பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்தமிழ் இலக்கியங்களில் “மனு”
——————————————————–
ஆர்- பாலகிருஷ்ணன்
பதிவு 3.
—————
இராமகாதையை அதாவது இராமாயணம் என்ற இதிகாசத்தை பாடுபொருளாகக் கொண்ட கம்ப ராமாயணத்தின் வழியாக இராமனின் ரகு குல முன்னோடியான “மனு” என்பவர் தமிழ் இலக்கியப் பரப்பில் முதன் முறையாக முறைப்படி பதிவிடப்பட்டதையும் நான்மறைகளாகிய வேதங்கள்; ‘மனு நீதி’ எனப்படும் நெறியின்படியான அரச முறை; வேள்விகள், வேதியர் ஆகியவை ஒரே கோட்டில் ஒரு “நிறுவனக் கட்டமைப்பு போல” முன்னிறுத்தப்பட்டதையும் எனது முந்தைய முகநூல் பதிவில் (30.10.2020 ) குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இந்தக் குறிப்புகள் இராமாயணம் என்ற கதைப்போக்கில் மட்டும் முன்னிலைப் படுத்தப்படுகிறதா அல்லது கம்பனுக்கு ‘மனு நீதி’ குறித்த தனிப்பட்ட நிலைப்பாடு எதுவும் இருக்கிறதா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. ஏனெனில் கம்பர் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர்.


கம்பனின் கவிக்குரல்!
——————————————
இத்தகைய ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள ஓர் இலக்கியப்படைப்பின் ஊடாக ஒலிக்கும் “கவிஞனின் படைப்புக் குரலை” நாம் தேடிக் கண்டுபிடித்து செவிமடுக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு “கவிக்குரல்” (Author’s Voice) நமக்கு யுத்த காண்டத்தில் தெளிவாகக் கிடைக்கிறது.
வேதம் மனு முறை வேள்வி வேதியர்
——————————————————————-
வாழிய வேதம் நான்கும் மனுமுறை வந்த நூலும்
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே
ஆழி அம் கமலக் கையான் ஆகிய பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்
–யுத்த காண்டம், நாகபாசப் படலம், கம்ப ராமாயணம்
மேற்கண்ட பாடலின் பொருள் வருமாறு:
“என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நான்கு வேதங்கள், மனு தர்ம சாத்திரம் முதலிய அறநூல்கள், யாகங்கள், சத்தியம், தெய்வத் தன்மை பெற்ற அந்தணர்கள் அடைய விரும்பும்பேறு அனைத்தும் சக்கரம் ஏந்திய செந்தாமரை போன்ற கைகளை உடைய அந்தத் திருமாலின் உருவமே என்று உணராத மூடர்களின் மனத்தைப் போலத் திசைகள் யாவும் இருண்டு விட்டன.”
பகல் முடிவதையும் சூரியன் ‌மறைவதையும் இருள் படர்வதையும் எத்தனையோ இலக்கியங்கள் எத்தனையோ வகைகளில் பாடித்தீர்த்துவிட்டன. தமிழ் மொழியின் சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ள இராமாயணங்களிலேயே கற்பனை வளத்திலும் படைப்புத் திறத்திலும் ஆகச் சிறந்தது கம்பராமாயணம் தான். வடமொழி இராமாயணம் தொடாத உயரங்களைத் தொட்ட சிறந்த படைப்பாக கம்பராமாயணம் கருதப்படுகிறது.
ஆனால் மேற்கண்ட பாடலில் இரவின் வருகையை சித்தரிக்கும் முயற்சியில் இயல்பான அன்றாட இயற்கை நிகழ்வை முன்வைத்து கம்பரின் “கவிக்குரல்” அல்லது அவரது “நம்பிக்கைகள்” வெளிச்சத்திற்கு வருவதாகவே தோன்றுகிறது.
ஒரே மூச்சில் நான்கு வேதங்கள்; மனு நீதி முறை; வேள்வி; வேதியர் என்று நான்கு புறமும் ‘சதுரம் கட்டி அடிக்கும்’ கம்பர் இந்த நான்கும் தான் திருமாலாகிய அவதாரம் என்ற “உண்மையை அறியாதவர்களை “ஏழையர்” ( அதாவது அறிவில், புரிதலில் ஏழைகள்) என்றும் அத்தகைய ‘ஏழையரின்’ உள்ளம் போல திசைகள் இருண்டன என்று வெளிச்சத்திற்கு வந்து பேசும் போதுதான் தமிழுக்கு அதுவரை பழக்கம் இல்லாத, குறிப்பாக சங்க இலக்கியங்களின் அடி இடுக்குகளில் துருவிப்பார்த்தாலும் கிடைக்காத ஒரு புதிய கோட்பாடு அல்லது “பரிபாஷை”பற்றிய “நேரடி தரிசனம்” கிடைக்கிறது. பொதுவாக “ஆர்யவர்த்தம்” அல்லது ” ஆர்ய ராஷ்ட்ரா” அழைக்கப்பட்ட நிலப்பகுதிசாராத மற்ற பகுதிகளில் வாழும் மக்களை “துர்தர்ம” அதாவது “சமயமற்றவர்கள்” என்று குறிப்பிடுவது பண்டைய வடமொழி சாஸ்திரங்களின் மரபு என்பது இங்கே நினைவிற்கு வருகிறது. பௌதாயான தர்மசாஸ்திரா என்ற நூல் புந்தரம், கலிங்கம், வங்கம்
மற்றும் கிழக்கிந்திய நிலப்பகுதிகளுக்கு ஆரியர்கள் போகக்கூடாது; மீறிப் போனால் திரும்பி வரும்போது பிராயச்சித்த பரிகார சடங்குகள் செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறது.
(Reference: Ethic Settlements in Early Odisha by Shishir Kumar Panda: www.jstor.org)


ஆனால் “மனு நீதி”யின் “தெய்வத்தன்மை” மீது நம்பிக்கையற்றவர்களை கம்பர் எதனால், எத்தகைய பின்னணியில் “இருண்ட ஏழையர் உள்ளம்” என்று உருவகப்படுத்தி எழுதியிருக்கக்கூடும் என்பதை நம்மால் வரையறுத்துக் கூற முடியாது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய காலநிரல் சார்ந்த மதிப்பீட்டில் இதைக் குறிப்பெடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்லவும் இயலாது.
ஏனெனில், இந்தப் பாடல் நெருக்கி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பல்வேறு அறிவார்ந்த சமூகப் பொருளியல் கோட்பாடுகளின் தாக்கம் பெற்ற நிகழ்காலத்தில் கூட எப்படி மதிப்பிடப்படுகிறது என்பதும் இந்த இடத்தில் முக்கியமாகப்படுகிறது.
மேற்கண்ட பாடலை நான் “கூகுளில்” தேடிப் படித்துப் பொருள் காண முயன்ற‌போது இணையத்தில் இப்பாடல் குறித்த ஒரு விளக்கம் ஒன்றைக் கவனிக்க நேர்ந்தது. அந்த விளக்கம் இவ்வாறு செல்கிறது.
“….ஆக இரவு வந்து விட்டது என்று வெறுமனே விளம்பாமல் தனது நம்பிக்கை முழுவதையும், உண்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிட்டான் கம்பன். சுருக்கமாகச் சொன்னல் கடவுள்தான் வேதம், அறநூல்கள், அதைப் போற்றும் உண்மைப் பிராஹ்மணர்.”
மேற்கண்ட விளக்கத்துடன் “வாழிய வேதம் நான்கும்” என்ற கம்பனின் சொல்லாடல் பற்றிய கூடுதல் கண்ணோட்டத்தையும் நாம் அந்தக் கட்டுரையில் காண்கிறோம்.
“என்றும் வாழும் வேதம் என்பதில் இன்னொரு தாத்பர்யமும் உண்டு! வேத மந்திரமோ ஸம்ஸ்க்ருதமோ என்றும் அழியாது; இதற்கு என்ன சான்று?
“ஸம்ஸ்க்ருதம் கலக்காமல் ஐந்து நிமிஷம் கூட ஒருவரும் தமிழ் பேச இயலாது. ஒருவேளை ஆங்கிலச் சொற்களைப் போட்டு நிரப்பினால் அதுவும் ஸம்ஸ்க்ருதமே! ஏனெனில் ஆங்கில-ஸம்ஸ்க்ருதத் தொடர்பு உலகமே ஏற்றுக் கொண்ட உண்மை!
கம்பன் வாழ்க; தமிழ் வாழ்க; வேதம் வாழ்க!
–சுபம்– ” என்று முடிகிறது அந்தக் கட்டுரை.


காவிரி போன்ற கழனி நாடு கோசலை
——————————————————————–
மீண்டும் கம்பனுக்கு வருவோம். சராயு நதியின் வெள்ளப்பெருக்கை வர்ணிக்கும் போது ‘மனு’ என்ற நீதிமுறை; அதனால் வழிநடத்தப்படுகிற அரச நெறி; அதனால் கிடைக்கும் புகழ்; நான்கு வேதங்களிலும் திறன் படைத்த வேதியர்; அவர்களுக்கு வழங்கப்படும் தானங்களின் பெருக்கம் ஆகிய அனைத்தையும் ஒரு புள்ளியில் ‘கோர்த்து’ வைத்துப் பார்க்கிறார் கம்பர் என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தேன். அது சராயு நதி. ஒரு வகையில் இராமர் கதையின் முக்கியமான அட்சரேகையும் தீர்க்க ரேகையும் சந்திக்கும் புள்ளி அது.
ஆனால் அதே கம்பன் தென்னிந்தியாவையும் நடு இந்தியாவையும் இணைக்கும் பாலமான அகன்ற கோதாவரி நதியைப் பார்த்ததும்
புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’
என்று கவித்துவத்தின் உச்சத்தை தொடுகிறார். இதில் தமிழ் அகத்துறைகள் ஐந்திணை மரபுகள் என்று தமிழின் தனித்துவமான பெருமிதங்களை தென்னிந்தியாவின் வாசல் கதவான கோதாவரியை முன்வைத்துக் கவிதையாக்குகிறார்.
அது மட்டுமல்ல எங்கேயோ உள்ள கோசல நாட்டை வர்ணிக்கும் போது கூட “காவிரி அன்ன கழனி நாடு” என்று சொல்லும் போது தமிழ்நாட்டுக் கம்பனின் கவிக்குரலும் தமிழ் முகமும் வெளிப்படுகிறது.


சராயு நீரும் இராவணன் மண்ணும்
—————————————————————
ஆனால் நான்கு வேதங்கள் மனுநெறி‌ யாகங்கள் வேதியர் அனைத்தும் சேர்ந்ததே திருமால் என்று யுத்த காண்டத்தில் இலங்கையை முன் வைத்து இரவின் வருகையைச் சித்தரிக்கும் போது கம்பர் இராமாயணம் பேசும் பண்பாட்டு அரசியலைத் தான் எதிரொலிக்கிறார். ஒருவகையில் “இராமன் பூமிக்கும்” “இராவணன் பூமிக்கும்” இடையிலான இந்தப் “போரில்” மனுநீதி என்பது இந்த இரண்டு புள்ளிகளிலும் இருவேறு கோணங்களில் முன்னுரிமை பெறுகிறது.
இன்னொரு வகையில் கதைப்படி இராமாயணம் இந்தியாவின் தென்கோடி தாண்டி இலங்கைக்குள் பயணிக்கிறது என்றாலும் “மனுவின் சுவடுகளை” தமிழ் மண்ணில் கம்ப ராமாயணத்தில் கூட காண இயலவில்லை. ஏனெனில் கதைப்படி தென்கோடித் தமிழகத்தைத் தாண்டி இராமாயணம் இலங்கைக்குச் சென்றாலும் கோதாவரியைப் போல வைகை தாமிரபரணி போன்ற தமிழக நதிகள் அல்லது நாடுகள் அல்லது காடுகள் அல்லது ஊர்கள் பற்றிய விரிவான வருணனை கதைப்போக்கில் குறிப்பிடப்படவே இல்லை. கிட்கந்தா காண்டத்தில் இலங்கைக்கு எப்படிச் செல்வது என்று வழி சொல்லும் தோரணையில் வேங்கட மலை அதைக் கடந்து தொண்டை நாடு, பொன்னி நதியின் இருகரைகள்; தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம், பொருநை நதி அதன்பின் மகேந்திர மலை அதற்குப் பின்னால் கடல் என்று வழித்தடம் கூறப்படுகிறதே தவிர தமிழ்ச்சங்கத்தின் மதுரை நகரம் பற்றியோ அங்கு ஓடும் வைகை நதி பற்றியோ எந்தத் தகவலும் இல்லை. கிஷ்கிந்தா காண்டத்தில் இப்படி வழித்தடம் காட்டப்பட்டது கூட கம்பராமாயணம் தமிழில் எழுதப்பட்டது என்பதாலும் அவருக்கு தென்னாடு தெரியும் என்பதால் தான்.
இருந்தும் கூட நான்முகன் பற்றி 75 முறையும் நான்மறை பற்றி 39 முறையும் குறிப்பிடும் கம்ப ராமாயணத்தில் நான்மாடக் கூடலோ, கூடல் நகரமோ, மதுரையோ வைகையோ ஒருமுறை கூடக் குறிப்பிடப்படவில்லை.
சராயு நதி பெருக்கெடுத்து ஓடுவது கம்பன் பார்வையில் தரும நெறி கருதி; – மனுநீதிப்படி நடக்கும குளிர்ந்த குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும் ஞான வழியை நாடுகின்ற நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்;
தோன்றியது என்று வேதங்களையும் மனுநீதியையும் இராமர் பூமியை பின்னணியாக வைத்துச் சித்தரிப்பது என்றால் அதற்கு நேர் மாறானது யுத்த காண்டத்தில் இராவணன் மண்ணில் வரும் படப்பிடிப்பு.
இங்கே மீண்டும் வேதத்தையும் மனுவையும் உயர்த்துவதோடு மட்டுமின்றி இந்த “உயர்ச்சியை” அறியாதவர்களின் “தாழ்ச்சியையும்” சேர்த்துப் பேசுகிறது கம்பராமாயணம்.
அந்த வகையில் கோசலையில் தொடங்கி இலங்கையில் முடியும் இராமாயணக் கதையில் தமிழ் மண்ணிற்கு அல்லது தமிழ் மக்களுக்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க “தொடர்பும்” கிடையாது. இராமயணக்கதையின்படி எங்கோ இருக்கும் கிஷ்கிந்தாவிலிருந்து கொண்டு வரப்பட்ட “குரங்குப்படை” இலங்கை வேந்தனுக்கு எதிராக போரிடுகிறதே தவிர அதில் தமிழ் மண்ணின்/ மக்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. தனுஷ்கோடி சிவ வழிபாடு என்பது தவிர வேறு எதுவும் முன்னிறுத்தப் படவில்லை.
இராமகாதையை தமிழில் எழுதிய கம்பர் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதால் தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவமான அடையாளமான தமிழ்ச்சங்கம், முருகன் போன்ற பெயர்களையும் சொல்லாடல்களையும் கம்ப ராமாயணத்தில் காணமுடிகிறது. அது மட்டுமின்றி வட சொல் தென்சொல் எல்லையைக் கூட வேங்கட மலையின் பின்னணியில் குறிப்பிட்டுகிறார் கம்பர். வட வேங்கடம் தென் குமரி என்ற சங்க கால கோட்பாட்டின் தாக்கத்தால் குரங்குப் படைக்கு இலங்கைக்கு வழிகாட்டும் போக்கில் வட சொல் தென் சொல் எல்லைகளை கம்பர் குறிப்பிடுகிறார் என்று தோன்றுகிறது. ஆயினும் இது இந்தப் பதிவின் மையக் கருத்து இல்லை என்பதால் இதை இத்துடன் விட்டு நகர்கிறேன்.


கம்பனில் தமிழும் – ஆரியமும்
————————————————
ஆரியம்- தமிழ் என்பதை இனம், மொழி, நிலம், பண்பாடு என்ற அடையாளங்களில் ஒன்றையோ ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது மேற்சொன்ன அனைத்தையுமே உள்ளடக்கியக்கிய சொல்லாடல் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் பழந்தமிழ் இலக்கியங்களில் தொடங்கி இடைக்கால பிற்கால மற்றும் நவீன காலம் வரை இச்சொற்கள் எவ்வளவு மிகுதியாக எந்த வகையான பொருண்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றிய தரவுசார்ந்த புரிதல் தமிழ்ப்பண்பாடு மட்டுமின்றி இந்தியத்துணைக்கண்டப் பெருவெளியின் வெளிச்சமற்ற பல பக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும் என்பது எனது நம்பிக்கை.
கம்பராமாயணத்தில் ‘தமிழ்’ என்ற சொல் 17 முறையும்; ‘தமிழ் முனி,’ ‘தமிழ்நாட்டில்,’ ‘தமிழ்நாட்டினை’, ‘தமிழ்நாட்டு’, ‘தமிழ்நாடு’, ‘தமிழால்’, ‘தமிழும்’ ஆகிய சொல் ஆளுகைகள் ஒவ்வொரு முறையும் ( ஆக மொத்தம் 24) பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைப்போலவே ‘தென் சொல்’, ‘தென்னவர்’ ஆகிய சொல்லாடல்கள் ஒரு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கம்பராமாயணத்தில் ‘ஆரியன்’ என்ற சொல் 35 முறையும்; “ஆரிய” என்ற விளிப்புச் சொல் 8 முறையும்; ‘ஆரியம்’ என்ற சொல் இருமுறையும்; ‘ஆரியர்’ ஒருமுறையும்; ஆரியற்கு மூன்று முறையும்; ‘ஆரியனை’ மூன்று முறையும்; ‘ஆரியா’ என்ற சொல் ஒருமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஓர் ஆரிய இதிகாசத்தை தமிழில் எழுதும் போது இத்தகைய சொல்லாட்சிகள் இயல்பானதே என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அந்தச் சொல்லாட்சிகளின் ஊடாக வெளிப்படும் இந்தியத் துணைக்கண்ட பண்பாட்டு அரசியல் குறித்த புரிதல் தான் முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட சொல் சங்க இலக்கியங்களில் எப்படி எந்தக் கோணத்தில் எந்த தொனியில் பயன்படுத்தப்படுகிறது; அதே சொல்லாட்சிகள் காலப்போக்கில் இடைக்காலத்தில் எப்படி இதிகாச புராண தாக்கத்தால் எந்தவிதமான கருத்தியலை முன்னிலைப்படுத்தின. அவை தமிழ் மக்களின் பொதுச்சிந்தனையில் ஏற்படுத்திய விளைவுகள் எவை என்பது ஒரு தனி ஆய்வுக்களமாக விரியும். இயன்றால் அதை இந்தத் தொடரின் இறுதியில் பேசலாம்.
இப்போதைக்கு இத்தொடரின் மையக் கருத்தான மனு நீதிக்கு மீண்டும் வருவோம்.
வில்லிபாரதத்தை விட பெரியபுராணம் காலத்தால் முந்தையது என்றாலும் மனு சார்ந்த கருத்தியல் எவ்வாறு இராமாயணம் மகாபாரதம் என்ற இரு இதிகாசங்கள் மூலம் தமிழில் காலூன்றுகின்றன என்பதை விவாதிக்க வசதியாகவும்; இந்த இரு இதிகாசங்களுமே விஷ்ணுவின் அவதாரங்கள் தொடர்பானவை என்பதாலும் அவற்றை அடுத்தடுத்து பேசுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். அதனால் அடுத்து வில்லிபாரதத்தை விசாரிப்போம்.