இரண்டாம் உலகப்போர், வதை முகாம்கள், ஆகியவற்றைப் பற்றிய விரிவான வர்ணனையை நாம் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு கதைக்களத்தில் தரும் நாவல் ஒன்றை சமீபத்தில் படித்தேன். மாண்டி ரோபாதெம் என்ற பெண்மணி எழுதிய The German Midwife என்ற நாவல் ஹிட்லரின் காதலி ஈவா ப்ரானிற்குப் பிரசவம் பார்க்க வதை முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படும் பேறுகாலத் தாதி அன்கியின் பார்வையில் உலகப்போர் முடியும் தருவாயில் ஜெர்மனியின் நிலை, வதை முகாம்கள், அங்கு அன்றாடம் நிகழும் கொடுமைகள், நாஜி மேல்மட்ட அதிகாரிகளின் சொகுசு வாழ்க்கை, ஹிட்லரின் வாரிசு ஜெர்மனியின், உலக அரசியலில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது.
ஹிட்லரின் காதலி பற்றி, இருவரும் திருமணம் செய்து கொண்டு அப்படியே ஜோடியாகத் தற்கொலை செய்து கொண்டது பற்றி ஏராளமான கதைகள் உண்டு. ஹிட்லர் தற்கொலை போல் செட்டப் செய்து விட்டு தன் காதலியுடன் தப்பித்து, பல வருடங்கள் உயிரோடு இருந்ததாகவும் கதைகள் உண்டு. இர்விங் வாலஸின் தி செவன்த் சீக்ரெட் இதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான நாவல். மாண்டியின் இந்த நாவலில் ஹிட்லரின் காதல் பெரும்பாலான நாவல்களில் காட்டப்படுவது போல ரொமாண்டிசைஸ் செய்து காட்டப்படவில்லை. சந்தர்ப்பவசத்தால் காதலிக்க நேர்ந்து, கர்ப்பமான பெண்ணாகத்தான் ஈவா இருக்கிறார். ஹிட்லருக்கு அப்போதிருக்கும் போர்ச் சூழலில், ஜெர்மனி ஒவ்வொரு இடமாக அடிவாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் காதலியின் கர்ப்பம் பற்றியோ, பிறக்கப் போகும் குழந்தை பற்றியோ கவலைப்பட நேரமில்லை. கதையில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் ஈவாவைப் பார்க்க வருகிறார். அவர் வந்ததும் ஈவாவின் அறையிலிருந்து கதாநாயகி வெளியே வரும் போது, அவளைப் பார்த்து, “நலமாக இருக்கிறீர்களா?“ என்று மிகவும் மரியாதையாக்க் கேட்கிறார். இந்த மனிதன்தான் தன்னை, தன் குடும்பத்தை, இன்னும் லட்சக்கணக்கான பேரை வதை முகாமில் அடைத்தவனா, இன்னும் பல லட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்தவனா என்ற நினைப்பில் வாய் உலர்ந்து போய் தலையாட்டிவிட்டு ஓடிப் போகிறாள் கதாநாயகி.
எழுத்தாளர் பேறுகாலத் தாதி என்பதால், தனது அந்த தொழில் சார்ந்த அறிவை மிகச் சிறப்பாக நாவல் ஆக்கத்தில் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவை வெறும் அறிவியல், மருத்துவத் தகவல்களாக மட்டும் நின்றுவிடாது, பெண்களின் மனநிலை குறித்த பதிவாக, வதை முகாமில் காவலர்களின் காமப்பசிக்கு ஆளான பெண்களின் பேறுகாலம், (வதை முகாம்களின் மோசமான உணவு காரணமாக எந்தப் பெண்ணுக்கும் மாதாந்திர தீட்டு வராது. அவர்கள் கர்ப்பமாக இருப்பதே மிகத் தாமதமாகத்தான் தெரியும்) ஹிட்லரின் காதலியின் பேறுகாலம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, இருப்பதைக் கொண்டு பிரசவம் பார்க்க வேண்டிய அவலம், பிரசவத்திற்கு கால்மணி நேரம் முன்பு வரையும், பிறகு பிரசவித்த மறுநாளிலிருந்தும் அந்தப் பெண்கள் கடும் உழைப்பிற்கு அனுப்பப்படும் கொடுமை, தாய்ப்பால் இல்லாததால், முகாமின் காவலர்களுக்கு வேலை வைக்காது தாமே செத்துப் போய்விடும் அந்தக் குட்டிக் குழந்தைகள் என்று நாவல் நாமறியாத பெண்களின் துயரமான நாட்களைத், தருணங்கள அப்படித் தத்ரூபமாக்க் காட்சிப் படுத்திச் செல்கிறது. பல இடங்களில் கண்ணீர் முட்டத் தான் படிக்க வேண்டியதாக இருந்தது. ஒரு சில பக்கங்களைப் படிக்காமல் அப்படியே ஸ்கிப் பண்ணவும் நேர்ந்தது.
கதையின் நாயகி ஜெர்மனியள்தான் என்றாலும், யூத முகாம்களில் உள்ள பெண்களுக்கு ரகசியமாக மருத்துவ சிகிச்சைகள் அளித்த காரணத்திற்காக வதை முகாமிற்கு அனுப்பப்படும் அரசியல் கைதி. வதை முகாமின் தாதியான அவள் தன் திறமை காரணமாக ஹிட்லரின் காதலிக்குத் தாதியாக நியமிக்கப்படுகிறாள். ஹிட்லரின் காதலிக்கு ஏதாவது நேர்ந்தால், முகாமில் அடைபட்டிருக்கும் அவளது மொத்தக் குடும்பமும் காலி என்று மிரட்டுகிறார் கோயபல்ஸ். ஆனால் நாயகிக்கு, ஹிட்லரின் காதலியை தன் காதலனால் சந்தர்ப்பவசத்தால் கர்ப்பமாக்கப்பட்ட ஒரு சக மனுஷியாகத் தான் பார்க்க முடிகிறது. வதை முகாமில் துன்புறும் பெண்களுக்கு அவள் எப்படி தன்னாலான மருத்துவ உதவிகளைச் செய்து அவர்களை கவனித்துக் கொண்டாளோ, அதே அக்கறையுடன், அதே கனிவுடன்தான் அவள் ஈவாவையும் கவனித்துக் கொள்கிறாள். அவள் எவ்வளவு முயன்றும், ஹிட்லரின் காதலியை வெறுக்க முடியவில்லை. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த, தன்னை முழுமையாக நம்பும் ஒரு எளிய கர்ப்பிணியாகத் தான் பார்க்க முடிகிறது.
கதையின் கிளைமாக்ஸ் நாம் கொஞ்சமும் எதிர்பாராதது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தானே வருகிறது. ஈவா அதை துணிவாக ஏற்கிறாள். தாதியின் மேல் கோயபல்ஸிற்கு பெரும் சந்தேகம் என்றாலும் ஹிட்லரின் காதலியின் வார்த்தையை மீறி அவரால் தாதியை எதுவும் செய்ய முடியாமல் போகிறது. ஈவா தன் அத்தனை துன்பத்திற்கு மத்தியிலும், தாதிக்கு விடுதலை வாங்கித் தருகிறாள்.
எத்தனை துன்பங்கள் வந்த போதும், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளியின் காதலன் மீது தனக்கு எத்தனை வெறுப்பு இருந்த போதும், அதைப் பற்றியெல்லாம் நினைக்காமல், ஒரு மருத்துவத் தாதியாக கனிவோடு நடந்து கொள்ளும் ஒரு லட்சிய மருத்துவத் தாதியின் எளிய கதை இது. இந்த எளிய கதை நடக்கும் சூழலை இரண்டாம் உலகப் போர், ஹிட்லரின் காதலி கர்ப்பம், அவளது பிரசவம் என்பதாக அமைத்ததில் நாவலாசிரியர் நாவலின் தரத்தை எங்கோ உயர்த்திச் சென்றுவிடுகிறார்.