The loudest voice of human conscience Saadat Hasan Manto Article By Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.

மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்ட்டோ – உதயசங்கர்



இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,

“இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்ட்டோ . அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”
தன்னுடைய கலையின் மீது எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால் இத்தனை கர்வத்துடன் எழுதமுடியும் அதுதான் சாதத் ஹசன் மண்ட்டோ . உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக் கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான சாதத் ஹசன் மண்ட்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11 – ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள். மண்ட்டோவின் தாத்தா பாஷ்மானியா என்று சொல்லப்படும் காஷ்மீரில் வீடுகளில் வளர்க்கப்படும் சங்தாங்கி ஆடுகளின் கம்பளிரோமங்களை வாங்கி விற்கும் வியாபாரியாக இருந்தார்.

பின்னர் அமிர்தசரஸை நோக்கி குடும்பம் குடிபெயர்ந்தது. மண்ட்டோவின் அப்பா மௌல்வி குலாம் ஹசன் தீவிரமான மத அபிமானியாக இருந்தார். அவர் இரண்டு திருமணம் முடித்து மொத்தம் 12 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். மண்ட்டோ மௌல்வி குலாம் ஹசனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தார். மண்ட்டோ தன்னுடைய மூத்த சகோதரர்களிடம் மிகுந்த பயபக்தியுடன் இருந்தார். ஏனெனில் அவர்கள் அவரைவிட வயது மிகவும் மூத்தவர்களாக மட்டுமல்ல நன்கு படித்தவர்களாகவும் இருந்தார்கள். மண்ட்டோவின் அப்பா கண்டிப்பானவர். சம்ராலாவின் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மண்ட்டோவின் அப்பாவுக்கு கத்தியைப் போன்ற கூர்மையான நாக்கும் கண்டிப்பான வழிமுறைகளும் கொண்டிருந்தார். அதனால் மண்ட்டோ அப்பாவைக் கண்டு எப்போது பயந்து கொண்டேயிருந்தார். அவரிடம் ஏற்பட்ட கலகக்குணத்துக்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மண்ட்டோ. மற்ற குடும்பத்தினருடன் அவ்வளவு நெருக்கமாக இல்லை.

மண்ட்டோவின் அப்பா மண்ட்டோ கஷ்டப்பட்டுப் படித்து, மண்ட்டோவின் மற்ற சகோதரர்களைப் போல வெளிநாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மண்ட்டோவிடம் வளர்ந்து வரும் மதஈடுபாடின்மையையும், மரியாதையின்மையையும் கண்டு மனம் வெதும்பினார். மண்ட்டோவுக்கு வழக்கமான பள்ளிக்கல்வியில் ஈடுபாடில்லை. அவர் இண்டர்மீடியட்டில் இரண்டு முறை தோற்றுப்போனார். அதிலும் குறிப்பாக பின்னாளில் உருது இலக்கியத்தில் சாதனைகள் செய்த மண்ட்டோ உருது மொழிப்பாடத்தில் தோல்வியடைந்தது முரண்நகை. இந்தத் தோல்வியின் விளைவாக அவர் சிற்றின்பக்கேளிக்கைகளில் முழுமூச்சாக இறங்கினார். 1930 – களின் துவக்கத்தில் சூதாட்டம், புகைபிடித்தல், கஞ்சா, சோம்பிக்கிடத்தல், போன்றவற்றில் மூழ்கிக்கிடந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக முஸாவர் பத்திரிகையின் ஆசிரியரான அப்துல் பாரி அலியுடனான சந்திப்பு 1933 – ல் மண்ட்டோவின் இருபத்தியோராம் வயதில் நிகழ்ந்தது.

அவருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அறிமுகமானது. பாரி அலி மண்ட்டோவைச் சந்தித்தபோதே அவருடைய திறமையைக் கண்டு கொண்டார். அவர் மண்ட்டோவின் புரட்சிமோகத்தை இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பினார். அவருக்கு ருஷ்ய இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி ஈடுபாடு கொள்ள வைத்தார். ஆஸ்கார் வைல்டு, மாப்பாசான், விக்டர் ஹியுகோ போன்றவர்களின் கலைத்திறனை அறிமுகப்படுத்தினார். எழுத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற பாதையையும் அவர் காட்டிக் கொடுத்தார். அவர் உடனே லூதியானாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினசரியான மாசாவாத் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அதில் மண்ட்டோ புரட்சிகரக்கவிதைகளையும், கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் செய்யத் தொடங்கினார்.

Image Courtesy: The Indian Wire

விக்டர் ஹியுகோவின் The last days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன் வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934 –ல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னாளில் அவர் அந்த நாட்களைப் பற்றி எழுதும்போது அவரும் அவருடைய நண்பர்களும் அமிர்தசரசின் வீதிகளில் நடந்து போகும்போது ஏதோ மாஸ்கோவில் புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களைப் போல உணர்ந்ததாக எழுதினார். மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார்.

மண்ட்டோ ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரியாகவும், சோசலிஸ்டாகவும் வளர்ந்தார். பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமே கூட அவருடைய படைப்புகளின் மீது விமரிசனங்களை வைத்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

பாரி அலி மண்ட்டோவை அவருடைய சொந்தப்படைப்புகளை எழுதும்படி வற்புறுத்தினார். மண்ட்டோ மிகவிரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார். அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டது.
அவருடைய பாலியகால நண்பரொருவரின் வற்புறுத்தலினால் அலிகாரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சேர்ந்தார். வழக்கம்போல அங்கே அவரால் மாணவனாக சோபிக்கமுடியவில்லை. ஆனால் அங்கேயிருந்த ஒன்பது மாதங்களில் ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.

மண்ட்டோவுக்கு அப்போது இருபத்திமூன்று வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெஞ்சுவலியைக் குறைப்பதற்காக அவர் நாட்டுச்சாராயத்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். ஆனால் போதிய பலன் தராததால் அவர் மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் இப்போது தான் காஷ்மீருக்குப் போனார். காஷ்மீரும் அந்த மக்களும் அவரைக் கவர்ந்தனர். அங்கே தான் ஒரு ஆடு மேய்க்கும்பெண் மீது அவருடைய முதல் வசந்தம் வீசியது.

அவர் அமிர்தசரஸ் திரும்பி அங்கிருந்து லாகூருக்கு பராஸ் என்ற பத்திரிகையில் நிரந்தரவேலை கிடைத்துப் போனார். ஆனால் அந்தப்பத்திரிகையின் தன்மை அவருக்கு ஒத்துவரவில்லை. 1935 – ல் மும்பைக்கு வேலை தேடி வந்தார். முசாவ்விர் என்ற சினிமா வாராந்திரியின் ஆசிரியராகச் சேர்ந்தார். மண்ட்டோ மும்பையைத் தீவிரமாக நேசித்தார். அதன் அழகும் ஒயிலும் ஸ்டைலும் அவரை அப்படியே ஈர்த்து விட்டன. இரண்டுமுரை மும்பையை விட்டு வெளியேறியிருந்தார். ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை செய்வதற்காக, அது குறுகிய காலம், இரண்டாவது முறை பிரிவினைக்குப் பிறகு நிரந்தரமாக மும்பையை விட்டுப் பிரிந்தார். அவர் சாகும்வரை மும்பையின் மீதான காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 1935 – 1947 வரையில் மும்பையிலிருந்த மண்ட்டோ முதலில் சினிமா பத்திரிகையாளராக இருந்து பின்னர் இம்பீரியல் சினிமா கம்பெனியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக சேர்ந்தார். முதலில் அவர் எழுதி வெளியான திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஒரே நேரத்தில் சினிமா அவருக்கு ஆசைகாட்டவும் ஏமாற்றவும் செய்தது. ஆனாலும் அவர் விடவில்லை.

ஒரு சமயம் அவர் சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டே இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், இடையிடையே ரேடியாவுக்கும் பங்களித்துக் கொண்டிருந்தார். அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1940 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவதாக 1942 –ல் அவருடைய கட்டுரைத்தொகுப்பு வெளியானது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு அவர் டெல்லிக்குப் போனார். அங்கே இருந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஆண்டுகளாக இருந்தன. அவருடைய அம்மாவும் அவருடைய மூத்தமகனும் இறந்து போனார்கள். இந்த இரண்டு இழப்புகளும் அவருக்கு பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்நாள் முழுவதும் இழப்பின் துயரம் தொடர்ந்தது.

The loudest voice of human conscience Saadat Hasan Manto Article By Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.
Image Courtesy: Herald

ஆல் இண்டியா ரேடியோவில் அப்போது பேர்பெற்ற இயக்குநராக இருந்த பித்ராஸ் புகாரியுடன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் ஏற்பட்டன. மண்ட்டோவுக்கு மாதாந்திரச்சம்பளம் கிடைத்த வேலை என்பதைத் தவிர மற்றபடி டெல்லியில் மண்ட்டோ மகிழ்ச்சியாக இல்லை. அந்த வேலையைத் துறந்து மீண்டும் மும்பைக்கு வந்தார்.

முதலில் மீண்டும் முசாவ்விர் பத்திரிகையில் சேர்ந்து வேலை செய்து கொண்டே ஃப்ரீலான்சராக திரைப்படங்களுக்கு எழுதினார். 1943 –ல் மும்பையில் ஃபிலிமிஸ்தான் என்ற படக்கம்பெனியில் சேர்ந்தார். அந்தக்கம்பெணி புகழ்பெற்ற பம்பாய் டாக்கீஸிலிருந்து பிரிந்து வந்த அவருடைய நெருங்கிய நண்பர்களான ஷியாம், அசோக்குமார், சேர்ந்து ஆரம்பித்திருந்தார்கள். அந்தக்கம்பெனிக்காக பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குக் கதைகளை எழுதினார்.
நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம். தவிர்க்கமுடியாத பிரிவினையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மும்பையில் திடீர் திடீரென்று கலவரங்கள் வெடித்தன. 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி நாட்டின் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்ட்டோவின் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ்தானுக்குப் போய் விட்டனர். மண்ட்டோவுக்கு மும்பையை விட்டுப் போக மனமில்லை. அவர் இந்தியாவில் இருந்து விடவே விரும்பினார்.

ஆனால் பம்பாய் டாக்கீஸ் நிர்வாகம் இஸ்லாமியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிகழ்வு அவருக்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் திடீரென்று மண்ட்டோ அவருடைய பைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். ஏன் அப்படி அவர் திடீரென்று புறப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உடனே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மண்ட்டோ அவருடைய நினைவோடைக்குறிப்புகளில் மும்பையில் அவருடைய கடைசிநாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை அவருடைய மிக நெருங்கிய நண்பரான புகழ்பெற்ற திரைநட்சத்திரம் ஷியாமுக்கு அர்ப்பணித்திருந்தார்.
” ஒரு நாள் நானும் ஷியாமும் ராவல்பிண்டியிலிருந்து அகதியாக வந்திருந்த ஒரு சீக்கியக்குடும்பத்துடன் இருந்தோம். அங்கே என்ன நடந்தது என்று அவர்கள் விவரித்ததைக் கேட்டபோது திகைத்துப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். அந்தக் கொடூரமான சம்பவங்களைக் கேட்ட ஷியாம் அழுதுவிட்டான். அவனுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு நான் ஷியாமிடம், “நான் ஒரு முஸ்லீம்.. என்னைக்கொல்லணும்னு உனக்குத் தோணலையா..” என்று கேட்டேன். அதற்கு அவன் இறுக்கமாக ”இப்போது இல்லை.. ஆனால் அவங்க இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்களைச் சொன்ன போது எனக்கு அப்படித் தோன்றியது அப்போது நான் உன்னைக் கொன்றிருப்பேன்..” என்று சொன்னான்.

அவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகப் பாதித்தது. அவனைப்போலவே நானும் அவனைக்கொன்றிருக்கமுடியும். அதைப்பற்றி பின்னால் சிந்தித்தபோது இந்தியாவின் மதக்கலவரத்தின் இரத்தப்பாதையின் பின்னாலுள்ள உளவியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. “

கிட்டத்தட்ட இதுவே மண்ட்டோ தன்னுடைய அருமைக்காதலியான மும்பையை விட்டுப்பிரிந்து பாகிஸ்தானுக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பலரும் பலகாரணங்களைச் சொன்னார்கள். புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை வளமாகத் தொடங்கலாம் என்று நினைத்துப் போய் விட்டாரென்றும். எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று போனாரென்றும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் கைவிட்டுச் சென்ற பெரிய பெரிய மாளிகைகளை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்ற செய்தியின் அடிப்படையில் மாளிகை கிடைக்கும் என்று போய்விட்டாரென்றும் அவருடைய அருமையான மனைவி, குழந்தைகளைப் பிரிந்திருக்கமுடியாமல் போய் விட்டாரென்றும், அவர் நேசித்த மும்பை சினிமா அவரை விரட்டி விட்ட விரக்தியில் போய் விட்டாரென்றும்,

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு அவருடைய மறைவு வரை அவர் பாகிஸ்தானில் லாகூரில் இருந்த காலத்தில் மிகத்தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற விகிதத்தில் எழுதியிருக்கிறார். ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையை முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். பல கதைகள் வெவ்வேறு தொகுப்புகளிலும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கின்றன. அந்த நாட்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் மீது துயரத்தின் கருநிழல் இரவாய் கவிந்திருக்க எப்போது வெளிச்சம் வரும் என்று யாருக்குமே தெரியாதிருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன், கைக்கும் வாய்க்குமான வறுமையுடன் மனதின் உணர்வெழுச்சிகளைத் தாங்கமுடியாமல் அதீதக்குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் சாதத் ஹசன் மண்ட்டோ.

The loudest voice of human conscience Saadat Hasan Manto Article By Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.
Images Courtesy: Dawn Images

அவரைத் துரத்திக்கொண்டேயிருந்த பிரமைகளான கரும்பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவும் கொடூரமான கற்பனைக்காட்சிகளிடமிருந்து விடுதலையடையவும் குடியிடம் சரணடைந்திருக்கிறார். அந்தப் பிசாசுகளை குடி வெற்றிகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநலமருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். எப்போதோ மருத்துவர்கள் அவருக்கு மரணஎச்சரிக்கை செய்து விட்டார்கள். இனி குடித்தால் அவ்வளவுதான். உயிருக்கு உத்திரவாதமில்லை. ஆனால் சாதத் ஹசன் மண்ட்டோவும் குடிக்காமலிருக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு மழுங்கடிக்கப்பட்ட, பாவனையான, போலியான, சமூக அக்கறையை முன்வைத்து எழுதத்தெரியவில்லை. அவருடைய கூருர்ணவுகள் சமூகத்தின் அவலங்களைப் பார்த்து தங்களுடைய கூர்மைகளால் அவரையே குத்திக்கிழித்தன. அந்தக்காலத்தில் அவர் கேட்ட, பார்த்த, படித்த ஒவ்வொரு சம்பவமும் அவரைக் கூறுபோட்டன. உணர்வெழுச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்வெழுச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமனப்படுத்தியிருக்கிறார். அதற்குக் குடி தேவையாயிருந்திருக்கிறது.

மண்ட்டோவின் வாழ்க்கையை முன்வைத்து இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மண்ட்டோ– நந்திதா தாஸ் இயக்கத்தில் 2018 –ல் வெளிவந்த திரைப்படம். அதில் மண்ட்டோவின் இந்திய-பாகிஸ்தான் வாழ்க்கை சுருக்கமாக ஆனால் மிகவலிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. மண்ட்டோ– இயக்கம் – சர்மட் சுல்தான் கஸூத் ( SARMAD SULTAN KASOOT ) . அந்தத் திரைப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படம். தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் மண்ட்டோவின் பாகிஸ்தான் வாழ்க்கை மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு படங்களுமே மண்ட்டோவின் கதாபாத்திரத்தை ஓரளவுக்கு நம் கண்முன்னால் கொண்டு வந்திருக்கின்றன. மண்ட்டோவை வாசிக்கிறவர்கள் அந்தத் திரைப்படங்களையும் பார்க்கும் போது இன்னும் கூட அவருடைய கதைகள் கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கும். அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டேயிருந்திருக்கிறது.

அதைவிட அதைக் கண்டும் காணாமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பொறுப்பின்மை, அவருக்குள் ரௌத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து கொண்டேயிருந்தது. அதனால் எப்படிச் சொன்னால் இந்த சமூகத்துக்கு உறைக்கும் என்று ஒவ்வொரு கதையிலும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். எந்தவித அலங்காரமுமின்றி அப்பட்டமாக பச்சையாக எழுதினார் மண்ட்டோ. அப்படி எழுதுவதின் மூலம் மட்டுமே சமூகத்தின் சொரணையை விழிக்கவைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் பொதுச்சமூகம் அவருடைய கதைகளை அப்படிப் பார்க்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரப்பாகிஸ்தானிலும் ஆறுமுறை அவருடைய கதைகளுக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கியிருக்கிறார். ஒரு முறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் மேல்முறையீட்டில் அதிலிருந்து விடுவிக்கவும் பட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தில், “எழுத்தாளனின் உணர்வுகள் காயப்படும்போது மட்டுமே அவன் தன்னுடைய பேனாவைக் கையிலெடுக்கிறான்.. “ என்று ஒரு நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.

அவருடைய காலத்தில் ஒரு பக்கம் அரசாங்கம் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றப்படுத்தியது என்றால் இன்னொருபக்கம் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் மற்ற இலக்கியவாதிகளும் கூட அவரை பிற்போக்குவாதியென்றும் ஆபாச எழுத்தாளரென்றும், இறந்தவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவரென்றும், தூற்றியிருக்கிறார்கள். அவருடைய கதைகளைப் பற்றிய விமரிசனங்களுக்கு,“என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..”என்று நெஞ்சுரத்துடன் மண்ட்டோபதிலளித்திருக்கிறார்.

ஏனெனில் மண்ட்டோ மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளை பதிவு செய்தவர். மண்ட்டோமட்டுமே மனிதனுக்குள்ளிருந்த கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதை தன்னுடைய படைப்புகளில் அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார். சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள், என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மண்ட்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்ட்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுத்தியவர் மண்ட்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்ட்டோ. சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும், போலித்தனமான ஒழுக்கக்கோட்பாடுகளையும் கேள்வி கேட்டவர் மண்ட்டோ.

The loudest voice of human conscience Saadat Hasan Manto Article By Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.
Image Courtesy: Free Press Journal

அவருடைய படைப்புகளின் கலையுணர்வு ஆக்ரோசமானது ஆனால் கலையின் பூரணத்துவம் கொண்டது. அவருடைய கலையில் கலகக்குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது ஆனால் அதில் கலையின் மகத்துவம் பொங்கிக்கொண்டேயிருந்தது. அவருடைய கலையுணர்வு உரத்தகுரலில் பேசுவது ஆனால் அந்தக்குரலில் பிரச்சாரம் கிடையாது. அவருடைய கலையுணர்வு நேரடியானது ஆனால் நுட்பங்கள் நிறைந்தது. அவருடைய கலையுணர்வு யதார்த்தமானது ஆனால் யாரும் அதுவரை போகாத வழிகளில் சென்றது. அவருடைய கலையுணர்வு வாழ்க்கையின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகமே பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.

ஒருவகையில் மண்ட்டோவின் எழுத்துகள் பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம். நாகரீக சமூகம் நெருக்கடிக்காலங்களில் எப்படி மனிதனுக்குள் இருக்கும் கொடூரகுணங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதற்கான உளவியல் பாடங்கள். குற்றவியலுக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள், நியாயங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிப்பார்த்தவர் மண்ட்டோ. அவருடைய படைப்புகளின் வெக்கை நமது சிவில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னையே விசாரணை செய்யத் தூண்டுபவை.

இருபத்திமூன்று வயதில் அவர் முதல் கதையை எழுதினார். அதன்பிறகான இருபது வருடங்களில் இருபத்தியிரண்டு சிறுகதை தொகுப்புகளையும், ஒரு நாவலையும், ஐந்து ரேடியோ நாடகங்களின் தொகுப்பையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும், இரண்டு நினைவோடைத் தொகுப்புகளையும் தன்னுடைய நாற்பத்திமூன்று வயதுக்குள் எழுதியிருக்கிறாரென்றால் அவருடைய எழுத்தின் வீரியம் நமக்குப் புலப்படும்.

மண்ட்டோ பாகிஸ்தான் போனபிறகு எழுதப்பட்ட கதைகளெல்லாம் பாகிஸ்தானில் அவருடைய மனவெழுச்சியும் சிந்தனைகளும் எப்படியிருந்தன என்பதற்கான சாட்சி. அவருடைய வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று கூடச் சொல்லலாம்.

மண்ட்டோவுக்கு கிரிக்கெட்டின் மீது காதல் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஏற்கனவே லிவர் சிரோசிஸ் நோயினால் மரணத்தின் விளிம்பிலிருந்த மண்ட்டோஅன்று பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துவிட்டு மன அமைதியின்றி தத்தளித்திருக்கிறார். குஜராத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் ஐந்தாறுபேர் கடத்திக்கொண்டு போய் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக குளிர் இரவில் நடுரோட்டில் விரட்டி விட்டிருக்கிறார்கள். அந்த இரவின் குளிரில் அவளும் குழந்தையும் விரைத்து செத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாசித்த மண்ட்டோ வீட்டை விட்டு வெளியேறியவர் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். அதைப்பார்த்த அவருடைய சகலை ஹமீது ஜலாலின் மகனிடம், இது வெத்திலை எச்சில் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிறுவனும் யாரிடமும் சொல்லவில்லை.

The loudest voice of human conscience Saadat Hasan Manto Article By Udhaya Sankar. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நள்ளிரவில் படுக்கையில் வலியும் வாந்தியும் எடுத்து மனைவியை அழைத்துச் சொன்னபிறகுதான் மருத்துவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் அவருடைய நிலைமையைப் பார்த்து உதட்டைப் பிதுக்க, மண்ட்டோவின் இறுதிக்கணங்கள் தொடங்கி விட்டன. கல்லறையில் குளிர்வதைப்போல குளிர்கிறது என்று சொன்ன மண்ட்டோ இரண்டு போர்வைகளால் போர்த்திக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு பெக் விஸ்கியைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார். கொஞ்சம் விஸ்கியை வாங்கிவந்து ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றினார்கள். இரண்டாவது ஸ்பூன் வாயிலிருந்து வெளியே வழிந்து விட்டது. உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். ஹமீது ஜலால் எழுதும்போது, பொறுப்பற்ற ஆட்டங்களை ஆடிய மண்ட்டோவிற்கு பலமுறை அவுட் கொடுக்காமலிருந்த கடவுள் கடைசியில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று விரலை உயர்த்தி அவுட் கொடுத்து விட்டாரென்று எழுதுகிறார்.

அவருடைய கதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் பலர் பலவிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் மொழிபெயர்க்கப்படாத ஒரு நாவல் உட்பட ஏராளமான படைப்புகள் இருக்கின்றன. மண்ட்டோவே பல கதைகளை, தொகுப்புகளை, பலபதிப்பாளர்களிடம் அன்றைன்றையத் தேவைக்காக விற்றிருக்கிறார். சில கதைகளை அவரே பணத்தேவைக்காக சில பகுதிகளை மாற்றி, சில பகுதிகளை எடிட் செய்து பிரசுரித்திருக்கிறார். அதனால் தான் பல விதமான வேறுபட்ட தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் வாழ்ந்தபோது தன்னுடைய எழுத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மண்ட்டோ அவருடைய மனைவி சஃபியா மண்ட்டோவிடம் “நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன். நான் இறந்தாலும் நீ வசதியாக வாழலாம்.. என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் ஆனால் உண்மையில் பதிப்பாளர்கள் அவர் எல்லாவற்றுக்கும் பணம் வாங்கி விட்டாரென்று சொல்லி கையை விரித்து விட்டனர்…” என்று அவருடைய மூத்தமகள் நுஸாத் மண்ட்டோசொல்கிறார்…மண்ட்டோ இறந்தபோது அவருடைய மகள்களான நிஹாத் மண்ட்டோ, நுஸாத் மண்ட்டோ, நஸ்ரத் மண்ட்டோ ஆகியோருக்கு முறையே ஒன்பது, ஏழு, ஐந்து வயது தான் பூர்த்தியாகியிருந்தது. சஃபியா மண்ட்டோ தனியே அவர்களை வளர்த்து ஆளாக்கினார். மண்ட்டோ தன்னுடைய கதைகளை எழுதியதும் முதலில் சஃபியாவிடம் தான் வாசித்துக்காட்டுவார். தன்னுடைய குடும்பத்தினர் மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்த மண்ட்டோ அதைவிட ஆழமான பிரியத்தை இந்த சமூகத்தின் மீது வைத்திருந்தார். அது தான் அவருக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது.

மண்ட்டோவின் எல்லாக்கதைகளும் துல்லியமான விவரனைகளுடன், நேர்த்தியான கதைசொல்லலுடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்ட்டோவின் மேதைமைக்குச் சான்று. மண்ட்டோவின் இருநூற்றைம்பது கதைகளில் தமிழில் இதுவரை ஐம்பது கதைகளுக்குள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.. அவருடைய அத்தனை கதைகளும் நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் போது மண்ட்டோவின் மகாமேதைமை இன்னும் சூரியனாய் பிரகாசிக்கும். அதன் பிரகாசமான ஒளி தமிழிலக்கியத்துக்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் வளம் சேர்க்கும்.

மண்ட்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே சிவில் சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டுணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். எல்லாரும் சகோதரத்துவதுடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்ட்டோவை வாசிக்கவேண்டும். முன்னெப்போதையும் காட்டிலும் மண்ட்டோ இன்று தேவைப்படுகிறார்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 4 Comments

4 Comments

  1. உணர்வெழுச்சி அளிக்க கூடிய மண்டோவை அவ்விதமாகவே உதயசங்கர் அறிமுகம் செய்திருக்கிறார்.ஏனைய கதைகளை பாரதி புத்தகாலயம் தொகுப்பாக கொண்டு வர வேண்டும்.

  2. Vijila Therirajan

    மண்டோவின் கதைகள் பல வாசித்திருக்கிறேன் ஆனால் அவரைப் பற்றி தோழர் உதயசங்கர் மூலம் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.நன்றி.

  3. மண்டோ குறித்த நெகிழ்ச்சியான பதிவு.அவர் வாழ்வு குறித்து இன்று தான் தெரிந்துகொண்டேன். நன்றி.

  4. மண்டோ குறித்த நெகிழ்ச்சியான பதிவு.அவர் வாழ்வு குறித்து இன்று தான் தெரிந்துகொண்டேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *