உங்களின் முகத்திற்கு அழகு தருவது என்ன? நிச்சயமாகப் புன்னகைதான். உன் புன்னகை என்ன விலை.? உன் இதயம் கூறும் விலை என்ற பாடல் கோடி டாலர் மதிப்பு மிக்கதுதான்.. புன்னகையும், சிரிப்பும் வாழ்வில் விலை மதிப்பற்றது. அழகாக சிரிக்கும் முகம்தான் எல்லோராலும் நினைவு கூறப்படும். ஒரு 5 மாதக் குழந்தை கூட, நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் மட்டுமே, உங்களை நினைவில் வைத்துக் கொள்கிறது என்று சமீபத்திய, 2015 ஆம் ஆண்டு நவம்பர் அறிவியல் கண்டுபிடிப்பு தெளிவாகத தெரிவிக்கிறது.
பல் பல்..எப்போது..? .. பல்…!
அட. அதெல்லாம் சரிப்பா,புன்னகைக்கும், சிரிப்புக்கும் யார்? பற்கள்தான். பல் உருவானது உணவை அரைத்து விழுங்கவே. உங்களின் சீரணத்தை எளிமைப் படுத்தவே. ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு வகை பல் இருக்கிறது. அவை பரிணாமத்தில் பல்வேறு கால கட்டத்தில் உருவானவை. முதன் முதலில் முதுகெலும்பிகளிடம் தான், அதுவும், மீன்களிடம தான் பற்கள் உருவாயின. பற்கள் இருக்க தாடை என்பது வேண்டுமப்பா. ஆனால் துவக்கத்த்தில் தாடியில்லா மீன்களும் இருந்தன. அதன் பின்னர் தாடை யுள்ள மீன்கள் வந்தன. அதில்தான் பற்கள் என்ற அமைப்பு சுமார் 530, மில்லியன் ஆண்டுகளுக்கு முன், கேம்பிரியன் (cambrian period) காலத்தில்உருவாகி பரிணமித்தது. ஆனால் இந்த பல்லைப் பளபளவென மினுக்க வைத்துக் கொண்டிருக்கும் எனாமல் என்ற பகுதி சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மீனின் செதிலிலிருந்துதான் உருவானது. உலகிலேயே உடம்பில் உள்ள மிகப் பலமான பொருள் எனாமல்தான். 420 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், சுறா மீனில் கொத்துப் பற்கள் உருவாயின. மேலும் ஒரு சுறாமீனின் வாழ் நாளில் சுமார் 20,000 பற்கள் உருவாகும். ஒரு செட் பல் எதானாலாவது கடித்து விழுந்து விட்டால், அடுத்து உறைக்குள் சொருகி வைத்த பிச்சுவா கத்தி போல அடுத்த செட் படக்கென்று வெளியே வந்து எட்டிப்பார்க்கும்.
தாவரம் அரைக்க..மாமிசம் கிழிக்கும் ..பல்லார்..!
சாப்பாட்டுக்கேன்றே தனிதனியா பல் உண்டாமே? அட ஆமப்பா..நாம சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான்.. நமக்கு இருக்கிற பல் அமைப்பும். தாவரங்களைச் சாப்பிட என்றால் அதனை அரைத்து சாப்பிட வேண்டும். அதற்காக அவர்களுக்கு ( herbivores )பலமான தட்டையான, அகலமான கடைவாய்ப் பற்கள்(molars) வேண்டும். இவர்களுக்கு கிழிக்கும் கோரைப்பல்/சிங்கப்பல் தேவையே இல்லை. இல்லை மாமிசம், இறைச்சி மட்டுமே வெட்டுபவர்களா (carni vores) ..அப்படீன்னா, உங்களுக்கு அதனைக் கிழித்து சாப்பிடும்படியான கோரைப்பல்/சிங்கப்பல்(canine teeth ) கட்டாயமாய் வேண்டும். அப்படீன்னா, உங்கள் உணவுக்குத் தகுந்த மாதிரிதானே பல்லின் அமைப்பும் வகையும். என்றால் இப்போது ஒத்துக் கொள்வீர்களா? இடைப்பட்டவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் இரண்டையும் உண்பவர்கள்(omnivores //ரெண்டும்கெட்டான்) என்றால், வெட்டும் பல் (incosors ) கோரைப்பல், மற்றும் கடைவாய்ப்பல் எல்லாம் வேண்டும்.

உணவு முறையின் வரலாறு சொல்லும் பல்..!
அம்மாடியோவ்.. அப்படீன்னா, நாம் எப்படி சாப்பிட்டோம், என்ன சாப்பிட்டோம், என்ன மாதிரி வாழ்ந்தோம் என்ற நமது முன்னாள் சரித்திரம் எல்லாம் இப்ப நமக்கு இருக்கிற இந்தப் பற்கள் வழியாகத் தெரியும் என்கிறீர்களா? நமது உணவு விஷயத்தை நம் பற்கள் அறிவியல், பரிணாம ரீதியாக சும்மா புட்டு புட்டு வைத்துவிட்டது. நாம இனி உணவு விஷயத்தில் ஏமாற்ற முடியாது இல்லையா? அதுசரி நமக்கு இப்ப, வெட்டும்பல் , கோரைப்பல், கடைவாய்ப்பற்கள் எல்லாம் இருக்கே.. அப்படீனா..? நாம் முன்பு அனைத்தையும் வெட்டியவர்கள் தான். .இப்பத்தான்.இப்படி நான் pure vegetarian னாக்கும்.. நான் மாமிசமே சாப்பிட மாட்டேன்.. தாவர சங்கமம் மட்டுமே சாப்பிடுவேன்..என்று சொல்வதெல்லாம் ஒரு டுமீல்.. ஒரு பம்மாத்துதான். அம்புட்டுதானே..
பல்லின் கண்டுபிடிப்பும், மனித நகர்வும்..
நண்பா.. பல் சம்பந்தமா இன்னொரு கதையும் , அதுவும் பரிணாமம் பற்றியது தான் வருகிறதே.. இப்ப சமீபத்துலே, சீனாவிலே, கொஞ்ச பற்கள், அதாம்பா 47 எண்ணிக்கையில் கிடைச்சுதே.. அது கூட மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்து ஆசியா நோக்கி சென்ற நகர்வும், அதன் பதிவுகளின் காலக்கெடுவை.. மாற்றி அமைப்பதாக் உள்ளன என்று 2007ல் கண்டுபிடித்த, scientific journal Nature ல் வந்த செய்திகள் மனிதனின் துவக்க கால நடைபயண தேதிகளை, ஆண்டுகளை மாற்றி அமைப்பதாக உள்ளன. எவ்வளவு தெரியுமா?நாம் நினைத்ததை விட சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு பயணப்பட தொடங்கி விட்டானாம் .
மனித பற்களும் ..வாழ்ந்த விலங்குகளும்..!
சீனாவின் 47 பற்கள் சொல்லும் கதை/வரலாறு என்ன தெரியுமா? புதை படிமமான ஒரு 47 மனித பற்கள், தென் சீனாவின் டாசியன் பகுதியில் (Daoxian region of southern China) ஒரு பெரிய கட்டியான சுண்ணாம்பு பாறை குகைக்குள் கிடைத்தன. மனித பற்கள் மட்டும் கிடைக்கவில்லை. அத்துடன், மனிதர்களுடன் பழகிய,/கொண்டு வந்த ஹைனா (hyena) வின் மிச்சச் சொச்சங்கள், இன்று அழிந்து போன பாண்டாஸ் (giant pandas ) என்ற பாலூட்டிகள் மற்றும் ஏராளமான விலங்குகளின் படிமங்களும் கிடைத்தன. ஆனால் அங்கிருந்து எவ்வித கல் கருவிகளும் கிடைக்கவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் விஷயம், மனிதன் தனியாக குகைகளில் வாழவில்லை, அவன் அனைத்துவகை விலங்குகளோடும் இயைந்தே வாழ்ந்தான் என்பதே… எப்படி, ஒரு பல் என்பது மனித பரிணாமம் மற்றும் பரிமாணத்தையே மாற்றி விட்டது பார்த்தீர்களா?
முதல் பயணம்.. முன்னரே..!
மேலும் அங்கு கிடைத்துள்ள பற்களின் அமைப்பு புதிய நவீன மனிதன் போன்று இருந்தாலும், அவை பழையவையே என்பதும் தெரிந்தது. அத்துடன் அங்கு குகையின் பொங்கூசிப் பாறை/கசிதுளிப்படிவு/சுண்ணக்கல் புற்று போன்றவற்றை (stalagmites) யுரேனியம் மூலம் ஆராய்ந்ததில், அவற்றின் வயது 80,000 ஆண்டுகள் என்றும் அறியப்பட்டது. அங்கு கிடைத்த பற்களின் 1,20,000 ஆண்டுகள் என்றும், மேலும் அங்குள்ள வேறு சிலபுதைபடிம விலங்குகள் இவை பிலிஸ்டோசீன் (Pliestocene period ). காலத்தவை என்றும் தெரிவிக்கின்றன. அப்படி எனில், மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து, இப்போது நாம் நினைத்ததை விட, 20,000 ஆண்டுகள் முன்பே பயணப்பட்டது எனபது இதன் மூலம் தெரிகிறது.
இதிலிருந்து நமக்கு கிடைக்கும் இன்னொரு கொசுறுத் தகவல், என்ன தெரியுமா? கொஞ்சம் ஆச்சரியமானதுதான்.மனிதன் ஆப்பிரிக்காவிலிருந் து கிளம்பி, அருகிலுள்ள ஐரோப்பா செல்லாமல், நேராக ஆசியா வந்துவிட்டான்.பின்னரே ஐரோப்பா சென்ற விஷயம். காரணம் அங்குள்ள மக்கள் தொகை நெருக்கடியும் , உணவுக்கான போட்டியும் கூட.
மரப்பல் வாஷிங்டன்..!
பல் பற்றிய இன்னொரு சுவையான தகவல் தெரிந்து கொள்ளலாமா?
ஜார்ஜ் வாஷிங்டன் பல் வியாதியால் அவதிப்பட்ட பின்னர் பல விதமான பொய்ப்பல்/மாற்றுப்பற்களைப் பயன்படுத்தினாராம். முக்கியமாக, தங்கம், வெள்ளி, ஈயம், தந்தம் போன்ற பொருட்களை மாற்றுப் பல்லாக பயன்படுத்தினராம். அவர் மரத்தாலான பல்லை பயன்படுத்தவில்லை என்றாலும், அவரின் மரப்பல் உலகப் பிரசித்தம். மரப்பல் பற்றி ஏராளமான தேடல், தகவல்கள் உள்ளன. அவர் காண்டாமிரகத்தின் பல்லைக் கூட வைத்திருந்தாக பதிவுகள் சொல்லுகின்றன. அபப்டி எனில் எப்படிப்பட்ட மனிதர் இவர்?
பல்லுக்கு நகை போட்ட மாயன்கள் ..!
உலகில் மனிதர்கள் ஆதிகாலத்தில் அணிகலன்களை கழுத்தில் அணிந்தனர். மனித இனம் பயன்படுத்திய முதல் நகை என்பது, நத்தையின் ஓடுதான். சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் நத்தையின் ஓடுகளைக் கோர்த்து கழுத்தில் நெக்லசாக அணிந்திருந்தனர். ஆனால்..பல்லுக்கு நகை பூட்டிய மனிதர்கள் பற்றி தெரியுமா? சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் நண்பா. மாயன் நாகரிகத்தில், மாயன்கள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் தங்களின் பற்களுக்கு, மரகதம், இரத்தினம், தங்கம் போன்றவற்றை, பல்லில் துளையிட்டு, பற்கள் உடையாமல் கன கச்சிதமாக, துளை போட்டு, நிபுணத்துவத்துடன் பொருத்தினர். பற்களுக்கு நகை போட்டு அழகு பார்த்தவர்கள் இவர்கள் மட்டுமே. அதுவும் ஆண் மட்டுமே பல்லுக்கு நகை போட்டுக்கொண்ட மனிதர்கள் .
பல்லா..பல்லா இது..
முதலைகளின் பற்களின் எண்ணிக்கை 3,000 அதன் ஆயுசுக்கும்
குழந்தைகளின் தாடையில், தாற்காலிக பல் மற்றும் நிரந்தரப் பல் என இரண்டு வரிசையில் பற்களை இருக்கும்.
நார்வேல் என்ற திமிங்கலத்தின் கொம்பு .. நிஜமாகவே பல்தான்
பொதுவாக நிறையபேர் பல் கீழே விழுவது போல் கனவு காண்பார்கள்
யானையின் தந்தம் என்பது அதன் முன் வெட்டும் பற்களே.. ஆப்பிரிக்கா யானையின் தந்தத்தின் நீளம் 10 அடி..எடை..90 கிலோ.
நிஜப்பல்லில் செய்யப்பட்ட ரோமன் கட்டிடக் கலை.
19ம் நூற்றாண்டில், பொய்ப்பல் இறந்து போன போர்வீரர்களிடமிருந்து எடுத்து பொருத்தப் பட்டது.
முன்பு வாழ்ந்த saber பல் புலிகள் இன்று அழிந்துவிட்டன.