அரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)

அரசிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை – பி.சாய்நாத் (தமிழில் ராம்)

26 மார்ச் வரை நகர்ப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் மூலமாக வரும் சேவைகள் குறைந்த உடன் தான் அவர்கள் மீதான பார்வை  திரும்புகிறது.

– பி.சாய்நாத்.

கோவிட்-19 பெருந்நோய் தொற்று மற்றும் அதன் தொடர்ச்சியான தேசம் முழுமையான ஊரடங்கினால் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் வாழ்வாதார சிக்கல்கள் ஒன்றும் புதிய விஷயமல்ல. எனினும் ஒரு பெருந்தோய் தொற்று கொடுத்த நெருக்கடி மூலமே நடப்பு காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இம்மக்களை நகர்ப்புற இந்தியாவின் கண் முன் கொண்டு வந்திருக்கிறதுரமோன் மாகசசே விருது பெற்றவரும், People’s Archive of Rural India (PARI)வலைத்தளத்தின் பி. சாய்நாத் தொடர்ந்த பல தசாப்தங்களாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வு நிலை குறித்து பதிவு செய்து வருகிறார். இந்த பேட்டியில், அவர் இம்மக்களின் இன்றைய நிலை குறித்தும் அடுத்து செய்ய வேண்டியவை குறித்தும் பேசுகிறார்.

இனி,

அவுரங்கபாத் நகரத்திற்கு அருகே ரயில் தண்டவாளங்களில் உறங்கிய 16 தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி அவர்கள் கொலையுண்டதை நாம் கண்டோம். இத்தொழிலாளர்களை தங்கள் வீடுகளை நோக்கி விரட்டிய விஷயங்களைக் குறித்து பேசாமல், உடனே அவர்கள் ஏன் ரயில் தண்டவாளங்களில் உறங்கினார்கள் என எழுந்த முதல் கேள்வி நம்மை குறித்து என்ன சித்திரத்தை தீட்டுகிறது?

ரயில் அடியில் நசுங்கி இறந்த அத்தொழிலாளர்களின் பெயர்கள் என்னவென்றாவது கவலைப்பட்ட ஆங்கில ஊடகங்கள் எத்தனை? அந்தப் பாவப்பட்ட தொழிலாளர்கள் பெயர்கள் கூட தெரியாமல் அடையாளம் இன்றி இறந்து போனார்கள். இதுதான் ஏழைகள் மீதான நம் பார்வை என்பது. இதுவே ஒரு விமான விபத்து  நடக்கிறது என வைத்துக் கொள்வோம். விபத்து நடைபெற்ற சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரங்கள் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும். 300 பேர் இறந்திருந்தாலும் அவர்கள் அத்தனை பேர் பெயர்களும் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருக்கும்.

Train crushes 16 migrants on way home – india news – Hindustan Times

ரயிலடியில் நசுங்கி கொலையான அந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த அந்த 16 தொழிலாளர்கள் அதிலும் பாதி பேர் கோன்ட் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கு என்ன கவலை? வீடு நோக்கிச் செல்ல சரியான திசையை காட்டும் என நம்பி அடுத்த ரயிலடியில் தங்கள் ஊர் செல்ல ரயில் இருக்கும் என அவர்கள் தண்டவாளங்களில் நடந்தார்கள். நடந்த வந்த அயர்ச்சியினாலும், ஊரடங்கின் காரணமாக அந்த வழித்தடங்களில் ரயில் வாராது என்ற நம்பிக்கையிலும் அவர்கள் தண்டவாளங்களிலே உறங்கிப் போனார்கள்.

இந்தியாவின் இத்தனை பெரிய அந்த உழைப்பு சக்தி இருக்கையில், அரசு அந்த தொழிலாளர்களோடு கொண்டிருந்த தகவல் தொடர்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில், அம்மக்களின் வாழ்வை முடக்க கிடைத்தது என்னவோ நான்கு மணி நேரம் தான். “மிகப்பெரிய செயலுக்கு ஒரு சிறிய காலாட்படைக்கு கிடைத்தது என்னவோ நான்கு மணி நேர முனு தயாரிப்பு தான்” என்று சொன்னார் இந்தியாவின் சிறந்த குடிமைப்பணி அதிகாரிகளில் ஒருவரான திருமிகு எம்.ஜி. தேவசகாயம் குறிப்பிடுகிறார். புலம் பெயர் தொழிலாளர்கள் நட்டாற்றில் விடப்பட்டதில் ஒன்று தெளிவாகிறது. அது நம்மைப் போன்ற மத்தியத் தர வர்க்கத்தினர், தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசுகள் என இவை அனைத்தும் எவ்வளவு நம்பிக்கையற்றவர்களாக, கருணையில்லாத குரூரம் மிக்கவர்களாக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு மணி நேரமும் அத்தொழிலாளர்கள் உணர வழிவகை செய்கிறோம். அது மட்டுமல்ல  அவர்களை சட்டங்கள் கொண்டே முடக்குகிறோம் என்பது ருதுவாகிறது.

நீங்கள் பீதியை உருவாக்கினீர்கள். பல இலட்சம் மக்களை நெடுஞ்சாலையில் விரட்டி நாட்டினுள் பெருங்குழப்பத்தை உருவாக்கினீர்கள். இந்த ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டு உள்ள கல்யாண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள் ஆகியற்றை திறந்து விட்டிருந்தால் இந்நாட்டின் வீடற்றவர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரை தங்க வைக்க போதுமானது. ஆனால் அவ்வாறான ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மக்களுக்கு தனிமனித விலக்கலுக்கான இடங்களாக நடசத்திர ஓட்டல்களை தயார் செய்தோம்.

These Migrant Workers Did Not Suddenly Fall from the Sky ...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒருவழியாய் ரயில் ஏற்பாடு செய்தால், அதிலும் அவர்களிடம் முழு கட்டணத்தை வசூல் செய்கிறோம். அதிலும் சாதாரண ஏசி ரயில் ஏற்பாடு செய்து, அங்கேயும் 4,500 என்னும் ராஜ்தானி ரயிலின் கட்டணத்தை நிர்ணயித்தோம். அதிலும் இன்னும் கொடுமையாக, அந்த தொழிலாளர்கள் எல்லாரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள் என அனுமானித்து அந்த ரயில் பயணசீட்டுகளை இணையத்தில் மட்டுமே பெற வழி செய்தோம்.  இந்த அடிமைகள் தப்புகிறார்கள் என கட்டுமான அதிபர்கள் கர்நாடக அரசின் முதல்வரிடம் முறையிட, அந்த ரயிலும் நிறுத்தப்பட்டது. அடிமைகள் எங்கே எழுச்சி பெற்றுவிடுவார்களோ என அஞ்சி அதை அடக்க செய்யும் முயற்சிகளையே நாம் இங்கே காண்கிறோம்.

நமக்கு எப்பவுமே ஏழைகளுக்கு ஒரு தரமும், மற்றவர்களுக்கு வேறாகவே வைத்திருக்கிறோம். அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலில், இதில் மருத்துவர்கள் தவிர்த்து  மற்ற அனைவரும் ஏழைகளாகவே இருக்க காண்பீர்கள். பெரும்பாலான நர்சுகள் ஏழைகளே. இவர்களோடு இன்னும் துப்புரவு பணியாளர்கள், ஆஷா நர்சுகள், அங்கன்வாடி பணியாளர்கள், மின் துறை ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களும் ஏழைகளே. திடீரென இந்த நாட்டின் பணம் உள்ளவர்கள் அத்தியாவசியமற்றவர்களாக மாறியுள்ளதை நாம் காண்கிறோம்.

பல தசாப்தங்களாக புலம் பெயர்தல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஊரடங்கு காலத்திற்கு முன்னர் அவர்களின் வாழ்நிலை கொடுமையானதே. நாம் இந்த புலம் பெயர் தொழிலாளர்களை நடத்தும் முறை பற்றி உங்கள் கருத்தென்ன?

புலம் பெயர் தொழிலாளர்கள் பல வகைப்பட்டவர்கள். ஆகையால் புலம்பெயர்தலில் உள்ள வர்க்க வேறுபாட்டினை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். என்னுடைய நான்கு வருட உயர்கல்வியை டெல்லியில் முடித்தேன். பின்பு நான் மும்பைக்கு வந்து இங்கே 36 வருடங்களாக இருக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு இடம் பெயர்தலிலும் நான் பலன் பெற்றேன். அந்தப் பலன் நான் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தில், குறிப்பிட்ட சாதியில் இருந்து வந்தததால் கிடைத்தது. எனக்கு சமூக மூலதனமும், தொடர்பும் இருக்கின்றன.

A என்ற இடத்திலிருந்து விட்டு நீங்கி B என்ற இடத்திற்கு நிரந்தரமாக நகரும் நீண்ட கால புலம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அதே போல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடம் மாறும் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலத்தின் கரும்பு பயிரிடுதல் கரும்பு வெட்டுதலில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒரு 5 மாதங்களுக்கு கர்நாடாக மாநிலத்திற்கு செல்வதும் பின் வீடு திரும்புவதுமாக இருக்கிறார்கள். கலாஹன்டியிலிருந்து புலம் பெயர்ந்து ராய்பூர் சென்று சுற்றுலா காலங்களில் அங்கே ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கிறார்கள். ஒடிசா மாநிலத்தின் கொராபுட் பகுதியில் இருந்து ஆந்திராவின் விழியநகரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக சில மாதங்கள் அங்கே செல்பவர்களும் இருக்கிறார்கள்.

comment - The Long March Home

இவர்கள் அல்லாமல் நாம் மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு பிரிவினர் இருக்கிறார்கள், அவர்களை இலக்கில்லா புலம் பெயர் தொழிலாளர்கள் அல்லது நாடோடிகள் எனலாம். இந்த வகைப்பட்டவர்களுக்கு எங்கே செல்வது என்பது குறித்த இலக்கொன்றும் இருப்பதில்லை. அவர்கள் காண்ட்ராக்டரோடு வந்து மும்பையில் ஒரு கட்டுமானப் பணியில் 90 நாட்கள் வேலைப் பார்ப்பார்கள். அந்த 90 நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. இந்த காண்ட்ராக்டர் அவருக்கு தெரிந்து தொடர்பில் உள்ள ஒருவரிடம் வேறு ஒரு வேலை இடத்திற்கு இவர்களை அனுப்பிவிடுவார். இது இப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படியானதொரு முடிவற்ற பாதுகாப்பின்மையுடன் இவர்கள் வாழ்வு மொத்தமாக மோசமாக இருக்கிறது. இப்படியானவர்கள்தான் இந்தியாவில் அதிகம். இவர்கள் சில இலட்சம் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலை நிலைமை எப்போது மிக மோசமாக தொடங்கியது?

புலம்பெயர்தல் என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் கடந்த 28ஆன்டுகளில் தான் அது பெரு வெடிப்பு கண்டது, மிக மிக கூடியது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு  2001 மற்றும் 2011க்கு இடையேதான் சுதந்திர இந்திய நாட்டில் மிகப் பெருமளவு புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளதை நமக்கு காட்டுகிறது. 1921ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தான் நமக்கு முதல்முறையாக இந்தியாவின் கிராமப் பகுதிகளின் மொத்த மக்கள் தொகையை விட நகரப் பகுதிகளில் அதிகம் இருப்பதை காட்டுகிறது. நகர்ப்புற இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது குறைவாக இருந்த போதிலும், நாம் அந்த மக்கள் தொகையில் அதிகம் மக்கள் கூடக் காண்கிறோம்.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவாதங்கள் வல்லுநர்களுடன் எங்காவது தொலைக்காட்சிகளில் நிகழ்ந்ததாக நீங்கள் பார்த்ததுண்டா, கேள்விப்பட்டதுண்டா? புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்தோ கிராமங்களிலிருந்து நகரத்திற்கோ அல்லது கிராமங்களிலிருந்து கிராமங்களுக்கோ நடைபெறும் புலம்பெயர்தலின் வீச்சு குறித்தோ எத்தனை விவாதங்கள் நடைபெற்று இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

புலம்பெயர்தலுக்கு அடிப்படை காரணமாக இருக்கிற கிராமப்புற நெருக்கடியைப் பற்றி விவாதிக்காமல் எந்த விவாதமும் நிறைவு பெறாது அல்லவா?

நாம் விவசாயத்தை அழித்து, இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை குலைத்துவிட்டோம். விவசாயம் மட்டுமே அல்ல பிற தொழில்களையும் கிராமப்புறங்களில் நாசப்படுத்தி விட்டோம். கைத்தறி மற்றும் கைவினைத் தொழில்கள் கிராமப்புறங்களில் விவசாயத்திற்குப் அடுத்தபடியாக வேலைவாய்ப்பினை நல்குவதாக இருந்தன. படகோட்டிகள், மீனவர்கள், கள் இறக்குபவர்கள், பொம்மை செய்பவர்கள், நெசவாளர்கள் என ஒவ்வொரு தொழிலும் இங்கே நசியக் காண்கிறோம். அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் நகரத்திற்கே திரும்புவார்களா என நாம் நினைக்கும் நேரத்தில் நாம் யோசிக்க வேண்டியது அவர்கள் ஏன் நகரங்களை நாடி வந்தார்கள் என்பதே?

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் நிச்சயமாக நகரங்களுக்கு திரும்புவார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும். நாம்தான் கிராமப்புறங்களில் வெகுகாலம் முன்பே அவர்கள் வாழ்வதற்கான வழிகளை அழித்துவிட்டோமே. அதனால் நம்முடைய அத்து கூலி குறைந்த கூலி படை நிச்சயம் நகரங்களுக்கு கிடைக்கும்.

தொழிலாளர் சட்டங்கள் பல மாநிலங்களில் தளர்த்தப்பட்டுள்ளது குறித்து?

முதலில், இது அவசர சட்டம் மூலம் அரசியலமைப்பு சாசனத்தையும், இருக்கும் சட்டங்களையும் மதிப்பிழக்க செய்வதாகும். இரண்டாவது, அவசர சட்டம் மூலமாக கொத்தடிமைத்தனத்தை பிரகடனப்படுத்துவது ஆகும். மூன்றாவது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் வேலை நேரத்திற்கான சிறந்த வரையறையை  நீக்குவதாகும். தொழிலாளர் நலன் சார்ந்த எல்லா மாநாடுகளிலும் கருத்தரங்கிலும் அடிப்படை அம்சமாக உலகமே மதிக்கும் ஒரு விஷயம் 8 மணி நேர வேலை என்பது.

குஜராத் மாநிலம் வெளியிட்ட குறிப்பில் கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம் என்பது குறித்து ஏதுமில்லை. ராஜஸ்தான் மாநிலமோ கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியத்தை வாரத்திற்கு 24 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என சொல்லியுள்ளது. தொடர்ச்சியாக தொழிலாளர்கள் 6 நாட்களுக்கு 12 மணி நேரங்கள் உழைக்க வேண்டும்.

 

Labor Laws by Company Size – Compliance | BASIC

தொழிற்சாலை விதிகளில் உள்ள விதிவிலக்குகளை சுட்டிக் காட்டியே இந்த அவசர சட்டம் வந்துள்ளது. ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளி கூடுதல் வேலை நேரம் உட்பட வேலை செய்ய வேண்டியது 60 மணி நேரம் மட்டுமே என தொழிற்சாலை விதிகள் சொல்கிறது. ஆனால் அவசர சட்டத்தின்படி நாளொன்றுக்கு 12 மணி நேரம் என்றால், 72 மணி நேரம் அல்லவா வருகிறது.

தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை நேரம் வேலை பார்க்க விருப்பம் உள்ளதா என்பது குறித்து எந்த கருத்து சொல்லவும் அனுமதி இல்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது. கூடுதல் நேரம் வேலை செய்வதால் உற்பத்தி பெருகும் என்பது ஒரு அனுமானம். ஆனால் வரலாறு நெடுகே அப்படி ஒரு உற்பத்தி பெருகியதாக சொன்ன எந்த ஆய்வும் இல்லை. 8 மணி நேரம் வேலை செய்வதால் விளையும் உற்பத்தியை விட கூடுதல் நேரம் வேலை செய்கையில் பல தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது என்பதை கடந்த நூற்றாண்டில் கண்டோம். இதற்கு காரணம் கூடுதல் நேரம் வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சோர்வு, சலிப்பு மற்றும் அயர்ச்சி ஆகியவை ஆகும்.

இது ஒருபுறமிருக்க, இந்த அவசர சட்டம் என்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. இது தொழிலாளியை அடிமை நிலைக்கு தள்ளுவதாகும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளைப் பிடித்து தரும் காண்ட்ராக்டர்களாக மாநில அரசுகள் இந்த அவசர சட்டத்தினால் மாறியுள்ளது. சமூகத்தின் மிக பலவீனமான பிரிவினரான தலித், ஆதிவாசிகள் மற்றும் பெண்களை இந்த அவசர சட்டம் கடுமையாக பாதிக்கும்.

தொழிலாளர் நல சட்டங்களில் மத்திய ...

முறைசாரா தொழில்களில் இருப்பதால் கிட்டத்தட்ட 93 சதமானம் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே எந்த உரிமையும் இல்லை. இப்போது மீதமுள்ள 7 சதமான தொழிலாளர்களின் உரிமைகளையும் பறித்துவிட முயல்கிறார்கள். தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மூலம் முதலீடுகள் வரும் என வாதிடுகின்றன மாநில அரசுகள். ஆனால் முதலீடுகள் ஒரு நிலையான சமூகத்தில், நல்ல கட்டமைப்புகள், நல்ல சூழல் உள்ள பகுதிகளில் வரும். இவற்றில் ஏதேனும் உத்திர பிரதேசத்தில் இருந்திருக்குமேயானால், பின் ஏன் இந்தியாவின் பிற மாநிலங்களை விட அந்த மாநிலத்திலிருந்தே அதிகம் பேர் புலம் பெயர்கிறார்கள்?

இந்த அவசர சட்டத்தினால் ஏற்பட உள்ள விளைவுகள் என்னவாக இருக்கும்?

உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு எல்லா தொழிலாளர் சட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. அரசியலமைப்பு சாசனம் மற்றும் சட்ட சிக்கல் ஏற்பட்டுவிடும் என்ற நிலையில் ஒரு 3 அல்லது 4 சட்டங்களை மட்டுமே எதுவும் செய்யாமல் விட்டு வைத்துள்ளது. எவ்வளவு மோசமான நிலையில் அவர்கள் வாழ்வாதாரங்கள் இருந்தாலும் கவலையில்லை, அவர்கள் வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள். தொழிலாளர்களுக்கு காற்றோட்டமான வசதி, கழிவறைகள், இடைவேளை ஆகியவற்றிற்கான உரிமைகளை மறுத்து அவர்களை மனிததன்மையற்று நடத்துகிறீர்கள். மாநில முதல்வர்களின் அவசர சட்டம் என்பதால், சட்டரீதியான வழிகளுக்கு இங்கே இடமில்லை.

நாம் முன் செல்ல என்ன செய்ய வேண்டும்?

இந்த நாட்டின் தொழிலாளர்களின் வாழ்நிலைகளை நிச்சயம் உயர்த்தியாக வேண்டிய தேவை இருக்கிறது. மிகப் பெரிதான சமத்துவமின்மை இச்சமூகத்தில் நிலவுவதே, பெருந்நோய் தொற்று காலத்தில் இந்த அளவிற்கு துன்பங்களை தொழிலாளர்கள் அனுபவிக்க காரணம். நாம் பங்கு வகித்த பல சர்வதேச தொழிலாளர் நல மாநாடுகளில் ஏற்கப்பட்ட சரத்துகளை நாமே மீறுகிறோம்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இதனை தெளிவுற கண்டார். நாம் பேசவேண்டியது அரசுகள் எப்படி அமைய வேண்டும் என பேசினால் மட்டும் போதாது, வர்த்தக நலன் என்னும் மாய வலையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் குறித்தே பேச வேண்டும் என புரிந்து கொண்டார். டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் சிந்தித்து உருவாக்கிய அதே சட்டங்களை மாநிலங்கள் நிறுத்தக் காண்கிறோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிலாளர் துறை என்ற ஒன்று இருக்கிறது. அதன் பங்கு அல்லது தலையீடு என்னவாக இருக்கும் ?

அம்பேத்கர் சிந்தித்து உருவாக்கிய அதே சட்டங்களை மாநிலங்கள் நிறுத்தக் காண்கிறோம். மாநிலங்களில் உள்ள தொழிலாளர் துறை தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பவையாக இருக்க வேண்டும். ஆனால், நான் கண்பது என்னவோ மாநில தொழில்துறை அமைச்சரே கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்றவாறு செயல்பட தொழிலாளர்களை பணிப்பதுதான். You want something to change, you have to change your social contract. இந்த பூமியில் மிகப் பெரிதான சமத்துவமற்ற சமூகங்களை நீங்கள் கேள்விக்குள்ளாக்காமல் ஏதும் செய்ய இயலாது. அது மிக விரைவாக மிக மோசமானதாக மாறும்.

பெரும்பான்மையான தொழிலாளர்கள் இளைஞர்கள். அவர்கள் மிக கோபமுற்று இருக்கிறார்கள். நாம் எரிமலையின் மீது உட்கார்ந்து கொண்டு இருக்கிறோமா?

நம்மிடையே, அரசிடம், ஊடகங்களிடம், தொழிற்சாலை உரிமையாளர்கள் என எவரிடமும் வெடிக்க தொடங்க விட்ட எரிமலையை கண்ணுறாமல் இருக்கும் பாசாங்குத்தனத்தை கொண்டு இருக்கிறோம். மார்ச் 26 வரை, நமக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஏதும் கவலையோ அல்லது அறிவோ இருக்கவிலை. திடீரென இலட்சக்காணவர்கள் தெருக்களில் இருப்பதை காண்கிறோம். நம்முடைய சேவைகள் மறுக்கப்பட நாம் அதன் வலியை உணர்கிறோம். 26 மார்ச் வரை அந்த தொழிலாளர்களை நம்மையொத்த உரிமை கொண்ட மனிதர்களாக நாம் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.

ஏழைகள் படிப்பறிவு பெற்றவர்கள் ஆகும் போது, பணக்காரர்கள் பல்லக்கு தூக்கிகளை இழக்கிறார்கள் என்ற பழைய பழமொழி ஒன்று இருக்கிறது. நாம் இப்போது நமது பல்லக்கு தூக்கிகளை இழந்து நிற்கிறோம்.

பெரும்பான்மையான பெண்கள் மற்றும் குழந்தைகளை இந்த புலம்பெயர்தல் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது?

Agrarian Crisis Is A Social Crisis Now: P. Sainath

புலம்பெயர்தல் என்பது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பெரிதும் பாதிக்கிறது. எங்கெல்லாம் ஊட்டசத்தான உணவிற்கு சிக்கல் நேர்கிறதோ அங்கெல்லாம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளே பெரிதான பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களின் சுகாதாரமே மிகப் பெரிதாக பாதிக்கப்படுகிறது. எப்படியெல்லாம் பெண் குழந்தைகள் பாதிப்புகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்து பேச்சு என்ன சிந்தனை கூட நம்மிடையே இல்லை. பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருந்த இலவச நாப்கின்கள் இப்போது பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் கிடைக்கும் வழியில்லை, மாற்று ஏற்பாடும் இல்லை. எனவே சுகாதாரமற்ற மாற்று வழிகளுக்கே இந்த இலட்சக்கணக்கானோர் மீண்டும் திரும்ப உள்ளது.

வீடு திரும்பும் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்ன?

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக நேரம் மிக நீண்ட தூரம் நடக்கிறார்கள். உதாரணத்திற்கு குஜராத் மாநிலத்தின் மத்தியவர்க்க வீடுகளில் அல்லது தொழிற்சாலைகளில் பணிபுரிந்து விட்டு பல தொழிலாளர்கள் தெற்கு ராஜஸ்தானில் உள்ள தங்கள் வீடு திரும்புவார்கள். ஆனால் அவை சாதாரண காலகட்டங்களில் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு 40 கிலோமீட்டர்கள் நடந்து பின் ஒரு தாபாவிலோ அல்லது டீக்கடையிலோ நின்று அங்கே வேலையும் செய்து அதில் உணவு பெறுவார்கள். பின் அடுத்த நாள் காலை நடக்கத் துவங்குவார்கள். அடுத்த பெரிய பேருந்து நிலையம் வரும் வரை இவ்வாறே அவர்கள் உழைத்து உழைத்து வீடு திரும்புவார்கள். ஊரடங்கினால் கடைகள் மூடப்பட்ட நிலையில், பசியாலும் தாகத்தாலும் தவித்து பேதி மற்றும் பிற உபாதைகளுக்கு ஆளாகி தவிக்கிறார்கள்.

இத்தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் தேர்ந்தெடுத்துள்ள வளர்ச்சிக்கான பாதை என்பதில் இருந்து முற்றாக நாம் விலகியும் அதிலிருந்து துண்டிக்கப்படவும் வேண்டும். அது மட்டுமல்ல, சமத்துவமின்மைக்கு எதிரான பெரிதான போரினை நிகழ்த்த வேண்டும். சமனற்ற சூழலில் இருந்துதான் இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்கள் எழுகின்றன.

அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள சமுக, பொருளாதார அரசியல் நீதி என்பனவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் நாம் ஏதும் செய்ய இயலாது. அரசியல் நீதியை எட்டுவதற்கு முன் சமூக நீதியும் பொருளாதார நீதியை அடைவது என்பது மிகத் தேவை. அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களிடம் மக்களின் முன்னுரிமை குறித்த ஒரு தெளிவான புரிதல் இருந்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். நம்முடைய அரசியல் சாசனம் அந்தப் பாதையை நிச்சயமாக சுட்டுகிறது.

இந்திய அரசும் பணக்காரர்களும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் என எண்ணியிருத்தல் சரியல்ல. அவர்களின் இந்த எண்ணம் சொல்லவொண்ணா அடக்குமுறை மற்றும் வன்முறைக்கு இட்டு செல்லும்.

https://www.firstpost.com/india/urban-india-didnt-care-about-migrant-workers-till-26-march-only-cares-now-because-its-lost-their-services-p-sainath-8361821.html

மொழிபெயர்ப்பு : ராம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *