நகரங்களில் உள்ள பணக்கார இந்தியர்கள் தடுப்பூசிகளுக்காக வரிசையில் நின்று கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் இன்னும் தடுப்பூசி போடப்படுவது குறித்து இந்திய ஏழைகள் கேள்விப்பட்டிருக்கவே இல்லை.
தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மையம் எந்த இடத்தில் இயங்கி வருகின்றது என்பதை அங்கே வைக்கப்பட்டிருக்கின்ற அடையாளப் பலகைகள் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இருந்த போதிலும் வரவேற்பு அறிவிப்புகள், புகைப்படச் சாவடி என்று அமைக்கப்பட்டிருந்த அந்த மையத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. காவல்துறையினர் இருவர் நின்று ஒழுங்கு செய்து கொண்டிருந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வரிசையில் பத்து பேர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அவர்களிலும் பெரும்பாலானோர் சுகாதார ஆடை அணிந்திருந்த மருத்துவமனை ஊழியர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லி அரசு நடத்தி வருகின்ற அந்த மருத்துவமனைக்கு வெளியே ஐம்பது வயதான அன்றாடக் கூலியான பிரேம்நாத், அவரது மனைவி ஆஷா தேவி (48) ஆகியோர் மேற்கு தில்லி துவாரகாவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கு பேருந்திற்காக காத்து நின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய மையம் அந்த மருத்துவமனையில் இயங்கி வருவது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
வீட்டு வேலைகளைச் செய்து வருகின்ற தனது மனைவி தேவியின் தாடையில் ஏற்பட்டிருந்த வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காக அந்த மருத்துவமனைக்கு வந்திருந்த அந்த பிரேம்நாத் என்ற நீரிழிவு நோயாளி ‘நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருவதை நாங்கள் அறிவோம் என்றாலும் அதை எவ்வாறு பெறுவது என்று எங்களுக்குத் தெரியாது’ என்று கூறினார். இந்த நிருபரிடமே அவர் ‘எங்கே தடுப்பூசி போடப்படும்?’ என்ற கேள்வியைத் திருப்பிக் கேட்டார்.
முன்னணி சுகாதார ஊழியர்களுக்குப் போட்ட பிறகு அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பல வியாதிகள் கொண்ட நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மார்ச் 1 முதல் மத்திய அரசு தடுப்பூசி இயக்கத்தை நீட்டித்துக் கொடுத்தது. தடுப்பூசி இயக்கத்தின் இந்தக் கட்டத்தில் தடுப்பூசி மையங்களாகப் பணியாற்றுகின்ற வகையில் தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக இருந்தன. அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகின்ற வேளையில், ஒரு தடவை தடுப்பூசி போடுவதற்கு அதிகபட்சமாக ரூ.250 வசூலித்துக் கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி நடைமுறைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பிறகு அதில் தனித்ததொரு போக்கு இருப்பதை தில்லியில் உள்ள மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களால் கவனிக்க முடிந்திருக்கிறது. லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் தடுப்பூசி மையத்தை நிர்வகித்து வருகின்ற கதிரியக்கவியல் துறையில் பணியாற்றுகின்ற மருத்துவர் ஒருவர் ‘பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் படித்தவர்களாகவே இருக்கின்றனர், அவர்களைத் தவிர மற்றவர்கள் மருத்துவமனை ஊழியர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் யாரும் வரவில்லை. இது குறித்து அவர்களுக்கு இன்னும் தெரிய வரவில்லை’ என்றார்.
மத்திய அரசால் தலைநகரில் நடத்தப்பட்டு வருகின்ற ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் வெறுமனே ஆளில்லாமல் இருக்கின்ற தடுப்பூசிக்கான காத்திருப்பு பகுதியில் இருக்கின்ற மருத்துவர்கள் ‘தொன்னூறு சதவீதப் பயனாளிகள் நடுத்தர வர்க்கம் அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்’ என்று கூறுகின்றனர். ‘தடுப்பூசி போட்டுக் கொள்ள வருகின்ற பலரும் இந்தப் பகுதியைச் சுற்றிலும் வசித்து வருகின்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள், தொழில்நுட்ப வசதி கொண்டவர்களாகவே இருக்கின்றனர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறினார். மேலும் ‘தடுப்பூசி, அதனால் சாத்தியமாகின்ற பக்க விளைவுகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த வர்க்கப் பிளவு தில்லியில் மட்டுமே இருப்பதாக இருக்கவில்லை. மும்பையில் நகராட்சி நடத்தி வருகின்ற மருத்துவமனைகளில் தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற மருத்துவர்கள், முதன்முறையாக அந்த மருத்துவமனைகளுக்கு வருகை தந்துள்ள, ‘உயரடுக்கு’ மக்கள் மட்டுமே அங்கே தடுப்பூசிகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
இதேபோன்றதொரு சூழ்நிலை பெங்களூரிலும் இருப்பதாக செய்தித்தாள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழ்மையில் உள்ள, வயதில் மூத்த பெரியவர்கள் இன்னும் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘சேரிகளில் வசிக்கின்ற எங்களுடைய வழக்கமான நோயாளிகள் யாரும் தடுப்பூசி பெறுவதற்காக வந்ததை நாங்கள் இதுவரையிலும் காணவில்லை’ என்று அந்த நகரில் வசித்து வருகின்ற அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் பணக்கார இந்தியர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பிறகு புகைப்படச் சாவடிகளில் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.
பிளவிற்குள் வீழ்கின்ற இயக்கம்
கோவிட்-19 தடுப்பூசிகளில் எழுந்திருக்கின்ற இத்தகைய வர்க்கப் பிளவிற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெங்களூரில் வசித்து வருகின்ற பொது சுகாதார மருத்துவரும், ஆய்வாளருமான டாக்டர் சில்வியா கற்பகம் கூறுகையில் ‘தடுப்பூசி குறித்த தகவல்கள் குறிப்பிட்ட வகுப்பினரிடம் மட்டுமே பகிரப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதும் மற்றொரு காரணமாக இருக்கின்றது. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பயனாளிகள் அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள கோவின் என்ற டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறது. ‘இணையவழி பதிவு மிகப் பெரிய தடையாக இருக்கின்றது’ என்கிறார் கற்பகம்.
இணையவழியில் பதிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கு, அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவையாக மருத்துவமனைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் இணையவழி பதிவுகளை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நடவடிக்கையின் பின்னணியை விளக்குவதாக மார்ச் 9 அன்று பத்திரிகை தகவல் பணியகத்திலிருந்து அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பு ‘…குடிமக்களுக்கு வசதியாக இருக்கின்ற வகையில் ஒட்டுமொத்த செயல்முறையையும் இணையவழி பதிவு எளிதாக்கித் தருகின்ற அதே நேரத்தில், தேவை குறித்து முன்பே அறிந்து கொண்டு செயல்படுவதற்கான முன்னோக்குப் பார்வையை அதிகாரிகளுக்கு வழங்கி, அதன் மூலம் அதிக கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு உதவுவதாக…’ என்றிருக்கிறது.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை எளிமையாக்கித் தருவதற்குப் பதிலாக, இதுபோன்று இணையவழி பதிவு ஸ்மார்ட்போன்கள் இல்லாத, இணைய வசதிகள் இல்லாத ஏழைகளை விலக்கி வைத்திடவே வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் வெறிச்சோடிக் கிடக்கின்ற செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இடம்
இதுகுறித்து கொச்சி நகரைத் தளமாகக் கொண்ட பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் கே.ஆர்.அந்தோணி கூறுகையில், ‘தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பதிவு செய்து கொள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது எந்தவகையிலும் பயன்படாது. அதிநவீனமான, கல்வியறிவுள்ள மக்களுக்குச் சாதகமாக இருந்து பெருமளவில் இருக்கின்ற மற்றவர்களை விலக்கி வைப்பதற்கான வாய்ப்பையே தொழில்நுட்பமானது இயல்பாகவே கொண்டிருக்கிறது’ என்கிறார்.
விழிப்புணர்வை உருவாக்குதல்
நிபுணர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இன்னும் சிறந்த கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். முதலில் ஒரு திட்டத்தை வகுப்பதற்கு முன்பாக அந்த இயக்கத்தின் மூலம் யாரைக் குறிவைக்கப் போகிறோம் என்பதை – ‘நீங்கள் யாருக்கு அதைக் கொடுக்க விரும்புகிறீர்கள், எப்படி அதை கொடுக்கப் போகிறீர்கள்?’ என்பதை – புரிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்று ஜன் ஸ்வஸ்திய அபியானைச் சார்ந்த சுலக்சனா நந்தி என்று கூறுகிறார்.
முதியோருக்கு தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றால், அவர்களுடைய வீடுகளுக்கு அருகிலேயே தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று கூறுகின்ற நந்தி ‘நீண்ட வரிசையில் வயதானவர்கள் நின்று கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். ஒட்டுமொத்தமாக தடுப்பூசி திட்டத்தை வடிவமைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்றார்.
ஏற்படவிருக்கின்ற பாதிப்புகளை வரைபடமாக்கி அதிலிருந்து குறிப்பிட்ட குழுக்களை குறிவைப்பதன் மூலம் தடுப்பூசிக்கான தேவையை அளவிடுவது மற்றொரு அணுகுமுறையாக இருக்கின்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவாக இருந்து வருகின்ற தேசிய சுகாதார அமைப்புகளுக்கான வள மையத்தின் முன்னாள் இயக்குனரான டி.சுந்தரராமன் கூறுகையில் ‘நோயால் ஆபத்து எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு தடுப்பூசிக்கான தேவையும் இருக்கும்’ என்கிறார்.
வயது, பல நோய்கள் இருப்பது போன்றவற்றுடன் ஒருவருடைய தொழிலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘புலம்பெயர்ந்த தொழிலாளி அல்லது தொழிற்சாலையில் வேலை செய்கிறவர்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கலாம்’ என்று கூறுகின்ற சுந்தரராமன் ‘வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து பேசிக் கொண்டிருந்த போது நாம் தொழில் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது தடுப்பூசிகளின் தேவை பற்றி பேசுகின்ற போது அந்தக் காரணியை முற்றிலுமாக மறந்து விட்டோம்’ என்கிறார்.
எவ்வாறாயினும் நகர்ப்புற ஏழைகளுக்கு பெரும்பாலும் பொதுத்துறையின் மூலம் ஆரம்ப சுகாதார வசதி கிடைக்காது என்பதால் தடுப்பூசி போடுகின்ற வேலை அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.
‘நாடு முழுவதும் நம்மிடமுள்ள ஒட்டுமொத்த நகர்ப்புற சுகாதார அமைப்பு மிகவும் குழப்பமான நிலையிலேயே உள்ளது’ என்று அரசாங்கத்தின் போலியோ மற்றும் பிற வழக்கமான நோய்த்தடுப்பு திட்டங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள, தற்போது கிராமப்புற வங்காளத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற மருத்துவரான பிரபீர் சட்டர்ஜி கூறினார். ‘சேரிப் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்பினால், அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற மையங்களை அங்கே ஏற்படுத்தித் தர வேண்டும்’. ஆனால் தற்போது பல நகர்ப்புற குடியிருப்புகளில் அவ்வாறான உள்கட்டமைப்பு என்பது இருக்கவே இல்லை.
சட்டர்ஜி கோவிட்-19 தடுப்பூசிகள் மிகவும் சமமாக அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தொழிலாள வர்க்கப் பயனாளிகளை அரசாங்கம் முன்கூட்டியே தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதை ஒப்புக் கொள்ளும் சுந்தரராமன் ‘ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவிலான விழிப்புணர்வு இருப்பதால் நாம் அந்த சமச்சீரற்ற தன்மையை முதலில் கடக்க வேண்டும்’ என்கிறார். குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகள் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு பொது சுகாதார அமைப்புகள் மூலமாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
மற்ற சுகாதார ஆய்வாளர்கள் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் அதனை அனைவரிடமும் முன்கொண்டு செல்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். ‘இதை ஒரு வாய்ப்பாகக் கருதி சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள், பேறுகால உதவியாளர்களை நியமித்து, அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைப் அரசாங்கம் பலப்படுத்தி இருக்கலாம்’ என்று நந்தி கூறுகிறார்.
தடுப்பூசி குறித்த எந்தவொரு தயக்கத்தையும் களைவதற்கு சமூகங்களுக்குள் நம்பிக்கையை வளர்ப்பது மிகவும் தேவையான மற்றொரு அவசியமான நடவடிக்கையாகும். ‘மொபைல் கிளினிக்குகளை ஏற்பாடு செய்வது, சமூகங்களிடம் நேரடியாகச் செல்வது, சுவரொட்டிகளை ஒட்டுவது, தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் அரசாங்கம் தீவிரத்துடன் இறங்க வேண்டும்’ என்று கற்பகம் கேட்டுக் கொள்கிறார்.
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் 2021 மார்ச் 11
தமிழில்: தா.சந்திரகுரு