The Love Song of J. Alfred Prufrock ( By T. S. Eliot)
டி.எஸ். எலியட் எழுதிய ஆல்பிரட் ப்ருப்ராக்ககின் காதல் பாடல்
சென்ற பகுதியில் கவிதையின் சூழலும் பின்னணியும் விவரிக்கப் பட்டிருந்தது.
இனி டி.எஸ்.எலியெட் கவிதையின் தமிழாக்க வரிகளைப் பார்க்கலாம்
வா நீயும் நானும் போகலாம்
பாதி சிதைந்த தெருக்களின் வழியே
மயக்கமருந்து உட்கொண்ட நோயாளி
அறுவை சிகிச்சை மேசையில் அசைவற்றுப் படுத்திருப்பது போல
இந்த மாலைப்பொழுது வானத்தில் பரவிக்கிடக்கும் நேரத்தில்
வா நீயும் நானும் போகலாம்
ஓய்வற்ற இரவுகளின் ஓயாத புலம்பல்களை
சதா முனுமுனுத்துக்கொண்டிருக்கும்
மகா மட்டமான விடுதிகளின் வழியாக
நாம் போகலாம் வா

சிப்பி ஓடுகள் சிதறிக்கிடக்க
மரத்துகள்களால் முற்றிலும் அழுக்கடைந்த
மகா மட்டமான உணவு விடுதிகளின் வழியாக
நாம் போகலாம் வா
நயவஞ்சகம் கொண்ட தீய நெஞ்சஞ்சங்களின்
முடிவற்ற நீண்ட உரையாடல்கள் போல
நீண்டுகொண்டே போகும்
இந்த தெருக்களின் வழியாக நாம் நடந்து செல்லும்போது
அது நம்மை பதிலளிக்கவே இயலாத
சோர்வு தரும் ஒரு கேள்விக்கு
அழைத்துச் செல்லும்
அது என்ன கேள்வி என்று மட்டும் நீ என்னிடம் கேட்காதே
***********
வா நீயும் நானும் போய்சேரலாம்
சந்திப்பு நிகழும் அந்த இடத்திற்கு.
மைக்கேல் ஏஞ்சலெவாவைப்பற்றி ( ஓவியர் ) பேசியபடி
பெண்கள் அந்த அறைக்குள் வருவதும் போவதுமாயிருப்பார்கள்
திரைச்சீலையில் தன்பின்புறத்தை தேய்த்துக்கொண்டிருக்கும்
மஞ்சுமூட்டமோ (ஒரு மஞ்சள் பூனையைப்போல)
பிறகுதன் முகவாய் கட்டையை அதில் தேய்க்கத்தொடங்கும்
பிறகு அந்த மஞ்சள் பூனை
அங்கே குட்டையில் மிதந்தபடிகிடக்கும்
மாலைப்பொழுதின் ஓரத்தை தன் எச்சில் ஒழுகும் நாவால்
மெல்ல வருடி கபளீகரம் செய்துவிடும்
அடுத்த கணம் மாடிவீட்டு புகைக்கூண்டு வழியே
நழுவி வரும் கரிப்புகை
எதிர்பாராமல் அதன் மீது பொத்தென்று குதிக்கும்
அது ஒரு ஆளுயரம் எம்பி அடங்கும்

***************
மிக மென்மையான இந்த அக்டோபர் மாதம்
ஒரு வீட்டில் சுருண்டு படுத்து ஆழ்ந்த தூக்கத்திலிருக்கிறது
உண்மையிலேயே இன்னும் நிறைய நேரமிருக்கிறது
அந்த மஞ்சள் பூனை தெருக்களின் வழியே
வழுக்கிச் சென்று திரைச்சீலையில்
தன்பின்புறத்தை தேய்ப்பதற்கும்
உண்மையிலேயே நமக்கு இன்னும் நிறைய நேரமிருக்கிறது
இன்று நாம் சந்திக்கப்போகும் முகங்களை சந்திப்பதற்கென்று
பிரத்யேகமாய் நாம் ஒரு முகத்தை தயாரித்து கொள்வதற்கு
உண்மையிலேயே நமக்கு இன்னும் நிறைய நேரமிருக்கிறது
கொன்று முடிப்பதற்கோ
புதிதாக படைப்பதற்கோ
இன்னும் நிறைய நேரமிருக்கிறது
முடிவடையப்போகும் பொழுதின் கைகள்
நம் உணவுத்தட்டில் ஒரு கேள்வியைத்தூக்க எறிவதற்கும்
இன்னும் நேரமிருக்கிறது
உனக்கும் எனக்குமே இன்னும் நேரமிருக்கிறது
ஒரு வேகவைத்த ரொட்டியைத்தின்று
ஒரு தேநீர் அருந்துவதற்கும் முன்பே
நூறுமுடிவுகளை மாற்றவும்
மாற்றிய முடிவுகளை மீண்டும் மாற்றவும்
ஒரு நூறுகாட்சிகளைக் காணவும்
கண்ட காட்சிகளை மீண்டும் காணவும்
உனக்கும் எனக்குமே இன்னும் நேரமிருக்கிறது

***************
மைக்கேல் ஏஞ்சலெவாவைப்பற்றி ( ஓவியர் ) பேசியபடி
பெண்கள் அந்த அறைக்குள் வருவதும் போவதுமாயிருப்பார்கள்
ஆனால் அது ஏனென்று கேட்பதற்கு தைரியமிருக்கிறதா?
உனக்கு தைரியமிருக்கிறதா?
விசனப்பட்டு மாடிப்படிக்கட்டுகளின் வழியே
நான் கீழிறங்கி வரும்போது
என் நடுத்தலையில் விழுந்திருக்கும் வழுக்கையை
சுட்டிக்காட்டி அவர்கள் கேலி செய்வார்கள்
‘’ பாரேன் அவன் வழுக்கைத்தலையைத் பாரேன்
எவ்வளவு பலவீனமான தலைமயிர் அவனுடையது’’
என்னுடைய மிடுக்கான கோட்டும் சட்டைக்காலரும்
என்னுடைய கன்னத்தை நோக்கி எழுந்து நிற்கும்
என்னுடைய கழுத்துப்பட்டியும் கூட மிடுக்கானது தான்
ஆனாலும் அது ஒரு சிறிய குண்டூசியில் தான்
குத்தப்பட்டிருக்கிறது
ஆனால் அவர்கள் சொல்வார்கள்
‘’ பாரேன் அவனுடைய கைகளும் கால்களும் மெலிந்து
எவ்வளவு பலவீனமாக உள்ளது பாரேன் ‘’
இப்பொழுது சொல்
ஆனால் இந்தப்பிரபஞ்சத்தை இடையூறு செய்ய
எனக்கு தைரியமிருக்கிறதா?
ஆனால் ஒரு நிமிடத்திற்குள் நமக்கு
அத்தனை நேரமிருக்கிறது
முடிவுகளை எடுக்கவும் எடுத்ததை மாற்றவும்
மாற்றியதை மறுபடி மாற்றவும்
ஒரு நிமிடத்திற்குள் நமக்கு
அத்தனை நேரமிருக்கிறது
*********************
நான் அவர்கள் அனைவரையும் நன்கறிவேன்
ஏற்கனவே அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும்
காலை மாலை மதியம் என்று
இந்தப் பொழுதுகளையும் கூட
நான் நன்கறிவேன்
ஏனென்றால் என் வாழ்க்கையையே
நான் காப்பிக்கரண்டியால் தானே அளந்து கொண்டிருக்கிறேன்
அடுத்த அறையிலிருந்து பீறிடும் இசையின் இரைச்சலில்
மடிந்துகொண்டிருக்கும்
மனிதக்குரல்களைக்கூட நான் நன்கறிவேன்
ஆனால் அதைப்பற்றி நான் என்ன கருதுவது?
தனித்த ஒரு உட்பொருள் கொண்டு
என் மீது நிலைகுத்தியிருக்கும் கண்களைக்கூட நானறிவேன்
என்னை ஒரு குண்டூசியில் குத்தி சுவரில்
தொங்கவிட்டுவிடும் அந்தப்பார்வைகளையும்
நான் நன்கறிவேன்
குண்டூசியில் குத்தப்பட்ட நான் சுவரில்
வலியால் துடித்துக்கொண்டிருப்பேன்
என் வாய்க்குள் நிறைந்திருக்கும்
பொழுதுகள் உறிஞ்சிப்போட்ட
சிகரெட் துண்டுகள்
அவைகளை எல்லாம்
துப்பிவிட்டு
நான் எவ்விதம் ஆரம்பிப்பேன் சொல்
பிறகு இதை நான் எவ்விதம் எடுத்துக்கொள்வேன்?
எனக்கு அந்தக் கரங்களை கூட நன்கு தெரியும்
வெளுத்த மொழு மொழுத்த காப்பு அணிந்த கரங்கள்
விளக்கு வெளிச்சத்தில் நோக்கும் போது அதில்
சிறிய பழுப்பு நிற ரோமங்கள் காணக்கிடைக்கும்
இங்கே ஏதோ உடையிலிருந்து எழும் நறுமணம்
உண்மையிலேயே என் கவனத்தை சிதறடிக்கிறது
மேசையின் குறுக்கே நீண்டிருக்கும் கரங்கள்
போர்த்தப்பட்ட சால்வையின் ஓரத்தை பிடித்திருக்கும் கரங்கள்
என அனைத்தையும் நானறிவேன்
ஆனால் நான் இதைப்பற்றி ஏதாவது உரைக்த்தான் முடியுமா?
எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பேன் ?
*******************
மங்கிய மாலையில் குறுகிய தெருக்களின் வழியே
மறுபடியும் தொடர்கிறேன்
என் பயணத்தை
கைகளற்ற சட்டையணிந்து
சன்னலில் சாய்ந்தவண்ணம்
புகைபிடித்துக்கொண்டிருக்கும்
தனிமைபீடித்த மனிதர்களின் புகைக்குழாய்களிலிருந்து
எழும் புகையை கவனித்தபடியே
நான் நடந்து கொண்டிருக்கிறேன்
தனிமைக்கடலின் பாறைகளைப்பிளந்து
முன்னேறிச்செல்வதற்கு உதவியாக
ஒரு ஜோடி கூர்மையான நகங்களாக
நான் ஏன் பிறந்திருக்க கூடாது ?
*****************
பார் உனக்கும் எனக்கும் அருகில் கை கால்களை பரப்பியபடி
படுத்துறங்கும் பொழுதுகளைப்பார்
மாலையும் மதியமும் எவ்வளவு ஆழ்ந்த உறக்கம் கொள்கின்றன !
அதன் தலையை ஒரு நீண்ட விரல்
எத்தனை ஆதுரமாய் வருடுகிறதென்று கவனித்தாயா?
இது ஆழ்ந்த தூக்கமா களைப்பா இல்லை பாசாங்கா?
இதைக்கேள்
கேக் சாப்பிட்டு தேநீர் அருந்தி
ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகும் கூட
இந்த தொல்லை தரும் பொழுதை
அதன் எல்லைக்கே நான் நகர்த்திவிடுவேனா?
அதற்குரிய பலம் என்னிடம் ஏது ?
நான் அழுதாலும் விரதமிருந்தாலும்
நொந்தாலும் பிரார்த்தித்தாலும்
மறுபடியும் அந்த தொல்லை தரும் பொழுது
அங்கேயே தான் நிற்கிறது
என்னுடைய மேன்மையான நேரம் ஒரு சுடர்போல
அணைந்துவிட அது துடிதுடித்துக்கொண்டிருக்கிறது
இந்த தொல்லை தரும் பொழுதை
அதன் எல்லைக்கே நான் நகர்த்திவிடுவேனா?
***************
உணவுத்தட்டில் என் முகம்பார்க்கிறேன்
வழுக்கைத்தலை பளிச்சிடுகிறது
இது என்ன தலைபோகிற பிரச்சினையா?
இல்லை நான்தான் என்ன தீர்க்கதரிசியா?
அதோ பார் அதிமுரட்டுத்தனம் கொண்ட மரணம் நிற்கிறான்
என்னை எதிர்பார்த்தபடி
அருகில் செல்கிறேன்
என் கோட் காலரை பிடித்து என்னை தூக்கியபடி
என்னைப்பார்த்து இளப்பமாக பல்லைக்காட்டுகிறான்
நான் பயந்து சாகிறேன்
இப்பொழுது இதைக்கேள்
இது மரியாதைக்குரியது தானா?
தேநீருக்குப்பிறகு பழச்சாற்றுக்குப்பிறகு
தேநீர் கோப்பைகளுக்கு மத்தியில்
அல்லது காலிக்கோப்பைகளுக்கு மத்தியில்
உன்னைப்பற்றியும் என்னைப்பற்றியும்
அவர்கள் கதைப்பார்கள்
இது அவ்வளவு மரியாதைக்குரியது தானா?
ஒரு புன்னகையோடு ஒரு பிரச்சினையை கடித்து
ஊதிவிட முடிந்தால்
இந்தப்பிரபஞ்சத்தை பிழிந்து
ஒரு பந்து உருண்டையாக மாற்றிவிட முடிந்தால்
பிறகு அந்தப்பந்தை எடுத்து ஒரு திணறடிக்கும்
கேள்வியின் மீது வீசியெறிய முடிந்தால்
‘’ பிறகு நான் தான் லஜாரஸ் இறந்த உலகிலிருந்து
உயிருடன் மீண்டுவருகிறேன் உண்மையைச் சொல்ல
உன்னிடம் எல்லா உண்மையையும் சொல்விவிட ‘’
என்று சொல்ல முடிந்தால்
ஆனால் எனக்குத் தைரியமிருக்கிறதா
இல்லை இது அவ்வளவு மரியாதைக்குரியது தானா?
********
பிறகு ஒருத்தி ஒரு தலையணையை எடுத்து
தன் தலைக்கருகில் வைத்துக்கொண்டு சொல்வாள்
இதுவல்ல நான் கேட்டது இதுவல்ல நான் கேட்டது
சொல் இது அவ்வளவு மரியாதைக்குரியது தானா?
சூரியன் அஸ்தமித்த பிறகு
முற்றத்தில் தெருக்களில் தூரல் விழுந்து முடித்தபிறகு
ஒரு நாவலுக்குப்பிறகு ஒரு தேநீருக்குப்பிறகு
ஸ்கர்ட் உடைகள் இந்த தளம் முழுவதும்
பரவிய பிறகு
இவ்வளவு தானா? இன்னும் அதிகமில்லையா?
ஆனாலும் நான் மனதில் நினைத்ததை
அப்படியே சொல்லிவிடுவேனா?
ஒரு லாந்தர் விளக்கு திரையில் அள்ளி
தெளிக்கும் வெளிச்சத்தைப்போல
பளிச்சென்று சொல்ல முடிகிறதா?
அவள் ஒரு தலையணை எடுத்து அணைத்துக்கொண்டு
சால்வையை உதறி எறிந்து விட்டு
சன்னல் வழி பார்த்துச்சொல்வாள்
‘’ இதுவல்ல அது நான் எதிர்பார்த்தது
இதுவல்ல அது நான் எதிர்பார்த்தது ‘’
**************
நான் இளவரசன் ஹேம்லெட் அல்ல
நான் இளவரசன் ஹேம்லெட் ஆக
ஒரு நாளும் முடியாது
ஆனால் அவனது பணியாளனாக இருக்கலாம்
ஒரு அரச ஊர்வலத்தில் ஊர்ந்து கொண்டு
நாடகத்தில இரண்டு மூன்று காட்சிகளில் பங்கேற்று கொண்டு
இளவரசருக்குப் பிடித்த அறிவுரை வழங்கிக்கொண்டு
அனைத்திலும் நிகழ்வுகளிலும் பங்குபெற்றுக்கொண்டு
எடுபிடியாக சந்தேகமேயில்லை
அவருக்குப்பிடித்த
உபயோகமான ஒரு கோமாளிப்பயல்தான் போ
சமய சமயங்களில் ஏன் எல்லா நேரங்களிலும்
ஒரு முட்டாளாகவும் கூட அது நீதான்
******
நான் முதுமையடைகிறேன் அகாலத்தில் முதுமையடைகிறேன்
முதியவனானதால் அணிந்திருக்கும் கால்சாராயை
மேலே சுருட்டிவிட்டுக்கொள்கிறேன்
ஒரு தலைமுடியையாவது எனக்குப்பின்னால்
நான் விட்டுத்தான் செல்வேனா?
அட பீச்பழங்களைத்தான் நான் உண்ணமுடியுமா?
ஒரு பளபளக்கும் முரட்டு கால்சட்டையை அணிந்து
கடற்கரையில் நடக்கிறேன்
அங்கே தேவதைகள் ஒருவருக்கொருவர்
பாடிக்கொண்டிருக்கிறார்கள்
நான் எனக்கு அவர்கள் பாடுவார்கள் என்று
நினைக்கவேயில்லை
அலைகளின் நரைத்த தலைமயிரை வகிடெடுத்தபடி
அலைகளின் மீது சறுக்கிக்கொண்டு களிக்கிறார்கள்
கடற் காற்று தண்ணீரை கருப்பு வெள்ளையாக
ஊதி ஊதி விளையாடிக்கொண்டிருக்கும் போது
அவர்கள் அலைகளின் நரைத்த தலைமயிரை வகிடெடுத்தபடி
அலைகளின் மீது சறுக்கிக்கொண்டு
களிப்படைவதை நான் கண்டுகொண்டேன்
வா நாம் கடலின் உள்ளறைகளுக்குள் சென்று
மிதந்து கொண்டிருப்போம்
கடற்பெண்கள் நமக்கு சிவப்பு மற்றும் பழுப்பு நிற
மலர்வளையம் வைப்பார்கள்
வா நாம் கடலின் உள்ளறைகளுக்குள் சென்று
மிதந்து கொண்டிருப்போம்
மனிதர்களின் சப்தம் நம்மை எழுப்பும் வரை
நாம் ஆழத்தில் மூழ்கி கிடப்போம்
********
மொழி பெயர்ப்பு – தங்கேஸ்

