மார்ச் மாத இறுதியில் இருந்து, கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையாக, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று கணிப்பது இன்னும் கடினமான காரியமாகவே இருக்கிறது. பாரம்பரியமான நேருக்கு நேர் வகுப்பறை மூலமாக கற்றல் முறையிலிருந்து, டிஜிட்டல் தளங்களுக்கு மாறுவதைத் தவிர வேறு சில தேர்வுகளே இப்போது நம்மிடம் இருக்கின்றன.

மெய்நிகர் வகுப்புகள் அல்லது திறந்தவெளி இணைய பாட வகுப்புகள் போன்ற  இணையதளங்கள் மூலம் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும், நேரடி வகுப்பறைகள் மற்றும் சரியான  டிஜிட்டல் உள்கட்டமைப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்களும், மாணவர்களும் இதற்கு முன்னெப்போதுமில்லாத சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.

டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள்

Top 12 Examples, How Technology Has Changed Our Lives - KLIENT ...

தொலைநிலைக் கற்றலின் முக்கிய சவாலாக இருப்பது, மின்சாரம், இணைய இணைப்புகளிலிருந்து துவங்கி கணினி அல்லது ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களைப் பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வே ஆகும். டிஜிட்டல் கல்விக்கு மின்சாரம் மிகமுக்கியமானது, இது அனைத்து சாதனங்களை இயக்குவதற்கும், இணையத்துடன் இணைந்து கொள்வதற்கும் தேவைப்படுகிறது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் சௌபாக்யா திட்டம், இந்தியாவில் கிட்டத்தட்ட 99.9% வீடுகளுக்கு மின் இணைப்பு இருப்பதாகக் காட்டுகிறது என்றாலும், வழங்கப்படும் மின்சாரத்தின் தரம் மற்றும் ஒவ்வொரு நாளும் மின்சாரம் கிடைக்கின்ற கால அளவைப் பார்த்தால், அந்த தகவலின் உண்மை நிலைமை வெட்டவெளிச்சத்திற்கு வந்து விடும். .

2017-’18 ஆம் ஆண்டு அந்தியோதயா என்ற திட்டத்தின் மூலம்,  ஊரக  வளர்ச்சி அமைச்சகத்தால் கிராமங்கள் குறித்து  நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள 16%  குடும்பங்களுக்கு தினமும் ஒன்று  முதல் எட்டு மணிநேரமும் 33%  குடும்பங்களுக்கு 9-12  மணிநேரமும், 12 மணி நேரத்திற்கும் மேலாக 47% குடும்பங்களுக்கு மட்டுமே  மின்சாரம் கிடைப்பதாக கண்டறியப்பட்டது.

InOpen partners with Tata Class Edge to impart computer education ...

இணைய வழி வகுப்புகளைப் பொறுத்தவரை கணினிகள் தவிர்க்க இயலாதவையாக இருந்தாலும், அந்த நோக்கத்திற்கு  ஸ்மார்ட்போன்களும்கூட உதவக்கூடும். ஆயினும் ஸ்மார்ட்போன்கள் செயலிகளுக்கு ஏற்றவையாக இருக்கலாமே ஒழிய, மிகப் பெரிய வேலைகள் அல்லது ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அவை உகந்தவை அல்ல. 24% இந்தியர்களிடம் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், டெஸ்க்டாப், மடிக்கணினிகள், நோட்புக், நெட்புக், பாம்டாப் அல்லது டேப்லெட்டுகள் என்று அனைத்து வகையிலான கணினிகளை உள்ளடக்கி, கணினிகள் 11% வீடுகளில் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஊடுருவல் தாறுமாறாக, சிலரிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டதாக  இருக்கிறது. கல்வி குறித்த 2017-’18  தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையில், இந்திய குடும்பங்களில் 24% பேரிடம் மட்டுமே இணைய வசதி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 66 சதவிகிதத்தினர் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், சற்றேறக்குறைய 15%  கிராமப்புறக் குடும்பங்களுக்கு மட்டுமே இணைய சேவைகள் கிடைத்திருக்கின்றன.  நகர்ப்புறத்தில் 42%  வீடுகளுக்கு இணைய சேவைகள் கிடைத்திருக்கின்றன.

உண்மையாகப் பார்த்தால், ஐந்து முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இருக்கின்ற வீடுகளைப் பொறுத்தவரை, 8% வீடுகள் மட்டுமே கணினி மற்றும் இணைய இணைப்பு ஆகிய இரண்டையும் கொண்டிருக்கின்றன. தேசிய மாதிரி கணக்கெடுப்பு வரையறைல்,  ஒரு சாதனம் அல்லது இணைய வசதி கொண்ட வீடு இருக்கிறது என்றால், அந்த இணைப்பு மற்றும் சாதனங்கள் அந்த வீட்டுக்குச் சொந்தமானவை என்பதைக் குறிக்கவில்லை என்பதையும்  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வர்க்கம், பாலினம், பகுதி மற்றும் வசிக்கும் இடம் என்று டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு அனைத்து இடங்களிலும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மிகவும் ஏழ்மையான 20%   வீடுகளில், 2.7%  பேருக்கு கணினி  மற்றும்  8.9%  பேருக்கு மட்டுமே இணைய வசதிகள் உள்ளன.  அவர்களில் வசதியாக இருக்கின்ற முதல் 20% குடும்பங்களைப் பொறுத்தவரை,  அந்த விகிதாச்சாரம் 27.6% மற்றும் 50.5% ஆக இருக்கின்றது. இத்தகைய ஏற்றத்தாழ்வு மாநிலங்களிடையேயும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, கணினி வைத்திருக்கும் குடும்பங்களின் விகிதம் பீகாரில் 4.6%,  கேரளாவில் 23.5%,  டெல்லியில் 35%  என்று வேறுபடுகிறது.

இணைய வசதிகளைப் பெறுவதிலும் இந்த வேறுபாடு அதிகமாகவே இருக்கிறது.  டெல்லி, கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் 40%க்கும் மேற்பட்ட குடும்பங்களில் இணைய வசதி உள்ளது. ஒடிசா, ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 20% க்கும் குறைவாகவே இருக்கிறது.

பாலின ஏற்றத்தாழ்வு

இணைய பயன்பாட்டில் பாலின ஏற்றத்தாழ்வு முழுமையாக இருக்கிறது. இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டில், இணைய வசதிகளில் 67%  ஆண்களுக்கென்று கிடைத்த வேளையில், 33% வசதியே பெண்களுக்கு கிடைத்தது. கிராமப்புற இந்தியாவில் இந்த ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருந்தது. அங்கே 72%  இணைய வசதி ஆண்களுக்கும், 28% இணைய வசதி பெண்களுக்கும் கிடைக்கிறது.

தேவையான ஆதரவு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் அரசாங்கங்கள் இணையவழிக் கல்வியைத் தொடருமேயானால், மெய்நிகர் உலகில் நிலவுகின்ற இந்த ஏற்றத்தாழ்வு, கல்வி குறித்த  ஏற்றத்தாழ்வுகளை  கற்பவர்களிடையே அதிகரிப்பதிலேயே சென்று முடியும்.

இந்த வசதிகளைத் தவிர, டிஜிட்டல் கல்விக்கு வழக்கமான, கணிக்கக்கூடிய இணைய இணைப்பும் தேவைப்படுகிறது. இந்த ஊரடங்கல் காலத்தில் வீட்டிலிருந்து இணையத்தின் மூலமான வேலைகளைச் செய்வதற்கு உதவுகின்ற வகையில், தொலைதொடர்பு சேவை மற்றும் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களான வோடபோன், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவை கூடுதல் தரவு மற்றும் இலவச இணைய வசதி போன்ற வசதிகளை தங்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கி வருகின்றன.

Shiker Shiksha Sewa Samiti

நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் இணையவழி வகுப்புகள் சிறந்த முரையில் நடைபெறுவதை இத்தகைய சலுகைகள் உறுதி செய்யுமா? இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து வெளியாகியுள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் அறிக்கை, அனைத்து சந்தாதாரர்களுக்கும் உறுதியான இணைப்பை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதுவரையிலும் நிறைவேற்றித் தரவில்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

வீடுகளில் பிராட்பேண்ட் சேவைகளைப் பயன்படுத்துபவர்களில், 3%க்கும் அதிகமானோர் கேபிள்கள் வெட்டப்படுவதை எதிர்கொண்டு வருகின்றனர். 53% பேர் மோசமான இணைப்பையும், 32% பேர் சிக்னல் கிடைக்காமல் சிக்கல்களை எதிர்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அந்த கணக்கெடுப்பு காட்டுகிறது. மொபைல் தரவைப் பொறுத்தவரை, 40.2% பேர் மோசமான இணைப்பையும் 56.6% முகம் சிக்னல் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர்.

சில நேரங்களில், தொழில்நுட்பக் குறைபாடுகளால் மட்டுமே இணைப்புகள் இல்லாமல் போவதில்லை. எடுத்துக்காட்டாக, ஜம்மு-காஷ்மீரில், 4Gக்கு பதிலாக 2G இணைய வசதியைத் தரும் வகையில், இணைய வசதியை அரசாங்க உத்தரவு தடைசெய்திருப்பதால், அங்கே உள்ள மாணவர்களால் இணையவழி வகுப்புகளைப் பெற முடியவில்லை. அடிப்படை உள்கட்டமைப்பு  வசதிகள் இருந்தாலும்கூட,  இவ்வாறான கூடுதல் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதும் தெளிவாகத்  தெரிகிறது.

வெறுமனே இணையம் மூலம் வகுப்பறைகளை நடத்துவது மட்டுமே, பயனுள்ள தொலைநிலைக் கற்றல் என்றாகி விடாது. சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒருவருக்கொருவர் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பது கற்றலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு டிஜிட்டல் மேடையில், மாணவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள், தொடர்புகொள்கிறார்கள் என்பது பெரும்பாலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எந்த அளவிற்கு டிஜிட்டல் கற்றல் முறையை ஏற்றுக்கொள்வதற்கான  தயார்நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவே இருக்கின்றது. தொலைதூரக் கல்வியைப் பொறுத்தவரை, கற்றுக் கொள்வதின் பொறுப்பு  மாணவர்கள் மீதே அதிகம் இருக்கின்றது. அதற்கு ஒழுக்கம் தேவைப்படும்.

ஆசிரியர்களுக்கும் சில சவால்கள் உள்ளன. அவர்களில் பலர் டிஜிட்டல் முறைக்கு தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, ஏராளமான  ஆசிரியர்கள் இணையவழியில் கற்பிக்கும் சூழலை ஒருபோதும் பயன்படுத்தியதே இல்லை. இணையவழியில் பாடத்திட்டத்தைக் கற்பிப்பதற்கு, அந்த பாடத் திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் அதற்குத் தேவையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கங்கள் போன்ற கற்பித்தல் பொருட்களைத் தயாரிப்பது போன்ற தயாரிப்பு வேலைகள் தேவைப்படும். பல ஆசிரியர்களுக்கு இது புதிய வகையான சவால்களை ஏற்படுத்தித் தந்துள்ளது.

Reports on Empower 40 Orphans with Computer Skills Training ...

படிப்பதற்கு உகந்த சூழல் கற்றலுக்குத் தேவைப்படுகிறது. படிப்பதற்கு அமைதியான ஓரிடம் எல்லா மாணவர்களுக்கும் அவர்களுடைய வீட்டில் இருப்பதில்லை. இந்தியாவில் 37% வீடுகளில் ஒரேயொரு அறை மட்டுமே இருக்கின்ற நிலையில், இடையூறுகள் எதுவுமற்ற சூழலில் இணையவழி வகுப்பறைகளில் கலந்துகொள்வது, பலருக்கும் மிக்க ஆடம்பரமான விஷயமாகவே  இருக்கும்.

இணைய வசதிகளைப் பெறுவதற்கான செலவை மாணவர்களே ஏற்க வேண்டியிருப்பதால், வழக்கமான அடிப்படையில் இணைய வகுப்புகளைப் பெறுவது, கூடுதல் செலவுகளின் தாக்கத்தையே  கொண்டிருக்கும். இணைய வசதிகளுக்கான இந்த செலவை அரசாங்கம் மாணவர்களுக்கு திருப்பிச் செலுத்தப் போகிறதா அல்லது இலவச அல்லது மானிய தரவு பொதிகளை மாணவர்களுக்கு வழங்கப் போகிறதா என்பது குறித்து அரசாங்கங்களிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. தற்போதைய சூழ்நிலையில், குறிப்பாக ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் வேலையிழப்பின் விளைவாக, பல மாணவர்களின் குடும்பங்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றன. அவர்களால் நிச்சயமாக இந்த வசதிகளை செலவு செய்து வாங்க முடியாது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு

Digital Infrastructure – Key to Economic Development – Information …

மத்திய, மாநில அரசாங்கங்கள் முன்முயற்சிகள் எடுத்து வருகின்ற போதிலும், தொலைநிலைக் கற்றலுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் போதுமான செலவு இதுவரையிலும் செய்யப்படவில்லை. 2020-’21 ஆம் ஆண்டில், டிஜிட்டல் மின் கற்றலுக்கான மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பட்ஜெட் 2019-’20ஆம் ஆண்டில் இருந்த ரூ.604 கோடியிலிருந்து 469 கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

டிஜிட்டல் உலகில் கூட கிராமப்புற மற்றும் நகர்ப்புற, ஆண் மற்றும் பெண், பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையே எவ்வாறு வேரூன்றிய கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பதை கோவிட்-19 தொற்றுநோய் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள் மூலமாக இணையவழிக் கல்வியை விரிவாக்குவது, டிஜிட்டல் உலகில் ஏதுமற்றிருப்பவர்களை கல்வி முறையின் விளிம்பிற்கே தள்ளி விடும். முடிவாக கல்வியின் விளைவுகளில் ஏற்றத்தாழ்வு  நிச்சயம் அதிகரிக்கும்.

https://scroll.in/article/960939/indian-education-cant-go-online-only-8-of-homes-with-school-children-have-computer-with-net-link

புரோட்டிவா  குண்டு, பட்ஜெட் மற்றும் ஆளுமை  பொறுப்புக்கூறலுக்கான மையம்

ஸ்க்ரோல் இணைய இதழ், 2020 மே 05  

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

One thought on “அனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)”
  1. இணையக்கல்வி இந்திய நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதையும், அதனைக் கட்டாயாமாக்கும் பட்சத்தில் மறுபடியும் பலபத்தாண்டுகளுக்குப் பின்னால் இருந்த கல்விநிலைக்கு நம்நாடு சென்றுவிடும் அபாயத்தையும் இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் புரிய முடிகிறது. மேலும், பாதிப்பின் பல்வேறு பரிமாணங்களாண ஆண்-பெண் வேறுபாடு, ஏழை-பணக்காரன் வேறுபாடு, கிராம-நகர்ப்புற வேறுபாடு போன்ற பல்வேறு வடிவங்களில் ஏற்படஇருக்கும் அபாயங்களையும் புள்ளி விவரத்துடன் வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை. எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் இயற்கை வளம் மற்றும் மனிதவளம் இரண்டுமே முக்கியம். ஆனால், சிறந்த கல்வியின் மூலமான மனிதவளம் மட்டுமே இயற்கைவளத் தட்டுப்பாட்டையும் வெல்லக்கூடிய ஆற்றலுடையதாகும். உதாரணம்-ஜப்பான். இயற்கைவளம் மிக்க ஒரு நாடு மனிதவளைக் குறைபாடுடையதாக இருப்பின் அவ்வியற்கைவளங்களால் பெறக்கூடிய பயன் மிக்ச்சொற்பமானதாகவே இருக்கும். உதாரணம்-சில ஆப்பிரிக்க நாடுகள். எனவே, இணையவழிக் கல்வியில் இருக்கக்கூடிய நிறைய இடர்பாடுகளையும், அதனால் நம்நாட்டிற்கு இழப்புதான் என்பதையும் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் இணையவழிக்கல்விமுறையை நடைமுறைப்படுத்தக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *