படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன்

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன்

 

ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், முதல் உயிரி தோன்றி 370 கோடி ஆண்டுகள் ஆகிறது. சயனோ பாக்டீரியாக்கள் தான் முதல் உயிரியாக இருக்கவேண்டும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பூமி தோன்றி தோராயமாக 450 கோடி ஆண்டுகள். இன்று வரை ஏராளமாய் உயிர்கள் பரிணமித்து, அழிந்து என மாறி மாறி வந்திருக்கிறது இன்று உயிர்த்திருக்கும் உயிர்கள். இது வரை 5 பேரழிவுகள் இந்த புவியில் நிகழ்ந்துள்ளது. ஆறாவது சிற்றினப்பேரழிவு மனிதர்களால் நிகழப்போகிறது என்று எச்சரித்துக்கொண்டே வருகிறார்கள் உயிரியலாளர்கள்.

பிராணவாயு நிகழ்வு சயனோபாக்டீரியாக்கள் எனும் நீலப்பசும்பாசிகளாலேயே சாத்தியப்பட்டது. அதன் பின்னரே காற்றை சுவாசித்து வாழும் அத்தனை ஜீவராசிகளும் பரிணமித்தது. பூச்சிகள் கார்போனிபெரஸ் காலத்திலேயே பரிணமித்துவிட்டது. நாமெல்லாம் பரிணமித்து சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன. ஆதித்தாய் என்றழைக்கப்படும் ஆர்தி பரிணமித்தே 43 லட்சம் வருடங்கள் தானாகிறது. இவளிடமிருந்தே மனிதர்களும், மனிதக்குரங்குகளும் வெவ்வேறு பரிணாமக்கிளைகளில் மாற்றமடைந்திருக்க இயலும் என்கிறார்கள் தொல் மானுடவியல் ஆய்வாளர்கள். குறைந்தது 25 விதமான மனிதச்சிற்றினங்கள் பரிணமித்து, வாழ்ந்து மறைந்திருக்கலாம் என்கிறது தரவுகள்.

பூச்சிகள் கோலோச்சிய காலங்களும் உண்டு. எங்கே உணவு அதிகமாய் இருக்கிறதோ அங்கே பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும். சுற்றுச்சூழல் தான் அதை தீர்மானிக்கும். என்றைக்கு மனித நாகரீகம் வேளாண் சமூகமாக உருப்பெற்றதோ அன்றே பூச்சிகளின் எண்ணிக்கை கூடியிருக்க வேண்டும். எந்த விலங்குகளும் வேளாண்மை செய்வதில்லை. அங்கே ஒரு இயற்கை சமநிலை பேணப்பட்டிருக்கும். உணவுச்சங்கிலியும், உணவு வலையும் ஒரு சிற்றினத்தின் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்கும்.

மனிதர்களின் இத்தனை கால வரலாற்றில் இயற்கை சமநிலை சிதைந்துகொண்டே தான் வந்திருக்கிறது. இவ்வுலகின் வெற்றிகரமான உயிரினங்களில் முதன்மையானது பூச்சிகள். இவற்றால் எந்தவிதமான கரிமப்பொருட்களையும் உணவாய் உட்கொள்ளும் திறன் பெற்றவை. அதுவே அவைகளின் வெற்றி ரகசியமும் கூட.

ஒரு நாளைக்கு 81 மைல்களுக்கு மேல் ...

பூச்சிகளில் சமீபத்திய வகைப்பாட்டுதலின்படி 35 வரிசைகள் உண்டு. இவை கணுக்காலிகள் தொகுதிக்குள் அடக்கம். இறைக்கையுள்ள பூச்சிகள், இறக்கையற்ற பூச்சிகள் என இருவகை உண்டு. பூச்சிகளில் நன்மை பயப்பன, தீமை பயப்பன என இருவகைப்படுத்தியது மனிதனை மையப்படுத்தியதே. உண்மையில் அப்படியெல்லாம் கிடையாது. வாழும் உரிமை அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஆனாலும் நாம் வேளாண் பயிர்களை அல்லது விளைவிக்கும் பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள், எலிகள் உட்பட அனைத்து உயிர்களையும் நாம் தீங்குயிரி என்றே வகைப்படுத்தியுள்ளோம்.

பூச்சிகளில் மாத் என்னும் பட்டுப்பூச்சிகள் தான் முதலிடத்தில் உள்ளது. பின் தான் மற்ற பூச்சிகள். வெட்டுக்கிளிகளெல்லாம் எப்போதாவது தான் பயிர்களை பெரிய அளவிற்கு சேதப்படுத்தும்.

இப்போது வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு குறித்து அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறோம். லட்சக்கணக்கில் கண்டம் விட்டுக்கண்டம் பறக்கும் திறன் இன்று விவசாயிகளுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. வெட்டுக்கிளிகள் ஆர்தாப்டிரா வரிசையை சேர்ந்தது. மண்ணில் தான் முட்டையிடும். முட்டை, நிம்ப் எனும் லாரவப்பருவம் கடைசியாக முதிர் பருவம். சுமாராக எட்டிலிருந்து 10 வாரங்களில் அதன் உயிர்ச் சுழற்சி முடிந்துவிடும். உணவு தொடர்ச்சியாகக்கிடைக்கும் பட்சத்தில் வருடத்திற்கு மூன்று தலைமுறைகளை கடக்கும் வாய்ப்பைப்பெற்றவை.

இயல்பாகவே வெட்டுக்கிளிகள் தனிமை விரும்பிகள். இரவாடி. பொதுவாக இரண்டு வெட்டுக்கிளிகள் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே. கூட்டமாக சுற்றுவது அதன் இயல்பு அல்ல. ஆனால் செரோடோனின் என்ற ஹார்மோன் சுரக்கும் போது இதன் குணங்களில் பெரும் மாற்றம் நிகழ்கிறது.6 செமீ நீளம் நான்காக குறுக்கப்படுகிறது. அதன் வண்ணங்களில், தோற்றத்தில், உடற்செயலில், நடத்தைகளில் மாற்றம் நிகழ்கிறது. இதன் மூலம் தனியாகத்திரிந்தவைகள் கூட்டமாக சேர ஆரம்பிக்கிறது. ஒரு கூட்டம் இன்னொன்றோடு, பின் மற்றதோடு என பெருங்கூட்டமாக இணைந்து பயிர்களை துவம்சம் செய்யத்துவங்கிவிடுகிறது. இந்த நிகழ்விற்கு ஆங்கிலத்தில் ஸ்வார்மிங் என்று பெயர். வெட்டுக்கிளிகளின் பிளேக் என்றும் குறிப்பிடுவார்கள்.

ஆராய்ச்சிக்கூடங்களில், கணினி நிரல்களோடு சோதனை மேற்கொண்டதில் வெட்டுக்கிளியின் பின்னங்காலில் HIND FEMUR ல் ஏற்படும் தூண்டுதல் காரணமாக இது நிகழ்வதாக கூறுகிறார்கள். தனித்து இருக்கும் போது அதிக வெட்கப்படுவதாகவும், கவரும் வண்ணத்துடன் இருக்கும் இவைகள் க்ரெகரியஸ் நிலையில் கூட்டமாக சேர்ந்து பல மாற்றங்களை அடைகிறது. இந்நிகழ்வு வெட்டுக்கிளிகள் அடர்வைப்பொறுத்து அமைகிறது.

460 சதுர மைல்களுக்கு பரவும் வல்லமை படைத்தது. கிட்டத்தட்ட 400 லிருந்து 800 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். ஒவ்வொரு வெட்டுக்கிளியும், ஒவ்வொரு நாளும் தனது எடைக்கு நிகராக தாவரங்களை உண்ணும். அப்படியென்றால் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கூட்டமும் சுமாராக 430 மில்லியன் பவுண்டுகள் உணவை காலி செய்துவிடும்.

வெட்டுக்கிளிகள் அதிகம் படையெடுத்து ...

ஒப்பீட்டளவில் 10 யானைகள் அல்லது 25 ஒட்டகங்கள் அல்லது 2500 மனிதர்கள் சாப்பிடும் அளவை ஒரே நாளில் தின்று தீர்த்துவிடும். இந்நிகழ்வு 10 வாரங்கள் கூட நீடிக்கலாம். இதன் சிற்றினப்பெயர் Schistocerca gregaria.

இந்த ஸ்வார்மிங் காலங்காலமாக நிகழ்வது தான். புதியதல்ல. மகரந்தங்கள் அதிகமாய் கிடைக்கும் காலங்களில் தேனீக்களிலும் இச்சம்பவம் நிகழும். வெட்டுக்கிளிகளின் இந்த படையெடுப்பு பன்னெடுங்காலமாக நடப்பது தான் என்றாலும் 1964 ல் பெரிய அளவு நடந்திருக்கிறது. பின் 1993ல் அதற்கடுத்தாற்போல 2013 ல் பின் இப்போது. பாதிப்படையும் நாடுகள் தோராயமாக 60 க்கும் மேல். ஆப்பிரிக்கா தான் இதன் பூர்வீகம். அங்கிருந்து சோமாலியா வழியாக பறந்து நாடுகள் கடந்து பாகிஸ்தான் வந்தடைந்து பின்னரே இந்தியாவிற்கு வரும்.

இதில் 8000 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் இருந்தாலும் நான்கு பிரதானமான வெட்டுக்கிளிகளை குறிப்பிடுகிறார்கள். அதாவது பாலைவன வெட்டுக்கிளிகள், மர வெட்டுக்கிளிகள், வலசை வெட்டுக்கிளிகள் பாம்பே வெட்டுக்கிளிகள். இவற்றில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் (Schistocerca gregaria) தான் நம்மை வருடாவருடம் அச்சுறுத்துவது.

போன வருடம் பாகிஸ்தான் வழியாக இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் வந்து வேளாண் நிலங்களை வெச்சு செஞ்சது. மகாராட்டிரம் வரை இதன் தாக்கம் இருக்கும். இந்த வருடமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மோடியின் பணமதிப்பிழப்பினால் மிக மோசமாக சிதைந்த பொருளாதாரம், கொரோனாவாலும், தற்போது வெட்டுக்கிளிகளாலும் வலுவாக சிதைவடைந்துள்ளது. அதுமட்டுமல்ல இந்தியர்களின் உணவுப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும்.

எப்படி கட்டுப்படுத்தலாம்?

தமிழகம் வந்ததா வெட்டுக்கிளிகள் ...
கிருண்ஷகிரியில் வெட்டுக்கிளிகள் …

பொதுவாக மேலதயான் பூச்சி கொல்லிக் கரைசல் கொண்டு அழிக்கலாம் என்றாலும் அதிக அளவில் இருக்கும்போது இவ்வுயிர்க்கொல்லி மருந்துகள் மற்ற விலங்குகளையும் பாதிக்கும். பெஸ்ட் போர்காஸ்டிங் முறையில் வரும்முன் தடுப்பது நலம். இதற்கென்றே உலகளாவிய அமைப்புகள் உண்டு.

உயிரிக் கொள்ளிப் பூஞ்சையான மெட்டாரைசியம் அனிசோபிலே கொண்டும் கட்டுப்படுத்தலாம். இருந்தாலும் பூச்சிகள் பறவைகளின் உணவு என்பதால் நாகணவாய், கொக்குகள், சூரைக்குருவிகள், கரிச்சான், சிட்டுக்குருவிகள் இவற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. நீர்ப்புலப்பறவைகளுக்கும் கணிசமான பங்குண்டு. நிலத்தில் முட்டையிடுவதால் கோழிகள் மண்ணைக்கிளறி முட்டைகளை உண்டு இவைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். கொரானா ஊரடங்கினால் ஏற்பட்ட சுணக்கமும் இதன் வருகையை கணிப்பதில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

வெட்டுக்கிளிகளின் மரபணு வரிசையை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் இந்நிகழ்வு எவ்வாறு நடைபெறுகிறது? கட்டுப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்றும் ஆய்வுகள் நடந்தவண்ணம் இருக்கிறது. மிளகாய் கரைசலைக்கொண்டு கட்டுப்படுத்தலாம் என்று சொல்பவர்கள் உண்டென்றாலும் மிளகாய்ச் செடிகளையும் ஒரு கை பார்த்துவிடும். ராஜஸ்தான் மாநிலம் தான் அதிகமாய் பாதிக்கப்படும். ஜெய் சல்மாரில் வெட்டுக்கிளி பிரியாணியை பரபரப்பாய் வீற்றிருக்கிறார்கள். காற்றின் திசைவேகம் தான் இதன் பரவலை தீர்மானிக்கும். 27 ஆண்டுகால அனுபவத்தில் தமிழ்நாடு பாதிக்கவில்லை என்று தான் தரவுகள் கூறுகின்றன என்றாலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் தாக்கம் இருப்பதாக செய்திகள் வந்தது. அது வேறு வகை. பெயிண்ட்டெட் வெட்டுக்கிளிகள் என்று தமிழக வேளாண் துறை அறிவித்துவிட்டது.

எழுத்தாளர்: டாக்டர்.எஸ்.தினகரன்,

மாநில தலைவர் தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *