‘நூல் அஞ்சல்’ சேவையை இந்திய அஞ்சல் துறை ஒழித்துக்கட்டிவிட்டது
– மணிஸ் மோடி
2024 டிசம்பர் 18 அன்று இந்திய அஞ்சல் துறை நூலஞ்சல் சேவையை (Book Post Service) அடாவடியாக ஒழித்துக்கட்டியிருக்கிறது. இது புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகத்தார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் அஞ்சல் அமைப்பு முறை உருவான காலத்திலிருந்தே நூலஞ்சல் சேவை இருந்து வந்துள்ளது. சுமார் இரு நூறு ஆண்டு காலமாக, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்திலும் அடுத்து சுதந்திரம் பெற்ற பின்னரும் இதுவரை இந்த சேவை இருந்து வந்தது. இந்திய அஞ்சல் துறை, புத்தகங்கள் மற்றும் மாத இதழ்கள், வார இதழ்களை அஞ்சல் மூலம் அனுப்புவதற்குக் குறைந்த அளவில் அஞ்சல் கட்டணங்கள் பெற்று வந்தன. மற்ற பொருள்களை அனுப்புவதற்கு உள்ள செலவினத்தில் அநேகமாகக் கால் பங்கு அளவே இதற்கு அது பெற்று வந்தது. உள்ளூர் வரிகள் (octroi duty) விதிக்கப்படும் காலங்களில் கூட இந்த சேவைக்கு கூடுதலாக கட்டணங்கள் விதிக்கப்படுவதில்லை.
நாடு தழுவிய அளவில் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த சேவை வடிவமைக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட நூலஞ்சல் சேவை (Registered Book Post Service)யில் ஐந்து கிலோ எடையுள்ள புத்தகங்களை அனுப்ப வெறும் 80 ரூபாய் கட்டணம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த அளவிற்குக் குறைந்த கட்டணத்தில் எந்தவொரு தூதஞ்சல் நிறுவனங்களும் தங்கள் தூதஞ்சல் சேவையை வழங்கிடாது. மேலும், இந்தியாவில் அஞ்சலகங்களின் வலைப்பின்னல் என்பது சுமார் 19,101 அஞ்சலட்டவணை எண்களுடன் (pin codes), 154725 அஞ்சலகங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அநேகமாக எந்தவொரு பார்சலும் ஒரு வார காலத்திற்கள் பெறுவோர் முகவரிக்குச் சென்றடைந்துவிடும். உள்ளூருக்குள் அனுப்பப்படும் அஞ்சல்கள் அடுத்த நாள் சென்றடைந்துவிடும். புத்தகங்கள் மக்கள் படித்துத் தங்கள் கலாச்சாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அரசாங்கம் இந்த சலுகையை அளித்து வந்தது. புத்தகங்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் முதலானவை இந்த சலுகைகளைப் பெற்று வந்தன.
எனினும் எவரிடும் எவ்விதமான ஆலோசனையையும் பெறாமல் அரசாங்கம் இந்த சேவையை அடாவடித்தனமாக ஒழித்துக்கட்டிவிட்டது. சென்றவாரம், நள்ளிரவிலிருந்து பதிவு நூலஞ்சல் வகையறா (RBP category) அஞ்சல்துறை மென்பொருளிலிருந்து அமைதியாக அகற்றப்பட்டுவிட்டது. அஞ்சல் ஊழியர்களுக்கே இது அதிர்ச்சியை அளித்தது. இந்த சேவையை எதிர்பார்த்து அஞ்சல் நிலையம் செல்வோருக்கு ஏற்படும் ஏமாற்றத்தை எவரொருவரும் கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது.
இந்த சேவையை ஒழித்துக்கட்டியிருப்பது, பதிப்புத்துறையைக் கடுமையாகப் பாதித்திடும் என்பதில் ஐயமில்லை. நூறு ரூபாய் விலையுள்ள புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக வாசகர் ஒருவர் இனி 78 ரூபாய் மேலும் கூடுதலாக செலவழிக்க வேண்டும். எத்தனை வாசகர்கள் இவ்வாறு செலவு செய்து புத்தகங்களை வாங்குவார்கள்? அஞ்சல் மூலம் புத்தகங்களைப் பெறும் வாசகர்கள் இனி அரிதாகிவிடுவார்கள். ‘ஸ்மார்ட்போன்’ வந்தபின் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைந்துள்ளது, இந்த நிலைமை இனி மேலும் மோசமாகும்.
பதிவு பார்சலுக்கும் பதிவு நூலஞ்சலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சற்றே பார்க்கவும். பதிவு நூலஞ்சல் மூலமாக ஒரு கிலோ எடையுள்ள புத்தகத்தை 32 ரூபாய்க்கு அனுப்பிடலாம். ஆனால் அதையே பதிவு பார்சல் மூலம் அனுப்பவேண்டும் என்றால் 78 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே இரண்டு கிலோ எடை என்றால் முறையே 45 ரூபாய் மற்றும் 116 ரூபாயாகும். ஐந்து கிலோ எடை என்றால் முறையே 80 ரூபாய் மற்றும் 229 ரூபாயாகும்.
வெளிநாட்டுப் பதிப்பகங்கள் இலவசமாகப் புத்தகங்கள் அனுப்பினாலும் இறக்குமதி வரி: இதனுடன் இப்போது மேலும் ஒரு அடி விழுந்திருக்கிறது. வெளிநாட்டுப் பதிப்பகங்கள் மாதிரி புத்தகங்களை இலவசமாக அனுப்பினாலும் அதற்கும் 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்மறை விளைவையே ஏற்படுத்திடும்.
(கட்டுரையாளர், 1912இலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் இந்திய கிராந்த் கார்யாலய் என்னும் பதிப்பகத்தின் எழுத்தர், வெளியிடுபவர் மற்றும் உரிமையாளர்)
தமிழில் : ச.வீரமணி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.