கிரேக்க நாட்டுபுறக் கதை (Greek Nattupura Kathaikal) : 'ராஜா காது கழுதைக் காது' (The King with Donkey Ears) - Greek Short Story in Tamil -

கிரேக்க நாட்டுபுறக் கதை: ‘ராஜா காது கழுதைக் காது’

கிரேக்க நாட்டுபுறக் கதை : ‘ராஜா காது கழுதைக் காது’ (The King with Donkey Ears)

தங்கத்தின் மீதுள்ள அதீத ஆசையால் “தொட்டதெல்லாம் பொன் வேண்டும்” என்று கடவுள் டையோனிசஸிடம் வரம் கேட்டார் அரசர் மிதாஸ். “நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று” என்ற பழமொழி போல அந்த வரத்தினால் பசி, தாகம் என்று பல துன்பங்கள் அனுபவித்தார்.

அவருடைய செல்வ மகள் தங்கச் சிலையாக மாறினாள். பின்னர், வரமளித்த டையோனிசஸ் கடவுளிடம் வரத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்டிக் கொள்ள, அவருடைய அருளினால், அந்த வரம் அவரை விட்டு விலகியது.

பணம், பதவி ஆகியவற்றின் மீது தனக்குள்ள ஆசையால் இந்த நிலை ஏற்பட்டது என்று கருதினார் மிதாஸ். ஆகவே, தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிய மிதாஸ், தனக்கு செல்வத்தின் மீது பற்றில்லை என்று அறிவித்தார்.

அரச பதவி வேண்டாம் என்று உதறித் தள்ளிய மிதாஸ், காட்டிற்குச் சென்று அங்கு கிடைக்கும் பழங்கள், மற்றும் காய்கறிகள் தின்று வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். அரசனின் ஆலோசகர்கள், நாட்டை நிர்வகித்து வந்தார்கள்.

ஹெர்ம்ஸ் என்ற கடவுளுக்கும், அழகிய தேவதைக்கும் பிறந்த குழந்தை பான். பான் ஆடுகளின் பாதங்கள், முடி நிறைந்த கால்கள், நெற்றியில் சிறிய இரண்டு கொம்புகள் ஆகியவற்றுடன் பிறந்தான்.

நாளடைவில் பான் ஆடு, மாடு மேய்ப்பவர்களின் கடவுளாக மாறினான். சிரிங்க்ஸ் என்ற நதி தேவதையின் மீது மோகம் கொண்ட பான், அவளின் நினைவாக சிரிங்க்ஸ் என்ற புல்லாங்குழல் உருவாக்கினான். மலையில், அதைச் சுற்றியுள்ள காடுகளில் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு செல்வான் பான்.

இனிமையான, உயர்ந்த சுருதியில் அந்த இசை, மலையில் அங்கிருக்கின்ற பள்ளதாக்குகளில் எதிரொலித்து, தென்றல் காற்று மற்றும் வண்டுகள் ரீங்காரத்துடன் கலந்து, இனிமையான இசையாக அங்கு ஆடு மாடுகள் மேய்க்க வருபவர்கள் மனதை சுண்டி இழுத்தது.

சல சல வென்ற ஆற்றின் ஓசை, உயரமான நீர்வீழ்ச்சிகளிலிருந்து கொட்டும் நீரின் ஓசை, வன தேவதைகள், நீர் தேவதைகள் பாடும் இனிமையான கானம், காடுகளில் குடியிருக்கும் பறவைகளின் ஓசை எல்லாம் சேர்ந்து, மனம் கவரும் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அந்த வனத்தில்.

இசைக்கு அடிமையான அரசர் மிதாஸ், பானின் புல்லாங்குழல் இனிமையில் மயங்கி, அவருடைய தீவிர ரசிகரானார்.

தன்னுடைய புல்லாங்குழல் இசை கேட்க, மனிதர்களும், தேவதைகளும் விரும்புகிறார்கள் என்றவுடன் பானுக்குத் தலைக் கனம் அதிகமாகியாது. உலகிலேயே சிறிந்த பாடகர் நான் என்று நினைக்க ஆரம்பித்தான்.

தன்னுடைய இசை, இசையின் தெய்வமான அப்போலோவின் இசையை விடவும் மேலானது என்றும், தன்னுடன் அப்போலோ இசைப் போட்டியில் பங்கேற்றால், அவர் தோற்பது நிச்சயம் என்றும் மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தான்.

இது அப்போலோவின் காதுகளுக்கு எட்டியது. தலைக் கனம் பிடித்த பானுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த அபோல்லோ, போட்டிக்கு ஒத்துக் கொண்டார். டிமோலஸ் மலை, உயர்ந்த மலை மட்டுமல்ல, அதுவும் ஒரு கடவுள்.

ஆகவே, டிமோலஸ் இந்த இசைப் போட்டிக்கு நடுவராக இருப்பதற்கு சம்மதித்தது. முதலில், ஆட்டுத் தெய்வம் என்று மதிக்கப்படும் பான், புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தார்.

அந்த இனிமையான இசை, அந்த மலையில் வசிக்கும் தேவதைகளை மயக்க, மலை, நீர், மரம் ஆகியவற்றிற்கான தேவதைகள் நடனம் ஆடத் தொடங்கின. இசையில் மயங்கிய அரசர் மிதாஸ், தேவதைகளுடன் சேர்ந்து தன்னை மறந்து நடனமாடினார்.

கிரேக்க நாட்டுபுறக் கதை (Greek Nattupura Kathaikal) : 'ராஜா காது கழுதைக் காது' (The King with Donkey Ears) - Greek Short Story in Tamil -

சுருள் சுருளான முடிகள், தோள் வரை சரிந்திருக்க, கடவுளுக்கேற்ற தங்கக் கிரீடம் தலையில் ஜொலிக்க, பட்டுத் துணிகள் உடம்பை அலங்கரிக்க, ப்ளெக்ட்ரம் என்ற நரம்பு இசைக்கருவியைத் தன்னுடைய வாயில் வைத்து வாசிக்க ஆரம்பித்தார் அபோல்லோ.

அவருடைய இசை தேவகானமாக இருந்தது. இசையைக் கேட்டு இயற்கை ஸ்தம்பித்து நின்றது. மரங்கள் அசையவில்லை. தேவதைகள் தங்களை மறந்து நின்றனர். இதைப் போன்ற தெய்வீக இசையை இதுவரை கேட்டதில்லை என்றனர் தேவதைகள்.

பான் வாசித்த புல்லாங்குழல் இசை இனிமையாக இருந்தாலும், அபோல்லோவின் இசையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது வழிப் போக்கன் வாசிக்கும் சாதாரண இசை போன்று இருந்தது.

இருவரின் இசையைக் கேட்ட பிறகு, நடுவரான டிமோலஸ் மலை, அபோல்லோ வெற்றி பெற்றவராக அறிவித்தார். அங்கு கூடியிருந்த தேவதைகளும் அதனை ஆமோதித்தனர்.

அப்போலோவின் இசை தன்னுடைய இசையை விட மேலானது என்று பான் ஒத்துக் கொண்டான். ஆனால், மிதாஸ் அப்போலோவின் இசையை விடவும் பான் புல்லாங்குழல் இசை தான் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.

கோபம் கொண்ட அபோல்லோ, நல்ல இசையைக் கேட்டு இரசிக்கத் தெரியாத உனக்கு மனிதக் காதுகள் இருக்கத் தகுதியில்லை என்று சாபமிட்டார்.

தன்னுடைய காதுகளில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார் மிதாஸ். சிறியதாக இருந்த காதுகள் வளர ஆரம்பித்தன. காதுகள் மிகப் பெரியதாகவும், மடங்கியும், முடிகள் உள்ளதாகவும் மாறின.

பதறிப் போன மிதாஸ், அருகிலிருந்த நதிக்குச் சென்று நீரில் தன்னுடைய முகத்தைப் பார்த்தார். அவருடைய காது, கழுதை காதாக மாறியிருந்தது.

கழுதைக் காதுகளுடன் மற்றவர்கள் தன்னைப் பார்க்க விரும்பாத மிதாஸ், காட்டு வாழ்க்கையைத் துறந்து தன்னுடைய அரண்மனைக்குத் திரும்பினார்.

தன்னுடைய காதுகளை முழுவதுமாக மறைக்கும் வண்ணம் பெரிய தொப்பி ஒன்றை உருவாக்கி அணிந்து கொண்டார் மிதாஸ். எங்கு செல்வதானாலும் அந்தத் தொப்பியுடன் செல்வார்.

அவருடைய காது ரகசியம் நாட்டில் யாருக்கும் தெரியாது, அவருடைய நாவிதரைத் தவிர. நாவிதர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், சிரச்சேதம் செய்யப்படுவார் என்று அரசர் அவரை பயமுறுத்தி வைத்திருந்தார்.

ராஜாவின் இந்த இரகசியத்தைத் தெரிந்த நாவிதர், இதனை யாரிடமாவது சொல்லத் துடித்தார். மரணத்திற்குப் பயந்து சொல்ல முடியவில்லை. ஆனால், இரகசியத்தை மனதில் புதைத்து வைத்துக் கொள்வதும் கடினமாக இருந்தது.

ஒரு நாள் மன அழுத்தம் அதிகமாக, தன்னுடைய வீட்டின் பின்புறம் ஒரு பெரிய பள்ளம் தோண்டி, “ராஜா காது கழுதைக் காது” என்று பள்ளத்தில் சொல்லி, அதனை மண் போட்டு மூடி வைத்தார். இப்போது தான் நாவிதர் மனதிற்கு நிம்மதி கிடைத்தது.

வசந்த காலம் வந்த பின்னர், அந்தப் பள்ளத்தில் சிறிய செடி முளைக்க ஆரம்பித்தது. சிறிது சிறிதாக நாணல்கள் முளைத்தன. கோடை காலம் வந்தவுடன், அந்த பள்ளத்தில், நாணல்கள் பெரிதாக வளர்ந்தன.

காற்று வீசும் போது, அசைந்த நாணல்கள், நாவிதரின் குரலில் “ராஜா காது கழுதைக் காது” என்ற செய்தியை சொல்லிய வண்ணம் இருந்தன.

அரசர் மிதாஸின் ரகசியம் ஊர் முழுக்கப் பரவியது.

சிறுகதை எழுதியவர்:
கே.என்.சுவாமிநாதன்

சென்னை வசித்து வரும் இவர், பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது.

கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் – தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி,  தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை, மங்கையர் மலர், கொலுசு, தீபம், கல்கி ஆன்லைன், பிரதிலிபி, சஹானா, புக்டே  இணைய தளங்கள்.

பெற்ற பரிசுகளில் சில தினமலர், கலைமகள், நம் உரத்த சிந்தனை, இலக்கிய பீடம், துகள் ஜெர்மனி,  “டாக்டர் அய்க்கண் நினைவு சிறுகதைப் போட்டி”, பிரதிலிபி கதை கட்டுரைப் போட்டிகள், சஹானா சிறுகதைப் போட்டி.

பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் ஐந்து.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *