ஆப்பிரிக்கா கண்டத்தின் வடகோடியில் எகிப்துக்கருகில், அட்லஸ் மலையின் வடக்கு, தெற்கு இரு புறமும் பரவியிருக்கிறது அல்ஜீரியா. இதன் வடக்கில் மத்தியதரைக் கடலும், தெற்கில் ஸஹாரா பாலைவனமும் சூழ்ந்துள்ளன. பிரான்சின் காலனிய நாடான அல்ஜீரியாவில் பிறந்த ஆல்பர்ட் காம்யு சிறந்த நாவலாசிரியர், தத்துவஞானி, பத்திரிக்கையாளர் என்று பல்துறைகளிலும் வெற்றி கண்டவர். அல்ஜீரியா பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்த காம்யு இருத்தலியல்வாதி (Existentialist) என்றழைக்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத காம்யு உலகப் போருக்குப் பிந்திய சூழலில் பெரிதும் பேசப்பட்ட “அப்சர்டிஸம்” (Absurdism) எனும் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவராகவே தெரிந்தார்.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, அர்த்தமற்ற, வாழ்வதற்கான நியாயங்களை இழந்த, குழப்பமானதொரு நிலைமையைக் குறித்திடும் தத்துவமே ’அப்சர்டிசம்’ என்பதாகும். ஆரம்பத்தில் கிறித்துவ தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த காம்யு பின்னர் நீட்ஷே, ஆர்தர் ஸ்கோபன்ஹோயர் போன்றோரின் நாத்திகம் நோக்கி நகர்ந்தார். புனைகதையையும், தத்துவத்தையும் ஒருங்கிணைத்த டாஸ்டாவிஸ்கி, ஃப்ரான்ஸ் காஃப்கா, ஸ்டெந்தால், போன்ற படைப்பாளிகள் காம்யுவை ஆகர்சித்தனர். இளம் வயதில் கால்பந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
கால்பந்தாட்டம் கற்றுக் கொடுத்த அறங்களான கூட்டு முயற்சியும், சுய கட்டுப்பாடும் தன்னுடைய வாழ்வியல் கோட்பாடுகளுக்கு வழிவகுத்தன என்று நம்பினார். ஆல்பர்ட் காம்யு 1957இல் தன்னுடைய 44ஆம் வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். அல்ஜீரியாவின் விடுதலைக்கான போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாவிட்டாலும், அல்ஜீரிய விடுதலைக்கு ஆதரவாக நின்றார். அதன் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். அல்ஜீரியாவில் வாழும் அரேபிய மற்றும் பெர்பெர் இன மக்களை கொடூரமாகச் சுரண்டிய பிரான்ஸ் அரசைக் கடுமையாகச் சாடினார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியப் படை பிரான்ஸை ஆக்கிரமித்த போது பாரிசில் இருந்த காம்யு பிரெஞ்சு படையின் போர்ச் செய்தியாளாராக இருந்தார்.
“காம்பேட்” என்ற இதழின் தலைமை ஆசிரியராக இருந்து போரின் கொடுமைகளையும், பாசிசத்தின் வன்மத்தையும் கட்டுரைகளாக எழுதி அம்பலப்படுத்தினார். “ஜெர்மன் நண்பருக்கு எழுதும் கடிதம்” என்ற தொடரில் ஜெர்மனிக்கு எதிரான போரின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தி நான்கு கடிதங்களை எழுதினார். இதனால் பிரபலமடைந்த காம்யு உலகெங்கிலும் பயணித்து பாசிசக் கொடுமைகள் பற்றி விளக்கவுரையாற்றினார். 1950களிலேயே ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தியதோடு, ஐரோப்பா ஒன்றியமாக இணைந்திட வேண்டும் என்றும் பேசினார். குறுகிய தேசிய உணர்வுகளையும், எல்லைகளையும் கடந்து ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்தால் மட்டுமே வளர்ச்சியும், அமைதியும் சாத்தியமாகும் என்றார்.
இடதுசாரி கொள்கையில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த காம்யு சோவியத் யூனியனை ஆதரிக்கவில்லை. ஸ்டாலின் கால கெடுபிடிகளை காம்யு கடுமையாக விமர்சித்தார். அல்ஜீரியா கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தபோது கட்சியின் நாடகப் பிரிவில் இணைந்து “தொழிலாளர்களின் நாடக மேடை” என்ற கலைப்பிரிவினை இயக்கினார். கட்சியிடம் ஏற்பட்ட கருத்துமுரண் காரணமாக கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். ”அல்ஜீரியா குடியரசு” பத்திரிக்கையில் ஐரோப்பாவைப் பீடித்திருக்கும் பாசிச நோய் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதினார். பிரான்சு அரசு காலனிய நாடுகளின் மீது தொடுத்த அடக்குமுறைகளைக் கடுமையாகத் தாக்கி எழுதியதால் பத்திரிக்கை தடைசெய்யப்பட்டது.
இதனால் ”பாரிஸ்-மாலை” என்ற பத்திரிக்கையின் ஆசிரியரானார். இக்காலத்தில் அவரின் முதற்கட்ட படைப்புகளான ‘அந்நியன்’ நாவலையும், ”சிசிஃபஸ் மாயை” என்ற தத்துவார்த்த கட்டுரையையும், ‘காலிகுலா’ என்ற நாடகத்தையும் எழுதினார். இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது காச நோயால் பாதிக்கப்பட்டு ஆல்ப்ஸ் மலையில் ஓய்வெடுக்கச் சென்றார். இச்சமயத்தில் ‘தி பிளேக்’ என்ற நாவலும் ’தி மிஸண்டர்ஸ்டாண்டிங்” என்ற நாடகமும் எழுதப்பட்டன. நோயிலிருந்து குணமானதும் பாரிஸ் வந்து தத்துவ அறிஞர் சார்த்தர, பெண்ணியலாளர் சிமன் தி புவா, ஆன்ரே பிரெட்டன் போன்ற அறிவுஜீவிகளின் நட்பில் திளைத்தார்.
போருக்குப்பின் பாரிசில் குடியேறி “தி ரெபெல்” நாவலை எழுதினார். கம்யூனிசத்தைத் தாக்கி எழுதப்பட்ட இந்நாவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சார்த்தர போன்ற இடதுசாரிகளின் நட்பை இழக்க நேர்ந்தது. மரணத்தைப் பற்றி அவர் எழுதிய “மகிழ்ச்சியான மரணம்” என்ற நாவலும், “முதல் மனிதன்” என்ற அவர் சுயசரிதையும் 1960இல் வெளியாயின. அவர் முன்மொழிந்த இடதுசாரிக் கொள்கைகள் இன்று நவீன மார்க்சீயவாதிகளால் கொண்டாடப்படுகின்றன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு சோசலிசக் கட்டுமானம் பற்றி முன்னெழும் விவாதங்களுக்கு காம்யுவின் சிந்தனைகள் பெரிதும் உதவுகின்றன.
ஆல்பர்ட் காம்யுவின் காத்திரமான படைப்பாகத் திகழ்வது ‘தி பிளேக்’ நாவலாகும். தொற்று நோய்கள் கொண்டு வரும் பேரழிவுகள் குறித்த பதிவுகள் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. இத்தாலியில் தொற்று நோய் தாக்கியபோது நோய்க்குப் பயந்து ஃப்ளாரன்ஸ் நகரைவிட்டு வெளியேறி தூரத்திலிருக்கும் வில்லாவில் எழு பெண்களும் மூன்று ஆண்களும் குடியிருக்கிறார்கள். தங்களின் அயர்ச்சியைப் போக்கிட ஒவ்வொருவரும் பத்து கதை சொல்கிறார்கள். பதினான்காம் நூற்றாண்டில் கியோவினி பொக்காச்சியோ என்பவர் இந்நூறு சுவையான கதைகளையும் தொகுத்து ’டெக்கமரான்’ என்ற தலைப்பில் நூலாக்கி உள்ளார்.
டேனியல் டீஃபோ என்ற ஆங்கில நாவலாசிரியர் இங்கிலாந்தில் பதினான்காம் நூற்றாண்டில் மக்களைக் கொன்று குவித்த Black Death என்றழைக்கப்பட்ட காலரா தொற்று நோய் பற்றிய அன்றாடக் குறிப்புகளை ’தி ஜர்னல் ஆஃப் தி பிளேக்’ என்ற நூலாக எழுதியுள்ளார். சேக்ஸ்பியரின் பல நாடகங்களிலும் பிளாக் டெத் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேரி ஷெல்லி எழுதிய ‘தி லாஸ்ட் மேன்’ எனும் அறிவியல் புனைகதை உலகம் தொற்று நோயால் அழியவிருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறது. போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் சரமாகோ எழுதிய ’தி பிளைண்ட்னஸ், டான் பிரவுன் எழுதிய ‘இன்ஃபெர்னோ” என்று நிறைய இலக்கியங்கள் மனித இனத்தைத் தாக்கிச்சென்ற தொற்றுநோய்கள் பற்றி பேசுகின்றன.
இந்தியாவிலும் கன்னடம் மொழியில் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய ‘சம்ஸ்காரா’ பிளேக்நோய் தாக்கிய ஒரு சிற்றூரில் நடக்கும் நிகழ்வை மையப்படுத்திய நாவலாகும். தமிழிலும் வை.மு.கோதைநாயகி அம்மாளின் ‘ஜகமோகினி’ பத்திரிக்கையில் பிளேக் குறித்து காப்டன் என்.சேஷாத்ரிநாதன் எழுதிய கட்டுரையும், டாக்டர் வி.சூ.நடராஜன் எழுதிய ’எலிகள் மகாநாடு’ என்ற சுவாரசியமான உரையாடலும் உள்ளன. மலையாளத்தில் தகழி சிவசங்கரபிள்ளையின் ’தோட்டியின் மகன்’ நாவலில் பிளேக் குறித்த பதிவு உள்ளது. வங்கத்தில் மருத்துவர் தாரா சங்கர் எழுதிய ‘ஆரோக்கிய நிகேதனம்’ எனும் நாவலில் பிளேக் குறித்தும், அதற்கான மருத்துவ தீர்வுகள் பற்றியும் அலசப்படுகிறது.
காம்யுவின் ’தி பிளேக்’ நாவல் கதையை தன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர் சொல்லிச் செல்கிறார். நாவலின் இறுதியில்தான் கதைசொல்லி யார் என்பதை அறிகிறோம். தான் நேரில் பார்த்த சம்பவங்களை மட்டுமே நாவலில் பதிவு செய்வதாகவும், சிறிதும் அகவயப்படாமல் உள்ளதை உள்ளபடியே விவரித்து இருப்பதாகவும் வாக்குறுதியளிக்கிறார். இந்நாவல் காட்சிப்படுத்தும் பல விஷயங்கள் இன்று நாம் எதிர்கொள்ளும் கோவிட்-19 நோய் ஏற்படுத்தும் கொடுமைகள் போல் இருப்பது வியப்பளிக்கிறது. கோவிட்-19 சீனாவின் ஊஹான் நகரத்தில் துவங்குகிறது. தி பிளேக் நாவலில் தொற்று நோய் அல்ஜீரியாவின் ஒரான் எனும் கடற்கரையோர நகரில் தொடங்குகிறது.
ஊஹான் நகரில் கோவிட்-19 நோயின் அறிகுறியைக் கண்டறிந்த மருத்துவரின் எச்சரிக்கையை அதிகாரிகள் அலட்சியப்படுத்துகிறார்கள். அதேபோல் தி பிளேக் நாவலில் ஒரான் நகரின் மருத்துவர் ரியூ ஊரில் பலரும் பிளேக் நோய்க்கு ஆளாகியிருப்பதைத் தெரிவிக்கிறார். அதன் ஆரம்ப அறிகுறியாக எலிகள் செத்து விழுகின்றன. எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் தொற்றும் ஆபத்திருப்பதை மருத்துவர் ரியூ நகர சுகாதார அதிகாரிகளிடம் சொல்லி தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார். ஆனால் அதிகாரிகள் அலட்சியம் செய்கிறார்கள். பிளேக் ஊரெங்கும் பரவுகிறது. டாக்டர் ரியூவின் மனைவி வேறொரு நோய்க்கு ஆளாகி சானடோரியத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்டர் ரியூ தன் மனைவியைப் பார்ப்பதற்காக புறப்படும் சமயத்தில் நோய்த் தாக்கு ஏற்படுவதால் தன்னுடைய பயணத்தை தள்ளி வைக்கிறார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலைமையின் தீவிரத்தன்மையை உணராதிருப்பது கண்டு டாக்டர் ரியூ அதிர்ச்சி அடைகிறார். ஒரான் மக்கள் தங்களை ஆள்பவர்களைப் போலவே சிறிதும் அக்கறையின்றி இருக்கின்றனர். நெருக்கடி காலத்தில் இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு, சமூகப் பொறுப்புணர்வு ஏதுமின்றி தங்கள் அன்றாட வாழ்வின் சுகங்கள் எதையும் இழப்பதற்குத் தயாராக இல்லாமல் மக்கள் வாழ்கிறார்கள். ரியூ நிலைமைகளை விளக்கி பாரிசுக்கு கடிதம் எழுதுகிறார். காலனியின் துயரங்கள் பற்றி எவ்வித அக்கறையுமின்றி தேவைப்படும் மருந்துகளையும் நீண்ட தாமதத்திற்குப் பின்னரே அனுப்புகிறார்கள்.
அதற்குள் அதிக அழிவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஒரான் நகரின் பாதிரியார் பென்லோ தேவாலயத்தில் நற்செய்தி கூட்டம் நடத்துகிறார். ஒரான் நகர மக்கள் செய்த பாவங்களுக்கு கடவுள் அளிக்கும் தண்டனைதான் தொற்று நோய் என்று சொல்கிறார். மக்களின் பாவங்களுக்கு கடவுள் கொடுக்கும் சம்பளம்தான் நோயும் அதனைத் தொடரும் மரணமும் என்று பாதிரியார் சொல்வது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக அமையவில்லை என்பதறிந்து டாக்டர் ரியூ வேதனைப்படுகிறார். நோயினால் பாதிக்கப்பட்ட ஒரான் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வுடன் அல்லும் பகலும் பாடுபடும் டாக்டர் ரியூ தன் மனைவி இறந்த செய்தி கேட்டு துயருகிறார். மனைவியின் இறுதி நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள முடியாத சோகம் அவரை வாட்டுகிறது.
அன்பு மனைவியை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டாமலே போய்விடுகிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் அயராது உழைத்த அவரின் உடல் தளர்ச்சி அடைகிறது. தன்னுடைய சாதாரண ஆசைகள் அனைத்தையும் துறந்து உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டது மன நிறைவைத் தருகிறது. ஒரான் நகர மக்கள் நோயிலிருந்து விடுபடும்போது மகிழ்ச்சியில் கொண்டாடுகிறார்கள். தொற்று நோயை வென்றுவிட்டதாக நினைக்கும் அவர்களின் மகிழ்ச்சி எவ்வளவு அர்த்தமற்றது என்பதறிந்த டாக்டர் ரியூ அவர்களின் அறியாமை கண்டு வருந்துகிறார். கண்களுக்குப் புலப்படாத இக்கிருமிகளுக்கு அழிவே கிடையாது. அவர்களின் வீடுகளுக்குள், அல்லது அவர்களின் உடல்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இந்தக் கொடிய நுண்ணுயிர் மீண்டும் வந்து தாக்கும் என்பதை அறியாத அப்பாவிகளின் சந்தோஷம் அர்த்தமற்றது.
போர்களும், தொற்று நோய்களும் மனித வாழ்வின் நீங்காத துயர்கள் என்பதை அறியாத மக்களின் வெகுளித்தனம் கண்டு நகைக்கிறார். நாவலின் முடிவில் டாக்டர் ரியூதான் கதை சொல்லி என்பது தெரிகிறது. சம்பவங்களை திரிபுகள் ஏதுமின்றி விவரித்து நாவலின் ஆரம்பத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் என்பதை வாசகர்கள் அறிகிறோம். நாவலின் நாயகன் டாக்டர் ரியூ குரலில் பேசுவது காம்யுதான் என்பதையும் வாசகர்கள் அறிகிறோம். பிரான்சில் அன்றிருந்த ஹிட்லரின் பாசிச கொடுங்கோல் ஆட்சியையும் ஒரு வகையான நோயாகவே காம்யு கருதுகிறார்.
ஹிட்லர், முசோலினி போன்றவர்களின் கொடுங்கோல் ஆட்சியின் துயரங்களை வரலாறு தோறும் மனித சமூகம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறது. தொடர்ந்து வரும் போர்களும், தொற்று நோய்களும் மனித வாழ்வு எவ்வளவு அர்த்தமற்றது என்பதன் அடையாளங்கள். நிச்சயமற்ற, நிரந்தரமற்ற, ’அப்சர்டான’ இவ்வுலகில் மனிதர்கள் அன்புடனும், ஆதரவுடனும் வாழ்ந்திட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் கொடிய பாடங்களே தொற்று நோய்கள் என்று இந்நாவல் மூலம் காம்யு உணர்த்தியுள்ளார். இருபத்தோராம் நூற்றாண்டில் உலகெங்கிலும் வலதுசாரி அரசியலும், பாசிச அபாயங்களும் சூழ்ந்துள்ள நிலையில் காம்யுவின் தி பிளேக் நாவல் மேலும் முக்கியத்துவம் பெருகிறது.
– பெ.விஜயகுமார்.
அன்றைய அரசியலின் பின்புலம், நாவலாசிரியரின் பின்புலம், நாவலின் பின்புலம் என அர்த்தங்களைச் சுமந்து விரிகிறது அறிமுகம். அருமை.
நல்ல அறிமுகத்தோடு கதையைச்சொன்ன விதமும் முடித்த விதமும் அருமை
Timely article introducing one of the world’s greatest writers to the present generation. This generation should be introduced to revolutionary thinkers writers and activists to develop a broader perspective about the society. This lockdown period should be exploited for the above purpose. Prof Vijayakumar has proved himself as an avid researcher in giving a thumbnail sketch of the writer his life and works in relevance to the current scenario. Congratulations sir
நோய்க்கூறுகள் திரும்பத் திரும்ப வரலாற்று படிமலர்ச்சியில் தன்னை சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொண்டு பெருந்தொற்றாய் பரவுவது போல வலதுசாரி அரசியலும் தன்னை புதைமேட்டில் இருந்து புதுப்பித்துக்கொண்டு புதுப்புது நிறத்தோடு அவதாரமெடுத்துக்கொண்டு தான் இருக்கிறது என்கிற வரலாற்று ஏதார்த்தை நாவலின் பின்புலத்தின் ஊடாக காம்யூ குறிப்பிட்டு காட்டியதை போலவே,தற்கால தகிப்பின் உக்கிரத்தையும் நிகழ்கால அரசுகளின் அலட்சியத்தையும் கட்டுரையின் முடிவில் கோடிட்டு காட்டியிருப்பது சிறப்பு.