The fascists have called for violence Article in tamil translated by Sa Veeramani பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் தமிழில்: ச.வீரமணி
பாசிஸ்ட்டுகள் வன்முறைக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்கள் – தமிழில்: ச.வீரமணிஹரித்வாரில் டிசம்பர் 17-19 தேதிகளில் நடைபெற்ற சாமியார்களின் நாடாளுமன்றத்தில் முஸ்லீம்களைத் தாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்து அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சாமியார்கள் வெறுப்பை உமிழ்ந்து இரு வாரங்களுக்கும் மேலாகியும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. முதலாவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் ஒருவரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அவரும் யார் என்றால், முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவராவார். பின்னர், மற்றொரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த யதி நரசிங்கானந்த் உட்பட நால்வரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஜனவரி 1 அன்று உத்தர்காண்ட் காவல்துறை இது தொடர்பாகப் புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியிடம் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்களா எனக் கேட்டபோது, அவர் புலன்விசாரணையின்போது உருப்படியான சாட்சியம் எதுவும் காணப்பட்டால் பின் கைதுகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

சாமியார்கள் முஸ்லீம்களைக் ஒட்டுமொத்தமாகக் கொலை செய்திட வேண்டும் என்று பேசியது தொடர்பாக ஏராளமான சாட்சியங்கள் சமூக வலைத்தளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, அந்த சமயத்தில் சாமியார்கள் கக்கிய வெறுப்பு உரைகள் விரிவான அளவில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கின்றன. அங்கே பேசிய சாமியார்கள் அனைவருமே ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்றும், முஸ்லீம்களைக் கூண்டோடு கொலை செய்திட வேண்டும் என்றும், அவர்கள் குடியிருக்கும் கிராமங்களை பூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்கள். ஒரு சாமியார், தனக்கு வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைக்கூட துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன் என்று கொக்கரித்தார்.

இவர்களின் பேச்சுக்கள் “வெறுப்பு உரைகள்” என்று மட்டும் அமைந்திடவில்லை. மாறாக, அவை முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்திட வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று வெளிப்படையாகவே தூண்டும் விதத்தில் அமைந்துள்ளவைகளுமாகும். ஆனாலும், உத்தர்காண்ட் காவல்துறை இன்னமும் இந்த சாமியார்களின் பேச்சுகளுக்கு எதிராக வலுவான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறதாம். இவர்கள் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 153-ஏ பிரிவு மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் மதத்தின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே வெறுப்பு உணர்வை அல்லது குரோதத்தை அல்லது ஒற்றுமையின்மையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்ட குற்றத்தை மட்டும் குறிக்கிறது. ஆனால், இவர்கள் புரிந்துள்ள குற்றம் மிகவும் அதிகமானவைகளாகும்.

சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்தியவர்களோ, அதில் பங்கேற்றவர்களோ இவ்வாறாக தங்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுபற்றி, கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்றதற்கு ஒருவாரம் கழித்து, டிசம்பர் 28 அன்று, பல மடாலயங்களைச் சேர்ந்த சாமியார்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் 21 சாமியார்களைக் கொண்ட கேந்திரமான குழு (core committee) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய நரசிங்கானந்த் மற்றும் ஐந்து பேர் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர்வது எனத் தீர்மானித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் குரானுக்கு எதிராகவும், நகரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் மௌலானாக்கள் மற்றும் இமாம்களில் பலருக்கு எதிராகவும் ஹரித்வார் கோட்வாலி காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யும் அளவுக்கும் சென்றிருக்கிறார்கள்.

சாமியார்கள் நாடாளுமன்றம் என்பது இந்தியாவை “இந்து ராஷ்ட்ரமாக” மாற்றுவதற்கான திசைவழியில் ஓர் அடி எடுத்து வைத்திருப்பதாகவே அவர்கள் கூறுகிறார்கள். மேலும் அவர்கள், இஸ்லாமுக்கு எதிராகப் போராட அறைகூவல் விடுத்திருப்பதுடன் மடாலயங்கள் இந்து தர்மத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதந்தாங்கிய குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்கான மையங்களாகவும் இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி, இவ்வாறு அழைப்பு விடுப்பதும், வன்முறையைத் தூண்டுதல் என்பதும் தேசத்துரோகக் குற்றம் என்பது உச்சநீதிமன்றத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு குறித்து அளித்துள்ள தீர்வறிக்கைமூலம் தெளிவான ஒன்றாகும்.

ஹரித்வார் சம்பவம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசியதுடன், அவர்களை அழித்து ஒழித்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த, காவி உடை தரித்த ஆண்களும், பெண்களும் ஏனோதானோ பேர்வழிகள் அல்ல. அவர்கள் அனைவருமே ஆர்எஸ்எஸ்/பாஜக உட்பட இந்துத்துவா சக்திகளின் மிக முக்கியமான நபர்களாவார்கள். அவர்களுக்கு அரசின் ஆதரவும் அரவணைப்பும் இருந்து வருவது தெளிவாகவே தெரிகிறது. இதனை, உத்தர்காண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய ஸ்வாமி பிரபோதானந்த் என்பவர் கால்களில் விழுந்து வணங்கியதிலிருந்து நன்கு அறிந்துகொள்ள முடியும்.

ஹரித்வார் நிகழ்வு, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களைச் சேர்ந்த தலைவர்களின் மதவெறிப் பேச்சுக்களின் ஒரு பகுதியேயாகும். இப்போது இது அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முஸ்லீம்களுக்கு எதிராகக் குரைத்துக்கொண்டிருக்கும் பேச்சுக்கள் அதிகரித்திருப்பதும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் மடாலயங்களையும், கோவில்களையும் இஸ்லாமுக்கும், கிறித்தவத்திற்கும் மதம் மாறியவர்களை மீளவும் இந்துயிசத்திற்குக் கொண்டுவருவதற்கான இடங்களாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பதும் இவற்றின் தொடர்ச்சியேயாகும். இவை, முஸ்லீம்களுக்கு எதிரான “வெறுப்புப் பேச்சுக்கள்” மட்டுமல்ல.

இவற்றின் அடிப்படையில் நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், கிறித்தவர்களுக்கு எதிராகவும் நேரடியாகவே வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தெருக்களில் கூவி விற்பனை செய்யும் முஸ்லீம்கள், ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும் முஸ்லீம்கள், ஆட்டோ-ரிக்சா ஓட்டும் முஸ்லீம்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாவதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் கிறித்தவர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவதும் நாளும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டிருக்கிறது.

பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் இதர பிரிவுகள் பல, சாமியார்கள் நாடாளுமன்றத்தை நடத்திய சாதுக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பாஜக-வின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – இவர்கள் அனைவருமே இந்துத்துவா சேனையின் பல அங்கங்களாவார்கள். இவர்கள் அனைவருமே அரசமைப்புச்சட்டத்தை சீர்குலைத்திடும் நடவடிக்கைகளிலும், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இந்து ராஷ்ட்ரத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளில் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டுமிருக்கிறார்கள்.

இந்துத்துவா பாசிஸ்ட்டுகள் நாட்டிற்கு ஆபத்தாக இராட்சதத்தன்மையுடன் வளர்ந்து கொண்டிருப்பதை, நாட்டிலுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளில் சில இன்னமும் சரியானமுறையில் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பாசிஸ்ட்டுகளின் வெறித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக சிலர் அறிக்கை விடுவதுடன் தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலும் உத்தர்காண்டிலும் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறுவதையொட்டி இதை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் தவிர்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

இன்றைய நிலையில் பாசிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெறுமனே கண்டனத் தீர்மானங்கள் மட்டும் போதுமானதல்ல. இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரின் ஒன்றுபட்ட நடவடிக்கையும் அவசியத் தேவையாகும். பாஜக ஆளும் மாநிலங்களில் பாசிஸ்ட் இந்துத்துவா அமைப்புகள் வெறித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, இவர்களின் வெறித்தனமான நடவடிக்கைகளை, ஒன்றுபட்டு எதிர்த்து முறியடித்திட வேண்டியது, அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

(ஜனவரி 05, 2022)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *