‘இதுதான்  நா படிச்ச பள்ளிக்கூடம்… இதுதான் நா வெளையாண்ட கிரவுண்ட்… இந்த வழியாத்தான் ஸ்கூலுக்கு நடந்து போவேன்…’. என நம்மூர் பக்கம் பிள்ளைகளை அழைத்து போகும்போது, மலரும் நினைவுகளை பரிமாறிக் கொள்ளும் குதூகலம் சுவாரசியமானது.

அதே போன்று, நாம் படித்த புத்தகங்களை, அதன் திகட்டாத வாசிப்பு அனுபவங்களை, நெகிழ்ந்து உருகிய தருணங்களை, நிலைத்து நின்று விட்ட வடுக்களை, அகண்டு விரிந்த  பார்வையினை, வளர்ந்து நிற்கும் நம் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளும் அனுபவம் அலாதியானது. அதிலும், வாசிப்பில் மூழ்கித் திளைக்கும் பிள்ளைகள் வாய்த்து விட்டால், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி தான்.

வாசிப்பில் தனக்கென ஒரு தனித்துவமான, கலவையான பாணியை வகுத்துக் கொண்டவன் எங்கள் மகன். எங்கள் வாசிப்பும், அதனையொட்டிய சித்தாந்தமும், அவனை எந்த விதத்திலும் ஆதிக்கம் செய்து விடக்கூடாது என்பதில் கறாராய் நிற்பவன். வருடா, வருடம் புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது கூட, உள்ளே நுழைந்ததும் கழண்டு கொண்டு, தனியாகச் சுற்றி, புத்தகங்கள் வாங்கிக் கொள்வான். இந்த வருடம், பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, எங்களுடன் வராமல், தனியாக தான் மட்டும் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்தவன், விரும்பி வாங்கிய புத்தகங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது Kite Runner (பட்ட விரட்டி).

கல்லூரியில் அவனது ஆங்கிலப் பேராசிரியை, இந்த புத்தகத்தை குறிப்பிட்டு சிலாகித்துப் பேசியிருக்கிறார். பாடத் திட்ட எல்லைகள் தாண்டிய வாசிப்பு குறித்த உரையாடலுக்கு இடமிருக்கும் கல்லூரி வாய்ப்பது அபூர்வம் தான்.

‘எனது அம்மா மூலம், நான் இந்தப் புத்தகம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் மேம்’ என தான் வகுப்பில் கூறியதை, என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, சில நிமிடங்கள் என் கால்கள் தரையில் நிற்கவில்லை.

The Kite Runner by Khaled Hosseini | Penguin Random House Canada

ஏற்கனவே, Roots, ஆனி பிராங்கின் Diary of a young girl போன்ற புத்தகங்களை படித்து முடித்திருந்தான். அடுத்து கையிலெடுத்த இந்த Kite Runner புத்தகம், சற்றே வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை அவனுக்குத் தந்தது. படிக்கும் போது, இடையிடையே ஓடி வந்து, தனித்துவமான எழுத்து நடையின் உற்சாகத்தினைப் பகிர்ந்து கொள்வான். நான் ஆறேழு வருடங்களுக்கு முன்பு படித்திருந்ததால், காற்றடிக்கும் திசையில் பறந்தோடும் அறுபட்ட பட்டத்தினை விரட்டிச் செல்லும் ஹசனைப் போல், நாவலின் விறுவிறுப்பைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருந்த அவனோடு ஈடு கொடுக்க இயலவில்லை

‘ஹசன், திரும்பி அமீர் வீட்டுக்கு வந்துடுவானாமே…’ என்றான் ஒருநாள் மொட்டையாய்.

‘ஆமாண்டா… அமீர் ஆப்கான் போயிட்டானா….’ என்ற என் எதிர் கேள்விக்கு,

‘என்னது… அமீர் ஆப்கான் திரும்பி போவானா…’ என்றான் ஆச்சரியத்துடன்.

‘நீ தானடா ஹசன் திரும்பி வந்துடுவானாமேன்னு கேட்ட…’

‘ஐய்யோ அம்மா… அது அமீர் அப்பாவோட பிரெண்டு, அமெரிக்காவில இருக்கற அமீருக்கு போன் பண்ணி சொல்றதும்மா… நீயா ஏம்மா முன்னாடியே இதெல்லாம் சொல்ற… படிக்கற ஆர்வத்தையே காலி பண்ணிட்ட…’ என ஏகத்துக்கு திட்டிவிட்டு,

‘இனிமே இந்த புக் பத்தி எதுவும் உங்கிட்ட பேசமாட்டேன்…’ என சவால் விட்டு சென்று விட்டான்.

‘அப்படி என்ன சொல்லிட்டோம்’  என அடுத்த வேலைகளில் அப்பாவியாய் மூழ்கிப் போன என்னிடம், சுவற்றில் அடித்த பந்தாய் மறுபடியும் ஓடிவந்தான் சில மணி நேரங்களில். அப்படி வா வழிக்கு… என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே, ஒரு சிரிப்பை ஒட்ட வைத்துக் கொண்டேன்.

‘ம்மா… இப்பத்தான் ஆஸ்பிடல்ல இருந்து வர்றான் அமீர்…’ என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி, தொடர்ந்தான்.

ஏற்கனவே வாங்கியிருந்த திட்டினை நினைவுபடுத்தி, லத்தியை சுழற்றி மிரட்டும் போலீஸ்காரராய், எச்சரித்தது மூளை. அப்படியா… என்பதோடு தான் நிறுத்தி கொண்டேன்.

அத்துடன் திரும்பிப் போய், அவன் நாவலைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், கட்டுப்படுத்த முடியாத ஆவலோடு,

‘சோரப்பை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போயிடுவானா…’ என்றான்.

‘அமீர், இரண்டாவது முறை ஆஸ்பிடல்ல இருந்து வந்துட்டானா…’ மீண்டும் உளறித் தொலைத்தேன்.

‘என்னம்மா சொல்ற… திருப்பியும் ஆஸ்பிடலா… வாய வச்சிகிட்டு சும்மாவே இருக்க மாட்டியா…’ மீண்டும் திட்டிவிட்டு, அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டான்.

நான் சும்மாத்தானேடா இருந்தேன்… என வடிவேலு போல் சலித்துக் கொள்வதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.

என் மேலிருந்த நம்பிக்கை முழுதும் பொய்த்துப் போனதில், இந்த முறை மீதமிருந்த சில பக்கங்களை படித்து முடித்த பின், வெளியில் வந்தவன்,

‘முடிச்சுட்டேன்…’ என்றான்.

‘முடிவு எப்படியிருந்தது…’

‘உனக்காக நான் இந்த பட்டத்த விரட்டி எடுத்து வரவான்னு அமீர் கேட்கும் போது, அதுவரைக்கும் பேச்சையே மறந்து போன சோரப், லேசா சிரிப்பான் பாரேன்… எமோஷனலான எண்ட்மா…

அதுவும் ஹசன் உபயோகித்த டெக்னிக் மூலமாவே பட்டத்த அறுத்து, அவன் மாதிரியே விரட்டி எடுத்துட்டு வர்றேன்னு சொல்றது சரியான டச்மா….” என வாலைக் குழைத்து அடங்கும் செல்லப் பிராணியைப் போல், நெகிழ்ந்து உருகினான்.

‘கோவம்லாம் போயிருச்சா…’

’ம்ம்… அதான் நாவலையே படிச்சு முடிச்சுட்டனே….’ என்றதோடு, தனது ட்ரேட்மார்க் வசனத்தை உதிர்த்தான்.

“வேற வழி… இல்லன்னா சாப்பாடு கெடைக்காதே…”

சிரித்தபடியே தொடர்ந்த வாசிப்பு குறித்த உரையாடலினூடே, அவன் படிக்க வேண்டிய சில புத்தகங்கள் குறித்து சொல்லி விட்டு, ‘ஆயிஷா’வும், ‘டோட்டோ சான் – ஜன்னலில் ஒரு சிறுமி’யும் படிக்கச் சொன்னோம்.

The Kite Runner at Nottingham Playhouse

இந்த இரு புத்தகங்களையும் படிக்கச் சொன்னதன் முதன்மை காரணம், ஆரோக்யமான, மாற்றுக் கல்வி முறை குறித்த புரிதலுக்காக. என்றபோதிலும், அவன் ஆங்கில புத்தகங்களை ஆழ்ந்து படிப்பது போல், தமிழ் புத்தகங்கள் படிப்பதில்லை. தமிழ் எழுதப், படிக்கத் தெரிந்திருந்தாலும், ஆங்கில வழியில் படித்ததால், அதில் சற்று சிரமம் உண்டு.

அவன் 9, 10 ஆம் வகுப்புகளில் இருந்த போது, தமிழ் வாசிப்பை ஊக்கப்படுத்த, எளிமையான நடையில் வெளிவரும் தமிழ் இந்துவின் மாயா பஜார் படிக்கச் சொல்லி முயற்சித்தேன். ஆனால், அது பெரிதாக பலன் தரவில்லை. எதேச்சையாக ஒருநாள் பார்த்தபோது, ஆனந்த விகடனில் வந்த வண்ணதாசனின் ஒரு கதையைப் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் என் தவறை உணர்ந்து, வேறு தமிழ் புத்தகங்களை கொடுத்த போதும், பலனில்லாமல் போனது. இந்த இரண்டு புத்தகங்களை படிக்கச் சொன்னதன் கூடுதல் காரணம், அவற்றின் நடை அவனது தமிழ் வாசிப்பை ஊக்கப்படுத்தும் என்பது தான்.

எதிர்பார்த்ததை விட, ஆயிஷாவும், டோட்டோ சானும் அவனை வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். கொரோனா ஊரடங்கில், முடங்கி கிடக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் இருக்கும் அவனது அப்பாவிற்கு, வீட்டில் இரண்டு ஹெல்ப் லைன் நானும், மகனும் தான்.

‘ஆயிஷா’ படித்துக் கொண்டிருந்த போது, இடையே ஒரு வட இந்திய தொழிலாளியிடம், போனில் இந்தியில் பேச அழைத்த போது, முகமெல்லாம் வெளிறிப் போய் வந்தான். பதறிப் போய் விசாரிக்கையில்,

“ம்மா… ஆயிஷா நைட்ரஸ் எதனால் ஊசி போட்டுக்கறத படிச்சிட்டு இருந்தேனா… அதான்…”

அதன் பிறகு, சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நிசப்தமாய் கடந்தது. அந்த இறுதிப் பக்கங்களின் கனத்தினை கடக்க, அந்த அமைதி அவனுக்கு தேவையாய் இருந்தது.

ஆயிஷாவை முடித்த கையோடு, டோட்டோ சானை எடுத்தது, தலைகீழ் அனுபவம். தன் தங்கையை அப்படியே உரித்து வைத்திருப்பதாக, சொல்லிக் கொண்டே, மாய்ந்து, மாய்ந்து படித்துக் கொண்டிருந்தான், இடையிடையே சில தமிழ் வார்த்தைகளை தெளிவு படுத்திக் கொண்டே.

‘ம்மா… நாற்பத்தேழு றானென்… அப்படின்னா என்ன…’

‘ஏதோ ஜப்பானிய வீரர்கள்னு நெனைக்கறேன், ஒரு சில வார்த்தைகளை புரிஞ்சுகிட்டு, அப்படியே அடுத்த கட்டத்துக்கு போயிடனும்பா…’

மேலோட்டமாக நான் சொன்ன விளக்கத்தில், அவன் திருப்தியடைய வில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது.

‘ம்மா… றானென் என்பது, குருவால் கைவிடப்பட்ட அல்லது குருவை இழந்த சாமுராய் வீரனைக் குறிக்கற சொல். நாற்பத்தேழு சாமுராய் வீரர்கள், தங்கள் குருவை வயிற்றை கிழித்துக் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளச் செய்தவர்களை, பழிவாங்கிய கதைம்மா அது. வயிற்றை கிழித்து தற்கொலை செய்து கொள்ளச் செய்யும் தண்டனை, ஜப்பானில் சகஜமாய் வழக்கத்தில் இருந்திருக்கிறது…”

என கூகுளில் மேய்ந்து, பல தகவல்களை அடுக்கிக் கொண்டே போனான்.

‘இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படி இந்த புக்கை படிச்சே…’ எனது வாசிப்பையே கேள்விக்குள்ளாக்கினான்.

‘நான் இந்த புக்கை எத்தனை வருஷம் முன்னாடி படிச்சேன் தெரியுமா… அப்போல்லாம் போன் ஏது… கூகுள் ஏது… அது மட்டுமில்லாம, டோட்டோ சானின் சேட்டைகளில் தான் எனது கவனம் இருந்தது…’

‘அதான் அவ மாதிரியே, ஒம் பொண்ணு பிறந்திருக்கா…’

‘ஆமாண்டா… அந்த புத்தகத்த படிக்கும் போது, டோட்டோ சான் அம்மா மாதிரி, நானும் குழந்தைகளை புரிஞ்சுக்கற அம்மாவா இருக்கணும்னு நெனச்சேன்.

ஆனா, டோட்டோ சானுக்கே அம்மாவா இருப்பேன்னு நெனச்சு கூட பார்த்ததில்லடா…’

வெடித்து தெறித்த எங்கள் இருவரின் சிரிப்பொலியில் வீடே அதிர்ந்தது.

இதோ, யுத்தத்தினால் சிதைந்த பள்ளிக்கூடத்தின் இடிபாடுகளுக்கிடையே நின்று கொண்டு புதிய பள்ளிக்கூடத்தினை கட்டியெழுப்புவது குறித்த, டோட்டோசானின் தலைமையாசிரியர் கோபயாஷியின் நம்பிக்கை கீற்றினை உள்வாங்கி கொண்டே, அடுத்த அருமையான தமிழ் நாவலை கையில் எடுத்து விட்டான்.

‘அதிகாலையின் அமைதியில்’ செந்நிறக் கதிர்கள், அவனது அறையின் ஜன்னலினூடே நுழைந்து , வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன.

எஸ்.பிரேமலதா

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *