பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 4 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்வில்லிபாரதத்தில் “மனு” / “மநு”
——————————————————–
வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் என்ற ”இரட்டைக்குதிரை”களின் மீது ஏறித்தான் ”மநு” / “மனு” என்ற சொல்லாடலும் அச்சொல்லாடல் சார்ந்த மதிப்பீடுகளும் தமிழ்மொழி மற்றும் அதன் பண்பாட்டுக் கருத்தியலில் கால் பதித்தன என்பதில் ஐயமே இல்லை.
எனது முந்தைய பதிவுகளில் ”மனு/ மநு”ச் சொற்கள் சங்க இலக்கியங்களில் தொடங்கி, திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், மூவர் தேவாரம் வரை தமிழ் இலக்கியங்கள் எதிலும் உச்சரிக்கப்படவே இல்லை; ஆவணப்பதிவு பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.
மேலும், முதன் முறையாக கம்பராமாயணத்தில் ”மனு” “ மனு நெறி”, ”மனு நீதி” ”மனு குலம்” ஆகிய சொல்லாடல்கள் இடம்பெற்ற சூழலையும் அவற்றின் ஊடாக வெளிப்படும் கவிக்குரலையும் பதிவிட்டிருந்தேன்.
இப்போது மகாபாரதத்தின் தமிழ்ப்பெயர்ப்பான வில்லிபாரதத்தில் மனு/ மநுச் சொற்களின் ஆளுகைகளையும் அச்சொல்லாடல்கள் இடம் பெறும் சூழலையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
இராமாயணத்தில் கதையின் நாயகன் இராமன், ரகு குலம் எனப்படும் சூரிய குலத்தில் பிறந்தவர். எனவே கம்பராமாயணத்தின் மனு தொடர்பையும் மனுநெறி போற்றும் கருத்தியலையும் இராமனின் ரகு குலத்தொடர்போடு இணைத்துப்பார்க்க முடிகிறது.
காசியப முனிவருக்கும் அதிதீக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் வம்சாவளிகளை சூரிய குலம் என்று குறிப்பிடுகின்றனர் .
வட இந்திய / வடமொழித் தொன்ம மரபுகளின்படி சூரியனுக்கும் சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார் இவர் தான் மனுஸ்மிருதியை இயற்றியவர் என்று பொதுவாக கருதப்படுகிறார். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பெயரனான இக்‌ஷவாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.
இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் புகழ்பெற்றவர்கள். மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் மீண்டும் தழைத்ததாக நம்புவதுண்டு. (இத்தகைய தகவல்களைத் தேடி அலையவேண்டியதில்லை. இணையத்தில் பல்வேறு வலைத்தளங்களில் ஏராளமான குறிப்புகள் உள்ளன)
சரி, வில்லிபாரதத்திற்கு வருவோம். இதில் முக்கியமான கதைமாந்தர்களாக வரும் பாண்டவர்கள், கௌரவர்கள் அங்காளி பங்காளிகள் தான். மகாபாரதம் ஒருவகையில் ஊதிப்பெருக்கப்பட்ட ஒரு குடும்பச்சண்டைக் கதை தான். இந்தப் பங்காளிகள் அனைவரும் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி என்றால் மகாபாரதத்திலும் மனு/ மநு எவ்வாறு வருகிறது. ஏன் மனு நீதி முன்னிறுத்தப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கான விடை இன்னொரு ”ஃப்ளாஸ் பேக்” கில் கிடைக்கிறது.
சந்திர குலம் தோன்றியது பற்றி ஒரு கதை மரபு சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிச் சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.


தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துச் சென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.
ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். புரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.
தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள்.
புரூரவன் ஊர்வசி நினைவில் பார்த்த பூங்கொடிகளையெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.
இந்தக் கதையில் இளன் என்பவனின் தந்தை வைவஸ்வத மனு. இந்த வைவஸ்வத மனு தான் சூரிய குலம் சந்திர குலம் என்ற இரண்டிற்கும் பொதுவான மூதாதை. (இந்தச் செய்திகள் அனைத்தும் இணைய வலைத்தளங்களில் விரிவாக கிடைக்கின்றன. நூலகங்களில் இந்த நூல்களின் ஆங்கில தமிழ் நூல்களை கண்டுபிடித்தும் படிக்கலாம்)
வைவஸ்வதமனு – சிரத்தாதேவி இணையருக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒரே பெண் குழந்தை இலா ஆவார். வைவஸ்தமனுவின் மூலம் சூரிய வம்சத்தினர் மற்றும் சந்திர வம்சத்தினர் எனும் பல அரச குலங்களாகக் கிளைத்தது.
பின்னர் மனுவிற்கு பிறந்த ஐம்பது குழந்தைகள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு வாழ்ந்தனர் வைவஸ்தமனு பூவுலகின் அனைத்து வகை சமூக மக்கள் வாழும் நெறிகள் குறித்து சாத்திரம் ஒன்றை தொகுத்து வழங்கினார். என்றும் கருத்துள்ளது.
வைவஸ்வத மனுவும் மனு நீதியை அளித்த மநுவும் ஒருவரே என்றும், வெவ்வேறானவர்கள் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
எதுவாயினும் நம்மைப் பொறுத்தவரையில் மனு/ மநு என்ற பெயர்கள் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களோடும் தொடர்புடைய சூரிய குலம், சந்திர குலம் ஆகிய இரண்டோடும் தொடர்புடைய பொதுப் பெயர் என்பது தான் முக்கியம்.
இந்த இரு இதிகாசங்களுமே, நான்கு வேதங்கள், மனு நீதி ஆகிய கருத்தியல்களைச் சார்ந்து இயங்குபவை; இந்த இதிகாசங்கள் மூலமாகத்தான் மனு/ மநு என்ற கருத்தியல் தமிழுக்குள் வருகிறது; சங்க இலக்கியங்கள் போன்ற தமிழ் மொழியின் தொன்ம வேர்களுக்கு இந்தக் கருத்தியலோடு “ஸ்நான ப்ராப்தி” கூட , அதாவது யாதொரு தொடர்பும் கிடையாது என்பது தான் நாம் முன்னிறுத்தும் கருத்து.
வில்லிபாரதம் ( மூலமும் உரையும் ): by Praveen Kumar G by Praveen Kumar G
இப்போது வில்லிபாரதத்தை விசாரிப்போம்.
வில்லிபாரதத்தில் ”மனு” என்ற பெயர்ச்சொல் 14 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர ”மனுகுல” என்ற அடைமொழி மூன்று முறையும், ”மனுநெறி’ மூன்று முறையும்; மனுநூல் இருமுறையும்; மனுகுலம், மனுமுறை ஆகிய சொல்லாடல்கள் தலா ஒருமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ‘மனுக்கள்’, ‘மனுவாய்’, ‘மனுவே’ ஆகிய சொற்பதங்கள் தலா ஒருமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ”மனு” என்ற சொல்லின் மாற்றுவடிவமான ‘மநு’ ஒருமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம், வில்லிபாரதத்தில் இடம் பெறும் மனு/ மனு தொடர்புடைய சொற்கள் 28 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இனி, இந்தச் சொல் ஆளுகைகளின் பின்னணி மற்றும் அவற்றின் ஊடாகப் புலனாகும் பொருண்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள நெறிகள் எல்லாம் நிலைபெறட்டும் என்று குறிப்பிடும் வாழ்த்துப் பாடலிலேயே ”வண் தமிழ் ஓங்குக” என்றும் வாழ்த்துவதன் மூலம் தமிழ் மொழி அதன் தனித்துவமான மெய்யியலில் ஒரு புதிய பரிமாணத்தை இணைக்கிறார் வில்லிபுத்தூரார். இந்த வாழ்த்துப் பாடலில் உலகில் சிறந்த அறம் பரவியிருக்கட்டும்; வளப்பம் மிக்க தமிழ் ஓங்கட்டும்; மழை குறைவின்றி பெய்யட்டும்; தவங்கள் சிறக்கட்டும்; மனுநூல் நெறிகள் நிலைபெறட்டும் என்று ஒரு சேர வாழ்த்துகிறார் படைப்பாசிரியர். (வில்லி: 1.2/3)
மனு என்ற கருத்தியல் ஒருமுறை கூடக் குறிப்பிடப்படாத பண்டைய தமிழ் இலக்கிய மரபிலிருந்து தமிழ் வாழ்த்தோடு ‘மனு’ வாழ்த்தைச் சேர்த்துச் சொல்லும் வில்லிபுத்தூரார் காலம் வரையிலான சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் அதற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்தால் பல புதிய புரிதல்கள் ஏற்படக்கூடும்.
திருதிராஷ்டிரன் தனது மகனான துரியோதனனை, “இந்து குலத்தில்’ அதாவது சந்திரகுலத்தில் தோன்றியவனே என்று அழைப்பதுடன் ” நீ கூறுவது மனுதர்ம நியாயத்தின்படி இல்லை” என்றும் சுட்டிக்காட்டுகிறார். இதிலிருந்து குரு நாட்டின் அரசமுறையின் அடிப்படை மனு நெறி என்பதும் புலனாகும்.
அரசுரிமை உள்ளவர்கள் உடல் உறுப்புகளில் ஏதும் குறைபாடு உள்ளவர்களாக இருந்தால் அரசுரிமை ஏற்கக்கூடாது என்ற மனு நெறியின் அடிப்படையில் தான் பிறவியிலே கண்பார்வையற்ற திருதிராஷ்டிரன் அரசுரிமையை தனது தம்பியான பாண்டுவுக்கு விட்டுக்கொடுத்தார் என்பது மகாபாரதக் கதை.
அதன் பின்பு பாண்டுவின் மூத்தமகனான தர்மபுத்திரன் இளவரசனாக குடையும் முடியும் கொண்டுவிளங்கியதைக் கண்டு பொறாத துரியோதனன் தன்னைப் பெற்ற தந்தையிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்திய போது தான் திருதிராஷ்டிரன் அவ்வாறு கூறுகிறார். (வில்லி: 3: 99/2)
வாசுதேவனாகிய கண்ணபிரானை மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்ட நீதிநெறிக்கு எல்லையானவர் என்று வில்லிபாரதம் போற்றுகிறது. (வில்லி: 5. 49/4)
பஞ்சபாண்டவர்களுக்கு திரௌபதியின் மூலம் ஐந்து மகன்கள் பிறந்ததைச் சொல்லும் போது அவர்கள் “வேதங்கள் சிறக்கும் வகையிலும் மனுநீதி சிறந்து விளங்கும் வகையிலும் பிறந்த்தாக வில்லிபாரதம் கூறுகிறது (வில்லி: 7.87/1)
மச்ச நாட்டை ஆண்ட விராடர்கோன் மனு குலத்து அரசன் என்றும் அவன் மனுநூல் வழியாக அவனியை ஆண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. (வில்லி. 19/3/1. இதில் மனுநூல் ஆதியின் மனுநூல் என்ற அடைமொழியுடன் போற்றப்படுகிறது. மேலும் விராடராசன் ‘தொழும் தகை மனு குல தோன்றல்” என்று மீண்டும் போற்றப்படுகிறான். (வில்லி: 21 30/1)
உதிட்டிரனாகிய தர்மன் மனுவினால் சொல்லப்பட்டிருக்கிற நீதிக்கெல்லாம் இருப்பிடமானவன் என்று குறிப்பிடப்படுகிறான்.(வில்லி: 44/71-3)
வடமொழி மகாபாரதத்தின் அடியொற்றி எழுதப்பட்டுள்ள வில்லிபாரதம் முழுவதும் வேத நெறிகள், மனு தர்ம சாஸ்திரம் அதனடிப்படையில் நிகழ்கிற அரசுரிமை நிகழ்வுகள் என்று ஒரு வேத- மனு- கருத்தாக்க கட்டமைப்பின் ஆதிக்கத்தைக் காணமுடிகிறது. அரசுரிமைக்கான வாரிசுகளைப் பெற்றெடுப்பது குறித்த மனுசாஸ்திரம் போன்ற முன்வழங்கு நெறிகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன.


பீஷ்மர் பிரம்மச்சரிய விரதம் பூண்டவர். அவரது தம்பி விசித்திர வீரியன் அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரை மணந்தவன். திடீரென்று விசித்திரவீரியன் இறந்து போகிறான். வாரிசு இல்லாமல் விசித்திர வீரியன் இறந்துபோனதால் மிகவும் வருந்துகிற காளி (பீஷ்மரின் தாய்) பீஷ்மரை அழைத்து உனது தம்பியாகிய விசித்திரவீரியன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டான். இத்தோடு சந்திர குலம் அழிந்துவிடக்கூடாது; எனவே உன் மூலம் உன் தம்பி மனைவிகள் குழந்தைப் பேறு பெறும்படி செய் என்று யோசனை சொல்கிறாள். இவ்வாறு இறந்துபோன சகோதரனின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் தருவது அங்கீகரிக்கப்பட்ட மரபே என்றும் அவள் சொல்கிறாள். இதைக்கேட்டு பிரம்மச்சாரி விரதம் பூண்டிருந்த பீஷ்மர் திகைத்துப் போகிறார். அவர் இந்த யோசனையை ஏற்காத பீஷ்மர் ஒரு மாற்று யோசனையை வழங்குகிறார்.
இதற்காக ஒரு பழைய ’தொன்ம நிகழ்வை’ நினைவுபடுத்துகிறார். பரசுராமனால் மனுகுலம் என்னும் சத்திரியகுல அரசர்கள் கூண்டோடு ஒழிக்கப்பட்டபோது மனுகுலம் வாரிசு இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக மனுகுலத்து அரசியர்கள் முனிவர்களின் மூலம் மகன்களைப் பெற்றுக்கொண்டதாகவும் அந்த முறை ஸ்மிருதிகளில் எழுதியுள்ள நன்முறையே என்றும் கூறுகிறார். அப்போது காளி எனப்படும் பீஷ்மரின் தாய், இன்னொரு பழைய நிகழ்வை தனது மகனான பீஷ்மரிடம் கூறுகிறார். காளி என்ற பீஷ்மரின் தாய் இளம் மங்கையாக இருக்கும் போது பராசரன் என்ற முனிவன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று தன்னைக்கூடி (அதாவது பீஷ்மரின் தாயாகிய காளியை) வியாசன் என்ற மகனைப்பெற்று தன்னோடு அழைத்துச் சென்றதாகவும், அந்த வியாசன் தனது தாயாகிய காளி எப்போது நினைத்தாலும் அடுத்த நொடியே அவள் முன் தோன்றுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில் அந்த வியாசனும் பீஷ்மருக்கு சகோதரன் முறையாவான் என்பதால் அவனை வரவழைத்து இறந்துபோன விசித்திரவீரியனின் விதவைகளை தாய்மை அடையச்செய்யலாம் என்றும் யோசனை கூறுகிறாள். அதன்படி முனிவனாகிய வியாசன் வரவழைக்கப்பட்டு அம்பிகையின் மூலம் பிறக்கும் போதே கண்பார்வையற்ற திருதிராஷ்டிரனும் அம்பாலிகையின் மூலம் பாண்டுவும் பிறக்கிறார்கள். உடல் உறுப்புகளில் குறையிருப்பவர்கள் முடிசூடக்கூடாது என்ற நெறிப்படியே திருதிராஷ்டிரன் முடிசூடாமல் பாண்டு முடிசூடுகிறான் என்று மகாபாரதக்க்கதை செல்கிறது.
அந்தவகையில் சந்திரகுலம் சூரியகுலம் ஆகிய இரண்டு அரசகுலத்தோடும் தொடர்புடைய ”மனு” என்ற பொதுமூதாதையர்; மனுநீதி என்ற நெறிப்படி தீர்மானிக்கப்பட்ட வாரிசுரிமை, அரசுரிமை, ஆட்சிமுறை என்று மனு/ மனுநீதி ஆகிய கருத்தாங்கங்களின் மீது தான் வடஇந்தியாவைக் களமாகக் கொண்ட இரண்டு இதிகாசங்களுமே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இதைத் தான் வில்லிபாரதமும் தமிழ்மொழியில் மீண்டும் உறுதிசெய்கிறது.
”மனு நெறி வழுவாமை” ஆகச்சிறந்த தலைமைப்பண்பாக வில்லிபாரத்த்தில் முன்னிறுத்தப்படுகிறது (வில்லி: 11. 63/2; 11.191/2; 11. 210/1). மனுநூல் குன்றுவதென்பது பெரிய குற்றமாகவே கருதப்படுகிறது (வில்லி: 39. 41/3). மனுநீதியை போற்றி பின்பற்றுதல் என்பது மகாபாரதத்தின் கதாநாயகர்களின் கருத்து மட்டுமல்ல; வில்லன்களின் கருத்துமாகும் என்பது “மருளே கொண்டு குடி வருந்த மனுநூல் குன்றி வழக்கு அழிய” என்ற பாண்டவர் தம் பகைவரின் மொழியிலும் புலனாகிறது. இதில் வியப்பு ஒன்றுமில்லை. மகாபாரதமே ஒருவகையில் பங்காளிச் சண்டை தானே. உழக்கிற்குள் ஏது கிழக்கு மேற்கு?
இவ்வாறு மகாபாரதம் என்ற இதிகாசத்தில் (வில்லிபாரதத்தில்) நான்மறை ஆகிய வேதங்கள்; எழுதப்பட்ட ஸ்மிருதிகள், குறிப்பாக மனுநீதி எனப்படும் தர்மசாஸ்திரம்; மனுகுலம் என்ற அரசுரிமை; மனுவோடு தொடர்புடைய சந்திர குலம் ஆகிய கருத்தாக்கங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய நிறுவனக் கட்டமைப்பாக முன்வைக்கப்படுகின்றன என்பதில் ஐயமே இல்லை. இதில் வியப்படையவும் ஒன்றுமில்லை.
ஆனால் எது வியப்பளிக்கிறது என்றால், தமிழ்; சோழர் குலம், தமிழ்க்கடவுளாகிய முருகன் ஆகிய தமிழ்/ தமிழர் அடையாளங்கள் கூட இந்த வில்லிபாரதக் காப்பியத்தில் கதைக்போக்கில் மகாபாரதக் கதையோடு கோர்த்துவிடப்படுகின்றன என்பது தான். இதை தமிழில் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் ஏற்பட்ட இதிகாசமயமாக்கல் அல்லது வடமொழியாக்கம் (Sanskritization) என்றும் சொல்லலாம்.
வில்லிபாரதத்தில் இது எந்தவகையில் நேர்கிறது; அதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது விரிவான ஆய்விற்குரியது. இதுபற்றி அடுத்த பதிவில் குறிப்பிடுவேன்.
(தொடரும்)
ஆர். பாலகிருஷ்ணன்
புவனேஸ்வரம்தொடர் 1 வாசிக்க:

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

தொடர் 2 வாசிக்க:

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 2 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

தொடர் 3 வாசிக்க:

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்