“பிள்ளை பெறுவதனாலேயே மொத்த ஜனத்தொகையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அநேக ஆபத்துகளுக்கும், வியாதிகளுக்கும் உள்ளாகி, அற்ப ஆயுளுடன் கஷ்டமும் பட வேண்டியதாகியுள்ளது. அவர்களது வாழ்வே பரிதவிக்கத்தக்கதாக முடிகின்றது.”
 – தந்தை பெரியார்
(குடியரசு இதழ் 14.12.1930)
அதிகம் பேசப்படாத நம் பெரும்பான்மை சமூகத்தின் சமையலறைகள் உணர்த்தும் வலியை , அதன் மீதான நுண் ஆதிக்கத்தை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் படம்.
Thank God எனத் தொடங்கும் வழக்கமான மலையாளப்படங்களுக்கு மத்தியில் Thank Science எனத் துவங்குவதிலேயே இப்படம் தனித்தன்மைக்குரியதாகிவிடுகின்றது.
புதுப்பெண்ணும் மாமியாரும் சேர்ந்து  அவ்வீட்டின் இரண்டு ஆண்மகன்களுக்கு சமைத்து, பின் அவர்கள் தின்றுபோட்ட மிச்ச கழிவுகளால் நிரம்பி வழியும் மேசையில் அவர்கள் சாப்பிடுவதும், அதிலுங்குறிப்பாக கணவனின் எச்சில்தட்டிலேயே தன் M.A. Post Graduate மாமியார் சாப்பிடுவதுடன் படம் துவங்குகிறது.
உதவிக்கும் கூட ஆண்கள் சமையலறைக்குள் எட்டிப் பார்ப்பதில்லை. மோகத்தில் சில உரசல்களுக்காக புழங்குமிடமாக இளையவன் சமையலறையை துணை கொள்கிறான்.
ஒரு நாள் முழுக்க சமைத்துபோட்டு , துணி துவைத்து, பாத்திரங்களைக் கழுவி , அறையை சுத்தம் செய்து  பின் படுக்கையில் கணவனையும் திருப்திபடுத்தி மறுநாள் மீண்டும் அதிகாலையில் எழுந்து மீண்டும் ஆயத்தமாகி….. இப்படியாக தொடர்ந்து கொண்டேயிருப்பதை சமுதாயம் பெருமைக்குரிய ஒன்றாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக் கொண்டேயிருப்பதை இப்படம் உரக்கக் கேள்வி கேட்கின்றது.
ஆண்களுக்கான வாழ்நாள் ஊழியம் செய்பவர்களா பெண்கள் ? இந்நேரத்தில் ஆத்மா நாமின் இந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகின்றது.
“இந்தச் செருப்பைப்போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப்போல்
எத்தனை பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனை பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு !”
ஆனால் படத்தின் நாயகியோ கவிதையைப் போல் நன்றி செய்வதில்லை. வேறொன்று செய்கிறாள். அதுவும் தரமான செய்கையாக இருக்கின்றது.
மாமியாரும் மகளுக்கு ஊழியம் செய்ய அயல்நாடு போய்விட, ஒத்த ஆளாக பழமைவாத மாமனாரையும், அவர் வழிமாறா மகனையும் சமையலறை மூலம் சமாளித்து சிரமப்படுவதை உயிரோட்டமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
The Great Indian Kitchen' teaser: 'The Great Indian Kitchen' teaser: Sweet,  savory, and bitter, this kitchen cooks it all! | Malayalam Movie News -  Times of India
குக்கர் சோறு வேண்டாம், அடுப்பு சமையல் வேண்டும். பழைய குழம்பு சூடு படுத்தக் கூடாது, மாமனாரின் உள்ளாடைகளையும் துவைத்துப் போடவேண்டும் வேலைக்கு சென்றால் பொறுப்பாக, குழந்தைகளை வளர்க்க இயலாது, குடும்பப் பெருமைக்கும் ஆகாது. ஹோட்டல் டேபிளில் மேனர்ஸ் கடைபிடிக்கும் கணவன்,
தான் அதிகம் புழங்காத சமையலறையில் ஒழுகும் கழிவுநீர்க் குழாயை சரிபடுத்தாமல் தள்ளிப்போடுவது என இவற்றையெல்லாம் ஒருகணம் எளிதில் சகித்துக் கொண்டாலும், தனது மாதவிடாய்க் காலத் தீண்டாமையின் கொடுமைதான் உச்சகட்டமானதாக இருக்கிறது.
முதன்முதலாக புகுந்த வீட்டில் மாதவிடாய் ஏற்பட்ட தகவலை கணவனிடம் பகிரும் பொழுது அன்றைய காலை உணவு ஹோட்டலில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் 3 நாட்கள் முடியும் வரை வேறொரு பெண் வீட்டு வேலைக்கு வருகின்றார். வேலை சுமையைப் போக்க அவர் பாடும் நாட்டார் பாடல்கள் அர்த்தம் நிறைந்தது.
“என்னுடைய மாதவிடாய் காலத்தின் பொழுதும் கூட இந்த வீட்டில் சமையல் செய்திருக்கிறேன்.வெளிக்காட்டிக் கொண்டதில்லை.மாசத்துல 4 நாள் வேலை இல்லைனா குடும்பத்த எப்படி சமாளிக்கிறது?” எனப் பகிர்ந்து கொள்ளும் காட்சி , பிற்போக்குத்தன அணுகுமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
மாமனாரின் தங்கையாக ஒரு பெண் ஊரிலிருந்து வந்து 7 நாட்கள் தங்கி , மாதவிடாய்க் காலத்தில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் குறித்து வகுப்பு எடுத்துச் செல்லும் அவலத்தில் “பிற்போக்குத்தனத்தை விடாமல் பற்றிக் கொண்டு, அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் பங்குவகிக்கிறார்களோ?” எனும் கேள்வி தாமாக எழுகின்றது.
“பாத்ரூம் போனால்
காவலாய்ச் சத்தகம்.
படுக்கைப் பக்கம்
தடுப்பாய் உலக்கை.
தலைக்குக் குளித்தாலும்
மூன்று நாட்கள்
தீண்டத்தகாதவளாகி
தனித்தட்டு, தனி டம்ளர்.
தனிநாடு கேக்காத
எனக்குத் தனியிடம்.
துண்டு நிலம்
தோல் தலையணை.
கிணறு வற்றிவிடும்
செடி பட்டுவிடும்
ஊறுகாய் கெட்டுவிடும்
கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது.
சாமி படைத்த என்னை மறைக்க,
சாமிக்கு ஏன் திரைச்சீலை?
பின் குழந்தைகளோடு 
இருக்கும் கடவுளர்கள் மட்டும்
எப்படித் தீட்டுகளற்று”. – என்கிற தேனம்மை லஷ்மணனின் வரிகளைத்தான் நாயகியும், நாமும் உட்கொண்டு சிந்திக்கின்றோம்.
சபரிமலைக்கு பெண்கள் பிரதிநிதித்துவப் போராட்டம் வலுப்பெறும் சூழலில் , ஆண்கள் இருவரும் மாலைபோட இன்னும் நெருக்கடிக்கு கதைநாயகி தள்ளப்படுகிறாள். அது இறுதிக் கொதிநிலையை எட்டுகிறது.
தற்போது படித்த பெண்ணுக்கு எழும் இயல்பான பிரித்தரிந்து , சுதந்திரமாக செயல்படும் தன்மை ஏன் M.A. படித்த மாமியாருக்கு எழவில்லை என்பதற்கு பின் அறிவியலும் அரசியலும் இருக்கிறது. வேலையைப் பகிர்தலும்,ஏவல் செய்து வேலை வாங்காத சில குடும்பங்களையும் நான் அறிவேன். அன்று வீட்டுக்கு விருந்தாளி வருகிறார் என்றால், உணவளிப்பது மட்டுமே வாடிக்கையானதாகவும் இருந்தது. ஆனால் இன்று கவுரவத்திற்கும் , பெருமைக்குமாக,பெண்களை சற்றும் மதிக்காத பல விருந்தோம்பல்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
நான் இந்தப் படத்தை எனது இணையரோடு அமர்ந்துதான் பார்த்தேன். சில காட்சிகளில் என்னுள்ளும் குற்றவுணர்ச்சி எழுந்தது. அதைக் களையவேண்டும் என்கிற எனது முயற்சி முடுக்கிவிடப்பட்டதற்கே இப்படக்குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
கருத்தியல் ரீதியாக எந்த அளவிற்கு வலுமையாக உள்ளதோ, அதே அளவில் காட்சியமைப்பிலும் வலுவாகவே உள்ளது. நிமிஷா வெளிப்படுத்தும் முகபாவனைகள் பலருக்கும் வலியை ஏற்படுத்தும்.சூரஜின் பாவனைகள் பல பெண்களுக்கும் கோபத்தை மூட்டும். ஒரே ஒரு சமையலறையை மட்டும் வைத்துக் கொண்டு , ஒட்டு மொத்த ஆணாதிக்க சமூகத்தின் அவலத்தை விளக்குவதில் இப்படம் தனித்துக் கவனம் பெறுகின்றது.
The Great Indian Kitchen review: The right food for thought
அவசியம் உங்கள் குடும்பத்தின் பெண்களோடு அமர்ந்து பார்க்க வேண்டிய படம்.மொழி பிரச்சனை இல்லை. OTTயில் Subtitle உள்ளது. காட்சிமொழியும் அனைவருக்குமானதே!
“உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல ;
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால
வாழ்வின் மகன் , மகள்கள்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்.
ஆனால்,அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை.
அவர்களுக்கு நீங்கள் அப்போது தரலாம்…
உங்களின் சிந்தனைகளை அல்ல !” எனும் கலீல் ஜிப்ரானின் இறுதி வரியில் வேண்டுமானால் இப்படியாக மாற்றிக் கொள்ளலாம்.
“பெண்குழந்தைகளுக்கு நீங்கள் அன்பை தரலாம்.ஆனால் காலங்காலமாக ஏன் எதுக்கென்றே கேள்விகேட்காது வறட்டுத்தனமாக கடைபிடித்துக் கொண்டிருக்கும் உங்கள் சீழ்பிடித்த சிந்தனைகளை அல்ல !” என்று மாற்றிப் பொருள் படும் அளவிற்கு , படம் பார்ப்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“தற்செயலாக நாம் ஆண்களாகவும் பெண்களாகவும் ஆகிவிட்டோம்.இயற்கையின் நிகழ்வுப்போக்கில் பெண்களுக்குக் கருப்பை என்ற உறுப்பு தற்செயலாக வந்து சேர்ந்துவிட்டது.எனவே, பெண் எனும் பிறப்பே பிள்ளை கொடுக்கத்தான் என்பது அல்ல.அப்படி நாம் ஆணி அடிக்க முடியாது.அதற்கு நமக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை.அது அந்தப் பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.அது அவளது மனித உரிமை.அது கணவனது உரிமை அல்ல.மாமியார் மாமனாரின் விருப்பமோ அல்ல.சர்வதேசச் சட்டங்களும் அவ்வாறுதான் உள்ளன” – பெண்மை என்றொரு கற்பிதம் நூலில் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிடுவார். எல்லா மத சட்டங்களுக்கு முன்பும் ,் சர்வதேச சட்டங்கள் எடுபடாமல் போய்விட்டன.
நாமும் தொடர்ச்சியாக பெண்கள் மீதான இந்த நுண் தாக்குதலை உணரா வண்ணமுமாகவே வளர்ந்திருப்போம்.இந்தப் படம் முன்வைக்கும் மாற்று உரையாடலை மேற்கொண்டு தொடர விரும்புவர்கள்  விகடன் வெளியீடான “ஆண்பால் பெண்பால் அன்பால்” நூலை வாசிக்கலாம்.முடிந்த அளவில் , தமக்கான எல்லையில் நின்றாவது சகபாலினமான பெண்ணின் மீதான வன்முறையைக் குறைக்க நம்மாலான முயற்சிகளை தனியாகவும், குடும்பமாகவும் மேற்கொள்வோம் !



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *