The Great Indian Kitchen Malayalam Movie Review By Pichumani. திரை விமர்சனம்: கிரேட் இந்தியன் கிச்சன் - பிச்சுமணி

திரை விமர்சனம்: கிரேட் இந்தியன் கிச்சன் – பிச்சுமணி
என்ன வேலை செய்யிறிங்க‌?
பெயிண்டர்.
உங்கள் மனைவி?
வீட்ல சும்மாதான் இருக்கிறாள்.
பெயிண்டர் இடத்தில் எந்த வேலையும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் அநேக ஆண்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

என்ன வேலை பார்க்குறீங்க?
ஆசிரியர்.
உங்கள் மனைவி?
House wife. Sorry.. இல்லத்தரசி.
நீங்க என்ன வேலை செய்யிறிங்க‌?
இஞ்சினியர்.

உங்கள் மனைவி ?
ஆசிரியர்.
உங்களுக்கு சமைக்க தெரியுமா?
தெரியாது.
உங்க வீட்டில் யார் சமையல் செய்வார்?
எனது மனைவி தான்.

சார் உங்களுக்கு சமைக்க தெரியுமா?
தெரியும்.
சமையல் பாத்திரங்களை யார் கழுவுவார்கள்?
எனது மனைவி தான்.

சும்மா தான் இருக்கிறாள், ஹவுஸ் ஒய்ப், சமைக்க தெரியாது, மனைவி தான் பாத்திரம் கழுவுவாள்.. இப்படியான வார்த்தைகள்.. எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தைகள் என்பதை சொல்லும் படம்தான் “தி கிரேட் இண்டியன் கிச்சன்”.

கதாநாயகி திருமணத்தோடு படம் தொடங்குகிறது. சமைப்பது.. பாத்திரம் கழுவுதல்.. சமைப்பது.. பாத்திரம் கழுவுதல் என்று அடுப்படி காட்சிகள் அதிகமாக இருந்தாலும்.. சமூகத்தில் ஆணாதிக்க வெறியையும் சோம்பேறிதனத்தையும் தோலுரித்து செவ்விடில் அடித்தால் போல் நமக்கு காட்டுகிறது இந்த படம்.

குக்கர் சோறு வேண்டாம்.. மிக்சியில் அரைக்கவேண்டாம்.. கடுங்காப்பி இப்படிதான் வேணும்… வாசிங்மிஷினில் துணி துவைத்தால் பிடிக்காது.. இப்படி சொந்த வீட்டில் ஆர்டர்கள் போட்டு.. சுகம் களித்து உடல்நலம் பேணும் சோத்து அமுக்கிகளாகிய நாம் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

மாதவிடாய் நாள்களில் பெண்கள்படும்பாடு கொடூரமானது. எவ்வளவு எளிதாக நாம் அவர்களின் மீது வன்முறைய கட்டவிழ்த்து விடுகிறோம் அந்த நாள்களில்.
கதாநாயகி மாதவிடாய் நாள்களில் உதவிக்காக ஒரு பெண்மணி வருவார் படத்தில்..

“எவ்வளவு பெரிய வீடு இந்த வீட்டை சுத்தம் செய்வது பெரும் கஷ்டம்தான்.. நான் குடுத்துவைச்சவ எங்க வீடு இரண்டு சிறிய அறைகள்தான்” பெண் சமூகத்தின் கொடும் வலிய பரிதாபம் கலந்த மன உளைச்சலோடு பதிவு செய்வார்.

கதாநாயகியின் கணவர் கதாபாத்திரமும் மாமனார் கதாபாத்திரமும் ரெம்ப நடிக்காமல் வாழ்ந்தது போலவே இருக்கும். அந்த கதாபாத்திரத்திரங்களில் நமது அப்பாவாகவோ அண்ணாகவோ நீங்களாகவோ நானாகவோ.. பொருத்திப்பார்த்தால். அது படமாக இருக்காது நிசமான நமது மிருகத்தனமான வாழ்க்கையா இருக்கும்.

படத்தில் வரும் பெண்குழந்தை நம் மனதில் கண்டிப்பாக நிற்கும். தீட்டு புனிதம் புடலங்காய் என எதுவும் வசப்படதா அந்த குழந்தை கதாநாயகி மீது அன்பு செலுத்தும் ஒவ்வொரு கட்சியும் அருமை. அதிலும் வயதான பெண் ஒருத்தி கதாநாயகி மாதவிடாய் வந்து தனி அறையில் இருக்கும் போது.. மெத்தையில் படுக்காதே.. இந்தா பாய் என்று தரையில் போட்டு இருக்க சொல்லி கணவனும் மாமனாரும் ஐயப்பசாமிக்கு மாலை போட்டு இருக்கிறார்கள் அவர்கள் முன் வந்துவிடாதே,. சொல்லி செல்லுவாள். ஆனால் பெண் குழந்தை (ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும்) கதாநாயகிக்கு அன்போடு சாப்பிட ஒன்றை கொடுத்து விட்டு செல்லும் காட்சி.. அன்புக்கும் சமத்துவத்துக்கும் முன்னால் தீட்டு புனிதம் எதுவும் இல்லை என சொல்கிறது.

கீழே விழுந்த தன் கணவனை.. மாதவிடாய் நாளில் கதாநாயகி காப்பாற்ற தூக்கியதால்.. பரிகாரம் செய்யும் கணவன். மறுநாள் காப்பி கேக்கும் போது.. கழிவுநீரை தந்து அதிர்ச்சி அடையவைக்கிறாள். கோபத்தோடு கிச்சனுக்குள் வரும் கணவன், மாமனார்.. முகத்தில் மீது கழிவுநீரை ஊற்றுகிறாள்.. நிச்சயம் அந்த கழிவுநீர் படம் பார்க்கும் அத்தனை ஆண்கள் முகத்திலும் படிந்திருக்கும்.

கோவத்தில் தன் தாய்வீடு நோக்கி வந்து கதாநாயகி.. வீட்டில் அமர்ந்து இருப்பாள் அவளது தம்பி வெளியே இருந்து உள்ளே வரும் போதே…

அம்மா தண்ணீ குடு.. என்பான்.
அம்மா தன் இளைய மகளை தண்ணீரை எடுத்து வரச்சொல்லுவாள்..
கதாநாயகிக்கு கோவம் வந்துவிடும்…
தங்கைய பார்த்து தண்ணீய நீ எடுத்துக் கொடுக்காதே..

டேய்.. நீ போய் தண்ணீ எடுத்து குடிடா.

ஒட்டு மொத்த படத்தின் தீர்வை இந்த கடைசி காட்சி சொல்லி விடும்.

மீண்டும் சொல்லுகிறேன்.

குக்கர் சோறு வேண்டாம்.. மிக்சியில் அரைக்கவேண்டாம்.. கடுங்காப்பி இப்படிதான் வேணும்…வாசிங்மிஷினில் துணி துவைத்தால் பிடிக்காது.. இப்படி சொந்த வீட்டில்ஆர்டர்கள் போட்டு.. சுகம் களித்து உடல்நலம் பேணும் சோத்து அமுக்கிகளாகிய நாம் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

மலையாள படம். கண்டிப்பாக அனைத்து மொழிகளிலும் வர வேண்டும். அரைகுறை மலையாளம்தான் நான். ஆனால் எளிதாக புரிகிறது. இப்படம் பார்க்க மொழி தேவை இல்லை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *