாவலையும் ஒரு கவிதையாகவே பார்க்கிறார் மொழி பெயர்ப்பாளர். கவிதையை மொழி பெயர்ப்பது எவ்வளவு சிரமமிக்கதோ அவ்வளவு சிரமமிக்கதாக இம்மொழி பெயர்ப்பும் இருந்திருப்பதைக் குறிப்பிடுகிறார். இந்நாவல் தனியொரு தன்னுணர்ச்சிப் பாங்கான பீறிடலாகவோ, தனியொரு மையக் கருத்திழையில் அமைந்த கவிதைகளின் தொடர்ச்சியாக இல்லாத போதும், ஒரு கவிதையே 500 பக்கங்களில் தன் தொன்மையான இதிகாசங்களுடன் தொடர்புடையதாக, இரு பண்புகளை உள்ளார்ந்ததாகப் பெற்றிருக்கிறது. வெளிப்பாட்டின் முழுமை வார்த்தைகளில் மட்டுமின்றி அவற்றிற்கிடையிலான வெளியிலும் அமைந்துள்ளது. இரண்டாவது பண்பு அதன் இசைக் கட்டமைப்பு…’

மிருகத்தையும் மனிதனையும், தெய்வத்தையும் சிரிப்பை முன்னிட்டு ஒரு வரிசையில் நிறுத்திவிடும் ப்ரோக், சிரிப்பினை மரணத்தின் சகோதரியாயும் சித்தரித்து விடுகிறார்.

‘‘ஆணோ பெண்ணோ அல்லாத சிரிப்பு, பாழின் வெற்று தடதடப்பே’’ என்னும்போது, ஒரு வட்டத்தை முழுமை செய்து விடுவார்.

ஆதாரங்கள்:

  1. The Death of virgil/ iterman Broch/Tr by Jean Start Untermeyer/ Vintage international 1945(1995)
  2. The Art of Fiction- Interview with milan kundera/ par is Review, 194 Summer.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *