வைரஸ், சமூக ஜனநாயகம், கேரளாவிற்கு கிடைத்திருக்கும் பலன்கள்
பேட்ரிக் ஹெல்லர், சமூக அறிவியல் லின் க்ராஸ்ட் பேராசிரியர் மற்றும் சமூகவியல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை பேராசிரியர், பிரவுன் பல்கலைக்கழகம்.
தி ஹிந்து, 2020 ஏப்ரல் 18
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிகப் பயங்கரமான சோதனையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், அது இயற்கையானது. உலகின் அனைத்து பகுதிகளும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலும், கீழ்மட்ட நிலைகளிலும் நாம் காணும் நடவடிக்கைகள் வேறுபட்டு இருக்கின்றன. அரசாங்கங்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் மூலம், அவற்றிடம் உள்ள அரசியல் மற்றும் நிறுவனத் திறன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை நிரூபிக்க இந்தியாவை விட வேறு எந்த எடுத்துக்காட்டுகளும் பயனுள்ளதாக இருக்காது. மத்திய அரசாங்கம் தேசிய அளவில் ஊரடங்கிற்கு உத்தரவிட்டது என்றாலும், உண்மையில் நோய்பரவல்களைக் கட்டுப்படுத்துவது, ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை எதிர்கொள்வது என்று மாநில அரசுகள்தான் பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றன. பல மாநிலங்கள் செயலில் இறங்கியிருந்தாலும், கேரளாவை மிஞ்சுகின்ற மாநிலங்கள் எதுவும் இருக்கவில்லை என்பதே உண்மை.
வளைகோடு தட்டையானது எப்படி?
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் பதிவு செய்யப்பட்ட, மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வழிநடத்திச் சென்ற முதல் மாநிலமாக கேரளா இருக்கிறது. இருந்தபோதிலும், இப்போது அனைத்து மாநிலங்களின் பட்டியலில் 10ஆவது இடத்திலேயே அந்த மாநிலம் இருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பரிசோதனைகளைச் செய்து முடித்திருக்கின்ற இந்த மாநிலத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தற்சமயம் நோயிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி, உலகப் பொருளாதாரத்துடன் அந்த மாநிலம் கொண்டிருக்கும் நெருக்கமான தொடர்புகள், மாநில மக்களிடையே இருக்கின்ற அதிக அளவிலான சர்வதேசப் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, கேரளா ஆபத்து அதிகமான பகுதி என்று அறியப்பட்டது. கேரள மாநில அரசாங்கம் நோய்பரவல் வளைகோட்டைத் தட்டையாக்கியது மட்டுமல்லாமல், ரூ.20,000 கோடி அளவிற்கான மிக விரிவான பொருளாதாரத் திட்டங்களை, மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாகவே அறிவித்தது.
இந்திய மற்றும் சர்வதேச அளவில் கேரளா எவ்வாறு தனித்து நிற்கிறது?
சமூக முன்னேற்றம் தொடர்பாக கேரளா அடைந்திருக்கும் இந்த வெற்றி, அந்த மாநிலத்தின் கலாச்சாரம், வரலாறு, புவியியல் சார்ந்த ஏராளமான தனித்தன்மையான கோட்பாடுகளை முன்வைப்பதற்கான வழியை உருவாக்கித் தந்திருக்கிறது. உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்தியது, மிகப்பெரிய அளவில் நன்றாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தை மிகவிரைவில் உருவாக்கியது போன்ற செயல்பாடுகளுக்கு, மாநில அரசாங்கம் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற தொடர்பே காரணமாக இருக்கின்றது.
1957ஆம் ஆண்டு பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கங்கள் மாறி மாறி வெற்றி பெற்று வந்த நிலையில், மாநிலத்தில் ஏற்பட்ட சமூக அணிதிரட்டலின் சுழற்சிகளும், அரசின் நடவடிக்கைகளும் இணைந்து வலுவான சமூக ஜனநாயகத்தை உருவாக்கி இருக்கின்றன. தற்போது எழுந்திருக்கும் இந்த நெருக்கடி, அந்த சமூக ஜனநாயகம் ஏற்படுத்தித் தந்திருக்கும் ஒப்பீட்டளவிலான நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அடிப்படை நலன் மற்றும் மிகப் பரந்த அளவிலான வாய்ப்புகளை அனைத்து குடிமக்களுக்கும் வழங்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை உள்ளடக்கிய சமூக உடன்படிக்கையின் மீதே, சமூக ஜனநாயகங்கள் ஆரம்பத்தில் கட்டியெழுப்பப்பட்டன.
பொதுமக்களை அணிதிரட்டிய தொடர்ச்சியான பல இயக்கங்கள் – 1930களில் கோவில் நுழைவு இயக்கம், 1950கள் மற்றும் 1960களில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்கள், 1980களில் வெகுஜன கல்வியறிவு இயக்கம், 1990களில் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (KSSP) தலைமையில் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான பரவலாக்கப்பட்ட திட்டமிடல் இயக்கம், மற்றும் சமீபத்தில் நடைபெற்றிருக்கும் பல்வேறு பாலின மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் – மூலமாகவே, கேரளாவில் இந்த சமூக உடன்படிக்கை சாத்தியமாகி இருக்கிறது.
சமூக குடியுரிமை குறித்த வலுவான உணர்வுகளை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல், இந்த இயக்கங்களே பொதுநடவடிக்கைகளுக்கான சட்ட மற்றும் நிறுவனத் திறனை அதிகப்படுத்திய மற்றபிற சீர்திருத்தங்களுக்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளன. இரண்டாவதாக, உரிமைகள் அடிப்படையிலான நலனுக்கான முக்கியத்துவம் தரப்பட்டு, முன்வரிசையில் உள்ள அரசுத் தலைவர்களிடமிருந்து தொடர்ச்சியான பொறுப்புக்கூறலைக் கோருகின்ற துடிப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட சிவில் சமூகம் இங்கே வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, அணிதிரட்டப்பட்டுள்ள பொது மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும், சமூக பாதுகாப்பு வலையைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதற்குமான அழுத்தத்தை கேரளாவில் அமைகின்ற அனைத்து அரசாங்கங்கள் மீதும், அதிகாரத்தில் இருக்கின்ற கட்சியைப் பொருட்படுத்தாமல், இந்தியாவிலேயே மிகச் சிறந்த சுகாதார அமைப்பை ஏற்படுத்துவதற்கான சிவில் சமூகத்தின் நிலையான கோரிக்கைகள் மற்றும் போட்டிகள் மிகுந்த கட்சி அமைப்பு போன்றவையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
நான்காவதாக, அவ்வாறு தரப்பட்ட அழுத்தம் கடந்த இருபதாண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்ற உந்துதலையும் தூண்டி விட்டிருக்கிறது. கேரளாவில் உள்ளதைப் போல,உள்ளாட்சி மன்றங்கள் இந்தியாவில் வேறெங்கும் திறமையுடன் இயங்கவில்லை. இறுதியாக, இவையனைத்தும் இணைந்து, பரந்து விரிந்த நிறுவன பரப்பைக் கொண்டதொரு மாநிலத்திடமிருந்து கிடைக்கின்ற பொதுவான நம்பிக்கை என்ற ஆழமான ஜனநாயகத்தின் மிகப் பெரிய சொத்தாக மாறியிருக்கின்றன. இதன் விளைவாக, கேரள அரசு தன்னுடைய மக்களை ஆட்களாகவோ அல்லது வாடிக்கையாளர்களாகவோ கருதாமல், உரிமைகள் கொண்டிருக்கும் குடிமக்களாக நடத்துகிறது.
நோய் பரவல் வளைகோட்டை தட்டையாக்கிய இந்த கட்டமைப்பு, பரந்த, பயனளிக்கின்ற மக்கள்நலன் சார்ந்த நடவடிக்கைகளை எவ்வாறு செயல்படுத்துகிறது? நிதி மற்றும் சமூக வளங்களை அணிதிரட்டும் பலவீனமான சங்கிலி, அரசுத் தலைவர்களை கடமைகளை நிறைவேற்ற வைப்பது, பல்வேறு அதிகாரிகள் மற்றும் அதிகார வரம்புகளை ஒருங்கிணைப்பது, மிக முக்கியமாக குடிமக்களை இணங்க வைப்பது போன்ற செயல்பாடுகளை நம்பியே, கோவிட்-19 தொற்றுநோய் போன்று அதிகரித்து வருகின்ற நெருக்கடிகளுக்கான தீர்வைக் காண்பதற்கான அரசாங்கத்தின் திறன் இருக்கிறது. திட்டமிட்டவாறு முடிவுகளை எடுப்பது, செயல்திறன் மிக்க நடவடிக்கைகளிலிருந்தே தொடங்குகிறது.
முதன்முதலாக கேரளாவில் நோயாளி கண்டறியப்பட்ட பிறகு, மாநில முதல்வர் பினராயி விஜயன் 18 வெவ்வேறு செயல்பாட்டுக் குழுக்களை ஒருங்கிணைக்கின்ற மாநில நடவடிக்கைக் குழுவைக் கூட்டியிருக்கிறார். அன்றாடம் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, தொடர்ந்து பொதுமக்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். கேரளாவின் சமூக இணைப்பு இதையே கோருகின்றது. மலையாளிகளின் குடியுரிமை உணர்வுடன் விஜயன் நேரடியாக முறையிட்டது மட்டுமல்லாமல், அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமலாக்கம் குறித்ததாக இல்லாமல் மக்களின் பங்களிப்பு குறித்ததாக இருப்பதாக அறிவித்தார். மேலும் இந்த வைரஸ் யாரிடமும் பாகுபாடு காட்டாது என்பதையும் அவர் பொதுமக்களிடம் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவதாக, சமீப காலத்தில் தனியார் சுகாதார சேவைகள் நன்கு வளர்ச்சி அடைந்திருந்த போதிலும், வலுவான பொது சுகாதார அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டதாலேயே, பரந்த, நெருக்கமான சுகாதாரப் பாதுகாப்பு முறையை அரசாங்கத்தால் இப்போது பயன்படுத்திக் கொள்ள முடிந்தது பொதுச்சேவைகளை தனியார் வழங்குவது ஒருபோதும் உதவப் போவதில்லை. லாப நோக்கத்துடன் செயல்படுகின்ற சுகாதார அமைப்புகள் எதிர்கொள்கின்ற வெளிப்படையான ஒருங்கிணைப்பு சிக்கல்களை, இதுபோன்ற உலகளாவிய தொற்றுநோய்களைத் தவிர வேறெதுவும் அம்பலப்படுத்திக் காட்டப் போவதில்லை என்பதை அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைக் காண்கின்ற எவரொருவராலும் கற்றுக் கொள்ள முடியும்.
கேரளாவின் பொதுசுகாதாரப் பணியாளர்கள் நன்கு தொழிற்சங்கப்படுத்தப்பட்டவர்களா
நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிய போது, வீடு வீடாகச் செல்லுமாறு இரண்டு லட்சம் தன்னார்வலர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. பெண்களுக்கான அதிகாரத்தையளிக்கின்ற குடும்பஸ்ரீ இயக்கம் அதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. நோய் தொடர்புத் தடங்களை ஒழுங்கமைக்கும் பணியில் இருந்து, குடும்பஸ்ரீ சமூக சமையலறைகள் மூலமாக நாளொன்றிற்கு மூன்று லட்சம் உணவுகளை வழங்குவது வரையிலும் இருக்கின்ற பயனுள்ள பணிகளை இணைந்து செய்வதற்கான நிலையில், சிவில் சமூகத்தை அணைத்து வைத்துக் கொள்வதாக மாநிலம் இருந்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் மையம்
நான்காவதாக, மிகச் சரியான அரசியலை, சிறந்த பொது சுகாதாரப் பாதுகாப்பு முறையை உங்களால் பெற முடியும் என்றாலும், இது போன்றதொரு நெருக்கடியில் அவற்றின் செயல்திறன் பொதுவாக கடைசி கிலோமீட்டர் ஓட்டத்தைப் போலவே இருக்கும். இருபது ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதன் பலன் இப்போது கிடைத்திருக்கிறது.
நோய்த்தொற்று அதிகம் இருக்கின்ற இடங்களில் நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளை மையப்படுத்துவது, பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்களைக் கண்டுபிடிப்பது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரந்த அளவில் விநியோகிக்கப்படுகின்ற நேரடிப்பலன்களை நிர்வகிப்பது ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதை விட, பஞ்சாயத்துக்கள், மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகள் மட்டத்தில் அரசுத் துறையினர் மற்றும் சிவில் சமூகத்தின் பங்காளிகளின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் திறனே முக்கியமானதாக இருக்கிறது.
உலகளாவிய தொற்றுநோய் என்பது சமூக அமைப்பின் மீது நடத்தப்படுகின்ற சோதனையாகும், இதைப் போன்று ஒருபோதும் பொதுமக்களின் நம்பிக்கை மிகப் பெரிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. ஜனநாயக நாடுகளில் பொதுமக்களிடையே இணக்கம் வெளிப்படுத்தப்பட வேண்டும். குடிமக்களை வீட்டிலேயே இருக்கவும், வேலையைக் கைவிடவும் கேட்டுக் கொள்வது, மக்கள் செய்யும் தனிப்பட்ட தியாகங்கள் சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாக்க அவசியம் என்று நம்புவது என்பது ஒருபோதும் எளிதானது அல்ல.
குறிப்பாக கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரிக்கு எதிராக,. அதுவும் முன்னோக்கிச் செல்லும், இப்போது, குறிப்பாக ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக. நம்பிக்கையை அளவிடுவது மிகக் கடினம் என்றாலும், கொச்சியை உள்ளடக்கிய 10 இந்திய நகரங்களில், அனைத்து வர்க்கங்கள், சாதிகள் மற்றும் மதங்களைத் தாண்டி பரந்த அளவில் பெங்களூரு அரசு சாரா அமைப்பான ஜன கிரஹாவுடன் இணைந்து பணியாற்றுகின்ற நானும், சக ஊழியர்களும் சமீபத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்புப் பணிகள், மலையாளிகள் தங்கள் நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது மிக உயர்ந்த நம்பிக்கையை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. அனைத்திற்கும் மேலாக, கேரளாவில் உள்ள சமூக இணக்கத்தின் வலுவான தன்மையை அது சுட்டிக்காட்டி இருக்கிறது.
நோயின் உச்சத்திற்கு அப்பால், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும், குறிப்பாக இந்தியாவும், பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்து தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை பல ஆண்டுகளுக்கு கையாள வேண்டியிருக்கும். மிக அத்தியாவசியமான மற்றும் மிகவும் சிக்கலான ஜனநாயக குடியுரிமை மீதுள்ள சவால்களை, பயங்கரமான, கணிக்க முடியாத, இந்த வெளிப்புற அதிர்ச்சி வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இது போன்ற தருணங்களில், சிலருக்கு சர்வாதிகார உணர்வு தோன்றுவது தவிர்க்க முடியாதது.
ஒட்டுமொத்த அதிகாரத்தை கோருகின்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆளுநர்களின் அதிகாரத்தை அபகரித்துக் கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். தொற்றுநோயை இனவாதப்படுத்தவும், தன்னை விமர்சனம் செய்பவர்களை மௌனமாக்கிடவும் பாரதிய ஜனதா கட்சி இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய ஜனநாயகம் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கின்ற இந்த நேரத்தில், கேரளா இந்த நெருக்கடியை மிகவும் உறுதியாக, அக்கறையுடன் இந்தியாவின் எந்தவொரு பெரிய மாநிலத்தை விடவும் மிகச் சிறப்பாக நிர்வகித்துள்ளது என்பதை இங்கே நினைவூட்ட வேண்டியது அவசியமாக இருக்கிறது. சமத்துவம், சமூக உரிமைகள் மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகிய மரபுகளின் மீது தனது நடவடிக்கைகளக் கட்டமைத்துள்ள கேரள அரசு இந்த நெருக்கடியை மிகத் திறமையாகச் சமாளித்துள்ளது
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு
important article and nice translatuion