The Pandora Papers: Explanations given by The Economist Translation in Tamil By R. Ashwat. பண்டோரா ஆவணங்கள்: தி எகனாமிஸ்ட் தரும் விளக்கங்கள்மக்களும் நிறுவனங்களும் வரி கட்டுவதை எப்படித் தவிர்க்கிறார்கள்?

பண்டோரா ஆவணங்கள் (Pandora Papers) — மேட்டுக்குடியின் அயல்நாட்டுப் பரிவர்த்தனைகளை அம்பலப்படுத்தும் அண்மை முயற்சி

அக்டோபர் 3 அன்று புலனாய்வு இதழியலாளர்களின் பன்னாட்டுக் கழகத்திடம் சிக்கிய பெரும் ஆவணக் கசிவு முக்கியச் செய்தியாக மாறியது; உலகெங்கிலுமுள்ள ஊடகங்கள் இதற்குப் ’பண்டோரா ஆவணங்கள்’ என்று பெயரிட்டு இதைப் பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கின. (வாரம் முழுவதும் இது குறித்து மேற்கொண்டு அம்பலப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.) 91 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள், மற்ற அரசு அதிகாரிகள், கோடீசுவரர்கள் என பலரின் நிதி விவகாரங்களை இந்த அம்பலப்படுத்தும் முயற்சி வெளிப்படையாக்குகிறது. இதே கழகம் 2016இல் மேற்கொண்ட பனாமா ஆவணக் கசிவையும், அதற்கு அடுத்த ஆண்டு மேற்கொண்ட பாரடைஸ் ஆவணக் கசிவையும் போலவே, இந்தக் கசிவின் கவனமும் உலக மேட்டுக்குடியின் அயல்நாட்டு பரிவர்த்தனைகளின் மீதே குவிந்துள்ளது. அயல்நாட்டு நிறுவனங்களைப் பயன்படுத்திப் பணத்தையும் சொத்துக்களையும் இடமாற்றுவது ஏமாற்று வேலையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை; ஒரு கோடீசுவரர், தமது சட்டப்படியான செல்வத்தைப் பயன்படுத்தி வாங்கியதையும் தனிப்பட்ட காரணங்கங்களுக்காக மறைத்து வைக்கலாம். ஆனால், பனை சூழ் கரைகளைக் கொண்ட அயல்நாட்டு மையங்களில் (பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் இதில் பிடித்தமான ஒன்று) பதிவு செய்யப்பட்ட வெற்று நிறுவனங்களோ, வரியைத் தவிர்ப்பதற்கும், ஏய்ப்பதற்கும், கெட்ட வழிகளில் ஈட்டிய ஆதாயங்களைக் கையாடல் செய்வதற்குமே வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அமைத்துத் தரப்பட்ட வரி மறைவிடங்களைப் பயன்படுத்தியும், தங்களது இருப்பிடங்களை மாற்றியும், தனிநபர்கள் வரி கட்டுவதைச் சட்டப்படித் தவிர்த்துவிட பல்வேறு வழிகள் உள்ளன. வரி ஏய்ப்பு என்பது தனி; பல நாடுகளில் வரி ஏய்ப்பு குற்றமாகக் கருதப்படுகிறது (சுவிட்சர்லாந்தில் வரி ஏய்ப்பு தளர்வுடன் கையாளப்படுகிறது என்பது பிரபலமாக அறியப்படுகிறது). திறமையான ஏய்ப்பாளர்களோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அயல்நாட்டு நிதி மையங்களில் வங்கிக் கணக்குகள், வெற்று நிறுவனங்கள், அறக்கட்டளைகள் (வழக்கமாகப் பினாமிகளால் நடத்தப்படுபவை), என்று அனைத்தும் கலந்த உக்தியைக் கையாள்கிறார்கள். கார்ப்பரேட் வரி தவிர்ப்பு என்பது இன்னமும் சட்டப்படி அறுதியில்லாத ஒன்றாகவே இருக்கிறது. நிறுவனங்களின் வரி குறைப்பு உக்திகள் குறித்து அவற்றை எதிர்கொள்ளும் கூரும் வளங்களும் அரசிடம் இருக்காது என்ற நம்பிக்கையிலும், ‘கட்டற்று நகரும் மூலதனத்தை’ முதலீடு செய்தால் அதற்குக் கைம்மாறாக அரசுகள் குறைவான வரிகளை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலும், நிறுவனங்கள் வரி செலுத்தும் விசயத்தில் இயற்கையாகவே வரம்புகளை மீறுகின்றன. வரி ஏய்ப்புக்கும் வரி தவிர்ப்புக்கும் இடையிலான வேறுபாடு என்பது “சிறைச் சுவரின் இடைவெளிக்குச் சமமானது” என்று வர்ணித்தார் இங்கிலாந்தின் மேனாள் கருவூல வேந்தராகிய டெனிஸ் ஹீலி.

 The Pandora Papers: Explanations given by The Economist Translation in Tamil By R. Ashwat. பண்டோரா ஆவணங்கள்: தி எகனாமிஸ்ட் தரும் விளக்கங்கள்

20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிதி உலகமயமாதலின் கீழ் வரி ஏய்ப்பு, வரி தவிர்ப்பு என்று இரண்டுமே வளர்ந்தது. வரி மறைவுப் புகலிடங்கள் பெருகிய நிலையில், வரி ஏய்ப்பு இன்னும் எளிதாகிப் போனது; தம் நிதி மையங்களுக்கு உற்றத் துணையாக இருக்கும் என்பதைக் கண்டுகொண்ட பணக்கார நாடுகள் (குறிப்பாகப் பிரிட்டன்), அவற்றைச் சாதுரியமாக அங்கீகரித்தன. இன்றைய நாளில் உலகில் 50 வரி மறைவுப் புகலிடங்கள் உள்ளன; இவற்றில் சில ‘இரகசிய எல்லைகள்’ என்று துல்லியமாக அழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே அயல்நாடுகளில் இருப்பவை என்றில்லை; தெற்கு டகோடா, நெவாடா போன்ற அமெரிக்க மாகாணங்கள், தம் அறக்கட்டளைகளின் வாயிலாக இரகசியத் தன்மையை ஏற்படுத்துகிறார்கள் (இவற்றில் சில இவ்வாரம் கசிந்துள்ள பண்டோரா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன). முந்தைய காலங்களுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருந்த எல்லை கடந்த வரி விதிகளில் உள்ள ஓட்டைகளைத் திறமையாகப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் கண்டறிந்து விட்டன. இருமுறை வரிவிதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட பன்னாட்டு மற்றும் இருதரப்பு வரி ஒப்பந்தங்களைக் கொண்டு, இருமுறையும் வரிவிதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகளை ஏற்படுத்த முடியும்.

பொருளாதார ஒத்துழைப்புக்கும் மேம்பாட்டுக்குமான கூட்டமைப்பு என்கிற பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு “தீங்கு விளைவிக்கும் வரிப் போட்டி”க்கு எதிரான போரை அறிவித்ததிலிருந்து, 1990களில் இத்தகைய ஏமாற்றுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கின. அப்போதிலிருந்து எத்தனையோ ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாகிவிட்டது. 2008 முதல், பணத்தட்டுப்பாட்டைச் சந்தித்த செல்வந்த நாடுகளும் ஏழை நாடுகளும், தாம் இழந்த வரி வருவாயை மீட்டெடுப்பதற்காகக் கடுமையாகப் போராடியதன் பலனாக இந்நடவடிக்கைகளில் அதிக அளவில் தீவிரம் ஏற்பட்டுள்ளன; உதாரணமாக சுவிஸ் வங்கியின் மீது அமெரிக்காவின் தாக்குதலைப் பார்க்கவும். கடுமையான அழுத்தத்தின் காரணமாக, இந்த வரி மறைவுப் புகலிடங்கள், தம் வாடிக்கையாளர்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை அவர்களின் சொந்த நாடுகளிடம் பகிர்ந்துகொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளன. தம் தனியுரிமைச் சட்டங்களுடன் முரண்படுவதாகச் சில நாடுகள் புலம்பி வந்தாலும், இந்த உலகம், தானியங்கு தரவுப் பரிமாற்ற முறையை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கவும் மற்ற பெரிய பொருளாதாரங்களும், எவ்விதக் கைம்மாறும் இல்லாமல், தரவுகளை மட்டும் தங்களிடமிருந்து மிரட்டிப் பெற்றுக்கொள்வதாக மற்ற நாடுகள் புகார் தெரிவிக்கின்றன. வரி செலுத்தும் கடமைகளைத் தட்டிக்கழிக்கப் பார்க்கும் தனிநபர்களின் நிலைமை கடந்த சில ஆண்டுகளில் கடினமாகியுள்ளது; இனி வரும் காலத்தில் மேற்கொண்டு கடினமாவதற்கே வாய்ப்புள்ளது.

நிறுவனங்களுக்கான பன்னாட்டு விதிகளைச் சிர்திருத்துவது சற்றே கடினம்; ஆனால், முன்னோக்கிய பாதை குறித்த ஓர் உடன்பாடு ஏற்பட்டு வருவதாகவே தோன்றுகிறது. வரி விதிப்பை விற்பனை நிகழும் இடத்தோடு இணக்கமானதாக மேற்கொள்வது, குறைந்தபட்ச உலக வரி வீதத்தை 15%-ஆக நிர்ணயிப்பது ஆகிய நடவடிக்கைகளைக் கொண்ட ஓர் ஒப்பந்தம், 140 நாடுகளுக்கும் (இதில் பெரிய பொருளாதாரங்கள் அனைத்தும் அடக்கம்) பிரதேசங்களுக்கும் இடையே ஏற்படும் நிலையில் உள்ளது. இருப்பினும், எல்லா ஓட்டைகளும் அடைக்கப்பட்டுவிடும் என்பது அளவுமிஞ்சிய எதிர்பார்ப்பாக இருக்கும்; விதிகளில் புதிய ஓட்டைகளும் கட்டாயம் ஏற்படும். பணம் படைத்த உலக நாடுகளோ, போட்டிக்கு எதிரானவை என்றும், பெரு முதலீட்டாளர்களைப் புறக்கணிக்கிறது என்றும் பெயர் வாங்காமல் இருக்கும் பொருட்டு, சில வகைகளில் வரி தவிர்ப்பினை மறைமுகமாகப் பல காலமாக ஊக்குவித்தே வந்துள்ளன. தனிப்பட்ட சொத்துப் பரிவர்த்தனைகளில் கோடீசுவரர்கள் வரி கட்டாமல் தட்டிக்கழிப்பது குறித்து அவை பெரிதாகச் சட்டை செய்யாமல் இருப்பதோடு, தாராளமாக அரசியல் கொடைகளை வழங்கக்கூடிய பணச் செல்வாக்கு படைத்தோரைக் குறிவைக்கவும் தயங்கும். இந்த வரிசையில் பண்டோரா ஆவணங்களே கடைசிக் கசிவாக இருக்காது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *