பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 2 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்தமிழ் இலக்கியங்களில் “மனு”
—————————————————-
ஆர்.பாலகிருஷ்ணன்
பதிவு எண் 2
————————————————
கம்ப ராமாயணம், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரரின் மூவர் தேவாரத்திருமுறைகள், மாணிக்கவாசகரின் திருவாசகம் ஆகிய தமிழ் இலக்கியப்படைப்புகள் எவற்றிலும் “மனு” அல்லது “மநு” என்ற பெயர்ச் சொல் ஒருமுறை கூட இடம் பெறவில்லை என்பதை முகநூல் (28/10/2020) பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது, மனு/ மநு என்ற சொல் இடம் பெறும் முக்கியமான இடைக்கால பக்தி இலக்கிய நூல்களையும் அச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூழலையும் விவாதிப்போம்.
இந்த வரிசையில் முதலில் கம்ப ராமாயணத்தைப் பார்க்கலாம்.
தமிழ் இலக்கியப்பரப்பில் இராமாயணம். மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் மூலமாகத்தான் ‘மனு’ என்ற பெயர், அவர் எழுதியதாகக் கூறப்படும் மனு நெறி அல்லது மனு நீதி எனப்படும் நூல்; மனுவிற்கும் ரகு குலம் எனப்படும் சூரிய குலத்தினருக்கும் இருந்ததாகக் கூறப்படும் மரபுவழித்தொடர்பு ஆகிய கருத்தாக்கங்கள் நுழைகின்றன. இதன் மூலமாகத் தான் “மனு” என்ற கருத்தாக்கம் தமிழ் இலக்கிய பெருந்தடத்தில் ( Main Stream) பதிவு பெறுகிறது. தமிழைப் பொறுத்தவரையில் கம்பர் வாழ்ந்த காலம் என்று கருதப்படும் கி.‌ பி 11 ஆம் நூற்றாண்டு வரை நிகழாத பதிவு இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இலக்கிய வளம், கற்பனை, அழகியல் பொருந்திய சொல்லாடல், உவமைநயம் என்று பல்வேறு மதிப்பீடுகளில் கம்பராமாயணம் ஒரு தலைசிறந்த இலக்கியப் படைப்பாகும். இதில் ஐயம் எதுவுமில்லை.


“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல்,இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை” என்று பாடிய மகாகவி பாரதி “கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்” என்றும் வியக்கிறார்.
ஆனால், கம்பன் எடுத்துக்கொண்ட பாடுபொருள் கங்கைச் சமவெளியின் ‘இராமாயணம்’ என்பதால், வடமொழி மரபு மற்றும் தொன்மங்களைப் பின்பற்றி கம்பராமாயணத்தில் “மனு” இடம் பெற்றதில் வியப்பில்லை. ஏனெனில் இராமாயணத்தின் கருத்தியல் பின்னணி, கதைப்புலம், முன்னுரிமைகள் அத்தகையவை. எதைக் கையில் எடுக்கிறோமோ அதற்குத் தக்கபடி தானே பேசமுடியும்? கம்பன் கையில் எடுத்தது இராமாயணம். எனவே அதற்கான சமூகப் பண்பாட்டு காரணிகளின் ஊடாகத் தான் இதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆயினும் கம்பராமாயணத்தில் ‘மனு’ பற்றிய சொல்லாடலை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும் முன்னர் ஒரு கேள்வியை நாமே கேட்டு நாமே பதில் சொல்லவேண்டிய தேவை இருக்கிறது.
சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களுக்கு இராமன் கதை தெரியுமா என்பது தான் அந்தக் கேள்வி. “தெரியும்” என்பது தான் அதற்கான விடை.
சங்க இலக்கியங்களில் வடமொழி மரபுகளோடு தொடர்பற்ற கடையெழு வள்ளல்கள், தாய்த்தெய்வங்கள், திணை சார்ந்த பண்பாட்டு விழுமியங்கள், அகம் புறம் சார்ந்த நடைமுறை வாழ்வியல், பாணர் மரபு, பொது அறம் சார்ந்த நடுநிலைப்போக்கு என்று தமிழ்ச்சமூகத்தின் தனித்துவமான கூறுபாடுகள் தான் சங்க இலக்கியம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
ஆயினும், சங்க காலத்திலேயே தமிழ்ச் சூழலில் புறக்கருத்துகளும் மரபுகளும் நுழையத் தொடங்கிவிட்டன என்பதும் உண்மை. சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு முறை அகநானூற்றில் ஒரு முறை என்று இரண்டு முறை இராமன் கதை குறிப்பிடப்படுகிறது.
‘கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு’ என்ற பாடலில் (புறநானூறு 378) சீதையை இராவணன் வான் வழியே கவர்ந்து சென்ற போது சீதை தரையில் தவற விட்ட அணிகலன்களை குரங்குகள் எடுத்து தாறுமாறாக அணிந்துபார்த்ததாக உவமை கூறப்படுகிறது.
அடுத்து கடுவன் மள்ளனார் எழுதிய அகப்பாடலில் பாண்டியர் கடற்கோடியில் இராமன் மறை ஓதி வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
“வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 70)
அதற்குப் பின்னர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பழமொழி நானூற்றில்
“பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்” என்ற பாடலில் (பழமொழி 92) இராவணன் தம்பி விபீடணன் இராமன் பக்கம் சேர்ந்து கடைசியில் இலங்கைக்கே அரசனாகி விட்டான் என்பது “பெரியாரைச் சார்ந்து நின்றவர்கள் உயர்வார்கள்” என்று பழமொழி கண்ணோட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
வாலி – சுக்ரீவன்; இராவணன்- விபீடணன் என்ற கதாபாத்திரங்களின் மூலமாக இந்தப் பழமொழிக்கான கதைமரபுப் பின்புலம் காணக்கிடக்கிறது. இது இன்று வரை இந்தியப் பண்பாட்டு அரசியலில் நாம் காணும் “நடைமுறை எதார்த்தமும்” கூட. !
இவ்வாறு சங்க இலக்கியத்தில் இரு முறையும் பழமொழி நானூற்றில் ஒரு முறையும் என்று மூன்று முறை இராமன் கதை குறிப்பிடப்பட்டாலும் ராமன் குல மரபிற்கும் மனுவிற்கும் உள்ள தொடர்போ அல்லது மனு நீதி பற்றிய குறிப்போ இப்பாடல்களில் முன்னிறுத்தப்படவில்லை என்ற பின்னணியிலேயே 11ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு காலத்தில் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் “மனு” பற்றிய செய்திகள் கவனம் பெறுகின்றன.
இராமனை கம்பர் “மனு குல நாயகன்” என்றே அழைக்கிறார். (மனு குல நாயகன் வாயில் முன்னினான் – அயோ:2 12/2) வைவஸ்வத மனுவின் வமிசத்தில் தோன்றிய அரசனாகவே இராமன் கருதப்படுகிறார். “சூரிய வம்சம்” எனப்படும் ரகு வம்சம் மனுவோடு தான் தொடர்பு படுத்தப்படுகிறது.


சராயு நதியும் மனு நெறி உவமையும்
—————————————————————–
மனு என்ற நீதிமுறை; அதனால் வழிநடத்தப்படுகிற அரச நெறி; அதனால் கிடைக்கும் புகழ்; நான்கு வேதங்களிலும் திறன் படைத்த வேதியர்; அவர்களுக்கு வழங்கப்படும் தானங்களின் பெருக்கம் ஆகிய அனைத்தையும் ஒரு புள்ளியில் கோர்த்து வைத்துப் பார்க்கிறார் கம்பர்.
சராயு நதி பெருக்கெடுத்து ஓடுவது கம்பன் பார்வையில் தரும நெறி கருதி; – மனுநீதிப்படி நடக்கும் குளிர்ந்த குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும் ஞான வழியை நாடுகின்ற நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்;
தோன்றுகிறது.
மானம் நேர்ந்து. அறம் நோக்கி. மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என.
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன. தழைத்தது – நீத்தமே. (பால காண்டம், ஆற்றுப்படலம் 15)
மனுவை விட நீதி நெறியில் சிறந்தவர் தசரதர் என்று பாராட்டுகிறது கம்பராமாயணம். (மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – பால:12 16/4)
குலமுறை கிளத்துப் படலத்தில் சனக மன்னரிடம் இராம இலக்குவன் குலப்பெருமையை எடுத்துரைக்கும் கோசிக முனிவர்
“ஆதித்தன் குல முதல்வன்
மனுவினை யார் அறியாதார்?” என்று தொடங்குகிறார். இதில் சூரிய குலம் என்றும் ரகு குலம் என்றும் (ஆதித்தன் என்றால் சூரியன் என்பது பொருள்) அறியப்படும் குலத்தின் தோற்றத்தை மனுவுடன் தொடர்புபடுத்துகிறார்.
ஆரண்ய காண்டத்தில் “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” என்று கம்பரால் வர்ணிக்கப்படும் அகத்திய முனிவர் தாண்டக வனத்தில் இராமனைச் சந்தித்தபோது இராமரை அங்கேயே தங்கி விடும்படிக் கேட்டுக் கொள்கிறார்.
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்
ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான். (ஆரண்ய: 53)
இந்தப் பாடலின் பொருள்:–
“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்குஎன்று இராமனிடம் அகத்தியர் பகர்ந்தார்..
இந்த ராமாயணப்பாடலில் வரும் தண்டகாரண்யத்தை இப்போதுள்ள சத்திஸ்கர், தென் ஒடிசா எல்லையிலுள்ள தண்டகாரண்யம் என்ற இடத்தோடு தான் அனைவரும் தொடர்புபடுத்துகிறார்கள். அங்கே தான் அகத்தியரை இராமன் சந்தித்தார் என்றால் “நீண்ட தமிழால் நேமியை அளந்ததாக” அகத்தியனைக் குறிப்பிடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? அவ்வாறாயின் அக்காலத்தில் தமிழ் மொழி அப்பகுதியிலும் பேசப்பட்டதாகக் கொள்ளலாமா? ( அப்பகுதியில் பல திராவிட மொழிக்குடும்ப மொழிகள் இன்றும் பேசப்படுகின்றன.) அவ்வாறாயின் தமிழ்நாட்டிலுள்ள பொதிகை மலையோடு அகத்தியரும் அவரோடு சேர்ந்து தமிழும் தொடர்புபடுத்தப்படுவதை எப்படி நேர் செய்வது? மேலும் சங்க இலக்கியத் தொன்மங்கள் அகத்தியர் என்ற பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்பதும் “வடபால் முனிவன் தடவினில் தோன்றிய” ( புறம் 201) என்பதில் வேளிர் மரபு குறித்த மீள் நினைவு குறிப்பிடப்பட்டாலும் அம்முனிவனின் தமிழ்த்தொடர்பு பற்றி சங்க இலக்கியம் எதுவும் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அவ்வாறாயின் “நீண்ட தமிழால் அகத்தியன் நேமியை அளந்ததாகச்” சொன்னதன் பின்னணி என்ன? அந்தக் கதைமரபின் அல்லது கற்பிதத்தின் நோக்கம் என்ன? காரணியான பின்புலம் என்ன?


மனு நீதி சொல்லிக் கொடுத்ததா?
—————————————————————
கிஷ்கிந்தா காண்டத்தில் குரங்கு இனத்தைச் சேர்ந்த அரசனைக் கொல்ல “மனு நீதி” சொல்லிக்கொடுத்ததா என்று இராமனைப் பார்த்து வாலி நியாயம் கேட்கிறான்.
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார் (கிட்கிந்தா: 85)
இந்தப் பாடலின் பொருள்:-
ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? உனக்கே உரித்தான அருளை எங்கு தவற விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய்? பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?
இந்தச் சூழலிலும் கூட வாலியின் வாய்மொழியாக, இராமனின் அரச நீதியை வழிநடத்தும் நெறியாக மனு நீதியைத்தான் முன்வைக்கிறார் கம்பர்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் ராமன் கூட மனு நீதியைச் சொல்லித்தான் தனது செயலை நியாயப்படுத்துவதாக கம்பர் சொல்கிறார்.
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (கிஷ்கிந்தா 54)
இதற்கு எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம் என்று ராமன் சொன்னதாக விளக்கம் சொல்லப்படுகிறது,
ஆனால் இது அந்தக்கேள்விக்கான நேரடியான விடை அல்ல என்று நான் மதுரையில் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே “அந்தக்காலப் பட்டிமன்றங்களில்” விவாதிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறேன். அது ஒரு காலம்! பட்டிமன்றங்களில் தீவிரமாக இலக்கியம் பேசப்பட்ட காலம்! அதுவேறு விடயம்.
நம்மைப்பொறுத்தவரையில் இந்தப் பதிவின் மையப் பொருள், “மனு நீதி” என்ற கருத்தாக்கம் இராமயணக்கதை மூலம் எவ்வாறு தமிழில் நுழைகிறது, எப்போது நுழைகிறது அப்போதைய பண்பாட்டு அரசியல் பின்னணி என்ன என்பது தான்.
இதே கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வதத்திற்குப் பின்னர் “சொன்ன தேதியில்” படைகளுடன் சுக்ரீவன் வந்து சேராததால் சினமுற்ற இராமன் மீண்டும் மனு நீதியைத் தான் மேற்கோள் காட்டுகிறார். சுக்ரீவனிடம் இலக்குவனை அனுப்பும் இராமன் சொல்வதாவது:
நஞ்ச மன்னவரை நலிந்தாலது
வஞ்சமன்று மனு வழக்காதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்
நச்சு போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் எனவே இதனை தனது ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச் செல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியதாக கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.
எனவே கம்பராமாயணத்தின் மூலம் இராமனின் மனு குலத்தொடர்பு, மனு நீதிவழியிலான நியாய அநியாயங்கள் குறித்த மதிப்பிடுகள்; வேத நெறியும் மனு நெறியும் வேதியரும் ஒருகோட்டில் கொண்டுவரப்படுதல்; அம்மரபுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் குறித்த அணுகுமுறைகள் ஆகிய பல கூறுபாடுகளையும் காலம் இடம் என்ற வரையறையில் பண்பாடு, சமூகம், சமயம் மற்றும் அரசியல் பின்னணியில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
கம்ப ராமாயணம், பெரிய புராணம், வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களின் ஊடாக மனு பற்றிய கருத்தாக்கத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து தொடர்ந்து பேசுவோம்.
(தொடரும்)
நன்றி: ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் முகநூல் பக்கம் 
தொடர் 1 வாசிக்க: