படைப்பாளியின் நிறமும் சிவப்புதான்
முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள். (மகாகவி பாரதியார்)
நூறாண்டுகளுக்கு முன்னர்ப் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் என்று பாடிய பாரதியின் வரிகள்தான் இவை. நாம் அனைவரும் இந்தியர் என்ற சிந்தனையுடன் முப்பது கோடி முகங்கள்ý கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடு பாரத நாடு என்பது பாரதியின் திண்ணம்.
இன்று நூற்று முப்பது கோடி முகமுடையாள் என்று பாடவேண்டிய நிலை. கடந்த ஒரு நூற்றாண்டில் நூறு கோடி மக்கள் பெருகி இருக்கிறார்கள்.
அன்று, நீ நீயாக இரு, ஆனால், நாம் இந்தியராக இருப்போம் என்று மாந்த உணர்வுகளை மதித்த மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் வாழ்ந்தார்கள்.
இன்று, நீ, நீ அல்ல, நாம் என்பதும் இனி இல்லை. ஆம், நான் இந்தியன் என்ற ஒற்றைச் சிந்தனையே இருக்கவேண்டும் என்று வல்லாளுமை செய்கின்றவர்கள் ஆள்கிறார்கள்.
இவர்கள்வழி முன்னோர்கள்தான், நீண்ட போராட்த்திற்குப்பின் தமிழும் சமற்கிருதமும் இந்தியாவின் இருகண்கள் என ஒப்புக்கொண்டனர். தமிழையும் சமற்கிருதத்தையும் தொன்மை வாய்ந்த மொழிகள் என்று கூறினால் சரியாக இருக்கலாம். ஆனால், தமிழும் சமற்கிருதமும் இந்தியாவின் இருகண்கள் என்றால் மற்ற மொழிகள்? என்ற வினா எழுகிறதல்லவா?
இந்தியாவுக்குப் பல கண்கள். அவை இந்தியா என்னும் நிலத்தில் தோன்றிய நீரூற்றுக் கண்கள்ý. இன்று இந்நீரூற்றுக் கண்கள் இருபத்து இரண்டாக இருக்கலாம் அதற்கு மேலாகவும். இருக்கலாம். இனியும் புதிது புதிதாக நீரூற்றுக் கண்கள் தோன்றக்கூடும். அவற்றையும் இந்தியாவின் கண்களாகத்தான் பார்க்கவேண்டும்.
இந்தியாவின் கண்களில் ஒன்றாக விளங்கக்கூடிய இலக்கியச் செழுமைமிக்க ஒடியா மொழியில் சங்க்ராம் செனா எழுதிய கவிதை நூலில் இருந்து இருபது கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் மொழிபெயர்த்துக் காசிப்பூரின் நிலவு என்னும் நூலாகத் தந்துள்ளார் சுப்ரபாரதி மணியன்.
பகலுக்கு வெள்ளையடிக்க வேண்டியதில்லை. ஆம், சுப்ரபாரதி மணியன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. மக்கள் சிந்தனையாளராக, இந்த மண்ணின் வளம் நாடும் சூழலியல் எழுத்தாளராக, சூழலியல் இயங்குதளத்தில் ஒரு செயற்பாட்டாளராக மிளிர்கின்ற அவரைச் சிறந்த புதின எழுத்தாளர் என்றும், நல்ல சிறுகதையாளர் என்றும், புதுமைமிக்க பாவலர் என்றும் அழகான கட்டுரையாளர் என்றும் புலமைமிக்க மொழிபெயர்ப்பாளர் என்றும் தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடுகின்றது.
இவரின், இயல்பான மொழிபெயர்ப்பு இந்நூலைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்நூல், ஒடியா மக்களின் குறிப்பாக, மலைவாழ் மக்களின் வாழ்வியலையும், அம்மண்ணின் கனிம வளத்தையும் அதைச் சுரண்டுவோரின் கோர முகத்தையும் படம் பிடித்துக்காட்டுகிறது. சான்றுக்குச் சில:
பணிவான மாணவனைப்போல்
உன் தலைவனின் ஆணைக்கு
இணங்கி நடந்தாய்!
கூட்டத்தின் கைதட்டலுக்கு
நீ தலையைக் குனிந்தாய்!
உன் கண்களில் மினுக்கும் இல்லை
எங்களைப் போல நீயும் ஆகிவிட்டாயா?
என்று வித்தை விளையாட்டுக் (சர்க்கசு) கூடாரத்தில் வித்தைக்காரனுக்குக் கட்டுப்பட்ட புலியைப் பார்த்து மானம் விட்டு வயிற்றுக்கு அடிமையான மாந்தனைப்போல் புலியே நீயும் ஆகிவிட்டாயா? என வெளிப்படையாகக் கேட்கும் கவிதை.
கௌதம முனிவன்-அகல்யா கதை அனைவரும் அறிந்ததே. கல்லாகக் கிடந்த அகல்யா இராமன் கால் பட்டுப் பெண்ணாகத் தன் உருவை அடைந்தாள் என்பது புராணக்கதை. இதை,
அவனின் பாதம்
தெரு வழியில் கிடந்த,
கவனிப்பாரற்ற
அந்தக் கல் மீது
ஏன் மோதியது?
…
கவுதமியையும் இந்திராவையும்
இழந்தபின் மீண்டும் பெண்ணாகி
அவள் எந்த வகை வாழ்க்கை
வாழக்கூடும்?
மீதி வாழ்க்கைக்குப்
பிடித்த கணங்களின் நினைவுகளுடன்
கல்லாக வாழ்வதே மேல்!
என்று பாடுமிடத்து ஒடிசாவிலும் இராமன்-இந்திரன்-கௌதம முனிவன் செயல்கள் இந்த ஆன்மய உலகில் பெண்ணாக வாழ்வதைக் காட்டிலும் கல்லாக வாழ்வதே மேல் என்று வெளிப்படையாக கருத்துரைக்கும் ஒரு கவிதை.
சனங்கள் சொல்கிறார்கள்
மலையின் அடுத்த பக்கத்தில்
கம்பெனி ஒரு புதிய கிராமத்தை
நிர்மாணித்துக் கொண்டிருப்பதாக
நல்வாழ்க்கைக்காக
மின்சார விளக்கு, தண்ணீர், கழிப்பறை
என்று எல்லாமுடனும்.
…..
இந்த மஹிக மரம்
இந்தக் கல் மற்றும்
இந்த நிலா என்னவாகும்?
ஒடிசாவில் வேதாந்தா நிறுவனம், அங்குள்ள மலைவாழ் மக்களை அவ்விடத்தைவிட்டு வேறொரு இடத்துக்கு நகர்த்திவிட்டுப் பாக்சைட் எனப்படும் அலுமினியத் தாதூவை வெட்டியெடுக்கும் பெருநிறுவனத்தை அமைக்க முனைந்தபோது எழுதப்பட்ட கவிதையாக இந்தக் கவிதை அமைந்துள்ளது.
சுப்ரபாரதி மணியனின் மொழிபெயர்ப்பில், இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்கும் பெருநிறுவனங்கள் கையாளும் எல்லா வகையான ஏந்துகளுடன் (வசதிகளுடன்) கூடிய üபுதிய கிராம அமைப்பு என்னும் தந்திரச் செயலைச் இப்பாடல் எளிமையாக உணர்த்துகிறது.
வானம் நீலமாகத் தெரிகிறது
நான்
மலையில், காடுகளால்
சூழப்பட்ட பகுதிக்குச் சென்றேன்
அன்று மாலை
எல்லாமும் நீலமாக
இருப்பதைக் கண்டேன்
வானம் கூட..
ஆனால், மனிதர்கள்
அந்த வானம் சிவப்பாக இருப்பதாகச் சொன்னார்கள்
அவர்களிடம் கேட்டபோது
அவர்கள் பதிலளித்தார்கள்
பசியின் நிறம் என்ன?
விரக்தியின் நிறம் என்ன?
அவர்கள் சொன்னார்கள்
எங்களின் முழு வாழ்க்கையும்
பசியாலும்
இழப்புகளாலும் நிரம்பி உள்ளது
வேறு எப்படி அது தெரியும்?
ஆம், உழைக்கும் மக்களுக்கு எல்லாமும் சிவப்பாகத் தானே தெரியும். வறுமையின் நிறமும் சிவப்பு தானே. ஏன், படைப்பாளியின் நிறமும் சிவப்புதான் என்பதை அழகான மொழிபெயர்பபின் வாயிலாகச் உணர்த்தியுள்ள சுப்ரபாரதி மணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
புதுவை யுகபாரதி
தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர், சாகித்திய அகாதெமி

