பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பிய இலக்கணம். அடிப்படையான வினைச் சொற்களும் முக்கியமான பெயர்ச் சொற்களும் அவ்வளவு எளிதாக ஒரு மொழிக்குள், அதிலும் குறிப்பாக தொன்மையும் தொடர்ச்சியுமாக தொடர்ந்து இயங்கும் தமிழ் போன்ற செம்மொழிகளில் நுழைந்து விட முடியாது.
ஒரு மொழியின் பண்டைய இலக்கியங்களில் ஒரு குறிப்பிட்ட பெயர் எத்தனை முறை குறிப்பிடப்படுகிறது என்பதை வைத்து அம்மொழியில், அம்மொழியைப் பேசும் மக்களின் பண்பாட்டில் அப்பெயர் எவ்வளவு முக்கியமானது அல்லது முக்கிமற்றது என்பதை அளவிடலாம். அது போலவே ஒரு மொழியின் இலக்கியப் பரப்பில் எப்போது ஒரு பெயர் நுழைகிறது; அத்தகைய நுழைவின் சமூகப் பண்பாட்டு அரசியல் சூழல் என்ன என்பதும் கவனத்திற்குரியது ஆகும்.
அண்மையில் “மனு” என்ற பெயர் தமிழக சமூகப் பண்பாட்டு அரசியல் களத்தில் தீவிரமாக பேசப்படும் ஒரு பெயர் ஆகும். “மனு” என்பவர் இயற்றியதாகச் சொல்லப்படும் மனுஸ்மிருதி என்ற பண்டைய நூலும் அதன் உள்ளடக்கமும் தீவிர கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்டதாக கூறப்படும் மனு நீதிச் சோழன் என்ற அரசனின் பெயரோடும் இந்தப் பெயர் தொடர்புபடுத்தப்படுவதால் இந்தப் பெயர் மேலும் கவனம் பெறுகிறது. மனுஸ்மிருதியை எழுதிய மனு விற்கும் சோழ மன்னனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லையெனினும் இந்தப் பெயர் ஒற்றுமையின் பின்னணியும் ஆய்விற்குரிய பொருளாகும்.


பண்டைய தமிழ் இலக்கியங்களில்
“மனு”:
————————————————————-
தமிழ் மொழியின் முழுமுதல் இலக்கணமான தொல்காப்பியத்தில் ‘மனு’ என்ற பெயரோ ‘மனு என்ற நெறி’யோ குறிப்பிடப்படவில்லை.
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற இலக்கியங்கள் எதிலும் ‘மனு’ என்ற சொல் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை.
‘மனு’ அல்லது ‘மநு’ என்ற பெயர் ஒரு முறை கூடப் பயன்படுத்தப்படாத தமிழ் இலக்கிய நூல்களின்
பட்டியல் வருமாறு:
தொல்காப்பியம் – 0
சங்க இலக்கியம்- 0
திருக்குறள்- 0
திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்: 0
சிலப்பதிகாரம்: 0
மணிமேகலை- 0
சீவக சிந்தாமணி- 0
வளையாபதி- 0
குண்டலகேசி- 0
முத்தொள்ளாயிரம்- 0
இறையனார் அகப்பொருள் உரை- 0
நளவெண்பா- 0
பெருங்கதை- 0
தேவாரம் (சம்பந்தர் – திருமுறை 1,2,3)- 0
தேவாரம் – திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமுறை ( 4,5,6)- 0
தேவாரம் – சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருமுறை (7)- 0
மூவர் தேவாரம்- 0
திருவாசகம்- ( திருமுறை 8/1) – 0
திருக்கோவையார் ( திருமுறை 8/2) – 0


இடைக்கால இலக்கியங்கள்
—————————————————
ஆனால் இடைக்காலக் காப்பியமான கம்பராமாயணத்தில் 25 முறை மனு மற்றும் அதனடிப்படையிலான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கம்பராமாயணம்: ( 25)
-மனு: 15
-மனுகுலத்தே (1)
-மனுநெறி (1)
-மனுவில் (1)
-மனுவின் (5)
-மனுவினை (1)
-மனுவும் (1)
கலிங்கத்துப்பரணி (10)
ஒட்டக்கூத்தர் எழுதிய கலிங்கத்துப்பரணி கிடைக்கவில்லை. ஆனால் செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி கிடைக்கிறது. இதுவும் இடைக்காலச் சோழர் வரலாறு சார்ந்த பின்னணியில் எழுதப்பட்ட நூலாகும். இதில் மனு / மனு சார்ந்த சொற்கள் 10 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
– மனு (6)
– மனுநீதி (1)
– மனுபரன் (1)
-மனுவினுக்கு (1)
– மனுவும் (1)
திருமந்திரத்தில் 2 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருமந்திரம்: (2)
மனு (2)
சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோர் எழுதிய மூவர் தேவாரத்திலும் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும்; திருக்கோவையாரிலும் மனு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் நாயன்மார்களின் வாழ்க்கை பற்றிய பெரிய புராணத்தில் ( சேக்கிழார் எழுதியது) 10 முறை மனுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியபுராணம்: (10)
மனு (5)
மனுநூல் (2)
மனுவால் (1)
மனுவின் (1)
மனுவேந்தனுக்கு (1)
இதைப் போலவே வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 4 முறை மனுச் சொல் காணப்படுகிறது.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
மனு (3)
மனுவும் (1)
திருப்புகழில் மநு என்ற‌ பெயர் வடிவம் 9 முறையும் மனு 3 முறையும் பயன்படுத்தப்படுகிறது.
திருப்புகழ்: ( மநு 9; மனு 3),
மநு (8)
மநுவும் (1)
மனு (1)
மனுநூல் (1)
மனுவின் (1)


தமிழ் இலக்கியங்களிலேயே வில்லிபாரதத்தில் தான் மனுச் சொல் மிகுதி. ( கம்பராமாயணம் 25; வில்லி பாரதம் 27). இது காலத்தால் பிந்தைய நூல் ஆகும்.
வில்லிபாரதம் ( மநு 1; மனு 27)
மநு (1)
மனு (14)
மனுக்கள் (1)
மனுகுல (3)
மனுகுலம் (1)
மனுநூல் (2)
மனுநெறி (3)
மனுமுறை (1)
மனுவாய் (1)
மனுவே (1
பண்டைய தமிழ் இலக்கியங்களில் மனுச் சொல் இடம் பெறாதது தமிழ்த் தொன்மங்களுடன் மனு நெறி எந்த வகையிலும் தொடர்பற்றது என்பதற்கு சான்று எனில் மனு / மநு என்ற சொற்கள் எந்தக் காலகட்டத்தில் எந்த இலக்கியத்தின் மூலம் எந்தச் சமூக பண்பாட்டு அரசியல் சூழலில் தமிழ் இலக்கியத்தில் நுழைகின்றன என்பது தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றின் போக்குகளை கால இடம் சூழல் பொருண்மை என்ற பரிமாணங்களில் புரிந்து கொள்ள உதவும்.
அத்தகைய ஆளுகைகளின் பின்னணியை / பொருளை ஒவ்வொரு இலக்கியமாக தனித்தனியே பதிவிடுவேன்.
பின் குறிப்பு:
————————–
தமிழ் இலக்கியங்களில் மனு / மநுச் சொற்களின் பயன்பாட்டை எளிதில் அறிய பேராசிரியர் திரு. பாண்டிய ராஜா அவர்களின் இணைய தளத்தகவல் உதவியது.
நன்றி.
(தொடரும்)
நன்றி: ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் முகநூல் பக்கம்