1930களில் முஸ்லிம் லீக் பேசிய பிரிவினையை பேசுகிறது, பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் – அஜாஸ் அஷ்ரஃப் (தமிழில்: கி.ரா.சு.)

1930களில் முஸ்லிம் லீக் பேசிய பிரிவினையை பேசுகிறது, பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் – அஜாஸ் அஷ்ரஃப் (தமிழில்: கி.ரா.சு.)

பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் 1930களில் முஸ்லிம் லீக்கினுடையதைப் பிரதிபலிக்கின்றன.. பல வழிகளில், இந்தியத் துணைக்கண்டத்தின் பிரிவினைக்கு முன்பான கடந்தகாலம் இன்றைய இந்தியாவில் மீண்டும் நிகழ்கிறது. – அஜாஸ் அஷ்ரஃப்

(இன்றும் பொருத்தமான கட்டுரையாக இருப்பதால் வெளியிடப்படுகிறது)

பாரதிய ஜனதா கட்சியிடம் எதிர்க்கட்சிகள் சந்திக்கும் சவால் 1937இல் முகமது அலி ஜின்னாவின் முஸ்லிம் லீகிடம் இந்திய தேசிய காங்கிரஸ் சந்தித்த பிரச்சனைகளின் பிரதிபலிப்பேயாகும். அந்த சமயத்தில், முஸ்லிம்களிடம் பாதுகாப்பின்மைகளை விசிறி விட்டு, தான் மட்டுமே அந்த சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கூடியது என்ற முஸ்லிம் லீகின் உத்தியைக் காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கூட்டு தேசியம் ஒரு இந்து ராஜ்யத்தை நிறுவுவதற்கான சூழ்ச்சியே எனவும், அது முஸ்லிம்களின் இஸ்லாமிய அடையாளத்தை அழித்து விடுமென்றும் அது வாதிட்டது.

இன்று இந்துக்களின் பதற்றங்களை ஊதிவிடுவதன் மூலமே உயிர்வாழும் பாஜகவின் இந்து தேசியவாதத்துக்கு ஒரு பதிலை வடிவமைக்க எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. சங்கைப் பொருத்தவரை கூட்டு தேசியவாதம் என்பது முஸ்லிம் சமாதானப்படுத்துவதற்கும், இந்தியாவின் அடையாளத்தில் இந்து அடையாளத்தை அழிப்பதற்குமான இன்னொரு பெயர் மட்டுமே.
முரண்பாடாக, 1937இல் முஸ்லிம் லீகின் சவாலுக்கு காங்கிரசின் எதிர்வினையானது இன்று பாஜகவின் அடையாள அரசியலை எதிர்ப்பதற்கு பதிலாக தாம் பொருளாதார நிகழ்ச்சிநிரல் மீது மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நம்பும் தாராளவாத இடதுசாரி தத்துவவாதிகளை எதிரொலிக்கிறது. இது பாஜகவின் சொந்த பூமியில் விளையாடுவதற்கு ஒப்பானது என்றும் எனவே அதை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

The Congress and Muslim League's Ideas of Nation and Nationalism ...

காங்கிரசும் முஸ்லிம் லீக்கும்

பாஜகவுக்கும் முஸ்லிம் லீகுக்கும் இடையிலான ஒற்றுமையைப் புரிந்து கொள்ள 1936-37 குளிர்காலத்திற்குச் செல்ல வேண்டும். அந்த வருடத்தில் 11 மாகாண சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஆறு மாகாணங்களில் தெளிவான வெற்றியைப் பெற்றது, இன்னொரு மூன்றில் அதிக இடங்களை வென்ற கட்சியாக இருந்தது. எனினும் அந்த நேரத்தில் இருந்த தனித் தொகுதி முறையில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 482 இடங்களில் வெறும் 56இல் மட்டுமே அது போட்டியிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட இடங்கள் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டு அவர்களை முஸ்லிம் வாக்காளர்களே தேர்ந்தெடுப்பர். இவற்றில் காங்கிரஸ் 28இல் வென்றது. ஆனால் இப்பொது உத்தர பிரதேசமாக இருக்கும் ஐக்கிய மாகாணத்தில் ஒன்றைக் கூட வெல்லவில்லை.

எனினும் காங்கிரஸ் நேர்மறை எண்ணத்துடனேயே இருந்தது. ஏனென்றால் இந்தியா முழுவதிலும் மொத்த முஸ்லிம் வாக்குகளில் வெறும் 4.8% மட்டுமே முஸ்லிம் லீக் பெற்றிருந்ததுடன், முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் 272 இடங்களில் வெறும் 43இல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனினும், ஐக்கிய மாகாணத்தில், லீக் 66 முஸ்லிம் இடங்களில் 29இல் வென்றது.
முஸ்லிம்கள் பெருமளவில் லீகுக்கு ஆதரவளிக்காதது போல் தோன்றியதால், அவர்களைத் தமது பிடிக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாகக் காங்கிரஸ் நம்பியது. அது தனது முயற்சியில் வெல்லுமானால், பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக முஸ்லிம் லீக் கூறுவது வெற்றுப் பேச்சு என்று ஆகிவிடும்.

இந்த இலக்கு ஜவஹர்லால் நேருவை முஸ்லிம் மக்களைச் சந்திக்கும் திட்டத்தைத் தொடங்க ஊக்குவித்தது. அவர்களது முதன்மை தத்துவவாதி ஒரு கம்யூனிஸ்டான குன்வார் முகமது அஷ்ரஃப் ஆவார். பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு மதம் மூலமாகப் பெறப்படும் ஒருமைப்பட்டை விட ஒரு பொதுவான வர்க்க நலன்கள் மூலமாகப் பெறப்படும் ஒருமைப்பாடு அதிகமாக நிதர்சனமானது என்று முஸ்லிம்களை ஒப்புக் கொள்ளச் செய்வது அவரது பணி. முஸ்லிம் விவசாயிகளின் நலன் இந்து விவசாயிகளுடைய நலன்களுக்கு ஒப்பானதேயாகும். அவர்கள் இருவருமே முஸ்லிம், இந்து நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டனர்.

காங்கிரஸ் தன்னை ஆதரிப்பதற்கு முஸ்லிம்களை ஒப்புக் கொள்ள வைக்க முடியும் என்று நம்பியது. ஏனென்றால் இந்தியாவைக் காலனிய நுகத்தடியிலிருந்து விடுவித்து அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பொருளாதார முன்னேற்றத்துக்கு வழி வகுக்கக் கூடிய ஒரே கட்சி அது மட்டுமேயாகும்.

முஸ்லிம் லீக் காங்கிரசை எதிர்க்க மீண்டும் ஒருங்கிணைந்தது. கவிஞர் முகமது இக்பால் ஜின்னாவிடம் இந்த வாதங்களை வைத்து ஒரு கடிதம் எழுதினார்: “இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமே ஒரே ஒரு பிரச்சனையல்ல. முஸ்லிம்களது பார்வையில் கலாச்சாரப் பிரச்சனை என்பது பெரும்பாலான இந்திய முஸ்லிம்களுக்கு அதிக விளைவுகளுடன் கூடியது.”
இக்பாலின் பார்வையை கடந்த முப்பதாண்டுகளாகப் பல சங் தத்துவவாதிகள் எதிரொலித்துள்ளனர்.

முஸ்லிம் வெகுஜன சந்திப்புத் திட்டத்துக்கு முஸ்லிம் லீகின் விமரசனமானது நவீனத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்திடம் விடை இருக்கிறது என்று இஸ்லாத்தை முன்னிறுத்துவது, காங்கிரஸ் சோஷலிசத்துக்கு மாற்றாக இஸ்லாமிய சோஷலிசத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது. அக்பர், தாரா ஷிகோ, அமீர் குஸ்ரூ போன்ற முஸ்லிம்கள் இஸ்லாத்தை இந்து மதத்துடன் ஒத்துப் போகச் செய்ய முயற்சித்ததாலேயே அவர்களை காங்கிரஸ் புகழ்பாடியதாக லீக் விமர்சித்தது. வரலாற்றுக்கு முக்கியமான பங்கையளித்த இஸ்லாமியப் பார்வையுடன் கூடிய ஆட்சியாளர்களை காங்கிரஸ் விட்டுவிட்டதாக அது விமர்சித்தது.

பசுவதைக்கு எதிரான இயக்கத்தை லீக் முஸ்லிம் கலாச்சார வழக்கங்களை திசைதிருப்பும் முயற்சியாகப் பார்த்தது. மூவர்ணக் கொடியையும் வந்தே மாதரத்தையும் இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாத இந்து அடையாளங்களாகக் கண்டது. வந்தே மாதரம் உருவ வழிபாட்டை ஊக்குவிப்பதாகும் என்று லீக் வலியுறுத்தியது.
இந்த வாதத்தை மறுத்த காங்கிரஸ், வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திக்கள் மட்டுமே பொது விழாக்களில் பாடப்படுவதாகவும், அவை இந்தியத் தாயை உருவமாகக் காட்டவில்லை (எனவே உருவ வழிபாடு இல்லை) என்றும் கூறியது. சில முஸ்லிம்களின் புகழ்பாடிய வரலாற்றுப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை, அதை வடிவமைத்தவர் ஒரு முஸ்லிமான சாகிர் உசேன்(பின்னாளில் சுதந்திர இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர்). மேலும், ஜின்னா முன்பு மூவர்ணத்தைக் கண்டனம் செய்யவில்லை என்பதையும் காங்கிரஸ் சுட்டிக் காட்டியது.
ஆனால் இது முஸ்லிம் லீகின் எழுச்சியைத் தடுக்க முடியவில்லை – அது 1945-46 தேர்தல்களில் இந்தியா முழுவதிலும் 76% முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றது. இது 1937இல் பெற்றதை விட 4.8% அதிகம்.

பல வழிகளில் இந்தப் பிரிவினைக்கு முந்தைய கடந்த காலம் இன்றைய இந்தியாவில் மீண்டும் எதிரொலிப்பது கேட்கிறது. லீக் இஸ்லாத்துக்குச் செய்தது போல், சங் இந்துயிசம்தான் அனைத்துக்குமான மொத்த தத்துவம் எனவும் எதிர்நோக்கப்படும் எதிர்காலத்துக்குமானது என்றும் கூடச் சொல்கிறது. பண்டைய இந்தியா விமானத் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் சர்ஜரி, அணுகுண்டு, எய்ட்ஸ்சுக்கு சிகிச்சையைக் கூடக் கொண்டிருந்தது என்கிறது அது. நான்கு அடுக்கு வருண முறை இந்துக் கற்பனை தேசத்தின் அடிப்படையாக இருக்கிறது என்று அது கூறுகிறது.
சங்கின் கீழ்நிலை சிப்பாய்கள் பசுவதை மீது ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். பாஜக அரசுகள் முஸ்லிம் ஆட்சியை எதிர்த்த இந்து ஆட்சியாளர்களின் புகழ்பாட வரலாற்றுப் பாடப்புத்தகங்களை மாற்றுகின்றன. அதில் 1576 ஹல்திகாட்டி போரில் இந்து ஆட்சியாளர் ராணா பிரதாப் சிங் அக்பரைத் தோற்கடித்தார் என்று (தவறாக) சித்தரிக்கப்படுவது உட்பட இணைக்கப்படுகின்றன. கொஞ்சம் நீதித்துறையின் உதவியுடன் கூட, மூவர்ணக் கொடியும், வந்தே மாதரமமும் தேசியவாதத்தின் புதிய அடையாளங்களாகி விட்டன.
பாஜக இல்லாத முஸ்லிம் லீகுடன் போராடுவது போல் தோன்றுகிறது.

BJP: Here's how BJP earned the massive mandate: Explained in numbers

பாஜக எழுச்சியுடன் ஒற்றுமை

உண்மையில் பாஜகவின் எழுச்சி முஸ்லிம் லீகின் எழுச்சியுடன் ஒத்துப் போகிறது. 1937இல் முஸ்லிம் லீக் மோசமகத் தோற்றது போல் பாஜக 1984 பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களையே பெற்றது. பிறகு ராமஜன்மபூமி இயக்கத்தைத் தொடங்கி, இந்து மத உணர்வுகளுக்குத் தான் மட்டுமே ஒரே பாதுகாவலர் என்பது போல் காட்டிக் கொண்டு, முன்பு பாபர் மசூதி இருந்த அயோத்தி நிலத்திற்கு பேச்சு வார்த்தையில் வீட்டோ அதிகாரம் பெற்றது. அதை இந்துக்களுக்கு பாஜக கேட்டது.

அப்போதிலிருந்து பாஜகவின் அரசியல் வரைபடம் உயரத் தொடங்கியது. 1990இல் பிற பிற்பட்ட வகுப்பினருக்கு வி.பி.சிங் அரசு ஒதுக்கீடுகளை வழங்கும் முடிவை மட்டும் எடுக்காதிருந்தால் அது இன்னும் விரைவாக வளர்ந்திருக்கும். ஒதுக்கீட்டுக்கு எதிரான அதன் கண்டனம் இந்து ஒருங்கிணைப்புக்குத் தடை போட்டது. சமூகத்தில் உயர்ந்த, நடுத்தர சாதிகளுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கியது.

1992இல் பாபர் மசூதி இடிப்பு பாஜகவை அரசியல் ரீதியாக தீண்டத் தகாததாக்கியது. எனினும், ஆறே ஆண்டுகளில், மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரசுடனோ அல்லது வேறொரு மாநில எதிர்க்கட்சிகளுடனோ ஏற்பட்ட போட்டியைப் பயன்படுத்தி பாஜக சில மாநில அளவிலான கட்சிகளை இழுத்துச் செல்ல முடிந்தது. அப்போதிலிருந்து வலுப்பெற்ற அது பத்தாண்டுகளில் 2004க்கும் 2014க்கும் இடையில் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும், ஒருபோது ஓரங்கட்டப்படவில்லை.

பிரதேச வாரியாகக் கூட்டணி அமைப்பதன் மூலம் முஸ்லிம் லீக் பஞ்சாபிலும், வங்காளத்திலும் காலூன்றியது. அங்கு பிரதேச கட்சிகள் ஒரு சமூகங்களுக்கிடையிலான அடித்தளம் அமைந்ததெனப் பீற்றிக் கொண்டன. 1937இல் ஃபஸ்லுல் ஹக்கின் கிருஷ்க் பிரஜா கட்சி வங்க சட்டசபையில் தனிப்பெரும் குழுவாக உருவானது. அவர் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயன்றார். ஆனால் அவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிந்து போனது.
தனது கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் ஏற்படக் கூடுமென்ற நிதர்சனம் தாக்க, அவர் ஜின்னாவை இழுத்தார். அவரது ஆதரவுக்காக, ஹக் இப்படிப் பிரகடனம் செய்தார், “பிரச்சனை ஏதுமில்லை . . . லீக் இல்லாமலேயே இந்தியாவுடனான நிர்வாகப் பிரச்சனையைத் தீர்த்து விட முடியும்.” சில மாதங்களுக்குப் பிறகு, தான் காங்கிரசின் ஆதரவைப் பெற்றிருந்தால் அது “இஸ்லாத்தின் மரண சாசனத்தைத் தனது கையாலேயே எழுதியதாக இருந்திருக்கும்” என்றார்.

பஞ்சாபில் யூனியனிஸ்ட் கட்சியின் சிக்கந்தர் ஹயாத்கான் முஸ்லிம் லீகின் “ஆவேசமான வகுப்புவாதத்துக்கு” எதிராக இருந்தார். 1937இல் பஞ்சாபில் 84 முஸ்லிம் இடங்களில் லீக் வெறும் 2இல் மட்டுமே வென்றிருந்தாலும், ஜின்னாவின் பிரச்சாரமானது சில முஸ்லிம் யூனியனிஸ்டுகளே பிளவுபடாத இந்தியாவில் இந்துராஜ்யம் அமையும் தவிர்க்கமுடியாத நிலையை நம்புவதற்கு இட்டுச் சென்றதாக அவர் கருதினார். தனது கட்சியை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக, கான் உட்பட அனைத்து முஸ்லிம் யூனியனிஸ்டுகளும் 1938இல் லீகில் இணைந்தனர். அவர்கள் ஒரே சமயத்தில் யூனியனிஸ்டுகளாகவும், லீகாகவும் இருந்தனர்.

பஞ்சாபிலும், வங்கத்திலும் காலூன்றிய முஸ்லிம் லீக் நிறுத்த முடியாத நிலைக்குச் சென்றது. காங்கிரசுக்குள்ளும், வெளியிலும் இந்து உரிமை அளவுக்கு அதிகமாக செல்வதனால் மட்டுமே இல்லாமல் லீக் முன்னேறியது. காங்கிரஸ் நிர்வாகத்தில் குறிப்பாக பீகாரிலும், ஐக்கிய மாகாணத்திலும் கொடூரமான கலவரங்கள் வெடித்ததும் குறைந்த முக்கியத்துவமுடையவையல்ல.

அடையாள அரசியல்

இறுதியாக, 1945-46 தேர்தல்களில் பஞ்சாபில் 65.10% வாக்குகள் பெற்ற லீக் வங்கத்தில் முஸ்லிம் தொகுதிகளில் திகைத்தத்தக்க வகையில் 83.6% வாக்குகளைப் பெற்றது.
முஸ்லிம் லீக் ஒரு காலத்தில் முஸ்லிம் நிலப்பிரபுக்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தியது. எனினும், காங்கிரசுக்கு எதிராக அது குறைந்தபட்சம் காதிதத்திலாவது சற்று அதிக முற்போக்கான கோட்பாட்டைக் கடைப்பிடித்தது. அதேபோல், பாஜகவும் புத்திசாலித்தனமாக ஒரு பிராமண-பனியா கட்சி என்ற அடையாளத்தை விட்டு விட்டது. அது தற்போது பீகார் முதல்வர் நிதீஷ் குமாரைத் தனது பக்கம் இழுத்து, கட்சிக்குள் அல்லது அதன் கூட்டணியில், அல்லது கட்சியில் அதிகரித்து வரும் பிற பிற்பட்ட வகுப்பு, தலித் தலைவர்களின் அதிகரித்து வரும் பட்டியலில் சேர்த்து விட்டது.

இந்தப் போக்கு இன்னொரு முரண்பாடான ஒற்றுமையைக் காட்டுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் முஸ்லிம் மக்கட்தொகையில் சுன்னிக்கள்தான் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் ஒரு ஷியாவான ஜின்னாதான் அவர்களுக்கு ஷியாக்கள் ஒடுக்கப்படும் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தார். உள்ளடக்கத்தில் ஒரு பிராமண பனியா கட்சியான பாஜக தற்போது பிற பிற்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இருக்கிறது. ஆனால் பாஜகவின் கீழ் பிற பிற்பட்ட வகுப்பினரின் நலன்கள் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதைக் கூறுவது கடினம்.

இதுதான் அடையாள அரசியலின் வலிமை. அது சமூகத்துக்குள் இருக்கும் முரண்பாட்டை குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது அகற்றிக் கொள்ளும். இதை அறிந்ததால்தானோ என்னவோ, காங்கிரஸ் சில ஆண்டுகளில் வெகுஜனத் தொடர்புத் திட்டத்தைக் கைவிட்டு விட்டது. இதில்தான் 2017 இந்தியாவுக்கான பாடம் அடங்கியுள்ளது – அடையாளங்கள் மீது இருக்கும் பதற்றத்தை ஒரு பொருளாதார நிகழ்ச்சிநிரலால் மட்டுமே வென்று விட முடியாது. அந்தப் பதற்றங்களில் சில செயற்கையாக உருவாக்கப்பட்டவையாக இருந்தால் கூட எதிர்க்கட்சிகள் இந்தப் பதற்றங்களுக்கு விடைகாண வேண்டும்.

குறிப்பு: பிரிவினைக்கு முந்தைய இந்தியா பற்றிய விரிவுரை யாஸ்மின் கானின் பெரும் பிரிவினையின் அடிப்படையிலும், வெங்கட் துலிபலவீன் ஒரு புதிய மெதினாவை உருவாக்குதல், அனிதா இந்தர்சிங்கின் இந்தியப் பிரிவினையின் மூலங்கள், 1936-47 அடிப்படையிலும் எழுதப்பட்டது.

அஜாஸ் அஷ்ர்ஃப் தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அவரது ”விடியலுக்கு சில மணி நேரங்கள் முன்பு” என்ற நாவல் பாபர் மசூதி இடிப்பின் பின்னணியில் எழுதப்பட்டது.

நன்றி: ஸ்க்ரால்.
தமிழில்: கி.ரா.சு. 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *