ஆங்கிலத்திற்கு வார்த்தைகள் அளித்த கிரேக்க நாடோடிக் கதை | Nizhalum Greek Folk Tale - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் pdf | தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

ஆங்கிலத்திற்கு வார்த்தைகள் அளித்த கிரேக்க நாடோடிக் கதை

ஆங்கிலத்திற்கு வார்த்தைகள் அளித்த கிரேக்க நாடோடிக் கதை

ஜீயஸ், கிரேக்க கடவுள்களின் அரசர். அவருடைய மனைவி ஹேரா. அவளுக்குப் பணிவிடை செய்வதற்கு தேவதைகள் பலர் இருந்தனர். அந்தப் பணிப்பெண்களில் ஒருவர் பொயோட்டியா நகரைச் சேர்ந்த எக்கோ. இடைவிடாமல் பேசும் தன்மையுடையவள் எக்கோ. அவளுக்கு கடவுள் மற்றும் தேவதைகளின் கிசிகிசு, அவர்களிடையே உள்ள ரகசியக் காதல், மோதல், ரகசியங்கள் எல்லாம் தெரியும். இந்தக் கிசுகிசுக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வாள் எக்கோ.

ஜீயஸ் ஒரு பெண் பித்தன் என்று சொல்ல வேண்டும். கடவுளுக்கெல்லாம் அரசனானலும், அழகான பெண்களைக் கண்டால் அவர்கள் மனிதர்கள், தேவதைகள் என்று யாராக இருந்தாலும் அவர்கள் பின்னால் செல்வார். இவையெல்லாம் எக்கோவிற்குத் தெரியும். ஜீயஸ் ரகசியமாக மற்றப் பெண்களிடம் தொடர்பு கொள்ளும்போது, அது ஹேராவிற்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வாள் எக்கோ. நாளடைவில் இந்த உண்மை ஹேராவிற்குத் தெரிந்து விட்டது.

கடுங்கோபம் கொண்ட ஹேரா, எக்கோவைத் தன்னுடன் இருக்கக் கூடாது என்று விரட்டிவிட்டாள். அதுமட்டுமல்லாமல், “நீ இதுவரை மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதை சொல்லிக் கொண்டிருந்தாய். இனியும் அதையே செய்வாய். ஆனால் அவர்கள் சொன்னதில் கடைசி வார்த்தையை மட்டும் திருப்பிச் சொல்வாய். இங்கிருந்து போ” என்று சாபமிட்டாள். எக்கோ ஹேராவிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினாள். ஆனால், ஹேரா கொடுத்த சாபத்தால், “போ” என்ற வார்த்தையைத் தான் திருப்பிச் சொல்ல முடிந்தது. எக்கோவின் நிலை கண்டு மற்ற தேவதைகள் பரிதாபப்பட்டனர். 

கடவுளால் விரட்டியடிக்கப்பட்ட எக்கோ, மலை உச்சியிலிருந்த குகையில் தங்கினாள். அங்கு மாடு மேய்க்க வருபவர்களிடமும், வேட்டையாட வருபவர்களிடமும் பேச முயன்றாள். ஆனால், அவர்கள் சொன்னதில் கடைசி வார்த்தையைச் சொல்வதைத் தவிர, அவளால் சுயமாகப் பேச முடியவில்லை. எப்போதும் மற்ற தேவதைகள் சூழ இருந்த எக்கோவிற்குத் தனிமை பிடிக்கவில்லை. வேட்டைக்கு வருபவர்கள் பின்னால், அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்து செல்வாள்.

ஒரு முறை வேட்டைக்கு வந்த குழுவிலிருந்து ஒரு அழகான வாலிபன், பிரிந்து வந்து வழி தேடியலைந்து கொண்டிருந்தான். அந்த வாலிபன் பெயர் நார்சிசஸ். நதிக் கடவுள் கெபிசோஸ் மற்றும் நீல நிறக் கூந்தல் உடைய நதி தேவதை லிரியோப் ஆகியவர்களின் மகன். நார்சிசஸ் தன்னைத் தவிர மற்றவர்களை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அவன் காதலையும், நட்பையும் நாடிப் பல தேவதைகளும், வாலிபர்களும் அவன் பின்னால் அலைந்தனர். அவன் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

நார்சிசஸ் மீது ஒரு தலைக் காதல் கொண்ட எக்கோ, அவனை அறியாமல் அவனைப் பின் தொடர்ந்தாள். நேரில் பார்த்துத் தன்னுடைய காதலை எடுத்துச் சொல்ல ஆசை. ஆனால், நினைத்ததைப் பேச முடியாத நிலை. வேட்டையாடும் குழுவிலிருந்து வழி தவறி வந்து விட்ட நார்சிசஸ், நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்தான். தன்னை யாரோ பின் தொடர்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது. திரும்பிப் பார்த்து, “யாரங்கே” என்று கேட்டான். எக்கோவும் “யாரங்கே” என்று திருப்பிச் சொன்னாள். 

“யார் நீ என்ற கேள்விக்கு, “யார் நீ” என்ற பதில் வந்தது.

“நான் நார்சிசஸ்” என்று பதிலளித்தான். “நார்சிசஸ்” என்று சொன்னாள் எக்கோ.

வேட்டையாட மற்றுமொரு நபர் வந்திருக்கிறார் என்று மகிழ்ந்த நார்சிசஸ், “என்னருகில் வா, என்னுடன் சேர்ந்து கொள்” என்றான். “சேர்ந்து கொள்” என்று திருப்பிச் சொன்ன எக்கோ, நார்சிசஸ் அழைப்பில் மயங்கி, அவன் எதிரே வந்தாள். “தேவதையா? என்னை எதற்காகப் பின் தொடர்கிறாய். நான் யாரையும் விரும்பவில்லை. உன்னைக் காதலிக்க முடியாது. திரும்பிப் போ” என்றான் நார்சிசஸ்.

அவமானத்தால் தலை குனிந்த எக்கோ “போ” என்ற வார்த்தையைச் சொல்லி, யாருடைய கண்ணிலும் படாமல் மறைந்து வாழத் தன்னுடைய குகைக்குச் சென்றாள். நார்சிசஸ் ஒதுக்கித் தள்ளியது, காதலில் தோல்வி ஆகியவற்றால் மனமுடைந்த எக்கோ, கதறி அழுதாள். உண்ணாமல், உறங்காமல் தனிமையிலிருந்த எக்கோ, சிறிது சிறிதாக கரைந்து போனாள். நாளடைவில் குகையில் அவளுடைய எலும்பும், குரலும் மட்டும் இருந்தது. குகை, பாறை ஆகியவற்றிற்குச் செல்பவர்கள், தாங்கள் பேசுவதில் கடைசி வார்த்தையை யாரோ திருப்பிச் சொல்வதாக உணர்ந்தார்கள்.

நார்சிசஸ் தன் மீது காதல் கொண்டவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி வந்தான். அவ்வாறு அவன் ஒதுக்கித் தள்ளியதால் காதல் தோல்வியில் வேதனையடைந்த ஒரு தேவதை, பெண் தெய்வம் நேமிசிஸிடம், தன்னைப் போலவே நார்சிசஸ் காதல் தோல்வியடைய வேண்டும் என்றும் அவனுடைய கர்வத்திற்குத் தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள்.

ஒரு முறை வேட்டையாடிக் களைத்துப் போன நார்சிசஸ், நதியின் அருகே வந்தான். சுற்றிலும் உயர்ந்த மரங்கள் சூழ்ந்திருக்க, அந்த நதியின் தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. குடிப்பதற்காகத் தண்ணீரில் குனிந்த நார்சிசஸ், நீரில் ஒரு அழகிய உருவத்தைப் பார்த்தான். வட்ட வடிவ முகம், அழகான கண்கள், சுருளான தலைமுடி, நீண்ட கழுத்து ஆகியவற்றைப் பார்த்த நார்சிசஸ், தான் நதியில் பார்ப்பது தேவதை என்று நினைத்துக் கொண்டான். ஆசையுடன், அந்த உருவத்தைத் தொடுவதற்கு தண்ணீரில் கையை விட்டவுடன், உருவம் மறைந்து விட்டது. நேமிசஸ் சாபத்தினால், சிந்திக்கும் சக்தியை இழந்து விட்ட நார்சிசஸ், தண்ணீரில் காண்பது தன்னுடைய பிரதிமை என்பதை உணரவில்லை.

அவனால் தண்ணீரில் பிரதிபலிக்கும் அவனுடைய உருவத்தைத் தொட முடியவில்லை. அந்த உருவம் தன்னுடைய காதலை நிராகரிப்பதாகக் கருதினான். “எத்தனையோ தேவதைகள் என்னுடைய காதலுக்குத் தவமிருக்க, நீ ஏன் என்னுடைய காதலை ஏற்க மறுக்கிறாய்” என்று ஏங்கி அழுதான் நார்சிசஸ். நதிக்கரையில் அமர்ந்தபடியே, காதல் கைகூடாத வருத்தத்தில், நார்சிசஸ் கரைந்து போனான். அவன் மீது பரிதாபம் கொண்ட தேவதைகள், அழகிய மலர் ஒன்றிற்கு நார்சிசஸ் என்று பேர் சூட்டினர்.

தன் மீதே காதல் கொள்வதை ஆங்கிலத்தில் நார்சிஸம் என்பார்கள். அப்படிப்பட்ட நபரை நார்சிஸ்ட் என்றழைப்பார்கள். எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்று சொல்வார்கள். கிரேக்க காதல் கதை ஆங்கில மொழிக்கு இரண்டு வார்த்தைகளை அளித்தது.

📚 மொழிபெயர்த்து எழுதியவர்:

கே.என்.சுவாமிநாதன்,
சென்னை

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *