சுடும் சட்டி அல்லது எரியும் நெருப்பு. நாவல் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இப்பொது நாம் இருக்கும் நிலை இதுதான். “இருதலைக் கொள்ளி எறும்பு நிலையிலிருந்து நம்மை விடுவிக்க வருகிறது டெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டக்ரேடிவ் பையாலஜி ( Institute of Genomics and Integrative Biology) தயாரித்துள்ள கிறிஸ்பர் (CRISPR Cas9) மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் சார்ந்த சோதனை கிட். இந்த கிட்டுக்கு புகழ் மிக்க திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரே இயக்கிய கிரைம் திரில்லர் படத்தில் வரும் துப்பறிவாளன் கதாபாத்திரதின் பெயரில் “ஃபெலுடா கிட்” என்று பெயர் வைத்து இருகிறர்கள்.
இப்போது பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சிஆர் பரிசோதனை மற்றும் ரேபிட் டெஸ்ட் இன் சிக்கல் என்ன? ஏற்கனவே உள்ளதை விட்டு புதிதாக வேறொன்று ஏன் அவசியம்? கிருமி தாக்கம் ஏற்பட்ட சில நாட்களிலேயே ஆர்.டி.பி.சிஆர் பரிசோதனை இனம் காணும்; ஆனால் விலை அதிகம், விடை தெரிய கூடுதல் காலம் ஆகும், சில குறிப்பிட்ட ஆய்வகங்களில் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும். எனவே குறைவான நபர்களை மட்டுமே சோதனைக்கு உட்படுத்த முடியும்.
ரேபிட் டெஸ்ட் சுளுவில் விடை அளித்து விடும், பல லேப்களில் சோதனை மேற்கொள்ளலாம், பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால் கிருமி தொற்று ஏற்பட்டு சில நாட்கள் கடந்த பின்னர் தான் இந்த டெஸ்ட் பயன் தரும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல பல சமயம் இந்த டெஸ்ட் விடை தரும் முன்னரே அந்த நபர் பலருக்கும் கிருமி தொற்று ஏற்படுத்தி இருக்கலாம்.
இந்த நிலையில் தான் விரைவாக, பாதுகாப்பாக அதே சமயம் முன்கூட்டியே கிருமி தொற்றை கண்டுபிடிக்கும் அதிநவீன பரிசோதனை கிட்டை தயார் செய்து திறனாய்வு செய்து வருகிறது இன்ஸ்டிடியூட் ஆப் ஜீனோமிக்ஸ் அண்ட் இண்டக்ரேடிவ் பையாலஜி.
ஆர்.டி.பி.சிஆர் பரிசோதனை
நாவல் கொரோனா வைரஸ் மிக மிக சிறியது. சுமார் நூறு நானோ மீட்டர் அளவே உடையது. ஒப்பிட்டுப் பார்த்தால் மனித தலை முடியின் தடிமன் 75,000 நானோ மீட்டர்! மிக ஆற்றல் வாய்ந்த எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியே மட்டுமே காண முடியும். அவ்வளவு சிறிய கிருமியை லேப்பில் நுண்ணோக்கி கண்டு இனம் காண முடியாது. கிருமி தொற்றிய சில நாட்கள் கடந்த பின்னர் தான் நோய் அறிகுறி ஏற்படும். மேலும் இந்த கிருமி தாக்கம் உள்ளவர்கள் பலருக்கும் நோய் அறிகுறி தென்படாது. எனவே கிருமி தொற்றியவர்களை கண்டறிந்து தொற்று காலமான பதினான்கு நாட்கள் தனிமை படுத்துவது அவசியம். இதற்க்கு தான் பல வகை பரிசோதனைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன.
துவக்கம் முதலே பயன் பட்ட சோதனை முறை ஆர்.டி.பி.சிஆர் எனப்படும் மீள்திருப்ப நகலெழுதூக்கி- பாலிமரேசு தொடர் வினை (Reverse transcriptase polymerase chain reaction) அல்லது RT-PCR பரிசோதனை முறை. உடலில் தொற்றியுள்ள கிருமியை எடுத்து பரிசோதித்து அதில் நாவல் கொரோனா வைரஸ் உள்ளதா என காண்பது தான் இந்த பரிசோதனையின் சுருக்கம்.
சாம்பிள் எப்படி எடுப்பார்கள்
பல மருத்துவ பரிசோதனைகளுக்கு பொதுவாக ரத்தத்தை தான் எடுத்து சோதனை செய்வார்கள். ஆனால் நாவல் கொரோனா வைரஸ் ஒரு சுவாச நோய் ஏற்படுத்தும் கிருமி. அதிலும் நுரையீரலில் புகுந்து கலகம் செய்யும் கிருமி. எனவே இந்த வைரஸ் ரத்தத்தில் குறிப்பிடும்படியாக இருக்காது.
ஆனால் கிருமி தொற்று உள்ளவர்களுக்கு மேல் சுவாசக்குழாய் அல்லது கீழ் சுவாசக் குழாயில் நாவல் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கும். எனவே தான் குச்சியில் முனையில் பஞ்சு பந்து கொண்டு காது சுத்தம் செய்ய பயன்படுத்துவது போன்ற நீண்ட குச்சியின் முனையில் பஞ்சை சுற்றி வைத்து மூக்கு அல்லது தொண்டையில் செலுத்துவார்கள். அங்கே உள்ள சளி போன்ற கோளை பொருளை நிமிண்டி எடுத்துக் கொள்வார்கள்.
வைரஸ் அதிக தாக்கம் உடையது. எனவே வெளியே நிமிண்டி எடுத்த உடனயே சிறிய கண்ணாடி குடுவையில் அந்த குச்சியை போட்டு அடைத்து விடுவார்கள். சாம்பிள் எடுப்பார்கள் மீது வைரஸ் தொற்றி விடக்கூடாது; அந்த சாம்பிளை எடுத்து பரிசோதனை சாலைக்கு செல்பவர்கள் மீதும் பற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
சில கல்லூரிகளில் பல ஆய்வு நிறுவனங்களில் பி.சிஆர் கருவி இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் இந்த சாம்பிளை டெஸ்ட் செய்துவிட முடியாது. BSL-2 உயிரியற் காப்புநிலை திறன் பெற்றிருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக அந்த லேபிலிருந்து காற்று வெளியே வரக்கூடாது; பணியாற்றுபவர்கள் அனைவரும் சுய காப்புக் கருவி (ppe) கட்டாயமாக அணிந்து தான் வேலை செய்யவேண்டும்.
ஆர்.டி.பி.சிஆர் எப்படி வேலை செய்யும்
சப்பாத்தி சுடும் கல்லில் தோசை செய்வது கடினம். அதுபோல பிசிஆர் கருவி டிஎன்ஏ எனும் மரபியல் பொருளை (genetic material) நகல் செய்யும் இயந்திரம். இரட்டைச் சுருள் வடிவம் கொண்டது டி.என்.ஏ. ஆனால் ஒற்றைச்சுருள் வடிவ ஆர்.என்.ஏ கொண்டது நாவல் கொரோனா ஒரு வைரஸ்.
எனவே நேரடியாக பிசிஆர் பயன்படுத்தி நாவல் கொரோனா வைரஸ் ஆர்என்ஏ வை நகல் செய்து பல்படி எடுக்க முடியாது. எனவே முதலில் ஆர்என்ஏவை இட்டு நிரப்பி பூர்த்தி செய்கின்ற டிஎன்ஏ. (complementary DNA) வாக மாற்றவேண்டும். மீள்திருப்ப நகலெழுதூக்கி நொதி (Reverse transcriptase RT) என்கிற என்சைம் சேர்த்தல் ஒற்றைச்சுருள் ஆர்என்ஏ பூர்த்தியாகி இரட்டை சுருள் டி.என்.ஏ. வடிவம் பெரும்.
இரைச்சலோடு கூட்டமாக இருக்கும் இடத்தில் ஒருவருடன் பேசவேண்டும் என்றால் கத்தி தான் பேசவேண்டும் அல்லவா அதுபோல சாம்பிளில் நாம் தேடும் வைரஸ் மட்டுமல்ல வெவ்வேறு பல வைரஸ் பாக்டீரியா நுண்ணுயிரிகள் இருக்கும்.
சாம்பாரில் பெருங்காயம் வாசம் வரவேண்டும் எனில் அதை கொஞ்சம் கூடுதலாக போடவேண்டும்; மஞ்சள் நெடி வரவேண்டும் எனில் அதை அதிகரிக்க வேண்டும். நாம் தேடும் வைரஸை தூக்கலாக வைத்தால் தான் அதன் வாசத்தை உணர முடியும். எனவே நாம் தேடும் வைரஸை நகல் செய்து கூட்டவேண்டும். அதுதான் பிசிஆர் செய்கிறது. ஒரு சில வைரஸ்களை பல லட்சம் வைரஸ்களாக நகல் எடுக்கிறது.
எளிமையாக கூறினால் பிசிஆர் ஒரு ஜெராக்ஸ் மெசின். ஆவணங்களை ஜெராக்ஸ் நகல் செய்வதுபோல பிசிஆர் குறிப்பிட்ட டிஎன்ஏக்களை பிரதி எடுக்கும். பிசிஆர்இன் தெர்மோசைக்ளர் தான் ஜெராக்ஸ் கருவி. வெப்பம்- குளிர்- வெப்பம் என வெப்பநிலையை மாறி மாறி செய்து டிஎன்ஏ வை பல லட்சம் பிரதிகள் நகல் செய்கிறது. முதல் சுற்றில் இரண்டு பிரதிகள் செய்தால் அடுத்த சுற்றில் இரண்டு இரண்டு நான்கு பிரதிகள் உருவாகும். அடுத்த சுற்றில் நான்கு நான்கு பதினாறு பிரதிகள் உருவாகும். இவ்வாறு ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு மடங்காகி பல லட்சம் பிரதிகள் உருவாகும்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும் என்பது போல நமக்கு வேண்டிய நுண்ணுயிரியின் டிஎன்ஏ வை மட்டுமே நகல் எடுக்க வேண்டும். மற்ற கிருமிகளை நகல் எடுக்கக்கூடாது. சாம்பிளில் நாம் தேடும் வைரஸ் மட்டும் இருக்காது. பல்வேறு வைரஸ் பாக்டீரியா இருக்கும்.
எனவே தான் பிசிஆர்யை இயக்கி படி எடுக்கும் முன்னர் எந்த டிஎன்எ வை பெருக்க வேண்டுமோ அதற்கான முன்தொடர் (பிரைமர்) வேதி பொருளை உள்ளே செலுத்துவார்கள். மேலும் ஜெராக்ஸ் மெஷினில் காலி பேப்பரை லோட் செய்தால் தானே நகல் பெற முடியும். அதுபோல டிஎன்ஏ பிரதி எடுக்க தேவையான A T G C நியூக்கிளியோட்டைடுகளை செலுத்துவார்கள். அஆஇஈ என்பன தமிழ் எழுத்துக்கள் என்பது போல A T G C நியூக்கிளியோட்டைடுகள் தாம் மரபணு வரிசையின் எழுத்துக்கள்.
இருவரின் விடைத்தாளை ஒப்பிட்டு அடுத்தடுத்த பெஞ்சில் அமர்ந்து தேர்வு எழுதியவர்கள் இருவர் காப்பி அடித்ததை கண்டுபிடிப்பது போல சாம்பிளில் தூக்கலாக உள்ள வைரஸ் நாவல் கொரோனா வைரஸ் தானா என கண்டறிவது தான் அடுத்தகட்டம். சாம்பிளில் கிடைத்த ஆர்என்ஏ வைரஸ்களின் படி எடுக்கப்பட்டு அவற்றின் மரபணுவரிசை கண்டுபிடிக்கப்படும்.
ஏற்கனவே நமக்கு நாவல் கொரோனா வைரஸின் மரபணுதொடர் தெரியும். இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பார்கள். இரண்டும் பொருந்தி வந்தால் பாசிடிவ். இரண்டும் வெவ்வேறாக இருந்தால் நெகடிவ். சில சமயம் நாவல் கொரோனா வைரஸில் மட்டும் படியும்படியான உறிஞ்சியொளிவீசுகின்ற நிறமி பூச்சை செலுத்திவிடுவார்கள். பல லட்சம் மடங்கு பெருகும்போது வைரஸ் இருந்தால் நிறமி பிரகாசமாக ஒளிர்விடும். இல்லையென்றால் மங்கலாக தான் அந்த நிறமி ஒளிரும்.
குருதிசீரச் சோதனை
தீயை நேரடியாக காண முடியாவிட்டாலும் புகையை வைத்து தீயை அனுமானம் செய்வது போல கிருமியை நேரடியாக இனம் காண முடியாவிட்டாலும் அந்த கிருமி நோய் தடுப்பாற்றல் மண்டலத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிவது தான் குருதிசீரச் சோதனை. எல்லா ரேபிட் டெஸ்ட்களும் ஏதோவிதத்தில் குருதிசீரச் சோதனை தான்.
ஒரே கம்பெனி தயாரித்த பூட்டுகள் என்றாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி பூட்டுகள் இருப்பது போல நாவல் கொரோனா வைரஸ் முதலிய ஒவ்வொரு கிருமிக்கும் தனித்துவமான ஆன்டிஜென் எனப்படும் அடையாளங்கள் இருக்கும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு, திண்டுக்கல் மணிப்பூட்டு என வெவ்வேறு பூட்டுகள் போல வெவ்வேறு கிருமிகளின் ஆன்டிஜென் அமைப்பு தனித்துவம் வாய்ந்தது.
ஒரு கிருமியின் ஆன்டிஜென் மற்ற கிருமிகளோடு ஒத்துப் போகாது குறிப்பிட்ட கிருமி தொற்று செய்யும்போது உடலின் நோய் தடுப்பாற்றல் மண்டலம் அந்த கிருமிக்கு எதிரான ஆன்டிபாடி தயார் செய்யும். ஒவ்வொரு பூட்டுக்கும் தனித்தனியான சாவி என்பது போல ஒவ்வொரு கிருமியின் ஆன்டிபாடிகளும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பூட்டு இருக்கலாம் அல்லவா அதுபோல ஒவ்வொரு கிருமிக்கும் பல்வேறு ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடிகள் உள்ளன. முக்கியமாக IgA, IgE, IgG, IgM, மற்றும் IgD ஆகிய ஐந்து இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்புப் புரத ஆன்டிபாடிகள் முக்கியமானவை.
தட்டையாக அகன்றும் காணப்படும் சாவியின் பகுதியில் பல்வரிசை இருக்கும். இந்த பல்வரிசை தனித்துவமாக அதன் ஜோடி பூட்டின் நெம்புகோல்கள் அமைப்புக்கு பொருந்துவது போல அமையும். ஆனால் சாவிக்கு சாவி, திறவுகோலின் நீண்டு காணப்படும் பகுதி அவ்வளவு வேறுபாடு இருக்காது.
அது போல நாவல் கொரோனா வைரஸ்க்கும் வேறு கிருமிக்கும் எதிர்பாக உருவாகும் IgM எனும் இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடியின் கால் பகுதி ஒரே போல இருக்கும். ஆனால் தலைப்பகுதி வேறுபாடும். கால் பகுதியின் ஒற்றுமையை கணக்கில் வைத்து தான் இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடிகளை ஐந்து வகையாக பிரித்துள்ளனர்.
ஐந்து இம்யூனோகுளோபுலின் புரத ஆன்டிபாடி இருந்தாலும் குருதிசீர ரேபிட் டெஸ்ட் கிட்களில் இனம் காண IgG மற்றும் IgM வகைகள் தான் பொதுவே பயன்படும். தொற்று ஏற்பட்ட சில நாட்கள் கடந்த பின்னர் தான் இனம் காணும் அளவில் IgG மற்றும் IgM வகை ஆன்டிபாடி காணக்கிடைக்கும். பெருங்காய டப்பாவின் வாசம் என்றுமே போகாது என்பது போல நம்மை தாக்கிய கிருமிகள் தூண்டிய IgG வகை ஆன்டிபாடி சிறிதளவு வாழ்நாள் முழுவதும் ரத்தத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்.
இந்த பரிசோதனை எளிது. சிறிதளவு ரத்தத்தை எடுத்து டெஸ்ட் கிட் மீது உள்ள சிறு துளையில் ரத்த சாம்பிள் சில துளி விடவேண்டும். பதினைந்து நிமிடம் கடந்த பின்னர் சரி பார்க்க வேண்டும். C மட்டுமே என்றால் டெஸ்ட் நெகடிவ். ஒருவேளை கிருமி அடைகாப்பு நிலையில் இருந்தாலும் இவ்வாறு நெகடிவ் ஏற்படலாம். CM மற்றும் CGM என்றால் டெஸ்ட் செய்தபோது கிருமி தொற்று உள்ளது என்று பொருள். CG மட்டுமே என்றால் கடந்த காலத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது என்று பொருள்.
ஆர்.டி.பி.சிஆர் டெஸ்டை கொண்டு நோய் கிருமி தாக்கம் இருக்கும் வரை தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் IgG வகை ஆன்டிபாடி டெஸ்ட் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முன்பு எப்பொழுதாவது நாவல் கொரோனா கிருமி தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் காட்டிக்கொடுத்துவிடும். அதாவது நோய் அறிகுறி இல்லாதவர்களையும் இனம் காண முடியும். ஆனால் கிருமி தாக்கம் ஏற்பட்டு சில நாட்கள் கடந்த பின்னர் தான் ஆன்டிபாடிகள் உருவாகும் என்பதால் சில நாட்கள் கடந்த பின்னர் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
வருகிறது ஃபெலுடா கிட்
குருதிசீரச் சோதனை போல எளிமையும் விரைவும், பிசிஆர் பரிசோதனை போல உறுதிபட கிருமி தாக்கத்தை இனம் காணுதல் மற்றும் தொற்று ஏற்பட உடனேயே காலதாமதம் இன்றி கண்டுபிடித்தால் ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற புதிய நாவல் கொரோனா வைரஸ் பரிசோதனை தான் “ஃபெலுடா கிட்” . சத்யஜித்ரேவின் திகில் திரைபடத்தில் காலதாமதம் இன்றியும், துல்லியமாகவும் துப்பு துலக்கும் கதாபாத்திரம் ஃபெலுடா போல இந்த கிட் எளிதில் அதே சமயம் உறுதிபட நாவல் கொரோனா வைரஸ் தாக்கத்தை இனம் கண்டு விடும் என்கிறார்கள் இந்த கிட்டை வடிவமைத்த ஆய்வாளர்கள். உள்ளபடியே FnCas9 Editor Linked Uniform Detection Assay என்பதின் சுருக்கமே FELUDA.
சி.எஸ்.ஐ.ஆர். (CSIR) ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான மரபணுத் தொகுதியியல் மற்றும் தொகுப்பு உயிரியல் நிறுவனத்தை (Institute of Genomics and Integrative Biology) சார்ந்த தேபோஜ்யோதி சக்கரவர்த்தி (Debojyoti Chakraborty) மற்றும் சவுவிக் மைத்தி (Souvik Maiti) எனும் ஆய்வாளர்கள் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவரை இதே முறை கொண்டு அமெரிக்காவின் எம்ஐடி மற்றும் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே கிட் தயாரிப்பில் இறங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்பர் தொழில்நுட்பம் என்றால் என்ன? கணினியில் கோப்புகளில் பல ஆயிரம் ஆவணங்கள் உள்ளன. அதில் ஒரு குறிபிட்ட ஆவணத்தை தேடுகிறோம். அவ்வாறு தேடும்போது கணினியில் ‘தேடு’ பொறியை நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா? அந்த பொறியில் தேடும் ஆவணத்தில் உள்ள சிறப்பான வார்த்தையை ‘தேடு வார்த்தையாக’ புகுத்தி தேடினால் நாம் தேடும் ஆவணம் எளிதில் கிடைத்து விடுகிறது.
எந்தெந்த ஆவணங்களில் அந்த வார்த்தை உள்ளனவோ அவை எல்லாம் பட்டியல் போல நம் முன்னே நீள்கிறது. அதுபோல தான் கிறிஸ்பர் தொழில்நுட்பம் வேலை செய்கிறது. அதில் தேவையானதைத் தேடி இனம் காண்பதற்கு Cas9 எனும் புரத மூலக்கூறை ‘தேடு’ ஆணை போலப் பயன்படுத்த முயல்கிறார்கள். இதற்கு கிறிஸ்பர் (CRISPR Cas9) மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் என்று பெயர் வைத்துள்ளனர். ‘Clustered Regularly Interspaced Short Palindromic Repeats’ என்பதன் சுருக்கமே கிறிஸ்பர்.
நாவல் கொரோனா வைரஸ் ஆர்என்ஏவில் சுமார் முப்பதாயிரம் எழுத்துக்கள் உள்ளன. நமக்கு நாவல் கொரோனா வைரஸின் மரபணு வரிசை ஏற்கனவே தெரியும் என்பதால் அதில் மட்டுமே உள்ள சிறப்பு வார்த்தைகளை தேடலாம். பிசிஆர்க்கு எடுப்பது போல தான் நோயாளியின் மூக்கு அல்லது தொண்டையிலிருந்து மாதிரியை எடுக்க வேண்டும். அதன் பின்னர் இந்த தொழில்நுட்பம் வழி குறிப்பிட்ட மரபணு எழுத்து வரிசை உள்ளதா இல்லையா என அறியலாம். தேடும் நாவல் கொரோனா வைரஸின் வரிசையை காண முடிந்தால் கிருமிதொற்று உள்ளது என அறிந்துக் கொள்ளலாம்.
பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையாக இந்த ஆய்வாளர்கள் முதலில் சிக்கிள் செல் அனீமியா (sickle cell anaemia) குறித்து தான் ஆய்வு செய்து வந்தார்கள். சீனாவில் நாவல் கொரோனா வைரஸ் தாண்டவமாட துவங்கியதும் தமது ஆய்வை இந்த வைரஸ் குறித்து திசை திருப்பி விட்டார்கள்.
வீடுகளிலேயே நாம் பயன்படுத்தும் கருத்தரிப்பு பரிசோதனைக்கான டெஸ்ட் ஸ்ட்ரிப்புகள் போலவே கோடுகளின் நிறம் மாறுதல் உத்தி மூலம் நோய்த் தொற்று உள்ளதா இல்லையா என கண்டறியப்படும். எனவே ஃபெலூடா கிட் எளிமையானது. எந்த ஒரு மருத்துவ பரிசோதனை சாலையிலும் பயன்படுத்த முடியும். பிசிஆர் முறையில் 4500 ரூபாய் செல்வகும்போது இதன் விலை வெறும் ஐநூறு ரூபாய் தான். விலையும் மலிவு. மேலும் அரைமணி நேரத்தில் சோதனை முடிவு தெரிந்துவிடும். காலதாமதம் இல்லை.
கிறிஸ்பர் எனும் அதிநவீன மரபணு தொழில்நுட்பதை பயன்படுத்தி தயார் செய்யப்பட்டுள்ள இந்த கிட் இப்போது தரப் பரிசோதனையில் உள்ளது. நோய் கிருமி உள்ளவர்கள் சிலருக்கு இல்லை என்றும், நோய் கிருமி இல்லாத சிலருக்கு இருக்கும் எனவும் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு நோய்கிருமி இனம் காணும் கிட்டும் இல்லாதவர்கள் சிலரை பாசிடிவ் என கூறினாலும் பரவாயில்லை ஆனால் கிருமி தாக்கம் உள்ளவர்கள் அனைவரையும் இனம் காண வேண்டும்.
பிசிஆர் தொழில்நுட்பம்
தொண்டை அல்லது மூக்கிலிருந்து சாம்பிள் எடுக்க வேண்டும்
வைரஸின் ஒற்றை சுருள் ஆர்என்ஏவை பூர்த்தி செய்து இரட்டை சுருள் டிஎன்ஏ வாக மாற்ற வேண்டும்
டிஎன்ஏ படி எடுக்க தேவையான மரபணு ‘எழுத்து’ வேதிப்பொருட்கள், உறிஞ்சி ஒளிவிடும் நிறமி, நொதிகள், முன்தொடர் (பிரைமர்) வேதிப்பொருள் முதலியவற்றை டெஸ்ட்டியூபில் போட்டு வெப்பம்- குளிர்- வெப்பம் என வெப்ப மாற்றி சுழற்சி செய்யவேண்டும்.
பல சுழற்சிகள் செய்யும்போது வைரஸின் ஆர்என்ஏ மரபணு தொடர் பல்கிப் பெருகும். அதில் உள்ள ஒளி உறிஞ்சி வெளிபடுத்தும் நிறமி யின் பிரகாசத்தை கொண்டு பாசிடிவ் அலல்து நெகடிவ் என அறிந்து கொள்ளலாம்.
1 ரத்த மாதிரியை எடுக்கவேண்டும் 2 கிட்டின் குழியில் சிறு துளி இடவேண்டும் 3 அதனுடன் சில வேதி பொருள்களை சேர்க்க வேண்டும் 4 கிட்டின் கோடுகளில் எவையெல்லாம் நிறம் மாறுகிறது என்பதை பார்த்து வைரஸ் தொற்றுகுறித்து முடிவுக்கு வரலாம்
முதல் ரிசல்ட் – நெகடிவ்
இரண்டாம் ரிசல்ட் நடப்பில் தொற்று உள்ளது
மூன்றாம் ரிசல்ட் – தொற்று ஏற்பட்டு முடிந்து விட்டது
நான்காம் ரிசல்ட் – நடப்பில் தொற்று உள்ளது
கிறிஸ்பர் (CRISPR Cas9) மரபணு எடிட்டிங் தொழில்நுட்பம் சார்ந்த ஃபெலுடா கிட் சோதனை கிட்.
– த வி வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரசார், புதுடெல்லி
நன்றி: குமுதம்
தோழர் சிறப்பு.கொரோனா சோதனை கருவி, சோதனை முறை பற்றிய தெளிவு கிடைக்கப்பெற்றேன்.நன்றி.