கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி  வெளியான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள 1000 திரையரங்குகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  1990-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நடந்த காஷ்மீர் வன்முறையில் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வெளியேறிய வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் விவேக் அக்னி ஹோத்திரி.

இந்தக் கட்டுரையை எழுதும் வரை இத்திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வருமானத்தை

ஈட்டியுள்ளது. நம்முடைய பிரதமர் மோடி இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டு, அத்திரைப்பட குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும் மார்ச் 15-ஆம் தேதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் வெகுவாக திரைப்படத்தைப் பாராட்டியதுடன் உறுப்பினர்களை இத்திரைப்படத்தைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.

பாஜக ஆட்சி செய்கிற எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இத்திரைப்படத்துக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தின் முதல்வர் இத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் இத்திரைப்படத்தைப் பார்க்கக் காவல் துறையினருக்கு ஒரு நாள் சிறப்பு விடுப்பு வழங்குவதாக அறிவித்தது. மேலும், மேற்கு வங்கம் ராஜஸ்தான் போன்ற மாநில அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியான பாஜக இத்திரைப்படத்திற்கு வரிச்சலுகை கொடுக்குமாறு வலியுறுத்தியது. இது தவிர, தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும் என்று பேசியுள்ளார்.  ஒன்றிய, மாநில பாஜக அரசாங்கமும் அதனுடைய தலைவர்கள், சங் பரிவார அமைப்புகள்  இத்திரைப்படத்தைப் பெரிதும் ஆதரித்தும் விளம்பரப்படுத்தியதுமே இப்படியான ஒரு திரைப்படத்தைப் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு என்னைத் தள்ளியது.

திரைப்படத்தின் கதைச் சுருக்கம்
காஷ்மீரைச் சேர்ந்த கிருஷ்ணா பண்டிட் ஏன்யு (ANU)  பல்கலைக்கழகத்தில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்) படித்துக் கொண்டிருக்கிறார்.  அங்கு பணிபுரிகிற பேராசிரியர் ராதிகா மேனனின் வழிகாட்டுதலின் படி மாணவர் தலைவர் தேர்தலில்   போட்டியிடுகிறார் கிருஷ்ணா பண்டிட். அந்த மாணவர் தேர்தலில் காஷ்மீர் முக்கியமான பேசுபொருள் என்று கூறப்படுகிறது. இன்றைய ஆட்சியாளர்களின் காஷ்மீர் குறித்தான கதையாடல்களை முறியடிப்பதற்கு காஷ்மிரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணா சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவுசெய்து அவரை மூளைச்சலவை செய்து இத்தேர்தலில் போட்டியிட வைக்கிறார் பேராசிரியர் ராதிகா மேனன். இதற்கிடையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னாள் கிருஷ்ணாவின் தாத்தா இறந்து விடுகிறார். தாத்தாவின் கடைசி ஆசையான அவருடைய அஸ்தியை அவருக்குச்சொந்தமான மண்ணில் கரைப்பதற்காக காஷ்மீருக்குக் கொண்டு  செல்கிறார் கிருஷ்ணா.

தேர்தல் நெருங்குவதால் முதலில் ஆட்சேபிக்கிற ராதிகா மேனன் பிறகு கிருஷ்ணா இரண்டே நாட்களில் திரும்பிவிடுவேன் என்று உறுதி அளித்ததால், காஷ்மீரில் சில தொடர்புகளைக் கொடுத்து இந்தப் பயணத்தின் பொழுது சந்தித்துவிட்டு வருமாறு அனுப்பிவைக்கிறார். அஸ்தியுடன் செல்கிற கிரிஷ்ணாவைச் சந்திப்பதற்காக அவருடைய தாத்தாவின் முன்னாள் நண்பர்களான காஷ்மீரின்  முன்னாள் டிஜிபி ஹரி நரைன், அமெரிக்காவில் இருந்து மருத்துவர் மகேஷ் குமார், பத்திரிகையாளர் விஷ்ணு ராம் ஆகியவர்கள் முன்னாள் காஷ்மீரில் இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரியான பிரம்மா தத்தின் விட்டில் காஷ்மீரில் ஒன்று சேருகின்றனர். அன்று நடக்கிற உரையாடலின் வழியாக தன்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் ஆகிய அனைவரும் ஏற்கனவே சொல்லப்பட்டது போல் விபத்தில் இறக்கவில்லை என்றும், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற உண்மையையும் தெரிந்து கொள்கிறான் கிருஷ்ணா. மேலும், ராதிகா மேனன் சந்திக்கச் சொல்கிற அந்த நபரை   அப்பயணத்தின் பொழுது சந்திக்கிறான். அந்த நபர் ஒரு  தீவிரவாத அமைப்பின் தலைவர் என்பதும் அந்த நபர் தான் தன்னுடைய குடும்பத்தினரைக் கொன்றவன் என்பதையும் தெரிந்து கொள்கிறான் கிருஷ்ணா.

காஷ்மீரில் இருந்து திரும்பிய கிருஷ்ணா பல்கலைக்கழகத்தில் தேர்தலுக்காக நடக்கிற விவாதத்தில் ராதிகா மேனன் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பேசுகிறான். ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்த முயற்சிக்கிறார் ராதிகா. ஆனால் மாணவர்கள் பேச்சைத் தொடருமாறு கேட்கின்றனர். படத்தின் இறுதிப் பகுதியில்தான் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்தப் பேச்சில் கிருஷ்ணா தன்னுடைய அம்மா அண்ணன் ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 24 பேர்  இராணுவ உடை அணிந்த தீவிரவாதிகளால் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டதை விவரிக்கிறார். அதே நேரத்தில் அந்தக் காட்சிகள் நமக்கு காட்டப்படுகின்றன. மிகக் கொடூரமான அந்தக் கொலை குறித்த காட்சிகளின் முடிவில் கிருஷ்ணா காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பேசுவதுடன் படம் நிறைவு பெறுகிறது.

காஷ்மீரின் சுருக்கமான வரலாறு
1975-இல் இந்திரா காந்திக்கும் சேக் அப்துல்லாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய தேசிய காங்கிரசின் துணையுடன் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் முதல்வராகப் பதவி ஏற்கிறார். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமானுல்லாஹ் கான் மற்றும் முஹம்மத் மக்பூல் பாட் ஆகிய இருவரும் இணைந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை உருவாக்குகின்றனர். ஜம்மு காஷ்மீரை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறச் செய்வதே முன்னணியின் நோக்கம். 1984-இல் இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானவுடன் காஷ்மீரின் ஆளுநராக ஜக்மோகன் நியமிக்கப்படுகிறார். அதற்கு அடுத்த சில நாட்களுக்குள்  ஒன்றிய அரசின் வழிகாட்டுதலுடன் பரூக் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டு அவருடைய மைத்துனரான குலாம் சாவின் கையில் ஆட்சியை ஒப்படைக்கிறார் ஜக்மோகன். அதே  ஆண்டில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் முஹம்மத் மக்பூல் பாட் தூக்கிலிடப்படுகிறார். இது போன்ற நிகழ்வுகள் காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் கோபத்தை வரவழைக்கிறது.

1986-யில் குலாம் ஷா அரசு மசூதி கட்டுவதாக அறிவித்த இடம் பழமையான இந்துக் கோவில் இருந்த இடம் என்று சர்ச்சை கிளம்புகிறது. இதேகால கட்டத்தில் பிரச்சனைக்கு உரிய அயோத்தியில் உள்ள பாபர் மசூதியின்/ ராம ஜென்ம பூமியின் கதவுகள் இந்துக்களின் வழிபாட்டிற்காகத் திறந்து விடுகிறது ராஜீவ் காந்தி அரசாங்கம். இந்நிகழ்வுகளின் விளைவாக ஜம்மு காஷ்மீரில் கலவரம் நடைபெறுகிறது. இதனைக் காரணம் காட்டி குலாம் சாவின் ஆட்சியைக் கலைத்து விட்டு பரூக் அப்துல்லாவை ஆட்சியில் அமர்த்துகிறார் ஆளுநர் ஜக்மோகன். அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பல முறைகேடுகளைச் செய்து காங்கிரசுடன் இணைந்து  பரூக் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராகிறார். இத்தேர்தல் காஷ்மீரின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

இத்தேர்தலில் நடந்த முறைகேடுகளினால் தோற்கடிக்கப்பட்டவர்களில் ஒருவரான யூசப் ஷா 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான கிஜுபுல் முஜாஹுதீனை உருவாக்கினார். அவரின் தேர்தல் முகவராக செயல்பட்ட யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக பின்னாளில் உருவெடுக்கிறார்.

தொடர்ச்சியான ஒன்றிய அரசின் தலையீடு மற்றும் தேர்தலில் நடந்த குளறுபடிகளாலும், காஷ்மீரின் இளம் தலைமுறையினர் ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். உலக அளவில் ஏற்பட்டு வந்த மாற்றங்களும் சோவியத் ஆப்கன் யுத்தம் ஆகியவை ஆயுதம் ஏந்த ஏதுவான சூழலாக அமைந்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் சோவியத் ஆப்கன் யுத்தத்தில் ரஷ்யாவிற்கு எதிராகச் சண்டையிடுவதற்காக அமெரிக்கா சவூதி அரேபியாவின் உதவியுடன் உலகம் முழுக்க திரட்டப்பட்ட  இஸ்லாமிய இளைஞர்களில்  சிலர் இச்சண்டையின் முடிவில் காஷ்மீருக்குள் வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் 1988-ஆம் ஆண்டு தொடங்கி காஷ்மீரில் தொடர்ச்சியாக பலரும் கொல்லப்படுகின்றனர். இதில் பண்டிட்டுகள், தேசிய மாநாட்டுக் கட்சியின் அரசியல் தலைவர்கள், என பல தரப்பினரும் கொல்லப்படுகின்றனர். இந்தப் பின்னணியில் இருந்துதான் நாம் 1990 களில் பண்டிட்டுகளுக்கு எதிராக நடந்த வன்முறைகளை அணுக வேண்டும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது இரண்டு இலட்சத்திற்கும் மேலான இஸ்லாமியர்கள் ஜம்முவில் கொல்லப்பட்டனர். அதேபோல் பாகிஸ்தான் படையினரால் சிறிய எண்ணிக்கையில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். இத்தகைய நிகழ்வுகளுக்குப் பிறகும் 1980களின் இறுதி வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு சமூகங்களும் இணக்கமாகவே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று கூறுகிற அரசியல் கட்சிகளும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டு, காஷ்மீர் தனிநாடாக  இருக்க வேண்டும் என்ற சொல்லக்கூடிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளும்,  பாகிஸ்தானுடன் காஷ்மீர் சேர்க்கப்பட வேண்டும் என்று  சொல்கிற கிஜுபுல் முஜாஹுதீன் போன்ற வெவ்வேறு கருத்துகளை உடைய அமைப்புகளும் காஷ்மீரில் செயல்பட்டன என்பதயும்  கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2019-இல்  மோடி தலைமையிலான ஒன்றிய அரசு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்தை வழங்கக்கூடிய 370 ஆவது பிரிவை நீக்கிய பிறகு  அங்கு  நிலைமை முற்றிலும் வேறு மாதிரியாக  மாறியுள்ளதை  புரிந்து கொள்வதும் அவசியம்.

திரைப்பட காட்சிகளும் அதன் முரண்களும்
பண்டிட்டுகளின் சங்கமான சங்கார்ஷ் சமிதியின் அறிக்கையானது 1990க்கும்  2011க்கும் இடையில் 399 பண்டிட்டுகள் இறந்துள்ளனர் என்றும் இதில் 7 விழுக்காட்டினர் 1990 களில் இறந்துள்ளனர் என்று கூறுகின்றது. மேலும் அலெக்சாண்டர் இவான்ஸ் என்கிற ஆய்வாளரின் கணக்குப்படி 1,70,00 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்ததாக மதிப்பிடுகிறார். ஜம்மு காஷ்மீர் அரசின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைப்பின் அறிக்கையானது 1990-ஆம் ஆண்டு  60,000 குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது. மேலும் அதே கால கட்டத்தில் பல இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாகவும்,   50,000 இஸ்லாமியர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியதாகவும் குறிப்பிடுகிறார் காஷ்மீரின் வரலாற்றை ஆய்வு செய்யும் அசோக் பாண்டே.

உண்மை இப்படி இருக்கையில் 1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் நடந்த காஷ்மிரி வன்முறையில் 4,000 பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள்  5 லட்சம் பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து புலம் பெயர்ந்ததாகவும் திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் புலம்பெயர்ந்ததையும் பற்றி எந்தக் காட்சிகளும் திரைப்படத்தில் பார்க்க முடியவில்லை. இந்த நிகழ்வுகள் நடைபெறும் பொழுது மத்தியில் காங்கிரஸ் கட்சியும் காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷேக் அப்துல்லா வும் பொறுப்பில் இருந்ததாகவும் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் உண்மையில் அன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தது வி.பி சிங்கின் அரசு. அதனோடு   1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி கலைக்கப்பட்டு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜக்மோகன் மீண்டும் ஆளுநராக பொறுப்பு ஏற்கிறார். ஜக்மோகன்  ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதும் பின்னாளில் அவர் பாஜகவில் பாராளுமன்ற உறுப்பினராகவும் வாஜ்பாயின் தலைமையிலான அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு நடந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றத்திற்கு ஜக்மோகனின் தவறான நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என பல்வேறு பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின. இத்தகைய விடயங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியையும் இச்சம்vபவங்கள் நடைபெற்றதைத் தடுக்காமல் இருந்தனர் என்று பார்வையாளர்களை நம்பவைக்க முயற்சிக்கிறது  திரைப்படம்.

நிச்சயமாக 1990-ஆம் ஆண்டு  ஜனவரி 19-ஆம் நாள் அன்று பண்டிட்டுகளுக்கு எதிராக நடந்த வன்முறையும் படுகொலைகளும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதைக் காட்சி படுத்தியதிலும் பிரச்சனையில்லை. ஜக்மோகன் பொறுப்பேற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு 21-ஆம் தேதி ஸ்ரீநகரில் அமைதியாகப் போராடிய இஸ்லாமியர்கள் ஐம்பதுபேரை பாதுகாப்புப் படைகள் சுட்டுக் கொன்றதும் வெளி உலகிற்குத் தெரிய வேண்டிய காட்சிகள்தான். இருப்பினும் இதையெல்லாம் இயக்குநர் காட்சிப்படுத்தவில்லை.

திரைப்படத்தின் கடைசிப் பகுதியில் கிருஷ்ணாவின் அம்மா அண்ணன் சிவா உட்பட இருபத்து நாலு பேரைக் கொல்லுகிற காட்சிகள் 2004-ஆம் ஆண்டு நந்திமார்கில் லக்சர் இ தொய்பா (Lashkar-e-Taiba) வினரால் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் காட்சிகளை 1990-களில் நடைபெற்றதைப் போன்று படத்தில் சித்தரித்துள்ளார். புனைவில் இதற்கு இடமிருக்கிறது என்றாலும், உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் இதையெல்லாம்  கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

1998-யில்  வண்தகாமாவிலும் 2004-யில் நந்திமார்கிலும் பண்டிட்டுகள் படுகொலை செய்யப்பட்டது உண்மைதான். அக்கொலைகளை உலகுக்கு எடுத்துக்கூறி அக்கொலைகளை செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது முக்கியமானதுதான். அதேபோல் 1990யில் ஹன்ட்வாராவிலும் 1993யில் சபூர் மற்றும் பிஜ்பெஹராவிலும் vஇஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. விவேக் அக்னி ஹோத்திரி இப்படுகொலைகளைச் சொல்லாமல் விடுவதை இயக்குனருக்கான சுதந்திரம் என்றெல்லாம் எடுத்துக் கொள்ளமுடியாது.

இது ஒரு புறம் இருக்கட்டும், இருபத்து நாலு பேர் படு கொலை செய்யப்படுவதற்கு முன்னால் கிருஷ்ணாவின் அம்மாவின் ( சாரா) காவிநிற உடை தீவிரவாத அமைப்பின் தலைவரால் கிழிக்கப்பட்டு அரை நிர்வாணமாக காட்டப்படுகிறார்.  திரைப்படத்தின் வேறு ஒரு காட்சியில் சாராவைக் காப்பற்றுவதற்காக அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பார் ஆசிரியரான ஒரு வயதான இஸ்லாமியர். ஆனால் அதை சாரா மறுத்துவிடுவார். அந்த வயதானவர் திடீரென கடைசிக் காட்சிகளில் தோன்றி சாராவின் முகத்தில் காரித் துப்புகிறார். பிறகு சாரா பக்கத்தில் உள்ள மரஅறுப்பு மிசினுக்குள் படுக்க வைக்கபட்டு மிகக்கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகிறது. மேலும், மற்றவர்கள் அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு நெத்தியில் சுடப்படுகின்றனர். அவர்களுடைய நெத்தியில் இருக்கும் பெரிய குங்குமப் பொட்டின் மீதுதான் குண்டுகள் பாயச்சப்படுகின்றன. உண்மையில் 2004-லில் நந்திமார்கில் நடந்த சம்பவங்களுடன் பலவிடயங்கள் சேர்க்கப்பட்டு காட்சிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும் இத்திரைப்படத்தில் வருகின்ற ஒவ்வொரு இஸ்லாமிய கதாப்பாத்திரமும்(சிறுவர்கள் பெண்கள் உட்பட) திட்டமிட்டு இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரானவர்களாகக் காட்சிப்படுத்தப் படுகின்றனர்.

ஜம்மு &காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 தான் 1990 களில் நடந்த பண்டிட்டுகளின் படு கொலைகளுக்கும் அவர்களின் புலப்பெயர்விற்க்கும் காராணம் என வாதிடும் கிருஷ்ணாவின் தாத்தா கதாப்பாத்திரம். அதற்காகத் தான் 6,000 கடிதங்கள் வரை பிரதமருக்கு எழுதியுள்ளதாகக் கிருஷ்ணாவிடம் குறிப்பிடுவார். கிருஷ்ணாவின் தாத்தா ஒரு ஆசிரியர் மேலும் காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினையை உலகு அறியச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடுகிறவர். அப்படியான ஒருவரிடம் 30 ஆண்டுகள் வளரும் கிருஷ்ணாவிற்கு காஷ்மீர் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பதும் ராதிகா மேனனால் மூளைச்சலவை செய்வதைப் போன்றும் திரைக்கதை அமைத்திருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

2016-ம் ஆண்டு  பிப்ரவரி  9-ம் நாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உமர் காலித், பட்டாச்சாரியா போன்ற மாணவர்கள் சிலர் 2013-இல் தூக்கிலிடபட்ட அப்சல் குருவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் நடத்துகின்றனர். அக்கூட்டத்தை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தடுத்து நிறுத்துகின்றனர். இக் கூட்டத்தில் தேசவிரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு உமர் காலித் அன்றைக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக இருந்த கண்ணையா குமார் உட்பட ஏழுபேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னணியில்தான் கிருஷ்ணா இப்பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும், ராதிகா மேனன் (இடதுசாரி பேராசிரியர்) கிருஷ்ணா போன்ற அப்பாவி மாணவர்களைத் தவறாக இந்திய தேசத்தின் நலனுக்கு எதிராக வழிநடத்துவதைப் போன்றும் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்தலில் காஷ்மீர் ஒரு மையப் புள்ளி என்று சொல்வதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது. ஒரு காட்சியில் கிருஷ்ணாவின் தாத்தா கிருஷ்ணாவிடம் ஆசாதி (தமிழில்- சுதந்திரம், இப்படத்தில் பல்கலைக்கழக காட்சிகளில் பலமுறை பயன்படுத்தப்படும் கோசம்) என்பதே தீவிரவாத சொல் என்றும், மேலும் காஷ்மீரின் விடுதலையைக் கோரும் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும்  பிரிவினைவாதிகள் என்றும் குறிப்பிடுகிறார்.  இப்படியான பல பொய்களின் ஊடாக ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுடன் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள், மனித உரிமைப் போராளிகள் ஆகிய அனைவரையும் இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரிகள் என்று கட்டமைக்கின்றார் இயக்குனர்.

உலகில் மிக நீண்ட காலமாக ராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள பிரேதேசங்களில் ஒன்றான காஷ்மீரில் எடுக்கப்பட்ட படத்தில், ராணுவ வாகனங்களை ஒரு காட்சியில் கூட பார்க்கமுடியவில்லை. மேலும் படத்தில் அனைத்துக் காவல் துறையினரையும்  தீவிரவாதிகளுக்கு பயந்து ஓடி ஒளிபவர்களாக காட்சியமைத்திருப்பதெல்லாம் எதார்த்தமானவைகள் அல்ல. இப்படி பல விடயங்களை வலிந்து காட்டுவதும், சில விடயங்களை காட்டாமல் விட்டு விடுவதிலும் உள்ள இயக்குனரின்  அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சங் பரிவார அமைப்புகளின் வெறுப்புப் பிரச்சாரம்
திரைப்படம் வெளியான சில நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் சிலர் திரைப்படத்தின் இறுதியில் இஸ்லாமியர்களைத் தாக்கவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கவும் அறைகூவல் விடும் பல காட்சிகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. இவைகளெல்லாம் நன்கு திட்டமிடப்பட்டு சங் பரிவார அமைப்புகளால் நிகழ்த்தப்பட்டவை என்பது தி வயர் (The Wire.in) இணையதளத்தில் விரிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டு ஜந்தர் மந்தரில் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட ராகேஷ் சிசொடியா சில கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து ப்ரொஜெக்டரில் இத்திரைப்படத்தை திரையிட்டுள்ளார்.  மேலும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாங்கள் திரைப்படத்திற்கான டிக்கட் பெற்று  அதிக எண்ணிக்கையில் நபர்களை அழைத்துக் கொண்டு சென்று திரைப்படத்தை பார்வையிடுவதாகவும் கூறுகின்றனர். கோயம்புத்தூரில் கூட இந்த்துத்துவ அமைப்புகள் பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில்  அதிகரித்து வருவது பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். இது போன்ற சூழலில் இத்திரைப்படமும் அதை ஒட்டி நடைபெறக் கூடிய நிகழ்வுகளும்  இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை நியாயப்படுத்தவும் இந்நிலைமைகள் மேலும் மோசமடைய  மட்டுமே பயன்படும் என்பது பெரிதும் அச்சத்தை வரவழைக்கிறது.

இறுதியாக
ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்குகிற படைப்பிற்கென்று சில பொறுப்புகள் உண்டு. வரலாற்றின் போக்கில் இருந்து ஒரு சம்பவத்தை மட்டும் தனியாக எடுத்து ஒரு பக்க சார்புடன் படைப்பை உருவாக்கும் பொழுது பார்வையாளனுக்கு அந்நிகழ்வை முழுமையாகப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். அர்பன் நக்சல் என்ற புத்தகத்தை எழுதியவரும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் விவேக் அக்னி ஹோத்திரியிடம்  அப்படியான ஒரு பக்க சார்பில்லாத  படைப்பை எதிர்பார்ப்பது அபத்தம்.   அவரே தொடர்ச்சியாக தான் இத்திரைப்படத்தை இயக்கியதற்கு ஒரு நோக்கம் இருப்பதாகச்  சொல்லிவருகிறார். அவருடைய நோக்கம்  எதுவாயினும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதில்  இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

இறுதியாக ஒன்றைச்  சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். சமீபத்தில் வெளியான இரண்டு அறிக்கைகள் இந்தியாவில் இனப்படுகொலைகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்மை எச்சரித்துள்ளன. அந்த அறிக்கைகளில் ஒன்று அமெரிக்காவில் உள்ள இனப்படுகொலை கண்காணிப்பு அமைப்பினுடையது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி ஸ்டாண்டன் அமெரிக்க காங்கிரசில் பேசும்பொழுது இந்தியாவில் இனப்படுகொலை நடைபெறுவதற்கான் ஆரம்பக் கட்ட கூறுகள் தென்படுவதாகவும், அது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறலாம் என்றும் கூறியுள்ளார். இந்த   கிரிகோரி ஸ்டாண்டன்தான் 1989-ல் ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெறலாம் என்று முதலில் எச்சரித்தவர். 1994-ல் ருவாண்டாவில் அவர் எச்சரித்தது போல் டுட்சி இனத்தை சேர்ந்த நான்கு லட்சம் முதல் எட்டு லட்சம் பேர்  இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பது வரலாறு. அப்படியான கிரிகோரி ஸ்டாண்டன் இந்தியாவில் இனப்படுகொலை நடைபெறலாம் என்று எச்சரிப்பதை  நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

பேரா. அருண்கண்ணன்
இயக்குநர்- தொழில் கல்விக்கான லயோலா கல்விக்கழகம்,
லயோலா கல்லூரி,
சென்னை

நன்றி: வளரி, ஜெம்சென் சென்னை இயேசு சபை ஊடக மையம்,
காட்சி தகவலியல் துறை, இலயோலா
கல்லூர

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “வரலாற்று உண்மையைச் சொல்ல மறுக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ – பேரா. அருண்கண்ணன்”
  1. மிக துல்லியமான ஆய்வுகளுக்குப் பின் எழுதியக் கட்டுரையாகவே இருக்க்கூடும் என எண்ணுகிறேன். உண்மை சம்பவங்களை படமாக எடுக்கும் போது படைப்பாளிகள் புனைவுகளை தாங்கள் சார்ந்துள்ள கொள்கைகளுக்கு ஏற்றவாறு மாற்றி கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகவே இருக்கிறது. படத்தை வரலாறுடன் ஒப்பிட்டு எழுதியது இன்னும் புரிதலைக் குடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *