மறதியின் பரிணாம நன்மைகள்!
– ஸ்வென் வான்னெஸ்டே, எல்வா அருள்செல்வன்
தமிழில் : த. பெருமாள்ராஜ்.
மறதி என்பது நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகும். நீங்கள் ஒரு அறைக்குள் சென்றதும், ஏன் அந்த அறைக்குள் சென்றீர்கள் என்பதை மறந்துவிடலாம் – அல்லது தெருவில் யாராவது உங்களிடம் ‘ஹாய்!’ சொல்லும்போது, அவர்களின் பெயர் உங்களுக்கு நினைவில் இல்லாமல் போகலாம்.
ஆனால் நாம் ஏன் விஷயங்களை மறந்து விடுகிறோம்? இது வெறுமனே நினைவாற்றல் குறைபாட்டின் அறிகுறியா, அல்லது இதில் ஏதேனும் நன்மைகள் உள்ளனவா?
இந்தத் துறையில் ஆரம்பகாலக் கண்டுபிடிப்புகளில் ஒன்று, சராசரி நபரின் நினைவுகள் மங்கிப்போவதால் மறதி ஏற்படலாம் என்பதை எடுத்துக்காட்டியது. இது 19 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் உளவியலாளர் ஹெர்மன் எபிங்ஹாஸின் கண்டுபிடிப்பு ஆகும். அவரது “மறதி வளைவு” பெரும்பாலான மக்கள் புதிய தகவல்களின் விவரங்களை மிக விரைவாக மறந்துவிடுகிறார்கள் என்பதையும், காலப்போக்கில் அது எப்படி குறைகிறது என்பதையும் காட்டுகிறது. சமீபத்தில், நரம்பியல் விஞ்ஞானிகளும் இந்த கருத்தை ஆதரித்துள்ளனர்.
மறதி வளைவு:
மறதி என்பதும் ஒரு பயனுள்ள செயல்பாடாக இருக்கலாம். நம் மூளைக்குத் தொடர்ந்து ஏராளமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தகவலையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டால், முக்கியமான தகவல்களை நினைவில் வைத்திருப்பது கடினமாகிவிடும்.
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை மறந்துவிடுவதற்கான காரணம், அதில் முதலில் போதுமான கவனம் செலுத்தாமல் இருப்பதுதான். நோபல் பரிசு பெற்ற எரிக் கண்டல் அவர்களின் ஆராய்ச்சியும், மற்றும் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளும், மூளையில் உள்ள செல்கள் (நியூரான்கள்) இடையேயான இணைப்புகள் (சினாப்ஸ்கள்) வலுவடையும் போது நினைவுகள் உருவாகின்றன என்று கூறுகின்றன.
நாம் எதையாவது கவனிக்கும்போது, நம் மூளையில் அதற்கான இணைப்புகள் வலுப்பெற்று, அந்த நினைவு நீண்ட காலம் நிலைத்திருக்கும். இதே செயல்முறைதான், நாம் தினமும் சந்திக்கும் தேவையற்ற விஷயங்களை மறக்கவும் உதவுகிறது. வயதாகும்போது கவனச்சிதறல் அதிகரித்தாலும், அல்சைமர் போன்ற நினைவாற்றல் குறைபாடுகள் கவனக் குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருந்தாலும், புதிய நினைவுகளை உருவாக்க நாம் அனைவரும் முக்கியமற்ற விஷயங்களை மறக்க வேண்டியது அவசியம்.
புதிய தகவல்களைக் கையாளுதல்
ஒரு நினைவை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது, சில சமயங்களில் புதிய தகவல்களுக்கு ஏற்ப அந்த நினைவை மாற்றியமைக்க வழிவகுக்கும். உதாரணமாக, நீங்கள் தினமும் ஒரே பாதையில் பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பாதையைப் பற்றிய ஒரு தெளிவான நினைவு உங்களிடம் இருக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் அந்தப் பாதையில் பயணிக்கும்போதும், உங்கள் மூளையில் அந்தப் பாதைக்கான இணைப்புகள் வலுவடையும்.
ஒரு திங்கட்கிழமை, நீங்கள் எப்போதும் பயணிக்கும் ஒரு சாலை மூடப்பட்டு, அடுத்த மூன்று வாரங்களுக்கு வேறொரு சாலையில் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் புதிய தகவலை ஏற்றுக்கொள்ள உங்கள் பயணம் பற்றிய நினைவகம் நெகிழ்வாக இருக்க வேண்டும். மூளை இதை எப்படிச் செய்கிறது என்றால், சில நினைவக இணைப்புகளை பலவீனப்படுத்தி, புதிய பாதையை நினைவில் வைத்துக் கொள்ள புதிய இணைப்புகளை வலுப்படுத்துகிறது.
நம் நினைவுகளைப் புதுப்பிக்க இயலாமை, கணிசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது. உதாரணமாக, PTSD – Post-Traumatic Stress Disorder (மனஉளைச்சல் சீர்கேடு) உள்ளவர்கள், ஓர் அதிர்ச்சிகரமான நினைவை மாற்றவோ மறக்கவோ முடியாமல் தவிர்ப்பார்கள். அவர்கள் தங்கள் சூழலில் உள்ள நினைவூட்டல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.
பரிணாமக் கண்ணோட்டத்தில், புதிய தகவல்களுக்கு இடமளிக்க பழைய நினைவுகளை மறப்பது என்பது நிச்சயமாக நன்மை பயக்கும். நமது வேட்டைச் சமூக மூதாதையர்கள் ஒரு பாதுகாப்பான நீர்நிலைக்குப் பலமுறை சென்றிருக்கலாம். ஆனால் ஒரு நாள் அங்கு ஒரு போட்டி குழுவையோ அல்லது புதிதாகப் பிறந்த குட்டிகளுடன் ஒரு கரடியையோ கண்டிருக்கலாம். அந்த இடத்தை இனி பாதுகாப்பானது அல்ல என்று புரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் நினைவுகளை மாற்றியமைக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு செய்யத் தவறினால் அது அவர்களின் உயிர்வாழ்விற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கும்.
நினைவுகளை மீண்டும் செயல்படுத்துதல்
நினைவுகளை இழப்பதால் மட்டும் நாம் மறப்பதில்லை. சில நேரங்களில் நம் நினைவுகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களால் கூட மறதி ஏற்படலாம். எலிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, மறக்கப்பட்ட நினைவுகளை, சினாப்டிக் இணைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் மீண்டும் நினைவுபடுத்தலாம் (அல்லது மீண்டும் செயல்படுத்தலாம்).
எலிகளுக்கு, நடுநிலையான ஒரு விஷயத்தை (மணி அடிப்பது போல) விரும்பத்தகாத ஒரு விஷயத்துடன் (காலில் லேசான மின்சார அதிர்ச்சி போல) தொடர்புபடுத்த கற்றுக் கொடுக்கப்பட்டது. பல முறை இதைச் செய்த பிறகு, எலிகள் ஒரு “பய நினைவை” உருவாக்கின. மணியோசையைக் கேட்டவுடன், அவை மின்சார அதிர்ச்சியை எதிர்பார்ப்பது போல நடந்து கொண்டன. ஆராய்ச்சியாளர்களால், மணி ஒலியுடன் மின்சார அதிர்ச்சியை இணைப்பதன் மூலம் மூளையின் அமிக்டலா பகுதியில் செயல்படுத்தப்பட்ட நியூரான் இணைப்புகளைத் தனிமைப்படுத்த முடிந்தது.
இந்த நியூரான்களை செயற்கையாகத் தூண்டினால், மணி அடிக்காமலேயே, அல்லது மின்சார அதிர்ச்சி கொடுக்காமலேயே, எலிகள் தங்கள் காலில் அதிர்ச்சி வரும் என்று எதிர்பார்ப்பது போல் நடந்துகொள்ளுமா என்று அவர்கள் யோசித்தார்கள். ஒளியியல் மரபணு தூண்டுதல் எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்கள் இதைச் செய்தார்கள். இந்த நுட்பம் ஒளி மற்றும் மரபணு பொறியியலை உள்ளடக்கியது. இந்த ஆய்வில் அத்தகைய நினைவுகளை செயல்படுத்தவும் (பின்னர் செயலிழக்கச் செய்யவும்) முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தார்கள்.
இது மனிதர்களுக்கும் பொருந்தும். எப்படி என்றால், சில சமயம் நமக்கு நினைவாற்றல் இழப்பு இல்லாமலேயே தற்காலிகமாக மறதி ஏற்படலாம். நாம் முன்பு சொன்னதைப் போல, தெருவில் யாரையாவது பார்க்கும்போது, அவருடைய பெயர் நினைவில் இல்லாத சூழலை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒருவேளை அவருடைய பெயரின் முதல் எழுத்து உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், கொஞ்ச நேரத்தில் அவருடைய பெயர் உங்கள் நினைவுக்கு வந்துவிடக்கூடும். இது “நா நுனி நிகழ்வு” என்று அழைக்கப்படுகிறது.
1960களில் அமெரிக்க உளவியலாளர்களான ரோஜர் பிரவுன் மற்றும் டேவிட் மெக்நீல் இதை ஆரம்பத்தில் ஆய்வு செய்தபோது, காணாமல் போன வார்த்தையின் கூறுகளை மக்கள் அடையாளம் காணும் திறன் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்று அவர்கள் கண்டறிந்தனர். இது, அந்தத் தகவல் முழுமையாக மறக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
சொற்களுக்கும் அவற்றின் அர்த்தங்களுக்கும் இடையே உள்ள நினைவக இணைப்புகள் பலவீனமடைவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்ற ஒரு கோட்பாடு உள்ளது. இதன் காரணமாக, தேவையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகிறது.
இருப்பினும், வேறொரு சாத்தியம் என்னவென்றால், அந்தத் தகவல் மறக்கப்படவில்லை, தற்காலிகமாக அணுக முடியாத நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் குறியீடாக இந்த நா நுனி நிகழ்வு இருக்கலாம்.
வயதாகும்போது, நம் அனுபவம் அதிகரிக்கிறது. அதனால் நம் மூளைக்குள் நிறைய தகவல்கள் இருக்கும். ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தும்போது, மூளை நிறைய தகவல்களைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும். அதனால்தான் வயதானவர்களுக்கு இந்த மாதிரியான அனுபவம் அதிகமாக வருகிறது. நாக்கு நுனியில் இருப்பது போன்ற உணர்வு, நாம் தேடும் தகவல் மறக்கப்படவில்லை என்பதையும், முயற்சி செய்தால் அதை நினைவுபடுத்திக் கொள்ளலாம் என்பதையும் மூளை நமக்குச் சொல்லும் ஒரு வழியாக இது இருக்கலாம்.
சுருக்கமாகச் சொன்னால், பல காரணங்களால் நாம் தகவல்களை மறந்து விடுகிறோம். கவனம் செலுத்தாததாலோ அல்லது காலப்போக்கில் நினைவுகள் மறைவதாலோ நாம் மறக்கலாம். நினைவுகளைப் புதுப்பிக்காமல் விடுவதாலும் மறதி ஏற்படுகிறது. சில நேரங்களில் மறக்கப்பட்ட தகவல்கள் நிரந்தரமாக இழக்கப்படுவதில்லை, மாறாக அணுக முடியாததாக இருக்கும். மறதியின் இந்த வடிவங்கள் அனைத்தும் நம் மூளை திறமையாக செயல்பட உதவுகின்றன, மேலும் பல தலைமுறைகளாக நமது உயிர்வாழ்வை ஆதரித்து வந்துள்ளன.
மறதி மிகவும் அதிகரிப்பதால் (உதாரணமாக, அல்சைமர் நோய்) மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இங்கு குறைத்து மதிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இருப்பினும், மறதி என்பது பரிணாம வளர்ச்சியில் நமக்கு ஒரு நன்மையாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் போதுமான அளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்றும், நீங்கள் இதன் உள்ளடக்கத்தை சீக்கிரம் மறந்துவிட மாட்டீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
கட்டுரையாளர்கள்:
ஸ்வென் வான்னெஸ்டே
மருத்துவ நரம்பியல் பேராசிரியர், டிரினிட்டி கல்லூரி, டப்ளின்.
எல்வா அருள்செல்வன்
உளவியல் விரிவுரையாளர், உளவியல் மற்றும் நரம்பியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளர், டிரினிட்டி கல்லூரி, டப்ளின்.
மொழிபெயர்த்தவர்:
த. பெருமாள்ராஜ்
இந்தக் கட்டுரை “தி கான்வர்சேஷன்” என்ற இணையதளத்தில் வெளியானது. கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
மூலக் கட்டுரையைப் படிக்க
https://theconversation.com/the-evolutionary-benefits-of-being-forgetful-242629
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Nice information
Thanks sir
மறக்காமல் கட்டுரைக்குப் பாராட்டுத் தெரிவித்துவிடுகிறேன். தேவையானவற்றை வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றைக் கழித்துவிடுகிற இயற்கையான ஏற்பாடுதான் மறதி. முறையான பயிற்சிகள் மூலம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மொழிபெயர்ப்பும் நன்று.
தங்கள் கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!