சதுரங்கப் பலகையிலும் சதிராடும் சாதியத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் ‘தி கிராண்ட்மாஸ்டர்’
– அ.குமரேசன்
பாகுபாட்டு வேலிகள் இல்லாத துறை என்று கருதப்படும் விளையாட்டுக் களத்திலும் எந்த அளவுக்கு சாதி புகுந்து விளையாடுகிறது என்று திரையைக் கிழித்துக் காட்டுகிற திரைப்படம் “தி கிராண்ட் மாஸ்டர்”. தொடக்கத்தில் “நாற்கரப் போர்” என்று சூட்டப்பட்டிருந்த பெயரில் மாற்றம் செய்து திரைக்கு வந்திருக்கிறது.
தாயும் தந்தையும் சமூகத் தெருக்களில் சாதியாலும், செய்யும் வேலையின் சகதியாலும் அவமதிக்கப்படுகிறார்கள். பள்ளி மாணவனும் சதுரங்க ஆட்டத்தில் முன்னணிக்கு வரத் துடிப்பவனுமான மகன் நந்தன் அதே சாதியாலும் சகதியாலும் விளையாட்டு மேசையை நெருங்க முடியாமல் தள்ளப்படுகிறான்.
இப்படியெல்லாம் நடக்கிறதா என்று எவரும் கேட்டுவிட முடியாது. ஒரு நாள் கூடத் தவறாமல் ஊடகங்களில் வந்துகொண்டிருக்கிற, பள்ளிக் கூடங்களில் கழிப்பறையைக் கழுவிவிடுமாறு தலித் சமூகக் குழந்தைகள் கட்டாயப்படுத்தப்பட்டது உள்ளிட்ட செய்திகள் இப்போதும் எங்கும் முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கும் சாதியத்தைப் படம் பிடித்துக் காட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட உண்மை நிகழ்வுகளிலிருந்து கோர்க்கப்பட்ட கதையைப் படமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிச்செழியன்.

தொழிலதிபரான தனியார் செஸ் டீம் தலைவர் சாதி மேலாதிக்கப் புத்தி கொண்டவரும் கூட. அவருடைய மகளை மாவட்டப் போட்டியில் தோற்கடிக்கிறாள் வெள்ளையம்மாள். ஏற்றுக்கொண்ட சவாலின்படி தெருவில் இறங்கி – இல்லையில்லை சாக்கடையில் இறங்கி – கழிவுகளை அகற்றும் நிலைமை ஏற்படுகிறது. அந்த வன்மம் அவளுடைய கணவனைக் கொலை செய்கிற அளவுக்கு, பின்னர் அவளையும் கொலைசெய்ய முயலும் அளவுக்குத் துரத்துகிறது.
அந்த சாதி ஆணவ வன்முறைகளை வெள்ளையம்மாள் எதிர்கொள்வது எப்படி? சதியாட்டக் காய் நகர்த்தல்களை மீறி நந்தன் பன்னாட்டுப் போட்டியில் வெற்றிச் சான்றிதழைக் கைப்பற்றுவது எப்படி? ஊகிக்கக்கூடிய திருப்பங்களாக ஆங்காங்கே இருந்தாலும், நமது ஊகம் சரியாக அமைந்ததில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றன பரபரப்பும் விறுவிறுப்புமான காட்சிகள்.
வெள்ளையம்மாளின் தோழி நந்தனைத் தன் மகனாகக் கருதி அவனுக்காக வாதாடுவது இனிது, வதைகளுக்கு உள்ளாவது கொடிது. எளிய மக்களின் இப்படிப்பட்ட இயல்பான உறவுகளைச் சித்தரித்திருப்பதாலும் படம் மனதில் பதிகிறது.
உள்ளூரில் நடக்கிறது ஆடுபுலி ஆட்டம், அங்கேயும் சாதியின் கோரத் தாண்டவம், பள்ளிக்கூடத்திலும், சதுரங்கப் பயிற்சிக் கூடத்திலும் வெட்டுப்படும் சமத்துவம்… இத்தகைய சித்தரிப்புகள் கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் தீண்டாமை நாக்கு தீண்டியிருப்பதை விளக்குகின்றன. ஆதரவாக இருக்கும் கறுப்புச் சட்டைக்காரர், பரோட்டோ கடை போட்டிருக்கும் செஸ் மாஸ்டர் – இவர்களும் சூழல்களுக்கு நம்மைக் கொண்டு செல்கிறார்கள்.

வி–6 நிறுவனம் தயாரித்துள்ள படத்தின் மொத்தக் கட்டுமானத்தில் ஒரு தூணாக இருப்பது வெள்ளையம்மாளாக வரும் அபர்ணதி நடிப்பு. சுருக்கமான காட்சிகளிலும் அழுத்தமாகப் பங்களித்திருக்கிறார் லிங்கேஷ். நந்தனாக அஸ்வின் தன் கண்களில் வயதுக்குரிய துறுதுறுப்பையும், சவால்களை எதிர்கொள்கையில் கூர்மையையும் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியது. சுரேஷ் மேனன், தமிழரசி, அன்பு உள்ளிட்டோரின் பங்களிப்பும் இணக்கமாக இணைந்துள்ளன.
கதையின் துடிப்பை அரங்கிற்குக் கடத்துகிறது தினேஷ் ஆண்டனி இசை. அர்ஜுன் ரவி, ஞான சேகர் ஒளிப்பதிவும், ரஞ்சித் தொகுப்பும் காட்சிகளுடன் ஒன்ற வைக்கின்றன.
கருத்தாழமுள்ள உரையாடல்களும் முக்கியமானவை. ஆயினும், வெள்ளையம்மாளும் ஒண்டியும் திடீர்த் திடீரென அரசியலாகப் பேசுகிறார்கள். அவர்களுக்குத் துப்புரவுத் தொழிலாளர் சங்க, ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் என்ற தொடர்புகள் இருப்பதாகச் சேர்த்திருந்தால் அந்தப் பேச்சுகள் செயற்கையாக ஒலிக்காமல் இயற்கையாக அமைந்திருக்கும். அப்படிச் செய்யாததால், அவர்கள் பேசுவதற்கு மாறாக இயக்குநர் பேசுவதாக அந்த இடங்கள் அமைந்திருக்கின்றன. முற்போக்குக் கருத்தும் கலை நேர்த்தியும் கைகோர்க்கச் செய்வதில், கலைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நுட்பம் இது. ஆயினும், சமூகத்தின் மனசாட்சியை உலுக்குகிற ஒரு திரையாக்கத்தை வழங்கியிருக்கிறார் வெற்றிச்செழியன்.
இப்படியான கதைகள் வருகிறபோதெல்லாம், “இன்னும் எத்தனை காலத்திற்கு சாதியப் பிரச்சினையைப் படமாக்கிக்கொண்டிருப்பீர்கள்,” என்ற கேள்வியும் ஒரு பகுதியினரிமிருந்து வரும். சமுதாய வீதிகளில் சாதிமலம் முற்றாக அகற்றப்படும் வரையில் இன்னும் காத்திரமான படைப்புகள் வந்தாக வேண்டும்.
📚 எழுதியவர் :
✍🏻 – அ.குமரேசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

