குட்டி இளவரசன் (The Little Prince) – நூல் அறிமுகம்
இருநூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த குட்டி இளவரசன் முதலில் எழுதப்பட்டது பிரெஞ்சு மொழியில் தான். இந்த நூலின் ஆசிரியரான அந்த்வான் து எக்சு பெரி 1900 ஆம் ஆண்டு லியோன் நகரத்தில் பிறந்து பிறகு ஸ்விட்சர்லாந்தில் படித்தார். 1921 இல் விமானப்படையில் ராணுவ சேவைக்காக சேர்ந்து விமானம் ஓட்டவும் கற்றுக் கொண்டார். Southern mail, Night flight, wind, sand and stars ஆகிய சிறந்த புத்தகங்களையும் எழுதியுள்ளார். அனைத்துமே அவருடைய விமானத்துறை அனுபவம் வாயிலாக எழுதப்பட்டவை. இரண்டாவது உலகப்போரில் விடுதலை ராணுவத்தில் இணைந்தார். அப்போது கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற போது அவருக்கு என்ன ஆனது என்று அறிந்துக் கொள்ள முடியாதபடி மறைந்து போனார். உலகப் போர் சூழலில் அவர் எழுதிய war pilot, Letter to a Hostage, The little prince என்ற மூன்று புத்தகத்தில் ஒன்றுதான் இந்த குட்டி இளவரசன்.
ஒரு குழந்தை, சிறு வயதிலேயே எதில் விருப்பம் அதிகமாக உள்ளது? என்ன திறமை உள்ளது? என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அதை சரியாக தெரிந்துக் கொண்ட பெரியவர்கள் அந்த குழந்தையை அதன் வழியே வழிநடத்தி ஒரு சிறந்த மனிதராக உருவாக்கி விடுவார்கள். ஆனால் சிலர், உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? இது உனக்கு சரியாக வரவில்லை என்று எதிர்மறையான கருத்தைச் சொல்லி ஆரம்பத்திலேயே குழந்தையினுடைய வளர்ச்சிக்கு தடைப் போட்டு விடுவார்கள். அப்படி இந்த நூலினுடைய ஆசிரியரும் ஒரு படத்தை வரைந்து பெரியவர்களிடம் காண்பிக்கும் பொழுது அது என்னவென்று பெரியவர்களுக்கு தெரியவில்லை. விளக்கி சொன்ன பிறகு, இதெல்லாம் தேவையா? ஒழுங்காக புவியியல், கணிதம், இலக்கணம் என எதையாவது படி என்று புத்திமதி சொன்னதும் ஓவியம் வரைவதை 6 வயதிலேயே விட்டுவிட்டதாக சொல்லி இந்நூல் தொடங்கும். ஆனால் வளர்ந்த பிறகோ விமான ஓட்டியாக மாறி இருப்பார்.
ஒருநாள் அவர் தனியாக பயணம் செய்த விமானம் பழுதின் காரணமாக சஹாரா பாலைவனத்தில் விழுந்துவிடும். அப்படியான அந்த சூழலில் அங்கே ஒரு சிறுவனை சந்திக்க நேரிடும். அந்த சிறுவனான குட்டி இளவரசனுடன் நடக்கும் நிகழ்வுகளாக இந்த கதை அமைந்துள்ளது.
பாலைவனத்தில் சந்தித்த அந்த சிறுவன் ஒரு ஆடு வரைந்து கேட்பான். விமானம் பழுதாகி விழுந்த இந்த இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் இப்படி ஆடு வரைந்து கேட்கிறானே என்று நினைத்துக் கொண்டு முதலில் மறுத்தாலும் பிறகு அவன் கேட்ட மாதிரியே ஆடு வரைந்து கொடுப்பார். அந்த சிறுவன் வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்திருப்பான் என்பதை அவனுடனான உரையாடலில் தெரிந்துக் கொள்வார். அந்த சிறுவன் வந்த கிரகத்தின் பெயர் பி612 என்று சொல்லி, அதற்கு சொல்லப்பட்ட விளக்கம் மிக அருமை. ஆம்! மனிதர்கள் எப்படியானவர்கள் என்பதற்கான விளக்கம் அது.
பெரியவர்களுக்கு எப்பொழுதும் எண்கள் மீது தான் விருப்பம் என்றும், உதாரணமாக நமது புது நண்பரை பெரியவர்களிடத்தில் அறிமுகப்படுத்தினால்,
உன் நண்பனுக்கு பட்டாம்பூச்சி பிடிக்க தெரியுமா?
குரல் எப்படி இருக்கும்?
என்று கேட்க மாட்டார்கள்.
அவன் வயது என்ன?
அவனுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?
அவன் அப்பாவின் வருமானம் எவ்வளவு?
என்று எண்ணிக்கையை தான் கேட்பார்கள். அதேபோல் என்னிடம் ஒரு அழகான வீடு இருக்கிறது என்றால்,
உன் வீட்டில் பூக்கள் இருக்கிறதா?
தென்றல் வீசுமா?
என்றெல்லாம் கேட்க மாட்டார்கள்.
வீட்டின் மதிப்பு என்ன?
எவ்வளவு பணம் செலவழித்தீர்கள்?
என்று எண்ணிக்கையை தான் கேட்பார்கள். பெரியவர்களுக்கு எண்கள் தான் பிடிக்கும். ஆகவே கிரகத்திற்கு பி 612 என பெயர் வைத்ததற்காக சொல்லப்பட்ட காரணம், மனிதர்களின் பாழடைந்த மனங்களை தான் குறிப்பிடுகிறது.
குட்டி இளவரசன் ஒவ்வொரு கிரகமாக சென்று ஒவ்வொரு கிரகத்திலும் ஒரு மனிதரை சந்தித்து பேசுவான். முதல் கிரகத்தில் ஒரு அரசனை சந்திப்பான். அரசனின் ஒரே எண்ணம் என்னவென்றால் தனது கட்டளைக்கு அனைவரும் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதே! இருவரின் நீண்ட உரையாடலுக்கு பின்பு
“மற்றவர்களுக்கு நீதி சொல்வதைவிட தனக்கு தானே நீதி சொல்லிக் கொள்வது தான் கடினம். உனக்கு நீ சரியாக நீதி சொல்லிக் கொள்ள ஆரம்பித்து விட்டால் நீ தான் சிறந்த ஞானி.”
என்று அரசன் சொல்வதைப் போல் ஒரு நிகழ்வு இருக்கும். இது அனைவருக்குமே பொருந்தும். உண்மையாகவே மற்றவர்களின் பிரச்சனைகளுக்கும் , மனப்போராட்டங்களுக்கும் தீர்வு சொல்லும் நாம், நமக்கென்று வரும் பொழுது குழம்பி விடுவோம். முதலில் நமக்கு நாம் சரியாக இருந்துக்கொள்ள முயல்வோம்.
குட்டி இளவரசன் அடுத்த கிரகத்திற்கு செல்வான். அங்கு ஒரு தற்பெருமை பேசுபவனை சந்திப்பான். அந்த சந்திப்பு நமக்கு உணர்த்துவது, தற்பெருமைக்காரர்களுக்கு மனிதர்கள் எல்லோரும் ரசிகர்கள். மேலும் தற்பெருமைக்காரர்கள் எப்பொழுதும் புகழுரையை மட்டுமே காதில் வாங்கிக் கொள்வார்கள் என்பதே! குட்டி இளவரசனோ பெரியவர்கள் ஏன் இவ்வளவு விசித்திரமானவர்களாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்வான். இதே போல் அடுத்தடுத்த கிரகங்களில் ஒரு குடிகாரன், வியாபாரி, விளக்கு ஏற்றுபவன் என ஒவ்வொருவராக சந்திக்கையில் பெரியவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று மறுபடியும் நினைத்துக் கொள்வான்.
கடைசியாக பூமிக்கு சென்று அங்கு ஒரு நரியை சந்திக்கையில், அதன் மூலமாக அந்த சிறுவன் தெரிந்துக் கொள்வது என்னவென்றால் உலகில் எவ்வளவு பொருட்கள், மனிதர்கள் இருந்தாலும் “நம் இதயத்திற்கு எது நெருக்கமானதோ அதுவே நமக்கு சிறந்தது.” ஏனெனில் நாம் அதை கண்ணால் பார்ப்பதில்லை, இதயத்தால் பார்க்கிறோம் என்பதை தெரிந்துக் கொள்வான். மீண்டும் அந்த விமான ஓட்டியை சந்திப்பான். பிறகு, குட்டி இளவரசன் முழுதாக மறைந்து போவதை போல் இந்த நூல் முடியும்.
குழந்தைகளின் உலகமே தனித்துவமானது. அங்கே எதார்த்தங்களும், உண்மைகளும் மட்டுமே வலம் வரும். அவர்களிடத்தில் பொறாமை, கோபம், கீழ் குணங்கள் போன்ற நஞ்சை வளர்ப்பது சமூகத்தில் வாழும் பெரியவர்கள் தான்.
ஒரு விடயத்தைத் தெரிந்து கொள்ளும் வரை குழந்தைகள் அதையேதான் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருப்பார்கள். சிறுவர்களின் அத்தகைய அறிவுப் பசிக்கு “வாயை மூடு”, “கேள்வி மேல் கேள்வி கேட்காதே” என்று ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடுவதும் பெரியவர்கள் தான்.
இப்படி பலவற்றை நமக்கு உணர்த்தி, நம்மையும் சிந்திக்க வைப்பது என்னவென்றால் பெரியவர்கள் எப்பொழுதும் விசித்திரமானவர்கள் தான் என்று!
நூலின் தகவல்கள் :
நூல் : குட்டி இளவரசன்
ஆசிரியர் : அந்த்வான் து செந்த் எக்சுபெரி
தமிழில் : வே. ஸ்ரீராம், ச. மதன கல்யாணி
வெளியீடு : க்ரியா
விலை : ரூ. 140
பக்கங்கள் : 120
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/kutty-ilavarasan/
நூல் அறிமுகம் எழுதியவர் :
தீபா ராஜ்மோகன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.