புதிய தாராளமய சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதற்கடுத்து வரப் போவது..? – எலிசபெத் மாண்டன் (ஆங்கிலத்தில்: ரட்ஜர் ப்ரெஹ்மேன், தமிழில்: தா.சந்திரகுரு)

புதிய தாராளமய சகாப்தம் முடிவுக்கு வருகிறது. அதற்கடுத்து வரப் போவது..? – எலிசபெத் மாண்டன் (ஆங்கிலத்தில்: ரட்ஜர் ப்ரெஹ்மேன், தமிழில்: தா.சந்திரகுரு)

 

ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாததாக இருந்த ஒன்று, திடீரென்று நெருக்கடியான காலகட்டத்தில், தவிர்க்கவே முடியாததாகி விடும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு,  இப்போது மிகப்பெரிய சமூக சிக்கலுக்கு நடுவே நாம் இருந்து வருகிறோம். புதிய தாராளமயம் தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. செல்வந்தர்களுக்கான அதிக வரி தொடங்கி, வலுவான அரசாங்கம் வரைக்கும், சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் சாத்தியமற்றதாகத் தோன்றிய கருத்துக்களுக்கான  நேரம் இப்போது வந்து சேர்ந்திருக்கின்றது.

 இந்த தொற்றுநோயை அரசியலாக்க கூடாது என்று சொல்பவர்கள் இருக்கின்றனர். அது ஏதோவொரு மனநிறைவில் அவர்கள் குளிர் காய்வதற்கு ஒப்பானதாகவே இருக்கிறது. அதேபோன்று மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்டு இது கடவுளின் கோபம் என்று கதறுபவர்களும், சீன வைரஸ் என்று ஜனரஞ்சகமான வதந்தியைச் சொல்லிப் பயமுறுத்துபவர்களும், அனைவருக்கும் அன்பு, கவனிப்பு, இலவசமாகப் பணம் ஆகியவற்றைத் தருவதாக இருக்கின்ற புதிய சகாப்தத்திற்குள் நாம் நுழையப் போகிறோம் என்று கணிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த தொற்றுநோய் குறித்து துல்லியமாகப் பேச வேண்டிய நேரம் இது என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். இந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள், எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கப் போகின்றன. அல்லது 2008ஆம் ஆண்டு லெஹ்மன் பிரதர்ஸின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஒபாமாவின் அலுவலகத் தலைவர் கூறியதைப் போல, ‘கடுமையான நெருக்கடி வீணாகிப் போவதை ஒருபோதும் விரும்பவில்லை’ என்பதைப் போல இருக்கப் போகிறது.

முதல் சில வாரங்களுக்கு, நான் விமர்சனம் செய்பவர்களின் பக்கமே இருந்தேன். நெருக்கடிகள் ஏற்படுத்தித் தரப் போகின்ற வாய்ப்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் என்றாலும், அது இப்போது சிந்தனையற்றதாக, இன்னும் சொல்வதென்றால் வலியச் செய்த தாக்குதலாகவே தோன்றுகிறது. அதற்குப் பின்னர் மேலும் நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக, மாதங்கள், ஒரு வருடம் என்று இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த நெருக்கடிக்கு எதிராக ஒருநாள் தற்காலிகமாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், அடுத்த நாளே நிரந்தரமாக  மாறுகின்றன.

இந்த நேரத்தில் நம்மை நோக்கி வருவதர்கு, எது காத்துக் கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது நமக்குத் துல்லியமாகத் தெரியாததால், எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக இருப்பதால், அது குறித்து நாம் அவசியம் பேச வேண்டியிருக்கிறது.

அலை மாறுகிறது

பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை, 2020 ஏப்ரல் 4 அன்று தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த தலையங்கம் வரலாற்றாய்வாளர்களால் பல ஆண்டுகளுக்கு மேற்கோள் காட்டப்படக் கூடியதாக இருந்தது.

பைனான்சியல் டைம்ஸ், உலகின் முன்னணி வணிக தினசரி பத்திரிக்கையாகும். நேர்மையாகச் சொல்வதென்றால், அது ஒன்றும் முற்போக்கான பத்திரிக்கை இல்லை. உலகளாவிய அரசியல் மற்றும் நிதி தொடர்பான பணம் படைத்த, அதிகாரம் மிக்கவர்களால் அது வாசிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ’எப்படி செலவழிப்பது’ என்ற தலைப்பில் படகுகள், மாளிகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் கார்கள் குறித்து இணைப்பு இதழை அது வெளியிட்டு வருகிறது.

ஆனால் இந்த ஏப்ரல் மாதத்தில், மறக்கமுடியாத சனிக்கிழமை காலையில், அந்த பத்திரிக்கை ’கடந்த நாற்பதாண்டுகளாக நடைமுறையில் உள்ள கொள்கை வழிமுறைகளை மாற்றியமைக்கின்ற வகையில் தீவிர சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் பொருளாதாரத்தில் மிகவும் அதிகமான பங்கை  ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுச்சேவைகளை  செலவுகளாகப் பார்க்காமல், முதலீடுகளாகப் பார்க்க வேண்டும். பாதுகாப்பற்ற தொழிலாளர் சந்தைகளை பாதுகாப்புள்ளவைகளாக மாற்றுவதற்கான வழிகளைத் தேட வேண்டும்.  சமத்துவத்தைப் பேணுகின்ற வகையில் மறுபகிர்வு மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். வசதியானவர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான சலுகைகள். அடிப்படை வருமான மற்றும் செல்வ வரி குறித்து, இதுவரையிலும் விசித்திரமாக கருதப்பட்டு வந்த கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்’ என்ற கருத்தை அந்த தலையங்கம் வெளிப்படுத்தி இருந்தது.

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கின்றது? அதிக அளவிலான மறுபகிர்வு, பெரிய அளவில் அரசாங்கத்தின் பங்கு, அடிப்படை வருமானம் தேவை என்று முதலாளித்துவத்தின் காவலர்கள் திடீரென்று வாதிடுவது எவ்வாறு நடக்க முடியும்?

சிறிதளவில் அரசாங்கத்தின் பங்கு, குறைந்த வரி, மிகக் குறைந்த சமூகப் பாதுகாப்பு – அதிகபட்சமாக கூர்மையான விளிம்புகளை மழுங்கடிக்கும் வகையில் – என்று முதலாளித்துவ மாதிரியின் பின்னால், அந்த பத்திரிக்கை நிறுவனம் பல்லாண்டுகளாக உறுதியாக நின்று வந்திருக்கிறது. 1986ஆம் ஆண்டு முதல் அந்த பத்திரிகையில் எழுதி வந்த பத்திரிகையாளர் ஒருவர், ’நான் அங்கே பணிபுரிந்த போது, பைனான்சியல் டைம்ஸ் மனித முகம் கொண்ட தாராள சந்தை முதலாளித்துவத்தை ஆதரித்து வந்தது. ஆனால் இப்போது ஆசிரியர் குழுவிலிருந்து வந்திருக்கின்ற இந்த தலையங்கம் மிகவும் தைரியமான, புதிய திசையில் நம்மைச் செலுத்துவதாக இருக்கிறது’ என்கிறார்.

அந்த தலையங்கத்தில் உள்ள கருத்துக்கள் திடீரென்று தோன்றியதாகத் தெரியவில்லை. அவை தொலைதூரத்திலிருந்து மிக நீண்ட தூரம் பயணித்து பிரதான  நீரோட்டத்திற்கு வந்திருக்கின்றன. அரசிலாக் கொள்கை கொண்டோரின் கூடார நகரங்களில் துவங்கி விவாத நிகழ்ச்சிகள் வரைக்கும்; தெளிவற்ற வலைப்பதிவுகளில் துவங்கி பைனான்சியல் டைம்ஸ் வரைக்கும் அவை பயணித்து வந்திருக்கின்றன. .

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய நெருக்கடிக்கு  மத்தியில் உருவாகியிருக்கும் இவ்வாறான கருத்துக்கள், இப்போதிருக்கும் உலகை மாற்றக்கூடியவை.

இந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள, வரலாற்றில் நாம் ஒரு படி பின்னோக்கிச் செல்ல வேண்டும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக, முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக, தாராள சந்தை முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களாக இருந்தவர்களே இருந்ததை, இப்போது கற்பனை செய்வது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

மாண்ட் பெலரின் சொசைட்டி

Image

1947ஆம் ஆண்டில், சுவிஸ் கிராமமான மாண்ட் பெலெரினில் சிறிய ஆலோசனைக் குழு ஒன்று நிறுவப்பட்டது. மாண்ட் பெலரின் சொசைட்டி என்ற அந்த குழு, நவீன தாராளவாதிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட தத்துவஞானி பிரீட்ரிக் ஹயக், பொருளாதார வல்லுனர் மில்டன் ப்ரீட்மேன் போன்றவர்களால் உருவானது.

Image

அந்த நாட்களில், போருக்குப் பின்னர், பெரும்பாலான அரசியல்வாதிகளும், பொருளாதார வல்லுநர்களும், பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனரும், வலுவான அரசை ஆதரித்தவருமான ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் முன்மொழிந்த அதிக வரி, வலுவான சமூக பாதுகாப்பு வலை போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அதற்கு மாறாக நவீன தாராளவாதிகள், வளர்ந்து வருகின்ற அரசுகள் புதிய வகையிலான கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சினர். அதற்கு எதிராக அவர்கள் கலகம் செய்தனர்.

Image

நீண்ட தூரம் தாங்கள் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை மாண்ட் பெலரின் சொசைட்டியின் உறுப்பினர்கள் அறிந்திருந்தனர். புதிய சிந்தனைகள் மேலோங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம், பொதுவாக ஒரு தலைமுறை அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஹயக், ’நடக்கின்ற நிகழ்வுகளை பாதிக்க இயலாதவையாக, நமது தற்போதைய சிந்தனைகள் தோன்றுவதற்கு இதுவும் ஒரு காரணம்….’ என்று கூறினார்.

மில்டன் ப்ரீட்மேன்தடையற்ற சந்தை

அதே எண்ணத்திலேயே இருந்த ப்ரீட்மேன் ’தாங்கள் இருபதாண்டுகளுக்கு முன்னர் கல்லூரியில் படித்த போது இருந்த அறிவுசார் சூழ்நிலையையே, இப்போது நாட்டை நடத்தி வருபவர்கள் பிரதிபலிக்கிறார்கள்” என்றார். பெரும்பாலானவர்கள், தங்களுடைய பதின்ம வயதிலேயே, தங்களிடம் இருக்கின்ற அடிப்படைக் கருத்துக்களை, வளர்த்துக் கொள்கிறார்கள் என்று அவர் நம்பினார். ’அரசியல் உலகில் என்ன நடக்கிறது என்பதை தீர்மானிப்பதில் இன்னும் பழைய கோட்பாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன’ என்பதை விளக்குவதாக அது இருக்கிறது.

ப்ரீட்மேன் தடையற்ற சந்தைக் கொள்கைகளை ஆதரித்துப் பேசுபவராக இருந்தார். சுயநலத்தின் முக்கியத்துவத்தின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.  எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்,’அரசாங்கம் வேண்டாம்; வணிகம் நீடூழி வாழ்க’ என்றே அவருடைய தீர்வு மிகவும் எளிதாக இருந்தது. சுகாதாரத்துறை முதல் கல்வி வரை ஒவ்வொரு துறையையும் அரசாங்கம், தேவைப்பட்டால் பலவந்தமாக, சந்தையாக மாற்ற வேண்டும். இயற்கைப் பேரழிவில் கூட, நிவாரணங்களை ஏற்பாடு செய்வதற்கான  பொறுப்பை ஏற்கும் வகையில் போட்டிகள் நிறைந்த நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தான் ஒரு தீவிரவாதி என்று அறிந்திருந்த ப்ரீட்மேன், பிரதான நீரோட்டத்திலிருந்து தான் வெகு தொலைவில் விலகி நிற்பதையும் உணர்ந்திருந்தார். ஆனாலும் அது அவரை உற்சாகப்படுத்தவே செய்தது. 1969ஆம் ஆண்டில், இந்த அமெரிக்க பொருளாதார வல்லுனரை பாரிஸ் வடிவமைப்பாளராக டைம் பத்திரிகை அடையாளம் காட்டியது. ’அவரால் வடிவமைக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே வாங்கப்படுகின்றன என்றாலும், கிட்டத்தட்ட அனைத்து பிரபலமான வடிவமைப்புகளின் மீதும் அவை தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன’ என்று அவரைப் பற்றி டைம் பத்திரிக்கை எழுதியது.

நெருக்கடிகள்  ப்ரீட்மேனின் சிந்தனையில் முக்கிய பங்கு வகித்தன. முதலாளித்துவம் மற்றும் சுதந்திரம் (1982) என்ற புத்தகத்தின் முன்னுரையில், ’உண்மையான அல்லது அப்படி உணரப்படுகின்ற நெருக்கடி மட்டுமே, உண்மையான மாற்றத்தை உருவாக்குகிறது. நெருக்கடி ஏற்படும் போது, ​​எடுக்கப்படும் நடவடிக்கைகள், சுற்றி இருக்கின்ற கருத்துக்களைப் பொறுத்ததாகவே இருக்கும்’ என்ற பிரபலமான வார்த்தைகளை அவர் எழுதியிருந்தார்.

’நெருக்கடியான நேரத்தில் நடக்கின்றவை அனைத்தும் போட்டிருக்கின்ற அடித்தளத்தைப் பொறுத்தே சுற்றி இருக்கின்ற கருத்துக்கள் அமைந்திருக்கும். நம்பத்தகாதது அல்லது சாத்தியமற்றது என்று முன்னர் நிராகரிக்கப்பட்டிருந்த கருத்துக்கள், இப்போது தவிர்க்க முடியாதவையாகி விடும்’ என்று ப்ரீட்மேன் கூறினார். .

அதுதான் நடந்தது. 1970களின் நெருக்கடிகளின் போது (பொருளாதார சுருக்கம், பணவீக்கம் மற்றும் ஒபெக் எண்ணெய் தடை) நவீன தாராளவாதிகள் தயாராக இருந்தனர். ’உலகளாவிய கொள்கை மாற்றத்தைத் துரிதப்படுத்த அவர்கள் உதவினர்’ என்று வரலாற்றாசிரியர் அங்கஸ் புர்கின் கூறுகிறார். ஹயக் மற்றும் ப்ரீட்மேனின் தீவிரமான கருத்துக்களை, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் போன்ற கன்சர்வேடிவ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்களுடைய அரசியல் எதிரிகளாக இருந்த பில் கிளிண்டன் மற்றும் டோனி பிளேர் போன்றவர்களும், காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டனர்.

Image

உலகெங்கிலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தனியார்மயமாக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. சமூக நலன்கள் குறைக்கப்பட்டன. ’நான் அரசாங்கத்தைச் சேர்ந்தவன், உதவுவதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்’ என்ற ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் மிகவும் அச்சுறுத்துவதாக ரீகன் கூறினார். 1989இல் கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், சமூக ஜனநாயகவாதிகள் கூட அரசாங்கம் என்ற அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாகவே தோன்றியது. 1996ஆம் ஆண்டில் ஒன்றிய அரசுகளுக்கான தனது உரையில், அதிபராக அப்போது இருந்த கிளின்டன், ’அரசாங்கம் பெருமளவில் பங்கேற்கிற  சகாப்தம் முடிந்துவிட்டது’ என்று  பேசியிருந்தார்.

நவீன தாராளமயம் வைரஸைப் போன்று ஆலோசனைக் குழுக்களிடமிருந்து பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகையாளர்களிடமிருந்து அரசியல்வாதிகளுக்கும் பரவி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற விருந்தில், உங்களுடைய மிகப்பெரிய சாதனை என்று எதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று தாட்சரிடம் கேட்கப்பட்டது. அவருடைய பதில் என்னவாக இருந்தது? ’டோனி பிளேர் மற்றும் புதிய தொழிற் கட்சி… எதிராளிகள் மனதை மாற்றிக் கொள்ளும்படி  நாங்கள் கட்டாயப்படுத்தினோம்’ என்றார்.

2008 தாராளமயத்தின் சரிவு

பின்னர் 2008ஆம் ஆண்டு வந்தது. .

பெரும் மந்தநிலைக்குப் பிறகு, செப்டம்பர் 15 அன்று, மிக மோசமான நிதி நெருக்கடியை அமெரிக்க வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ்  கட்டவிழ்த்து விட்டது. தாராள சந்தையைக் காப்பாற்றுவதற்காக, மிகப் பெரிய அளவிலான அரசாங்க உதவிகள் தேவைப்பட்டன. ​​அது புதிய தாராளமயத்தின் சரிவையே குறித்தது.

ஆனாலும், ஒரு வரலாற்று திருப்புமுனையாக அந்த 2008ஆம் ஆண்டு இருக்கவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாடும் இடதுசாரி அரசியல்வாதிகளைப் புறக்கணித்தன. கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு  ஆகியவை மிகப் பெரிய அளவிற்கு குறைக்கப்பட்டன. அசமத்துவம் அதிகரித்தது. வால்ஸ்ட்ரீட்டில் வழங்கப்பட்ட போனஸ் அதிக அளவிற்கு அதிகரித்திருந்தது. அந்த சரிவிற்குப் பிறகு, ஒரு வருடம் கழித்து பைனான்சியல் டைம்ஸில், ’எப்படி செலவழிப்பது’ என்ற சொகுசு வாழ்க்கை முறை இணைய இதழ் பதிப்பு தொடங்கப்பட்டது.

Image

1970களின் நெருக்கடிகளுக்கு எதிராக நவீன தாராளவாதிகள் பல ஆண்டுகளாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு எதிராக சவால் விடுத்தவர்கள் வெறுங்கையுடன் நின்றனர். பெரும்பாலும் தாங்கள் எதை எதிர்க்கிறோம் என்பதை, அதாவது நிதிவெட்டுக்களுக்கு எதிராக, அமைப்பிற்கு எதிராக நின்றதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனாலும் அவர்களிடம் திட்டம் எதுவும் இருந்ததா? எதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இப்போது, ​​12 ஆண்டுகளுக்குப் பிறகு, நெருக்கடி மீண்டும் தாக்கியிருக்கிறது. இது மிகவும் அழிவுகரமானதாக, அதிர்ச்சியூட்டுவதாக, மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

பிரிட்டிஷ் மத்திய வங்கியின் கூற்றுப்படி, 1709ஆம் ஆண்டு  மோசமான குளிர்காலத்திற்குப் பிறகான மிகப்பெரிய மந்தநிலையை எதிர்கொள்ளும் நிலையில் ஐக்கியப் பேரரசு இருந்து வருகிறது. மூன்றே வார இடைவெளியில், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1.7 கோடிப் பேர் பொருளாதார பாதிப்பு பணம் பெற விண்ணப்பித்தனர். 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது, இந்த எண்ணிக்கையில் பாதியை எட்டுவதற்கே இரண்டு வருடங்கள் ஆனது.

Image

2008ஆம் ஆண்டு சரிவைப் போலல்லாமல், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு ஒரு தெளிவான காரணம் உள்ளது. ’இணை கடன் கடமைகள்’ அல்லது ’கடன் இயல்புநிலை மாற்றங்கள்’ ஆகியவை பற்றி என்னவென்று நம்மில் பெரும்பாலோருக்கு எந்தவித அறிவும் 2008ஆம் ஆண்டு இருக்கவில்லை. ஆனால் நாம் அனைவருமே இப்போது ஒரு வைரஸ் என்றால் என்ன என்பதை நன்கு அறிந்திருக்கிறோம். 2008க்குப் பிறகு கடனாளர்கள் மீது பழியைச் சுமத்த பொறுப்பற்ற வங்கியாளர்கள் முனைந்தனர். ஆனால் அவ்வாறான தந்திரம் இன்றைக்கு நிறைவேறாது.

2008க்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு என்ன? அறிவார்ந்த அடித்தளம். சுற்றி இருக்கின்ற கருத்துக்கள் என்று ப்ரீட்மேன் சொன்னது சரியென்றால், ஒரு நெருக்கடியானது, நினைத்துப்பார்க்க முடியாததை தவிர்க்க முடியாததாக ஆக்கி விடும் என்றால், இந்த முறை அது நிச்சயம் மிகவும் மாறுபட்டதொரு திருப்பத்தை  மேற்கொள்ளும்.

ஆபத்தான பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்கள்

2019 அக்டோபரில் தீவிர வலதுசாரி இணையதளம் ஒன்றில் தலைப்பில் ’பொருளாதாரத்தையும் முதலாளித்துவத்தையும் இளைஞர்கள் கவனிக்கின்ற விதம் குறித்து மூன்று தீவிர இடது பொருளாதார வல்லுநர்கள் செல்வாக்கு செலுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்த இணையதளம் போலிச் செய்திகளைப் பரப்புவதில் சிறந்து விளங்குகின்ற, மிகக்குறைந்த பட்ஜெட் வலைப்பதிவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனாலும் பிரெஞ்சு பொருளாதார வல்லுநர்கள் மூவரின் தாக்கத்தை, அந்த தலைப்பு மிகச் சரியாகவே கூறியிருந்தது.

தாமஸ் பிகெட்டி, இம்மானுவேல் சாஸ், கேப்ரியல் ஜுக்மன்

அந்த மூவரில் ஒருவரின் பெயரை முதன்முதலாகப் பார்த்தது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது: தாமஸ் பிகெட்டி. 2013ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தின் போது, நான் எப்போதும் செய்து வருவதைப் போலவே, அன்றும் பொருளாதார வல்லுனர் பிராங்க்கோ மிலானோவிக் வலைப்பதிவில் உலாவிக் கொண்டிருந்தேன். சக ஊழியர்கள் குறித்த அவருடைய கடுமையான விமர்சனங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அந்த குறிப்பிட்ட இடுகையை, மிலானோவிக் மிகவும் மாறுபட்ட தொனியில் எழுதியிருந்தார். பிரெஞ்சு மொழியில் 970 பக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நூல் ஒன்றை வாசித்து  முடித்துவிட்டு, அந்த நூலின் புகழை அதில் பாடியிருந்தார். அந்த நூல் ’பொருளாதார சிந்தனையில் ஒரு மிகப் பெரிய திருப்பம்’ என்பதாக அவர் எழுதியிருந்ததை நான் அப்போது படித்தேன்.

Branko Milanović lecture: Recent trends in global income ...

சமத்துவமின்மை குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதில் எந்தவொரு அக்கறையும் எடுத்துக் கொள்ளாத சில பொருளாதார வல்லுநர்களில் ஒருவராக மிலானோவிக் நீண்ட காலம் இருந்து வந்தார். அவருடைய சக ஊழியர்களில் பெரும்பாலோரும் அது குறித்து பேச மாட்டார்கள். 2003ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற ராபர்ட் லூகாஸ், விநியோகம் குறித்த ஆய்வானது விரிவடையும் பொருளாதாரத்திற்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது என்று வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே தனது அற்புதமான வேலையை பிகெட்டி தொடங்கியிருந்தார். 2001ஆம் ஆண்டில், வருமானத்தில் முதல் 1% இடத்தைப் பிடித்துள்ளவர்களைக் குறிப்பிடும் வகையிலான வரைபடத்துடன் எளிதில் புரியாத ஒரு புத்தகத்தை அவர் வெளியிட்டார். அந்த பிரெஞ்சு மூவரில் இரண்டாவது நபரான, சக பொருளாதார நிபுணர் இம்மானுவேல் சாஸுடன் சேர்ந்து, அமெரிக்காவில் இருபதுகளில் இருந்ததைப் போலவே  இப்போதும் சமத்துவமின்மை அதிகமாக  இருக்கிறது என்பதை அவர் நிரூபித்தார். அவருடைய இந்த கல்விப் பணிதான் வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமித்து ’நாங்கள் 99%.’ என்ற முழக்கத்தை முன்வைப்பதற்கு தூண்டுதலாக இருந்தது.

2014இல், உலகை தன்வசம் பிகெட்டி உடனடியாக ஈர்த்துக் கொண்டார். பலரின் விரக்திக்கு (பைனான்சியல் டைம்ஸ் முன்னணியில் நின்று அந்த தாக்குதலை நடத்தியது). உள்ளான அந்த பேராசிரியர் விரைவிலேயே, ராக்-ஸ்டார் பொருளாதார நிபுணராகிப் போனார். தன்னுடைய செயல்முறையை பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பகிர்ந்து கொள்வதற்காக, அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அவரது உரையில் முக்கியமான  கருப்பொருளாக இருந்தது எது தெரியுமா? வரிகள்.

July « 2015 « www.oodaru.com
தாமஸ் பிக்கெட்டி

வரிகள் நம்மை பிரெஞ்சு மூவரில் மூன்றாவது நபரான, இளம் பொருளாதார நிபுணர் கேப்ரியல் ஜுக்மனிடம் அழைத்துச் செல்கின்றன. 2008ஆம் ஆண்டில் லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சியடைந்த நாளில், 21 வயது இளம் பொருளாதார மாணவராக இருந்த ஜுக்மன் பிரெஞ்சு தரகு நிறுவனம் ஒன்றில் தன்னுடைய பயிற்சியைத் தொடங்கியிருந்தார்.  அடுத்த சில மாதங்களில், ஜுக்மனுக்கு உலகளாவிய நிதி அமைப்பின் சரிவை மிக அருகில் இருந்து பார்க்கின்ற வாய்ப்பு கிட்டியது. அந்த நிலைமையிலும் மிகப் பெருமளவிலான பணம், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை மறைத்து வைத்திருக்கின்ற வரி புகலிடங்களான லக்சம்பர்க், பெர்முடா போன்ற சிறிய நாடுகளின் வழியாகப் பாய்வதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

சில ஆண்டுகளிலேயே, ஜுக்மன் உலகின் முன்னணி வரி நிபுணர்களில் ஒருவரானார். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ’நாடுகளின் மறைக்கப்பட்ட செல்வம்’ (தி ஹிடன் வெல்த் ஆஃப் நேசன்ஸ்) என்ற புத்தகத்தில், இதுபோன்ற வரி புகலிடங்களில் உலகளாவிய செல்வத்தில் 7.6 லட்சம் கோடி டாலர் பணம் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் கணக்கீடு செய்திருந்தார். இம்மானுவேல் சாஸுடன் இணைந்து எழுதிய புத்தகத்தில், அமெரிக்காவில் இருக்கின்ற பிளம்பர்கள் முதல் கிளீனர்கள் வரை மற்றும் செவிலியர்கள் முதல் ஓய்வு பெற்றவர்கள் வரை இருக்கின்ற மற்ற வருமானக் குழுக்களை விட மிகக்குறைந்த அளவிலான வரி விகிதத்தையே 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் செலுத்துகிறார்கள் என்பதைக் கணக்கிட்டிருந்தனர்..

தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு, அந்த இளம் பொருளாதார நிபுணருக்கு அதிக அளவிலான வார்த்தைகள் தேவைப்படவில்லை. அவரது வழிகாட்டியான பிகெட்டி 2020ஆம் ஆண்டில், 1,088 பக்கங்கள் கொண்ட மற்றொரு மிகப்பெரிய புத்தகத்தை வெளியிட்டிருந்தார். ஆனாலும் ’பணக்காரர்கள் எவ்வாறு வரியைத் தவிர்க்கிறார்கள், அவர்களை எவ்வாறு வரி கட்ட வைப்பது’ என்ற உபதலைப்புடன் எழுதப்பட்ட சுருக்கமான ஜுக்மேன் மற்றும் சாஸின் புத்தகத்தை ஒரே நாளில் படித்து விட முடியும். என்ன என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை அடுத்த அமெரிக்க அதிபருக்கு தொகுத்து கொடுப்பது போலவே அந்த புத்தகம் இருக்கிறது.

Emmanuel Saez and Gabriel Zucman – Curtis Brown

அடுத்து எடுத்து வைக்கப் போகும் மிக முக்கியமான அடி என்னவாக இருக்கும்? அனைத்து கோடீஸ்வரர்கள் மீது விதிக்கப்பட்டு வரும் செல்வ வரியை, ஆண்டுதோறும் அதிகரிக்கும் வகையில் மாற்ற வேண்டும். அதிக வரிகள்  பொருளாதாரத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அவசியமில்லை. மாறாக, அதிக வரிகளின் மூலமாக முதலாளித்துவம் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். (1952ஆம் ஆண்டில், வருமான வரி அடைப்பு அமெரிக்காவில் மிக அதிகமாக 92% ஆக இருந்த போது, அப்போதைய பொருளாதாரம் முன்னெப்போதையும் விட வேகமாகவே வளர்ந்தது)

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு , இந்த வகையான சிந்தனைகளுக்கு வாய்ப்புகள் எதுவுமில்லை என்றே கருதப்பட்டது. செல்வ வரியால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை என்றும், கணக்காளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் துணையுடன், தங்களுடைய பணத்தை மறைப்பதற்கான வழிகளை பணக்காரர்கள் எப்படியும் கண்டுபிடிப்பார்கள் என்றும் முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிதி ஆலோசகர்கள் உறுதியளித்தனர். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, செல்வ வரியை வடிவமைப்பதற்கு உதவ முன்வந்த பிரெஞ்சு மூவரின் உதவிகளை பெர்னி சாண்டர்ஸின் குழுவினர் கூட நிராகரிக்கவே செய்தனர். ஆனால் நாம் இப்போது இருக்கின்ற இடத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்கின்ற கருத்தியலை 2016ஆம் ஆண்டு கொண்டிருந்தது.

Gabriel Zucman: The wealth tax guru advising Sanders & Warren …

2020ஆம் ஆண்டில், சாண்டர்ஸின் போட்டியாளரான ஜோ பிடென், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் திட்டமிட்டிருந்த இரு மடங்கு வரி அதிகரிப்பை முன்மொழிந்தார். இப்போது பெரும்பான்மையான அமெரிக்க வாக்காளர்கள் (குடியரசுக் கட்சியினர் உட்பட) பெரும் செல்வந்தர்கள் மீது கணிசமான அளவிற்கு அதிக வரிகள் போடப்பட வேண்டும் என்பதை ஆதரிக்கின்றனர். இதற்கிடையில், பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைகூட, செல்வ வரி  என்பது  ஒன்றும் மோசமான கருத்தாக இருக்க முடியாது என்றே முடிவுரை எழுதியிருக்கிறது.

ஷாம்பெயின் சோசலிசத்திற்கு  அப்பால்

’மற்றவர்களின் பணத்தைச் செலவழிப்பதே சோசலிசத்தின் சிக்கல்’ என்று தாட்சர் ஒருமுறை கூறினார். வலி இருக்கும் இடத்தை தாட்சர் தொட்டிருந்தார். வரிகள்  மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி இடதுசாரி அரசியல்வாதிகள் பேசுகிறார்கள். தேவையான அனைத்து பணமும் எங்கிருந்து வர வேண்டும்?  பெரும்பாலான செல்வங்கள் ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் போன்ற தொலைநோக்குடைய தொழில்முனைவோரால் ’சம்பாதிக்கப்பட்டவை’ என்ற அனுமானமே அரசியல் பாதையின் இருபுறத்திலும் இருக்கின்றது. அது இந்த பெருத்த பணக்காரர்கள் தங்கள் செல்வத்தில் சிறு பகுதியைப் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? என்ற தார்மீக மனசாட்சியின்  கேள்வியாக மாறுகிறது.

இதுதான் உங்களிடம் இருக்கின்ற புரிதல் என்றால், நம்முடைய காலத்தில், மிகவும் முன்னோக்கு சிந்தனை கொண்ட பொருளாதார வல்லுனர்களில் ஒருவரான மரியானா மஸ்ஸுகாட்டோவை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். மஸ்ஸுகாட்டோ வரிகளைப் பேசுவது மட்டும் போதாது என்று நம்புகின்ற தலைமுறை பொருளாதார வல்லுநர்களை, குறிப்பாக பெண்கள், சார்ந்தவர். ’முற்போக்குவாதிகள் பெரும்பாலும் தங்களுடைய வாதத்தில் தோற்றுப் போவதற்கான காரணம், அவர்கள் செல்வத்தை மறுபகிர்வு செய்வதின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்களே தவிர, செல்வத்தை உருவாக்குவது குறித்து போதுமான கவனத்தைச் செலுத்துவதில்லை’ என்று மஸ்ஸுகாட்டோ  விவரிக்கிறார்.

Mariana Mazzucato (@MazzucatoM) | Twitter

சமீபத்திய வாரங்களில்,’அத்தியாவசியத் தொழிலாளர்கள்’ என்று நாம் அழைக்கத் தொடங்கியுள்ளவர்களின் பட்டியல்கள் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன. ஆச்சரியம் என்னவென்றால், அந்த பட்டியல்களில் ’ஹெட்ஜ் ஃபண்ட் நிர்வாகிகள்’ மற்றும் ’பன்னாட்டு வரி ஆலோசகர்’ போன்ற வேலைகளைச் செய்பவர்களுக்கு  எங்குமே இடம் கிடைக்கவில்லை. திடீரென்று இப்போது பராமரிப்பு, கல்வி, பொது போக்குவரத்து மற்றும் மளிகைக் கடைகள் என்று யாரெல்லாம் முக்கியமான வேலையைச் செய்து வருகிறார்கள் என்பது நமக்கு தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

டச்சு பொருளாதார வல்லுநர்கள் இருவர், 2018ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின் மூலம், உழைக்கும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் தங்கள் வேலை அர்த்தமற்றது என்று சந்தேகம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்ற முடிவிற்கு வந்தனர். ’சமூக அர்த்தமற்ற வேலைகள்’ பொது உலகில் இருப்பதை விட வணிக உலகில்  நான்கு மடங்கு அளவிற்கும் மேல் இருக்கின்றன என்ற சுவாரஸ்யமான முடிவிற்கும் அவர்கள் வந்தனர். தாங்களாக அறிவித்துக் கொண்ட ’முட்டாள்தனமான’ வேலைகளில் ஈடுபடுகின்ற பெரும்பாலானோர் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளிலேயே பணியாற்றி வருகின்றனர்.

உண்மையில் செல்வம் எங்கே உருவாக்கப்படுகிறது என்ற கேள்வியை நோக்கி இது நம்மை நகர்த்துகிறது. பைனான்சியல் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், பெரும்பாலும் தங்களுடைய நவீன தாராளவாத தோற்றுவாய்களான ப்ரீட்மேன் மற்றும் ஹயக்கைப் போலவே, தொழில்முனைவோர்களாலேயே செல்வம் உருவாக்கப்படுகின்றது; அரசாங்கங்களால் அல்ல என்று குறிப்பிட்டு வருகின்றன. வசதிகளை ஏற்படுத்தி தருகின்ற அரசாங்கங்கள், நல்ல உள்கட்டமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான வரி விலக்குகளை வழங்கி, பின்னர் அந்த வழியிலிருந்து விலகி விடுவதாகவே அந்த ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

2011ஆம் ஆண்டில், அரசாங்க ஊழியர்களை ’நிறுவன எதிரிகள்’ என்று பெரும்பாலான அரசியல்வாதிகள் கூக்குரலிட ஆரம்பித்த பிறகு, மஸ்ஸுகாட்டோவிடம் ஏதோவொரு பொறி கிளம்பியது. சில ஆய்வுகளை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை  ஏற்படுத்திய புத்தகத்தை அவர் எழுதினார். அதன் தலைப்பு, ’தொழில் முனைவோர் அரசு’ என்றிருந்தது.

அரசின் முதலீடுகள்

மஸ்ஸுகாட்டோ தனது புத்தகத்தில், கல்வி, சுகாதாரம், குப்பை சேகரிப்பு, அஞ்சல் விநியோகம் ஆகியவை மட்டுமே அரசாங்கத்தால் தொடங்கப்படுவதில்லை; லாபம் தரத்தக்க புதுமைகளையும் அரசாங்கங்களே துவங்குவதாகக் கூறியிருந்தார். ஐபோனை எடுத்துக் கொள்ளுங்கள். சாதாரண தொலைபேசிக்குப் பதிலாக இணையம், ஜி.பி.எஸ், தொடுதிரை, பேட்டரி, வன்தகடு, குரல் அங்கீகாரம் போன்றவற்றை இணைத்து, ஐபோனை ஸ்மார்ட்போனாக மாற்றுகின்ற தொழில்நுட்பத்தில் பயன்படுகின்ற ஒவ்வொரு பகுதியும், ஆய்வாளர்களால் அரசாங்க ஊதியத்தில் உருவாக்கப்பட்டவையே ஆகும்.

ஆப்பிளுக்கு பொருந்துவது, மற்ற தொழில்நுட்ப நிறுவன ஜாம்பவான்களுக்கும் சமமாகவே பொருந்தும். கூகிள்? ஒரு தேடுபொறியை உருவாக்குவதற்காக, மிகப் பெரிய அரசாங்க மானியத்தைப் பெற்றது. டெஸ்லா? அமெரிக்க எரிசக்தித் துறை 46.5 கோடி டாலர்களை ஒப்படைக்கும் வரைக்கும், முதலீட்டாளர்களுக்காக அலைந்து கொண்டுதான் இருந்தது. எலோன் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திடமிருந்து மானியத்தை வாங்கிக் குவிப்பராகவே இருந்தார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சோலார்சிட்டி ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்த்து மொத்தமாக, ஏறக்குறைய 500 கோடி டாலர்களை வரி செலுத்துவோர் பணத்திலிருந்து பெற்றுள்ளன.

’அரசின் முதலீடு எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது’ என்று கடந்த ஆண்டு வயர்டு என்ற தொழில்நுட்ப பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் மஸ்ஸுகாட்டோ கூறியிருந்தார்.

அது உண்மைதான். சில நேரங்களில் வருமானம் வராத திட்டங்களிலும் அரசாங்கம் முதலீடு செய்கிறது. அதிர்ச்சியாக இருக்கிறதா? அதிர்ச்சியடையத் தேவையில்லை: இதுவே முதலீடுகள் பற்றிய உண்மையாக இருக்கின்றது. தொழில்நிறுவனம் என்பது எப்போதுமே ஆபத்துக்களை முன்னெடுப்பதாகும். பெரும்பாலான தனியார் ’துணிகர’ முதலாளிகளிடம் உள்ள சிக்கல் என்னவென்று மஸ்ஸுகாட்டோ சுட்டிக்காட்டுகிறார். பெரிய முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. 2003இல் சார்ஸ் நோய் பரவிய போது, அது போதுமான  லாபத்தை ஈட்டித் தரவில்லை. எனவே தனியார் முதலீட்டாளர்கள் இப்போது கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை மேர்கொள்ளவில்லை. இதற்கிடையில், அரசால் நிதியளிக்கப்பட்ட ஆய்வுகள் மட்டுமே தொடர்ந்தன. அமெரிக்க அரசாங்கம் 70 கோடி டாலர் தந்தது. தடுப்பூசி  என்ற ஒன்று கிடைக்குமென்றால், அதற்காக அரசுக்கு மட்டுமே நன்றி தெரிவிக்க வேண்டியிருக்கும்.

Modern Monetary Theory explained by Stephanie Kelton

மஸ்ஸுகாட்டோவின் கருத்துக்களை சரியென்று நிரூபிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக, மருந்துகள் சார்ந்த தொழில் இருக்கிறது. எந்தவொரு மருத்துவ முன்னேற்றமும் அரசு நிதியளிக்கப்பட்ட ஆய்வகங்களிலேயே தொடங்குகின்றது. ரோச் மற்றும் ஃபைசர் போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள் காப்புரிமைகளை விலைக்கு வாங்கி,  பழைய மருந்துகளை புதிய பிராண்டுகளின் கீழ் மட்டுமே சந்தைப்படுத்துகின்றன. பின்னர் தங்களுடைய லாபத்தை, ஈவுத்தொகை செலுத்துவதற்கும், பங்கு விலைகளை உயர்த்த உதவும் வகையில் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றன. 2000ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய நடவடிக்கைகள் 27 மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் ஆண்டுதோறும் பங்குதாரர்களுக்கு வழங்குகின்ற தொகையை நான்கு மடங்காக அதிகரிக்கவே உதவியுள்ளன.

மஸ்ஸுகாட்டோ இது போன்ற நடவடிக்கைகள் மாற வேண்டும் என்கிறார். பெரிய கண்டுபிடிப்புகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்கும்போது, ​​தொழில்துறை அதை உற்சாகமாக வரவேற்கிறது என்று அவர் கூறுகிறார். அதற்கு மேல் அவர்களுக்கு என்ன வேண்டும், இதுதான் அவர்களிடமுள்ள ஒட்டுமொத்த சிந்தனையாகும்! அரசாங்கம் தன் ஆரம்ப செலவினத்தை, வட்டியுடன் திரும்பப் பெற வேண்டும். மிகப் பெரிய அளவில் நிதியுதவி பெறும் நிறுவனங்களே, இப்போது மிகப் பெருமளவிற்கு வரி ஏய்ப்பு செய்கின்ற நிறுவனங்களாக இருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள வரிபுகலிடங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை வைத்திருக்கும். நிறுவனங்களாக ஆப்பிள், கூகிள் மற்றும் ஃபைசர் போன்ற நிறுவனங்களே இருக்கின்றன.

வரிகளைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் தங்களுடைய நியாயமான பங்கைச் செலுத்த வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும், இறுதியில் அரசாங்கம் தனது சொந்த சாதனைகளுக்கான பாராட்டுதல்களைப் பெறுவது அதனினும் முக்கியமானது என்று மஸ்ஸுகாட்டோ கூறுகிறார். அவருக்கு பிடித்த எடுத்துக்காட்டுகளில்  ஒன்றாக, 1960 விண்வெளிக்கான போட்டி இருக்கிறது. 1962ஆம் ஆண்டு, முன்னாள் அதிபர் கென்னடி தனது உரையில், ’இப்போது சந்திரனுக்குச் சென்று சில விஷயங்களைச் செய்ய வேண்டுமென்று நாம் முடிவு செய்திருப்பது, அவை எளிதானவை என்பதால் அல்ல, கடினமானவை என்பதாலேயே’ என்று கூறியிருந்தார்.

இந்த நாளில், இந்த காலகட்டத்தில், தொழில்முனையும் அரசின் ஈடு இணையற்ற புதுமைகளுக்கு அழைப்பு விடுக்கும் மிகப்பெரிய சவால்களை  நாம் எதிர்கொள்கிறோம். தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு, மனித இனத்தை எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக பருவநிலை மாற்றம் இருக்கிறது. முன்னெப்போதையும் விட, பருவநிலை மாற்றத்தால் தேவைப்படுகின்ற மாற்றத்தை அடைவதற்கு, கென்னடியின் உரையில் பெருமைப்படுத்தப்பட்ட மனநிலையே  இப்போது நமக்குத் தேவைப்படுகிறது. பிரிட்டிஷ்-வெனிசுலா பொருளாதார நிபுணரான கார்லோட்டா பெரெஸுடன் இணைந்து, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் உலகின் மிக உயர்ந்த லட்சிய திட்டமான  பசுமை புதிய ஒப்பந்தத்தின் அறிவுசார் தாயாக மஸ்ஸுகாட்டோ ஆனார் என்பது  தற்செயலாக நிகழ்ந்த செயல்  அல்ல.

மஸ்ஸுகாட்டோவின் மற்றொரு நண்பரான, அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டெபானி கெல்டன், தங்கள் தேவைகளுக்கான நிதியைப் பெறுவதற்காக, தேவைப்பட்டால் கூடுதல் பணத்தை அரசாங்கங்கள் அச்சிட்டுக் கொள்ளலாம் என்பதால், தேசிய கடன்கள் மற்றும் பற்றாக்குறைகளைப் பற்றி அவை கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார். (குடும்பங்கள் வரிகளை வசூலிக்கவோ அல்லது தங்களுடைய சொந்த நாணயத்தில் கடன் வழங்கவோ முடியாது என்பதால், பழைமையான கருத்து கொண்ட அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசாங்கங்களை வீடுகளுடன் ஒப்பிடுகின்ற பத்திரிகையாளர்களைக் கவனிப்பதில், மஸ்ஸுகாட்டோ மற்றும் கெல்டன் போன்ற பொருளாதார வல்லுநர்களுக்கு அதிக பொறுமை இருப்பதில்லை)

நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது, பொருளாதார சிந்தனை குறித்த புரட்சிக்கு சற்றும் குறைவானதல்ல. 2008ஆம் ஆண்டு நெருக்கடியைத் தொடர்ந்து கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செய்த இடத்தில், கெல்டனைப் போன்ற ஒருவரை (தி டெபிசிட் மித் என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியிருந்தார்) நவீனகால மில்டன்  ப்ரீட்மேன் என்று பைனான்சியல் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் புகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த பத்திரிக்கை ஏப்ரல் மாத தொடக்கத்தில், அரசாங்கம் பொது சேவைகளை செலவுகள் என்று பார்க்காமல், முதலீடுகளாகப் பார்க்க வேண்டும் என்று எழுதிய போது, ​​அது கெல்டன் மற்றும் மஸ்ஸுகாட்டோ ஆகியோர் பல ஆண்டுகளாக வாதிட்டு வந்ததையே  துல்லியமாக எதிரொலிப்பதாக இருந்தது.

இந்த பெண்கள் வெறும் பேச்சுகளால் திருப்தி அடைவதில்லை என்பது அவர்கள் குறித்த மேலும் சுவாரஸ்யமான விஷயமாக இருக்கிறது. தீர்வுகளையே அவர்கள் விரும்புகிறார்கள். கெல்டன் ஒரு செல்வாக்குமிக்க அரசியல் ஆலோசகராக, பெரெஸ் எண்ணற்ற நிறுவனங்களுக்கான ஆலோசகராகப் பணியாற்றியுள்ளனர். மஸ்ஸுகாட்டோவும் தன்னியல்பாகவே, உலகில் இருக்கின்ற நிறுவனங்கள் குறித்து தனது வழியை நன்கு அறிந்தவராகவே இருக்கிறார்.

தாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (ஒவ்வொரு ஆண்டும் உலகின் பணக்கார மற்றும் அதிகாரம் மிக்கவர்கள் கூடுகின்ற கூட்டம்) வழக்கமாக கலந்து கொள்ளும் விருந்தினராக மட்டும் அவர் இருக்கவில்லை. செனட்டர் எலிசபெத் வாரன், அமெரிக்காவில் உள்ள காங்கிரஸின் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், ஸ்காட்டிஷ் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் போன்றவர்களுக்கு அறிவுரை வழங்குபவராகவும் இந்த இத்தாலிய பொருளாதார வல்லுனர் இருக்கிறார். ஐரோப்பிய பாராளுமன்றம் கடந்த ஆண்டு லட்சிய புதுமை திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தியது. ​​அந்த திட்டம் மஸ்ஸுகாட்டோ தயாரித்ததாகவே இருந்தது.

’அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். இல்லையெனில் அது ஷாம்பெயின் சோசலிசமாகி விடும்.  அதாவது உள்ளே சென்று, அவ்வப்போது பேசி விட்டு வருவது. அதற்குப் பிறகு எதுவும் நடக்காது என்பதாகி விடும்’ என்று அவர் அந்த நேரத்தில் கவலையுடன் குறிப்பிட்டார்.

சிந்தனைகள் எவ்வாறு உலகை வெல்லும்? உலகை நீங்கள் எவ்வாறு மாற்றுவது?

இந்த கேள்விகளை முற்போக்குவாதிகள் சிலர் உள்ள குழுவிடம் கேளுங்கள், ஜோசப் ஓவர்டன் என்ற பெயரை அவர்களில் யாராவது சொல்வதற்கு நீண்ட காலம் தேவைப்படாது. மில்டன் ப்ரீட்மேன் கொண்டிருந்த கருத்துக்களுக்கு ஓவர்டன் ஆதரவளித்தார். புதிய தாராளவாத சிந்தனைக் குழுவில் அவர் பணியாற்றினார். குறைந்த வரி மற்றும் குறைந்த அளவிலான அரசாங்க பொறுப்பு ஆகியவற்றிற்காக அவர் பிரச்சாரம் செய்து வந்தார். ஒருகாலகட்டத்தில் சிந்திக்கவே முடியாதிருக்கின்ற விஷயங்கள், காலப்போக்கில் எவ்வாறு தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன என்ற  கேள்வியின் மீது ஓவர்டன் ஆர்வம் காட்டினார்.

ஜன்னல் ஒன்றை, அந்த ஜன்னலுக்குள் இருக்கின்ற கருத்துக்கள் எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்லது பிரபலமானவை என்று கருதப்படுவதாக கற்பனை செய்து  கொள்ளுங்கள் என்று ஓவர்டன் கூறினார். ஒருவேளை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட விரும்புகின்ற அரசியல்வாதி நீங்கள் என்றால், இந்த ஜன்னலுக்குள்ளே மட்டுமே இருப்பதே நல்லது. ஆனால் நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்புபவர் என்றால், அந்த ஜன்னலையே நீங்கள் மாற்ற வேண்டி வரும். எவ்வாறு அதை மாற்றுவது? அந்த ஜன்னல் நியாயமற்றது, பொருத்தமற்றது, நம்பத்தகாதது என்று கருதுவதன் மூலம்.

சமீபத்திய ஆண்டுகளில், இந்த ஓவர்டன் ஜன்னல் மறுக்க இயலாத அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் ஓரளவிற்கு மட்டுமே கடைப்பிடிக்கக் கூடியவையாக இருந்தவை, இன்று பிரதானமாக மாறியுள்ளன. பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் ஒருவரின் தெளிவற்ற வரைபடமே, வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமித்தல் (நாங்கள் 99%) என்ற முழக்கமாக மாறியது; வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமித்தல் நிகழ்வு புரட்சிகர அதிபர் வேட்பாளர் ஒருவருக்கு வழி வகுத்துக் கொடுத்தது. பிடென் போன்ற அரசியல்வாதிகளை, தனது திசையில் பெர்னி சாண்டர்ஸால் இழுக்க முடிந்தது.

இப்போது, அமெரிக்காவில் வாழ்கின்ற இளம் அமெரிக்கர்கள் முதலாளித்துவத்தை விட சோசலிசத்தின் மீது சாதகமான பார்வையைக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பார்வை 30 ஆண்டுகளுக்கு முன்பாக நினைத்துப் பார்க்கவே முடியாததாகவே  இருந்திருக்கும். (1980களின் முற்பகுதியில், இளம் வாக்காளர்கள் நவீன தாராளவாத ரீகனின் மிகப்பெரிய ஆதரவு தளமாக இருந்தனர்)

பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் ...

ஆனாலும் சாண்டர்ஸ் முதல் கட்ட தேர்தலில் தோற்கவில்லையா? இங்கிலாந்தில், வியக்கத்தக்க வகையில்  சோசலிஸ்ட்  ஜெர்மி கோர்பின் கடந்த ஆண்டு தேர்தல் தோல்வியைச் சந்திக்கவில்லையா?

நிச்சயமாக. ஆனால் தேர்தல் முடிவுகள் மட்டுமே காலத்தின் ஒரே அடையாளமாக இருப்பதில்லை. 2017 மற்றும் 2019 தேர்தல்களில் கோர்பின் தோல்வியடைந்திருக்கலாம், ஆனால்  தன்னுடைய சொந்த அறிக்கையை விட தொழிற்கட்சியின் நிதித் திட்டங்களுக்கு மிக நெருக்கமாகவே  கன்சர்வேடிவ் கொள்கைகள் இருந்தன. .

2020ஆம் ஆண்டில் பருவநிலை திட்டத்தில் பிடனை விட மிகவும் தீவிரமாக சாண்டர்ஸ் இயங்கி வந்தாலும், 2016இல் சாண்டர்ஸிடம் இருந்ததை விட தீவிரமானதாகவே பிடனிடம் இருக்கின்ற பருவநிலை திட்டம்  உள்ளது.

தனது மிகப்பெரிய சாதனை என்று புதிய தொழிலாளர் கட்சி மற்றும் டோனி பிளேர் என்று தாட்சர் கூறியது ஒன்றும் கிண்டலான பேச்சு அல்ல. 1997இல் அவரது கட்சி தோற்கடிக்கப்பட்டது, அவருடைய கருத்துக்களைக் கொண்டிருந்த எதிரியாலேயே அது நடந்தது.

உலகை மாற்றுவது என்பது கிகவும் கடினமான பணி. நீங்கள் சொல்வதைச் சரி என்று உங்கள் எதிரிகள் தாழ்மையுடன் ஒப்புக் கொள்வது உங்களுடைய வெற்றியாக இருக்கப் போவதில்லை. அரசியலில், திருட்டுத்தனத்தை நீங்கள் உறுதியாக நம்பலாம். 1970இல் ஒரு பத்திரிகையாளரிடம் தனது கருத்துக்கள் எவ்வாறு உலகை வெல்லும் என்பதை ப்ரீட்மேன் ஏற்கனவே விவரித்திருந்தார். அது நான்கு வழிகளில் நிகழ்வதாக இருக்கும்.

’வழி I: என்னைப் போன்ற  மூடர்களின் பார்வைகள் தவிர்க்கப்படுகின்றன.

வழி II: கருத்துக்களில் உள்ள உண்மையின் கூறு, மரபுவழி நம்பிக்கையின் பாதுகாவலர்களை சங்கடப்படுத்துகிறது.

வழி III: ’இது  நடைமுறைக்கு மாறான, கோட்பாட்டளவில் தீவிரமான பார்வை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த திசையில் செல்வதற்கு இன்னும் மிதமான வழிகளைப் பார்க்க வேண்டும்’ என்று மக்கள் கூறுகிறார்கள்.

வழி IV: எதிர்ப்பாளர்கள் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில், கேலிச்சித்திரங்களாக மாற்றுகிறார்கள். அதன் மூலமாக முன்னுக்கு நகர்ந்து, முன்பு நான் நின்றிருந்த இடத்தை அவர்களால் ஆக்கிரமிக்க முடியும்.’

மிகப் பெரிய சிந்தனைகள் மூடர்களிடம் தொடங்குவதைக் கொண்டு, ஒவ்வொரு மூடனும் மிகப்பெரிய சிந்தனைகளைக் கொண்டிருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முற்போக்கான கருத்துக்கள் எப்போதாவது ஒருமுறை பிரபலமானாலும், ஒரு முறையாவது அவை தேர்தலில் வெற்றி பெறுவதே நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் கருத்துக்களுக்கான போரிலாவது நாங்கள் வென்றிருக்கிறோம் என்று சொல்வதைப் போல பெரும்பாலும், இடதுசாரிகளின் தோல்விகளுக்கான சாக்குபோக்காக ஓவர்டன்  ஜன்னல் பயன்படுத்தப்படுகிறது.

தங்களை முற்போக்காளர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பலரும், அதிகாரத்தைப் பெறுவதற்கான திட்டங்கள் எவற்றையேனும் ஒருவேளை தங்களிடம் கொண்டிருந்தால், அவை அரைகுறைத் திட்டங்களாகவே இருக்கின்றன. அதை  விமர்சித்தால், உங்கள் மீது துரோகி என்ற முத்திரை குத்தப்படும். பத்திரிகைகள், நிறுவனம், தங்கள் சொந்த அணிகளுக்குள்ளேயே சந்தேகங்கள் என்று, மற்றவர்கள் மீது பழியை மாற்றிப் போடுகின்ற வரலாறு இடதுசாரிகளிடம் இருக்கிறது. அவர்கள் மிக அரிதாகவே தாங்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.

Difficult Women: A History of Feminism' by Helen Lewis - Diversity UK

’தளர்வுறாத பெண்கள்’ என்ற புத்தகத்தின் மூலம், உலகை மாற்றுவது எவ்வளவு கடினம் என்பது  மீண்டும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் ஊரடங்கின் போது அந்த புத்தகத்தை நான் படித்தேன். பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஹெலன் லூயிஸ் எழுதிய அந்த புத்தகம், பிரிட்டனில் பெண்ணியத்தின் வரலாறாக இருந்த போதிலும், தலைசிறந்த உலகை உருவாக்க விரும்புகின்ற அனைவராலும் அது வாசிக்கப்பட வேண்டும்.

’தளர்வுறாத’ என்பதை, லூயிஸ் மூன்று விஷயங்கள் மூலம் குறிப்பிடுகிறார்:

  1. உலகை மாற்றுவது கடினம். அதற்கு நீங்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும்.
  2. பல புரட்சியாளர்கள் மிகக் கடினமானவர்களாக இருக்கிறார்கள். பிடிவாதமான, விரும்பத்தகாத, கலகம் ஏற்படுத்துகின்ற நபர்களிடமிருந்தே முன்னேற்றம் தொடங்குகிறது.
  3. நல்லது செய்வது என்பதற்கு, நீங்கள் சரியானவர் என்ற அர்த்தமில்லை. வரலாற்றில் இருக்கின்ற ஹீரோக்கள் பிற்காலத்திலேயே மிகவும் பரிசுத்தமானவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.

செயற்பாட்டாளர்கள் பலரும் இந்த சிக்கலைப் புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது; அவ்வாறு இருப்பது அவர்களுக்கு குறைவான செயல்திறனை அளிக்கிறது என்று லூயிஸ் தனது விமர்சனத்தை முன்வைக்கிறார். ட்விட்டரைப் பாருங்கள், மற்ற ட்விட்டர்களைப் பற்றி தீர்மானிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களே அதில் அதிகம் இருக்கின்றனர். நேற்று ஹீரோவாக இருப்பவர் மீது, மோசமான கருத்து அல்லது சர்ச்சையின் மூலம் கறை  பூசப்பட்டு, அடுத்த நாளே அவர் கவிழ்க்கப்படுகிறார்.

’மீன் விற்கும் பெண்கள் முதல் மேற்குடியினர் வரை, ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் முதல் இந்திய இளவரசிகள் வரை ’தளர்வுறாத பெண்கள்’, அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவந்த பிரிட்டிஷ் வாக்குரிமை இயக்கத்தைப் போலவே, பலவிதமான பாத்திரங்கள் எந்தவொரு இயக்கத்திலும் பங்கேற்பதாக லூயிஸ் காட்டுகிறார். அந்த இயக்கங்களுக்கு சங்கடமான கூட்டணிகளும் சமரசங்களும் தேவைப்படுகின்றன. அவ்வாறான சிக்கலான கூட்டணியே, நீண்ட காலத்திற்குத் தப்பிப் பிழைத்து 1918ஆம் ஆண்டு வெற்றியைத் தேடித் தந்தது. 30 வயதிற்கு மேற்பட்ட, சொத்துக்களை வைத்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தது. (அது சரிதான். ஆரம்பத்தில் சலுகை பெற்ற பெண்கள் மட்டுமே வாக்களித்தனர். அடுத்ததாக 1928ஆம் ஆண்டில் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்ற தவிர்க்க முடியாத நிலைமைக்கு வழிவகுத்ததன் மூலம், அந்த முதல் படியில் விவேகமான சமரசம் இருந்தது நிரூபிக்கப்பட்டது)

தாங்கள் அடைந்த வெற்றியால் கூட, பெண்ணியவாதிகள் அனைவரையும் அவர்களால் நண்பர்களாக மாற்ற முடியவில்லை. ’ஆளுமை மோதல்கள், வாக்குரிமை பெற்றவர்களைக்கூட, தங்களுடைய வெற்றியின் மீது வெறுப்பு கொள்ளவே வைத்தன’ என்று லூயிஸ் கூறுகிறார்.  முன்னேற்றம், சிக்கலானது என்பதை அது நிரூபித்தது.

செயல்பாட்டை நாம் கருக்கொள்கின்ற விதம், அந்த வித்தியாசமான பாத்திரங்கள் அனைத்தும் நமக்குத் தேவை என்பதை மறக்கடித்து விடுகிறது. விவாத நிகழ்ச்சிகளிலும், இரவு உணவு மேஜைகளிலும் – நமக்குப் பிடித்த செயல்பாட்டைத் தேர்ந்தெடுப்பதே நமது விருப்பமாக இருக்கிறது. கிரெட்டா தன்பெர்க்கிற்கு கட்டைவிரலை உயர்த்தி காண்பிப்போம் என்றாலும், அழிவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் சாலை முற்றுகைகள் மீது கோபத்தை வெளிப்படுத்துவோம்.  வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்களைப் பாராட்டுவோம். அதே நேரத்தில், டாவோஸுக்கு புறப்பட்டுச் செல்லும் பரப்புரையாளர்களை  ஏளனம் செய்வோம்.

மாற்றம் என்பது இதுபோன்று செயல்பட முடியாது. பேராசிரியர்கள் மற்றும் அரசிலாக் கொள்கை கொண்டவர்கள் – வலைப் பின்னல் ஏற்படுத்துபவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் – குற்றச் செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் சமாதானம் செய்பவர்கள் – கல்வியாளர்களுக்காக எழுதுபவர்கள் மற்றும் பரந்த பார்வையாளர்களுக்காக அதை மொழிபெயர்ப்பவர்கள் – திரைக்குப் பின்னால் வேலை செய்யும் நபர்கள் மற்றும் கலகப் பிரிவு காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்படுபவர்கள் என்று இவர்கள் அனைவருக்குமே நடிக்க வேண்டிய பாத்திரங்கள் உள்ளன.

ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. ஓவர்டன்  ஜன்னலை அதற்கு மேல் தள்ளி வைக்க முடியாது என்ற நேரம் வரும். நிறுவனங்களின் ஊடாக அணிவகுத்து, ஒரு காலத்தில் மிகவும் தீவிரமான கருத்துக்கள் என்று கருதப்பட்டவற்றை அதிகார மையங்களுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் நிச்சயமாக வரும். இப்போது அந்த நேரம்  வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

கடந்த 40 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த சித்தாந்தம் இறந்து கொண்டிருக்கிறது. அந்த சித்தாந்தத்தை எது மாற்றியமைக்கப் போகிறது? யாருக்கும் உறுதியாகத் தெரியாது. இந்த நெருக்கடி நம்மை மேலும் இருண்ட பாதைக்குள் அனுப்பக்கூடும் என்பதாக கற்பனை செய்து  கொள்வது, கடினமாக காரியமாக இருக்குஅப் போவதில்லை. ஆட்சியாளர்கள் மேலும் அதிக அதிகாரத்தைக் கைப்பற்றவும், மக்களுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும், இனவெறி மற்றும் வெறுப்பின் தீப்பிழம்புகளைத் தூண்டவும் இந்த நெருக்கடியை நிச்சயம் பயன்படுத்தவே செய்வார்கள்.

ஆனால் விஷயங்கள் வேறுவிதமாக வித்தியாசமாகவும் இருக்கலாம். அவ்வாறான வேறு வழிகளை  நினைத்துப் பார்க்க முடியும் என்ற எண்ணத்தை நம்மிடம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக, எண்ணற்ற செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், வலைப்பின்னலை ஏற்படுத்துபவர்கள், போராட்டக்காரர்கள் என்று பலரின் கடின உழைப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். புதிய விழுமியங்கள் கொண்ட பாதையில் நம்மை இந்த தொற்றுநோய் அனுப்பி வைக்கக் கூடும்.

நவீன தாராளமயத்தை வரையறுக்கின்ற கோட்பாடு என்ற ஒன்று இருக்குமேயானால், அது ’பெரும்பாலான மக்கள் சுயநலவாதிகள்’ என்ற ஒன்றாகவே இருக்கும். மனித இயல்பு குறித்த இத்தகைய இழிந்த பார்வையிலிருந்தே –  தனியார்மயமாக்கல், அதிகரித்து வரும் சமத்துவமின்மை, பொதுவெளியின் சீரழிவு போன்ற அனைத்தும் பின்தொடர்கின்றன.

மனித இயல்பு குறித்த வித்தியாசமான, மிகவும் யதார்த்தமான பார்வைக்கான வெளி இப்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்பதற்கான எண்ணம் மனிதகுலத்திடம் உருவாகியுள்ளது. நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம், கூட்டு பொறுப்புணர்வு வேரூன்றி இருக்கின்ற வரி அமைப்பு, நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நிலையான முதலீடுகள் என்று அனைத்து நடவடிக்கைகளும் இந்த நம்பிக்கையைப் பின்தொடர்வதாக இருக்கலாம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோதனைக்கு தயாராக வேண்டிய  நேரத்தில், பருவநிலை மாற்றம் என்ற தொற்றுநோயும் நம்மை மெதுவாக அணுகிக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடி நம்மை எங்கே வழிநடத்திச் செல்லும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, மாற்றுப் பாதையில் செல்வதற்கு இப்போது நாம் நன்றாக தயாராக இருக்கிறோம்.

https://thecorrespondent.com/466/the-neoliberal-era-is-ending-what-comes-next/61655148676-a00ee89a

எலிசபெத் மாண்டன் டச்சு மொழியில் எழுதிய கட்டுரை

ஆங்கிலத்தில்: ரட்ஜர் ப்ரெஹ்மேன்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *