மேத்தா பிள்ளைகள் (The Mehta Boys) – திரைப்பட விமர்சனம்
பிப்ரவரி 2025 இல் வெளிவதுள்ள இந்தி திரைப்படம். 100 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகள் வாங்கியுள்ள பொமன் இரானி (Boman Irani) எழுதி இயக்கி நடித்துள்ளார். அவருடன் அவினாஷ் திவாரி, ஷிரேயா சவுதிரி மற்றும் பலர் நடித்துள்ளனர். பல இதழியல் விமர்சகர்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
அமய் மேத்தா தனது தொழிலில் வெற்றி பெற துடிக்கும் கட்டிட கலைஞன். கிராமப் புறத்தில் குடியிருக்கும் பெற்றோர்களைப் பிரிந்து மும்பையில் தனியாக வசிக்கிறான். சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறாள். அவனது தாயார் திடீரென இறந்து விடுகிறார். அவளிடம் தந்தை ஷிவ் மேத்தா கொடுத்த வாக்குப்படி மகளுடன் வசிக்க அமெரிக்கா கிளம்புகிறார். மகனுக்கும் தந்தைக்கும் உறவு சுமுகமாக இல்லை. தந்தை சற்று பிடிவாதக்காரர். ஆனால் அனுபவ ஞானம் உள்ளவர்.
கிரிக்கெட் வீரர். தன் பெட்டிகளை தானே எடுத்து வர வேண்டும் போன்ற குணாதிசயங்கள் கொண்டவர். அவருடய அமெரிக்க பயணம் இரண்டு நாள் தள்ளிப் போகிறது. மகள் மட்டும் கிளம்புகிறாள். இரண்டு நாள் மகனும் தந்தையும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம். பல விசயங்களில் வாக்குவாதம் ஆகிறது. அவனுடய பெண் நண்பர் சாரா இரண்டு பேருக்கும் நடுவில் சமாதானம் செய்கிறாள். இறுதியில் இருவரும் ரோட்டிலேயே மோதிக்கொள்ளும் நிலைக்கு போகிறது.
தந்தை கோபித்துக் கொண்டு தன்னுடய சொந்த வீட்டிற்கே போய்விடுகிறார். அமையின் நிறுவனத்திற்கு தேவைப்படும் கட்டிட வரைபடத்திற்கு தந்தை வரைந்து வைத்திருந்த இந்திய மாடல் வரைபடத்தை கொடுத்துவிட்டு அமையும் கிராமத்திற்கே வருகிறான். தந்தையும் மகனும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கின்றனர். இதுதான் கதை.
இந்திய நகரங்களுக்கு மேற்கத்திய பாணி கட்டிட டிசைன் சரியானதா அல்லது இந்திய பாணியிலானது சரியா என்கிற விவாதம் படத்தின் இறுதியில் வந்து படத்தின் மய்யக் கருத்தில் ஒன்றாக இருக்கிறது. முன்னோர்களின் ஞானத்தையும் கை விடக்கூடாது; அதே சமயம் அறிவியலின் முன்னேற்றங்களையும் நாம் நிராகரிக்க முடியாது. ஒன்றிலிருந்துதான் இன்னொன்று எழுகிறது.
அதேபோல் தந்தை மகன் முரண்பாடு, தலைமுறை இடைவெளி, கிராம சிக்கனம், நகர செலவு ஆகியவற்றையும் திரைப்படம் நம் முன்னே வைக்கிறது. தொழிலுக்காக விதம் விதமான கோட்டுகள், ஷூக்கள், டைகள் ஆகியவற்றை வைத்திருக்கும் கதாநாயகன் தங்கியிருப்பது ஒரு பழய கட்டிடத்தில் என்பது நெருடலாகவும் தோன்றலாம். அல்லது அவனுடய ஊதியத்தில் அப்படிப்பட்ட வீட்டைத்தான் வாடகைக்கு எடுக்க முடிந்திருக்கலாம்.
பொமன் இரானி (Boman Irani), அவினாஷ் திவாரி, ஷிரேயா சவுத்திரி மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பல விசயங்கள் நேரடியாக சொல்லப்படாமல் சுருக்கமாகவும் நாம் ஊகிக்கும்விதமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. தாயார் இறந்திருக்கும் காட்சி சுற்றத்தார்கள் குழுமியிருப்பதை மட்டும் காட்டப்பட்டு முடிந்துவிடுகிறது. கடைசி காட்சியில் அமைய் தன்னுடய உடைகளில் கோட் சூட்டை தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொன்றாக பார்க்கிறான். இறுதியில் சாதாரண சட்டை அணிந்து நிறுவனத்தின் கூட்டத்திற்கு வருகிறான்.
அவனுடய மன மாற்றத்தை இதன் மூலம் காட்டுகிறார். இறந்து போன மனைவியைப் போல ஒரு பெண்மணியை ஷிவ் மேத்தா பார்க்கிறார். லிஃப்ட்டில் மீண்டும் அதேபோல் ஒரு பெண்மணியை பார்க்கிறார், மகனைப் பார்க்கிறார். அவனும் கண்ணாலேயே ஏதோ சொல்கிறான். இதுபோல் ரசிக்கக் கூடிய காட்சிகள் உள்ளன.
பொமன் இரானிக்கு (Boman Irani) இயக்குனராக இது முதல் படமாம். சிறப்பாக செய்திருக்கிறார். பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் தங்கள் கனவுகளை ஆசைகளை திணிக்காமலிருப்பதும் பிள்ளைகள் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதும் இரண்டுமே தேவைப்படுகிறது.
திரைப்பட விமர்சனம் எழுதியவர் :
ஆர்.ரமணன்
எல் ஐ சி ஓய்வூதியர். ‘ ஒரு ஊர்க்குருவியின் கூவலில் உலகக் கவிதைகள் ‘ ‘ கதை கேளு கதை கேளு ‘ ‘ மார்க்ஸ் சில தெறிப்புகள் ‘ ‘ அறிவியல் ஆச்சரியங்கள் ‘ ‘ மக்கள் போராட்டங்கள் – ஷெல்லியின கண்ணோட்டம் ‘(தோழர் கிருஷ்ணமாச்சாரி அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு கட்டுரையின் தமிழாக்கம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.