இடைத்தரகர்களும் ஒட்டுமொத்த ‘தரகரும்’… – கே.கனகராஜ்

இடைத்தரகர்களும் ஒட்டுமொத்த ‘தரகரும்’… – கே.கனகராஜ்



கடந்த டிசம்பர் 12ம் தேதி அன்று கர்நாடக மாநிலம் கோலார் அருகில் இயங்கிவரும் விஸ்ட்ரான் (Wistron) என்கிற தாய்வான் நிறுவன தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த விஸ்டரான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கும் வேறு சில நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து அளித்து வருகிறது.
இந்நிறுவனத்தில் 1300 நிரந்தர தொழிலாளர்களும், 8,000 பேருக்கு மேல் ஒப்பந்த தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். இங்கு பணிபுரியும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு மாதத்திற்கு 21,000 ரூபாய் சம்பளம் என்று ஆரம்பத்தில் சொன்ன நிறுவனம் பிறகு 12 ஆயிரம் ரூபாயில் வந்து நின்றிருக்கிறது. இடையில் ஒருமுறை இந்த சம்பளத்தை 16,000 ரூபாயாக குறைத்த போது அந்த தொழிலாளிகள் கோபத்தோடும் கவலையோடும் அதை ஏற்றுக் கொண்டு பணி புரிந்திருக்கிறார்கள். மீண்டும் அது 12 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இதர தொழிலாளர்கள் மாதம் 8,000 ரூபாய் சம்பளம் என்று சொல்லிவிட்டு அந்த
சம்பளத்தையும் முறையாக கொடுக்கவில்லை.
பலரது கணக்குகளில் வெறும் 500 ரூபாய் மட்டுமே சம்பளமாக போடப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து அந்த தொழிலாளிகள் தொடர்ச்சியாக முறையிட்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த முறையீட்டை அரசு நிர்வாகமோ, அரசு துறைகளோ, குறிப்பாக தொழிலாளர் துறையோ யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்தப் பின்னணியில்தான் தொழிலாளர்கள் கம்பெனி பொருட்களை அடித்து உடைத்ததில் ரூபாய் 437 கோடி இழப்பு ஏற்பட்டதாக அந்த நிறுவனம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால், தற்போது 50 கோடி ரூபாய் என்று கூறியிருக்கிறது.முதலாளிகள் எப்போதுமே லாபம் வந்தால் குறைத்துச் சொல்வார்கள், நஷ்டம் வந்தால் அதிகமாகச் சொல்லுவார்கள். 437 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது? 50 கோடி ரூபாய் எங்கே இருக்கிறது? இப்போது விஸ்டரான் நிறுவனத்தோடு ஆப்பிள் நிறுவனம் செய்து கொண்ட தனது ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
இந்த காலம் முழுவதும் பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படாத போது, அதுவும் ஒரு அன்னிய நிறுவனம் இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும்பாலும் இந்துக்களாக இருக்க கூடியவர்களுக்கு, ஒரு தாய்வான் நிறுவனம் சம்பளத்தை கொடுக்காத போது நரேந்திர மோடி அவர்களுக்கு கோபம் வரவில்லை. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அதில் தலையிடவேயில்லை. அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர் துறையும் தலையிடவில்லை. எந்தப் பத்திரிக்கையும் இதுகுறித்து செய்திகளை வெளியிடவில்லை.
ஆனால் டிசம்பர் 12க்கு பிறகு திடீரென்று பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்து இருக்கின்றன. கர்நாடகா முதல்வர் பேச ஆரம்பித்திருக்கிறார். மத்திய அரசு பேச ஆரம்பித்திருக்கிறது. அதுவும் யாருக்காக? பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காகவா? இல்லவே இல்லை; முலாளிக்காக.இது எந்த வகையிலும் நியாயமில்லை. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாடு முடிவின்படி இதுபோன்ற விஷயங்களில் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று பத்திரிக்கைகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.


பி.எஸ்.எடியூரப்பா அரசாங்கம் அவசர அவசரமாக 160 தொழிலாளர்களை கைது செய்திருக்கிறது. யார் குற்றவாளிகள் என்று உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்க போவதாக கூறி இருக்கிறது. மத்திய அரசாங்கம், முதலீட்டாளர்களின் உணர்வை இது பாதிக்கும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
கேள்வி என்னவென்றால் தன் நாட்டு சட்டப்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் வழங்க வேண்டிய கூலியை ஒரு நிறுவனம் கொடுக்க மறுக்கிறது. அது வெளிநாட்டு நிறுவனமாக இருக்கிறது. ஆனால் மோடி தானும் ஆடவில்லை. எடியூரப்பாவின் தசையும் ஆடவில்லை. ஆனால் பொருட்கள் சேதம் செய்யப்பட்டுவிட்டது என்றவுடன் அது பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டு உணர்வுகளை காயப்படுத்திவிடும் என்று குதிக்கிறார்கள்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தை பற்றி பேசுகிறபோது மத்திய அரசும் சங்பரிவாரும், பிரதமரும் கூட இது இடைத்தரகர்கள் நடத்துகிற போராட்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்தகைய இடைத்தரகர்கள் பலருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் ரைடுகள் நடந்து இருக்கின்றன. ஆனால் தன் நாட்டு மக்களுக்கு, தன் நாட்டு தொழிலாளிகளுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்காத அந்த அந்நிய கம்பெனி மீது சுண்டு விரலைக்கூட காண்பிப்பதற்கு மோடியும் தயாராக இல்லை, எடியூரப்பாவும் தயாராக இல்லை. இந்தியாவில் இருக்கக்கூடிய தொழிலாளர் அலுவலர்களும் தலையிடுவதற்கு தயாராக இல்லை.
பஞ்சாபில் உள்ள கமிஷன் மண்டிகளில் தவறு செய்வதாக இன்றைக்கும் தன்னாட்டு இடைத்தரகர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசாங்கம் பன்னாட்டு நிறுவனத்தின் மீது தூசி பட்டாலும் அதன் கண்ணில் கண்ணீர் வழிகிறது. இதை என்ன சொல்வது?
இவர்கள் இடைத்தரகர்கள்தான். பஞ்சாப்காரர்கள்தான். பஞ்சாபில் இருக்கக்கூடிய மண்டிகளில் பணி செய்யக் கூடியவர்கள்தான். ஆனால் மோடி அரசாங்கமும் எடியூரப்பா அரசாங்கமும் பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளின் ஒட்டுமொத்த ‘தரகர்கள்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்க முடிகிறது. தரகர்களிலும் கூட இடைத்தரகர்களும் ஒட்டுமொத்த ‘தரகர்களும்’ வெவ்வேறான கவுரவத்தை பெறுகிறார்கள்.
இந்த அரசு மக்களுக்கான அரசும் இல்லை; தொழிலாளர்களுக்கான அரசும் இல்லை;
இந்தியர்களுக்கான அரசும் இல்லை; இந்துக்களுக்கான அரசும் இல்லை.
இந்திய, அந்நிய ,பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கான அரசு மட்டுமே! அவர்களின் சேவகர்கள் மட்டுமே!
முகநூல் பதிவிலிருந்து

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *