ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை வெறும் தொழிற் சாலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து, சாலை விரிவாக்கம் ஆகியவை என பெரும்பான்மை மக்கள் எண்ணி வந்து கொண்டு இருப்பது, உண்மையில் அறியாமையே ஆகும். நாட்டின் இயற்கை வளம், அரிய வன விலங்கு, பறவைகள், அதன் அறிவியல், சூழல் முக்கியத்துவம், ஆகியவையும் நம் நாட்டின் பாரம்பரிய உடைமை என்பதை பொது மக்கள்,
உணர வேண்டும். அத்தகைய விழிப்புணர்வு நம் நாட்டில் ஓரளவு இருக்கிறது. எனினும் வளர்ச்சி பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், இயற்கை வளம் பாதிக்கும் போது மத்திய மாநில மற்றும் நிறுவன துறைகள், அதன் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் கூட சிந்தித்து அதற்கு ஏற்ப திட்டமிட தயார் ஆவது இல்லை..
மேலும வனம் & சுற்றுசூழல் துறைகளில் உருவாக்கும் அரிய விலங்கு, தாவர பாதுகாப்பு அதன் திட்ட இன்றியமையாமை, முக்கியத்துவம் பற்றி ஒருங்கிணைந்த துறை நிபுணர்கள் மிகுந்த அக்கறை கொள்வது இல்லை என்பது சமீபத்திய பல்வேறு நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் உண்மை ஆகும். உயிரினங்களில் மிக அரிய ஒன்று, ஏப் என்ற வாலில்லா குரங்கு. பெரும்பாலும் இவை ஆப்பிரிக்கா கண்டத்தில், அதிகம் காணப்படுகின்றன. எனினும் இந்தியாவில் உள்ள ஒரே வாலில்லா குரங்கினம் (APE) ஹூலாக் கிப்பன் அல்லது வெண் புருவ ஹூலாக் கிப்பன் குரங்கு (WHITE BROWED GIBBON or WESTERN HOOLOCK GIBBON) ஆகும். 6.8 கிலோ எடை கொண்டுள்ள இந்த மரத்தில் வசிக்கும் விலங்கு 3 அடி உயரம் வரை உடல் பெற்றுள்ளது.
இதன் வளைந்து, நெளியும் தன்மை கொண்ட முன்னங்கால்கள், மரங்களின் உச்சிப்பகுதியில் இருக்கும் கிளைகளை இறுக பற்றிக்கொண்டு, தொங்கி கொண்டு, விரைவாக மரத்தில் நகரகூடியனவாகும்.. இளம் வயதில் ஆண்,பெண் இன குரங்குகள், கருமை வண்ணத்திலும், 5.6 ஆம் வயதில் இனப்பெருக்க முதிர்ச்சி அடையும் நாட்களில் சற்று மாறி பழுப்பு வண்ணமாக மாறிவிடும் தன்மை கொண்டிருக்கும். ஈரப்பதம் கொண்ட அடர்ந்த மலைபசும் காடுகளை இவை வாழிடமாக கொண்டவை. இந்த குரங்குகளின் குட்டிகள் லேசான மஞ்சள் வண்ணத்தில், சிறு பழுப்பு வண்ண புள்ளிகள் பெற்றுள்ளன. அதிக அளவில் 6 உறுப்பினர்கள் வரை எண்ணிக்கை கொண்ட குழுக்களாக காணப்படும். இரவில் பள்ளதாக்குகளில் பாதுகாப்பாக தங்கிவிடும் நடத்தை கொண்டுள்ளன.
மிக கடும் வெப்ப நேரங்களில், நிழல் உள்ள மரங்களை நாடி இவை சென்றுவிடுகின்றன. தனக்கென, ஒரு குறிப்பிட்ட வாழிடப் பகுதியில் மட்டும், எல்லை வகுத்து, உணவுக்காக வேட்டையாடுகின்றன. பொதுவாக பழங்கள், இலை, விதைகள் , உண்ணும். பூச்சி, சிறு முதுகெலும்பற்ற உயிரிகளையும்,அவ்வப்போது எடுத்து கொள்கின்றன. மழைக்காலத்திற்கு முன்னரே இனப்பெருக்க செயல்பாடுகள் துவங்கும், இவை குளிர் காலத்தில் குட்டிகளை ஈனுகின்றன. பெரும்பாலும் டிசம்பர் முதல் மார்ச் மாதங்களுக்குள், பெற்றோர் ஆகிவிடுகின்றன. தன் முதுகில் குட்டிகளை சுமந்து செல்கின்றன. இளம் ஆண் குட்டிகள் குழுவின் ஓரத்தில் அமந்துகொண்டுள்ளன.
அரிய ஹூலாக் கிப்பன் குரங்குகள் நமது நாட்டில், அசாம், மிசோரம், மேகாலயா மாநிலங்களில் உள்ள காடுகளிலும், அருகாமை யில் உள்ள பங்களாதேஷ், மையன் மார் நாடுகளிலும் வசிக்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் அறிந்து அரசு பல்வேறு பாதுகாப்பு திட்டங்கள் உருவாக்கியுள்ளன. எனினும், நவீன அறிவியல் வளர்ச்சி காலத்தில், தொழில்,போக்குவரத்து போன்ற பல காரணங்களினால், கிப்பன் குரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது, இயற்கையாளர்களுக்கு கவலை அளிக்கிறது. சிறந்த விதை பரவலுக்கு ((SEED DISPERSAL) உதவி செய்யும் கிப்பன் வாலில்லா குரங்கு இனம்,கட்டாயம் காப்பாற்றப் படவேண்டிய, கடமை அரசுக்கு மட்டும் அல்ல!நம் இந்தியாவின் அரிய இயற்கை, விலங்கு பறவைகள் வளங்களின் முக்கியத்துவம் அறிந்து கொள்ள, பாதுகாப்பு செயல்பாடுகளில் பங்கேற்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் விழிப்புணர்வு எண்ணம் வேண்டும்.
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்காட் பகுதியில் உள்ள ஹோலாங்கப்பார் வன விலங்கு சரணாலயத்தில் அழிநிலை பிரிவில் உள்ள (IUCN Category) ஹூலாக் கிப்பன் குரங்குகள் வசிக்கின்றன. எனினும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சரணாலயத்தின் காடுகளின் இடையில் அமைக்கப்பட்டுள்ள இருப்பு பாதை மூலம், விலங்குகள் பல பாதிப்புகளை சந்திக்கின்றன. குறிப்பாக இருப்பு பாதை மின் மயமாக்கம் (Electrification) ஆகிய பிறகு மரங்களில் வாழும் வன விலங்குகள் அதிக அளவில் இறப்பு அடைந்து வருகின்ற நிலை வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
ஹோலோங்கப்பார் சரணாலயத்தில் செல்லும் இருப்பு பாதை மின் மயம் ஆக்குவதற்கு தேசிய வன விலங்கு வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி அளித்த நிலையில், சமீபத்தில் 8 ஆம் தேதி பிப்ரவரி, 2026, அன்று, ரயில்வே மின் பாதையில், ஒரு ஆண் ஹூலக் ஜிப்பன் குரங்கு, விபத்தில் சிக்கி இறந்து போன தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த மின் மயமான(25 கிலோவாட்) இருப்புப் பாதை 1.65 கிலோமீட்டர் மட்டுமே எனினும் வனப்பரப்பின் 20 சதுர கி. மீ க்கு மேற்பட்ட பரப்புடைய காட்டினையும், அங்குள்ள வன விலங்குகளையும், பாதிப்பது உண்மை. இப்பகுதியில் வசிக்கும் 6 வெவ்வேறு வகை குரங்கு சிற்றினங்களும், 1997 ஆம் ஆண்டு முதல் உரிய பாதுகாப்பு பெற்று வந்த பொழுதும், அடர்ந்த காட்டுக்குள் விரைவு ரயில் போக்குவரத்து இருப்பது, அரிய விலங்குகள் வாழ்வில் தடை என்பதை உணர்வு பூர்வமாக யார் அறிவாரோ!!?.
மனிதர்கள் நடமாட்டம், இயற்கையில் வாழும் விலங்குகள் தனிமையினை தகர்ப்பது, தவிர்க்க இயலாது என்று அதனை நியாயப்படுத்தும் போது வேதனை ஆக இருக்கிறது. தொப்பி லங்கூர் குரங்கு, மலபார் அணில், யானை போன்ற விலங்குகளும் துன்பப்படும் நிலை இங்கு காணப்படுகிறது. உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடுன் நகரில் அமைந்துள்ள இந்திய வன விலங்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (WILDLIFE INSTITUTE OF INDIA) அளித்த ஆய்வு அறிக்கை யின் பரிந்துரைப்படி காட்டின் வழியில் செல்லும் ரெயில்களின் வேக கட்டுப்பாடு, மற்றும் மரங்களின் மேற் கூரை என்ற விதானம் (CANOPY) பாலங்கள் அமைக்க திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தின் ஜோர்காட் மாவட்ட வன அலுவலர், கிப்பன் , குரங்குகள் நடமாட்டத்திற்கு, ஐந்து மரக்கூறை பாலங்கள், அமைக்கப்பட்டு, பிரிந்து உள்ள வெவ்வேறு காட்டு பகுதிகள் ஒன்றிணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றை கிப்பன் குரங்குகள் பயன்படுத்த தயங்குவதாக கூறுகிறார். அங்குள்ள “ஆரண்யக்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி தருகிறது. அந்த நிறுவன ஆய்வாளர் புக்கன் என்பவர், ஒவ்வொரு மரக்கூறை பாலத்திற்கு இடையில் 30 மீட்டர் இடைவெளி உள்ளதாக கூறுகிறார்.
மேலும், அங்கு ஆய்வு மேற்கொள்ளுகின்ற குரங்கின ஆய்வாளர் திலிப் செட்ரி என்பவர் 125 ஹூலாக் கிப்பன்கள் அப்பகுதியில் உள்ள நான்கு காட்டு பிரிவுகளில் வசிக்கின்றன. ஒரு வன பிரிவு க்கு இடையில் உள்ள ரயில் இருப்பு பாதை மற்ற மூன்று வன பகுதிகளை பிரிக்கும் நிலை உள்ளது. முதல் வனப் பிரிவில் நான்கு ஜீபபன் குடும்பங்கள் வசிக்கின்றன. ஜிபபன்கள் ஒற்றை பாலின இனப்பெருக்க நடத்தை (Monogamaous) கொண்டவை ஆகும். முதல் வனப்பிரிவில் உள்ள, கிப்பன் குரங்குகள், குறிப்பாக அங்குள்ள இளம் ஆண் விலங்குகள், தமது பெண் இணை விலங்குகளை தேடி மற்ற தொலை தூரத்தில் இருக்கும் மூன்று வனப் பிரிவுகளை அடைவது மிகுந்த கடினம் ஆகும் என கூறுகிறார்.
ரயில்வே துறையும், ரூபாய் 41.99 லட்சம் செலவில், இருப்புப் பாதை மேல்மரக்கூறை பாலங்கள் அமைக்கவும், அதன் மீது வன பிரிவுகளை கடந்து செல்கின்ற வன விலங்குகள் தவறாக கீழே விழுந்து விடாமலிருக்க, வலை கட்டும் பணிகள் மேற்கொண்டு ள்ளது.. கிப்பன் விலங்கு, யானை போன்ற விலங்குகளின் நடமாட்டத்தினையும் 33 ச. கி. மீ பரப்பளவுள்ள வனப் பரப்பினை கண்காணிக்க, மூன்று கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கருவிகள், அமைத்துள்ள நிலை உண்மையில் வரவேற்கத்தக்கது.
இருப்புப் பாதைக்கு மேல் உள்ள மரக்கூறை பாலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மின்சார கம்பிகளுக்கான தூண்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும், மேலும் விலங்குகள், பாதிக்கப்பட்ட மரக்கூறை பாலங்களை தவிர்த்து, மின் கம்பிகளில் ஏறி செல்வதை வழக்க நடத்தை ஆக்கிவிட்டதாகவும்,இதுவே சமீபத்திய கிப்பன் மின் விபத்தின் காரணமாக இறந்ததற்கான காரணம் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.
குரங்கு ஆய்வாளர் செட்ரி என்பவர் “மரக்கூறை என்பது வனவிலங்கு ஆர்வலர்கள் முயற்சியால் ஏற்படுத்தி விட்டாலும், வனப்பிரிவுகளுக்கு இடையில் உள்ள தொலைவு அதிகம் உள்ளது.,தொடர்ந்து” எதிர் காலத்தில் ரயில் இருப்புப்பாதையில் மேற்கொள்ள உள்ள மேம்பாட்டு பணிகள் மூலம் இந்த ஹோல்லங்க பார் அரிய வகை வன விலங்குகளின் சரணாலயத்தில், (இரட்டை இருப்பு பாதை மின்மயம்) பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விட அதிக வாய்ப்புகள்இருக்கிறது”என்றும் கூறுகிறார். மேலும், இந்த ஹூலாக் கிப்பன் குரங்குகளின் காட்டினை காப்பாற்ற ரயில் இருப்பு பாதையினை முற்றிலுமாக சரணாலயத்தின் வெளி ப்பகுதியில் மாற்றியமைக்க வேண்டும் என்கிறார்.
இருப்புப் பாதை அல்லது போக்குவரத்து சாலை ஆகியன, மனிதர்கள் வாழ்க்கை மேம்பட வளர்ச்சி திட்டப் பணிகளாக கருதுவதும், அதற்குரிய சிறப்பு திட்டங்கள் உருவாக்குவது அவசியம் என்பதில் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிச்சயம் இல்லை.
எனினும் அரிய தாவரங்கள், விலங்குகள் வசிக்கும் சரணாலயங்கள், சூழல் உணர்வு (ECO SENSITIVE ZONE) முக்கிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ள அரசு உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். ஹூலக் கிப்பன் என்ற வாலில்லா குரங்குகள் இனம் அந்த சரணாலயத்தில் முழுமையாக அழிந்து விடாமல் இருக்க உரிய முயற்சிகளை அசாம் அரசு எடுப்பது நன்று.
📚 எழுதியவர்:

– முனைவர் பா.ராம் மனோகர்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
