The politics of tamil short story (Sa. Kandasamy) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

மிகச்சமீபத்தில் 31ஜுலை 2020 அன்று மறைந்த சா.கந்தசாமி அவர்களின் சிறுகதைகளை வாசித்து, அவர் மறைந்து 15 நாட்களுக்குள் இக்கட்டுரை எழுதுவதை அவருக்குச் செலுத்தும் ஓர் அஞ்சலியாகவே கருதுகிறேன். கிழக்குப்பார்த்த வீடு, இன்னொரு மனிதன், முடிவின் தொடக்கம் போன்ற சில தொகுப்புக்கள் சட்டெனக் கையில் கிடைக்கவில்லை. கிடைத்த ஆறு தொகுப்புகளான தக்கையின் மீது நான்கு கண்கள்((1983), சாந்தகுமாரி(1991), இரவின் குரல்(2002),பத்ரிநாத்(2003),நிறங்களின் நிறம் (2004),சொல்லப்படாத நிஜங்கள் (2009) ஆகியவற்றில் உள்ள 57கதைகள், இவற்றுடன் இணையத்தில் கிடைத்த அவள்,ஒருவருடம் சென்றது, காவல், மலையூர், தேவை ஆகிய ஐந்து கதைகள் சேர்த்து 62 சிறுகதைகளை முன் வைத்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பிற கதைகளையும் வாசித்த பின் இதை மீண்டும் திருத்தி எழுத வேண்டி இருக்கலாம்.

சொல்லப்படாத நிஜங்கள் - சா.கந்தசாமி ...

இந்த 62 கதைகளையும் வாசித்து முடித்த பின்னும் சா.க. அவர்களின் குரல் கேட்டுக்கொண்டே இருப்பதான உணர்வு ஏற்படுகிறது. அப்படி கதைகளை அவர் ‘சொன்ன’ உணர்வு கூடுதலாக ஏற்படுகிறது. ஏனெனில் அவர் எந்தக் கதையிலும் ஒரு ’கதை’யைச் சொல்லிவிடவேண்டும் என்று மெனக்கெட்டது இல்லை.”உன்னைப் பார்க்க வரும்போது வழியிலே ஒரு சண்டை…” என்பதாக மிகத் தற்செயலாக இந்த வாழ்க்கையின் போக்கிலே நடக்கும் நிகழ்வுகளை,திருப்பங்களை எவ்விதக் குரல் உயர்த்தலோ உணர்ச்சி மேலிடலோ இல்லாமல் இப்பிடி இப்பிடியெல்லாம் நடந்தது என்பது போல அல்லது இப்பிடியெல்லாம் நடக்குது பாரேன் என்கிற அளவிலான தொனியுடனோ அவர் இக்கதைகளை எழுதிச் செல்கிறார்.’இக்கதைகளை எழுதியிருக்கிறார்’ என்று சொல்லாமல் ‘எழுதிச் செல்கிறார்’ என்றுதான் சொல்ல வருகிறது நமக்கும்.

ஆம். ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை நதியிலிருந்து ஒரு குவளை நீரை ஒரு சிறுகதையாக நமக்குத் தருகிறார். அதே நேரத்தில்,அதோ அங்கே ஓடிக்கொண்டிருக்கிற நதியிலிருந்து முகர்ந்து வந்த நீர்தான் இது என்பதையும் இதைக் கோரி வந்த பின்பும் நதி அதே போலவே ஓடிக்கொண்டிருக்கிறது பாருங்கள் என்பதையும் நமக்கு உணர்த்தும் விதமாகவும் சா.க.வின் சிறுகதைகள் நகர்கின்றன.இதுதான் அவரது கதைகளின் முக்கியமான,தனித்த  அடையாளமாகப் படுகிறது. துவக்கமும் முடிவும் அழுத்தம் பெறாமல் வாழ்வின் இயக்கம்தான் அழுத்தம் பெறுகிறது.எது எப்படியானாலும் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது.முற்றும் என்கிற இயக்கமின்மை அவர் கதைகளில் இல்லை.விலக்காகச் சில கதைகள் நாம் அறிந்த சிறுகதை வடிவுடன் கச்சிதமாகப் பொருந்தியும் வந்துள்ளன.முதல் தொகுப்பின் கதைகள் உதாரணம்.

ஒன்று

பத்துப் பன்னிரண்டு வயதுப் பையன்களின் வாழ்க்கை, அவர்களின் மன உலகம் மீண்டும் மீண்டும் அவர் கதைகளில் வருவதைப் பார்க்கிறோம். ஆரம்பகாலத்தில் சா.க.அவர்களின் அடையாளமாக இதுவே பேசப்பட்டது.

பாய்ச்சல், உயிர்கள், நிழல், பிணைப்பு, தக்கையின் மீது நான்கு கண்கள் என அவரது முதல் தொகுப்பின் 7 கதைகளில் ஐந்து கதைகள் சிறுவர்களின் உலகம் பற்றியவை. முகில்வேந்தன், தெய்வம் வாழ வைக்கும், ஆறுமுகச்சாமியின் ஆடுகள், ஒரு வருடம் சென்றது,புதிர்,பால்யகால சினேகிதன் போன்ற கதைகளும் சிறுவர் வாழ்விலிருந்து எழுந்த கதைகள். இவற்றோடு பால்யகால சினேகிதன், சுழற்சி, இரவின் குரல், ஞானி,சதாசிவத்தின் சைக்கிள் பயணம் போன்ற கதைகளை இன்று பெரியவர்களாகிவிட்ட நேற்றைய பையன்களின் கதைகள் என்று சொல்ல முடியும். சிறுவர் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சந்தித்த வன்முறைகள், புறக்கணிப்புகள் எப்படி அவர்கள் வளர வளர அவர்களின் குணாதிசயத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக, அவர்களின் ஆளுமையைச் செதுக்கும் கரங்களாகத் தொடர்வதையே இக்கதைகள் விவாதிக்கின்றன.

சிறுவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதிய சா.க. ஏன் சிறுமிகளைப்பற்றி எழுதவில்லை என்கிற கேள்வி இயல்பாக எழுகின்றது.ஒருவேளை நான் இன்னும் வாசிக்காத தொகுதிகளில் ஏதும் எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.இந்த 62 கதைகளில் ஒன்றையும் பார்க்க முடியவில்லை.ஏன்?

எல்லாக்கதைகளையுமே ஆண் சொல்லுவதாகவே எழுதியிருக்கிறார் என்பதையும் இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.தான் ஓர் ஆண் என்பதால் அப்படிச் சொல்வதுதான் சரி என அவர் நினைத்தரோ?கூடுவிட்டுக் கூடுபாய்தலில் நம்பிக்கை இல்லையோ அவருக்கு.ஒரு ஆண் எப்படிப் பெண்ணாகிக் கதை சொல்ல முடியும் என்று அவர் அந்தக் கேள்வியை நிராகரிப்பதாகக் கொண்டால்- சரிதான் என்று ஒப்புக்கொள்ளத் தோன்றுகிறது.சில பிடிவாதங்கள் அவருக்குண்டு என்பதை எழுத்திலும் பேச்சிலும் அவரது புற வாழ்விலும் காண முடியும்.

அவருக்குப் புகழ்சேர்த்த கதை “தக்கையின் மீது நான்கு கண்கள்”. மீன் பிடிக்க குளத்தில் வீசிய தூண்டிலின் தக்கையின் மீது நான்கு கண்கள் நிலைகொண்டிருக்கின்றன.தாத்தா மாணிக்கத்தின் இரண்டு கண்கள்,பேரன் ராமுவின் இரண்டு கண்கள்.மீன் பிடியில் வல்லுநரான தாத்தாவிடம் தூண்டில் போடக்கற்றுக்கொண்ட பேரன் தாத்தாவிடமிருந்து விலகி தனித்துத் தூண்டில் வீசுகிறான்.தாத்தாவுக்குச் சிக்காத அரியவகை மீன்களெல்லாம் பேரனுக்குச் சிக்குகின்றன.தாத்தாவுக்குப் பேரன் குறித்த பெருமிதமும் பொறாமையும் ஒருசேர அவர் உள்ளத்தில் துளிர்ப்பதுதான் கதை.

தக்கையின் மீது நான்கு கண்கள், சா ...

”ஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.

அவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.

“தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது…”  என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.

மாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.”

தானே தன் சிறகு விரித்துப் பறக்க முனையும் இளம் பறவையின் பறத்தல் கண்டு முத்தது கொள்ளும் உளவியல் மிக நுட்பமாக இக்கதையில் முன்வைக்கப்படுகிறது.

ஆனாலும் முதல் தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த கதை ‘உயிர்கள்’தான்.அதிகம் பேசாத அற்புதராஜ் சார் கதாபாத்திரம் 70 களில் இக்கதையை வாசித்தபோது ஆழமாக மனதில் நின்றது.இன்றைக்கு வாசிக்கும்போதும் என்ன அற்புதமான உணர்வுகளைக் கிளர்த்துவதாக இக்கதை அமைந்துள்ளது!

ஆறாம் வகுப்புப் படிக்கும் தங்கையாவின் குரலில் கதை சொல்லப்படுகிறது.தங்கையாவுக்கும் அற்புதராஜ் சாருக்கும் நடக்கும் இந்த உரையாடல் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக முக்கியமான பக்கங்களில் ஒன்றென்று சொல்லலாம்.

”சார், உங்களுக்கு ரொம்பத் திமிரா சார்?”

முன்னே சென்றுகொண்டிருந்த அற்புதராஜ் அப்படியே நின்றார். காதிலே விழுந்த சொற்கள் ஒரு கணம் நினைவிற்கு வரவில்லை .

அவன் சாரைப் பார்த்துக்கொண்டே நின்றான். முகத்திலே ஒரு திருப்தி. ‘அப்படியெல்லாம் இல்லே. எல்லாம் சுத்தப் பொய்’ கொன்று தெரிந்து, உண்மை நிரூபணம் ஆகிவிட்டதால் ஏற்பட்ட ஆனந்தம்.

 “என்ன ?”

 “உங்களுக்கு ரொம்பத் திமிரா, சார்?”

 “அப்படியென்றால்…?”

“ராஜகுமாரி டீச்சர்கிட்டே வேலு சார் உங்களுக்கு ரொம்பத் திமிர் என்றாங்க. எனக்கு அப்பவே தெரியும் சார், அது பொய் யென்று. மூஞ்சிக்கு நேரேயே கேட்கணும்னு கோபம் கோபமா வந்துச்சு. ஆனா அவுரு சார் இல்லையா சார்…?” என்று கேட்டு விட்டு அவரை நிமிர்ந்து பார்த்தான்.

அற்புதராஜ் அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறெடுத்துப் பார்த்து லேசாக முறுவலித்தார்.

பிடிபடாத படபடப்பு, எங்கிருந்தோ கோபம் ஆத்திரமெல்லாம் புகுபுகுவென்று பெருகிப் பெருகி வருகிறது.

அவருக்குத் தெரியும். ‘தான் வேலைக்கு வந்த அன்றே முக்கால் வாசி ஆசிரியர்கள் தன்னை விரும்பவில்லை ; தனியாகப் பிரிந்து சென்றுவிட்டார்கள்’ என்பது.

“உனக்கு என்ன தோணுது?” அற்புதராஜ் குனிந்து மெல்லிய குரலில் வினவினார்.

 “நீங்க ரொம்ப நல்ல சார்.”

 சார் சிரித்தார்.

“இல்லே; இந்த சார் ரொம்ப கெட்ட சார்தான். கிளாசுக்கு வந்து ஒருநாள் பார்.”

தங்கையா சிரித்தான். அதெல்லாம் பொய். வேணுமென்று அவனுக்காகவே சொல்வது மாதிரி ஒரு நினைப்பு. இப்படியெல்லாம் சிரித்துக்கொண்டு யார் பேசுவார்? ”

பள்ளிக்கல்வி வாழ்க்கையின் அழகான பக்கம் இது.ஓர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையில் முகிழ்க்கும் நட்பு எத்தனை அபூர்வமானது?எல்லோருக்கும் அது வாய்த்துவிடுவதுமில்லை.வாய்த்தால் பள்ளிக்கல்வியே அழகாகி-இனிமையாகி-நாடே அற்புதமான நாடாகிவிடுமே.

வகுப்பறைக்கு வெளியே எவ்வளவு அருமையான சாராக இருந்தாலும் வகுப்பறைக்கு உள்ளே நுழைந்ததும் அவர் கெட்ட சாராக ஆகிவிடும் அவலத்தை நாம் எல்லோருமே அனுபவித்துத்தான் வந்திருக்கிறோம். மாணவ நண்பர்களை  வேட்டைக்கு அழைத்துச்செல்லும் அற்புதராஜ் அதை உணர்ந்தே இருக்கிறார்.அவர் தன்னோடு உடன்வரும் எட்டாம் வகுப்பு கோபாலிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு மனதைத்திறந்து வைத்திருக்கிறார்.எத்தனை சார்கள் அல்லது மிஸ் கள் இப்படிக் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

நமது கல்விமுறை எவ்வளவு நல்ல மனிதர்களையும் மனுஷிகளையும் மதிப்பெண்களுக்காகப் பிள்ளைகளை சட்டியில் போட்டு வறுத்தெடுக்கும் ‘ஆசிரியர்களாக’ ஆக்கி விடுகிற கொடுமையை இந்தக்கதையிலும் இன்னும் பல கதைகளிலும் சா.க.தொடர்ந்து பேசுகிறார்.

எத்தனையோ குயில்களையும் வௌவால்களையும் சுட்டுக்குவித்த அற்புதராஜ்,தன் மாணவன் கோபாலின் மரணத்தோடு எல்லாவற்றையும் நிறுத்தித் தனக்குள் முடங்கிப்போகிறார்.எல்லா உயிரும் ஒன்றன்றோ என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதையாக ‘உயிர்கள்’ 70 களிலேயே –சுற்றுச்சூழல் பற்றிய விவாதங்கள் தமிழ்ச்சூழலில் துவங்குவதற்கு முன்பாகவே- பேசியிருக்கிறது.

லகானைச் சுத்தமாகத் தூக்கி எறிந்து விட்டுக் கதையைத் தன் போக்கில் எவ்வளவு தூரம்,எப்படி எப்படித் திரும்பி ஓடுமோ ஓடட்டும் என்று திசையறியாக் குதிரையின் கால்தடத்தைப் பின்பற்றிக் கதை எழுதும் போக்கு அவருடைய முதல் தொகுப்பின் ’பிணைப்பு’ கதையிலேயே தொடங்கி விடுகிறது.அம்மா பேச்சுக் கேட்காதவனான செல்லையா என்கிற பையனின் ஒரு நாள் ஓட்ட சாட்டத்தின் பின்னால் தொடர்ந்து பயணிக்கும் கதை.தாழம்பூ விற்று அரையணா சம்பாதிக்கும் செல்லையா கதை முடியுமுன் விளையாட்டில் இரண்டு ரூபாய்க்குமேல் ஜெயித்து,அதைத்தொடர்ந்து வந்த சண்டையில் ஜெயித்த காசையும் இவன் வச்சிருந்த காசையும் சேர்த்தே இழந்து விட்டு சண்டையில் கிழிந்த சட்டையைக் கழற்றித் தூர எறிந்துவிட்டு வீடு வந்து சேருகிறான்.அம்மா இன்னும் சந்தையிலிருந்து வீடு வந்து சேரவில்லை.அவளைத்தேடித்தான் அவன் சந்தைக்குப் போய் அங்கிருந்து கால் இழுத்துச் சென்ற வழியெல்லாம் பயணித்து இழந்தும் பெற்றுமாக வந்து நிற்கிறான்.இன்னும் அம்ம வந்த பிறகு என்னென்ன இருக்கோ என்று கதை நம் மனதில் தொடர்கிறது.

இரண்டு

சிறுவர்களுக்கு அடுத்து அவருடைய கதைகள் கவனம் கொண்டு விஸ்தாரமாகப் பேசுவது சினேகம், சினேகிதர்கள், சினேகிதிகள் பற்றி. தொலைந்து போனவர்கள் என்று ஒரு நாவலையே சினேகிதர்களைத் தேடிய கதையாக எழுதியவர் சா.க. என்பது இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.

ஆம்னிபஸ்: தொலைந்து போனவர்கள் - சா ...

சில சினேகக்கதைகளின் வரிகளை கீழே பார்க்கலாம்:  (பெரும்பாலும் இவை கதையின் துவக்க வரிகளாக வருபவை)

“என் சிநேகிதர்களிலேயே முக்கியமானவன் ஜெயராமன்.அவன் எனது நட்பு வட்டத்தின் உள்ளே  இருந்தது மாதிரி வெளியேயும் இருந்தான்.அது எனக்கும் அவனுக்கு மட்டுந்தான் தெரியும்” (நிறங்களின் நிறம்)

“நானும் வைத்திய நாதனும் ரொம்ப சிநேகிதம்.இரண்டு பேரும் தினமும் சந்தித்துக்கொள்வோம்..அப்படி சந்திக்க முடியாவிட்டால் பத்து நிமிடம் பதினைந்து நிமிடங்கள் போல டெலிபோனில் பேசிக்கொள்வோம்.என்னைப் பார்ப்பதில் அவருக்கும் அவரைப்பார்ப்பதில் எனக்கும் சந்தோஷம்”(யாத்திரை)

“(அனந்த நம்பி) அவன் என் சிநேகிதர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவன்.கொஞ்சமென்று நான் சொன்னது என்னைப்பற்றியவரையில் சரி.அவனைப்பற்றிய வரையில் சரியில்லை.ஏனெனில் அவன் எதற்கும் கட்டுப்பட  மாட்டான்.என்ன நினைக்கிறானோ அதைப்பேசுவான்.இன்னும் சொல்லப்போனால் எந்த இடத்தில் என்ன பேசக்கூடாதோ அதை அங்கே பகிரங்கமாகப் பேசுவான்.ஒளிவு மறைவு என்பதெல்லாம் அவனுக்குக் கிடையாது.”(அவன் இவனில்லை)

“அவனுக்கு நேர் எதிர் என்னுடைய சிநேகிதன் மேகநாதன்.இரண்டு கிளாஸ் உள்ளே போய்விட்டால்தான்,எழுந்து நின்று கொண்டு கையை ஆட்டியபடி சப்தமாகப் பேச ஆரம்பித்து விடுவான்.”(இவன் அவனில்லை)

”கல்லூரியில் அவனும் சுந்தரவதனமுந்தான் சிநேகிதம்.அவனை விட்டு இவனும் ,இவனை விட்டு அவனும் பிரிந்து இருப்பதே இல்லை.அவனுக்காக இவன் –சுந்தரவதனம் அறையை மாற்றிக்கொண்டு வந்துவிட்டான்”(இரவின் குரல்)

“என் சிநேகிதன் ஒருநாள் சொன்னான்,சீமான் வீட்டு நாய்களுக்கும் ,தெரு நாய்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி.அவன் சொன்னது சரிதான்.அதாவது தெரு நாய்களுக்கு வாலில் ஒரு கண் இருக்கிறது என்று.மனுஷன்,கல்லு இத்தனையும் சமாளித்துக்கொண்டு  ஜீவிக்க வேண்டி இருக்கிறது  தெரு நாய்.ஆனால் சீமான் வீட்டு நாய்க்குத் தட்டில் சாப்பாடு.பெட்டில் படுக்கை.என் சிநேகிதன் சீமான் வீட்டு நாய் என்றால் – நான் தெருநாய்.” (அசூரன்)

“என் சிநேகிதர்களில் முதல் ஆள் தனபாலன்.அவன் ஏன் முதல் ஆள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது.ஒவ்வோர் ஆணுக்கும் வேண்டிய ஆள் உண்டு.அதற்கெல்லாம் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களைவிட அவனை எனக்குப் பிடித்துப்போய் விட்டது.அதுதான் முக்கியம்”(நிறம் மாறுவதில்லை)

”தியாகராஜன் என்னுடைய சிநேகிதர்களில் கடைசி ஆள்.ஆனால் அவன் மனசில் எனக்கும் ,என் மனசில் அவனுக்கும் முதல் இடம்.அது என்னவோ நெருடுவது மாதிரி இருக்கும்.ஆனால் அதுதான் உண்மை.”(ஞானி)

“பணிக்கர்க்கும் எனக்கும் ஆறு மாத பழக்கந்தான்.ஆனால் பழக்கத்திற்கு மாதம் ஒரு கணக்கில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.அது சாவுக்கு மட்டுமில்லை.சிநேகிதம்,உறவுக்குக் கூடத்தான்.நாலு வருடம்,ஐந்து வருடம் ஒன்றாக இருந்தாலும் ,உறவு வருவதில்லை.வெறுப்பு,சண்டைதான்  சிலரிடம் வருகிறது.அதுவும் பழக்கத்தால் வருவதுதான்”(பத்ரிநாத்)

”என்னுடைய சிநேகிதர்களிலேயே, எனக்கு ரொம்ப பிரிய மானவன் சிங்கப்பூர் பாலு, என்கிற பால சுப்பிரமணியன். அவனும் நானும் ஒரு வருஷந்தான் சிநேகமாக இருந்தோம். அதுவும் ஆறாம் வகுப்பு படிக்கிறபோது. படிப்பு முடிவதற்குள் அவனும் நானும் பிரிந்துபோய் விட்டோம் பத்து பதினைந்து வருஷம் சிநேகிதமாக இருந்தவன் எல்லாம், பிரியமான சிநேகிதனாக இல்லை . ஒரு வருஷங்கூட ஒன்னா சேர்ந்து இருக்காத பாலு, பிரியமான  சிநேகிதனாக இருக்கிறான். அதனைச் சின்ன வயது சிநேகிதம் என்று சொல்வதா? நிஜமான சிநேகிதம் என்பதா? சிநேகிதம் என்பது இந்த வயது சிநேகிதம் என்பதால் முக்கியமாகிறதா? சின்ன வயது சிநேகிதம் தொடர்ந்து வராமல் போக வாய்ப்புண்டு. இடம், ருசி மாறுகிறபோது, சிநேகிதமும் மாறி விடும். வயசு ஏற ஏற மாறாமல் இருப்பதுதான் நல்ல சிநேகிதம். அதெல்லாம் பாலுவிற்கு சரியில்லை. நான் அவனை, முப்பத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் பிரிந்தேன். அப்புறம் அவனைப் பற்றி பத்துப் பன்னிரண்டு முறைகள் நினைத்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட பார்க்கவில்லை. அவனைப் பார்க்க நானும் தேடிக்கொண்டு போகவில்லை; என்னைப் பார்க்க அவனும் வரவில்லை. ரொம்ப  சிநேகிதம் அப்படித்தான் போய்விடுகிறது. ஆனால் சிநேகிதம்  என்பது அடிக்கடி பார்த்துப் பேசிக்கொள்வதால் தான் வளர்கிறது என்று சொல்ல முடியுமா?(”சிநேகிதன்)

சாந்த குமாரி,தோழி,கமலா போன்ற கதைகளில் ஆண்-பெண் சினேகம் பற்றி எழுதியிருக்கிறார்.தமிழின் மற்ற படைப்பாளிகளோடு ஒப்பிடுகையில் இது ரொம்பக் குறைவுதான்.

சினேகிதன்,ரயில் சினேகம்,பால்ய சிநேகிதன்,தோழி,சிங்கப்பூர் சினேகிதன் என்று தலைப்பிலேயே சினேகம் வைத்தவராகவும் சா.க.வைக் குறிப்பிட வேண்டும்.நிஜ வாழ்வில் அவருடைய காலை நேர நடைப்பயண சிநேகிதர்கள் அநேகம் பேர் உண்டு என்பது தவிர்க்கவியலாதபடி நினைவுக்கு வருகிறது.

சினேகிதம் பற்றிச் சிறுகதைகளில் இவ்வளவு விரிவாக எழுதிய இன்னொரு எழுத்தாளரைத் தமிழில் பார்க்க முடியாது என்றே எண்ணுகிறேன்.ஆனாலும் எந்தக்கதையிலும் எந்த சினேகிதம் பற்றியும் மனம் உருகுவதெல்லாம் இல்லை.சினேகிதமா இருக்காங்க,உதவிகள் செய்து கொள்வதும் கூடச்சேர்ந்து தண்ணி அடிப்பதும்,ஒன்றாக காரிலோ பைக்கிலோ ஊரைச் சுற்றுவதும் பரஸ்பரம் ஆதரவாகப் பேசிக்கொள்வதும் என்று இருக்கிறார்கள்.சினேகிதம் பற்றி,அதன் அடர்த்தி பற்றிய அளவீடுகளுடன் தன்னுணர்வுடன் கதாபாத்திரங்கள் இருப்பதால் வாசகரால் வாசித்து ரசிக்க முடிகிறது.கரைந்து போக முடியவில்லை.அது தேவையில்லை என்பது சா.க.வின்  நிலையாக இருக்கலாம்.நட்பு என்கிற வார்த்தையை சா.க. பயன்படுத்தவில்லை.அதற்கு வேறு பொருள் கொண்டிருந்தாரா அல்லது சினேகம் என்கிற வார்த்தை தரும் மன நெருக்கம் ‘நட்பில்’ கிடைக்காது என்று கருதினாரா என்பது தெரியவில்லை.

நிறங்களின் நிறம் – Dial for Books

மூன்று

அடுத்து, சா.க.வின் கதைகளில் வரும் பெண்கள் பற்றிச் சொல்லியாக வேண்டும்.பெண் நிலையில் நின்று சா.க. கதைகளில் பேசாவிட்டாலும், ஆணாதிக்கக் கொடுமைகளை அழுத்தமாகப் பல கதைகளில் சொல்லுகிறார்.பத்துக்கும் மேற்பட்ட கதைகளில் மனைவியை அடித்துத் துவைக்கும் கணவன்மார்கள் வருகிறார்கள்.கணவனைத் தெய்வமாகக் கும்பிடும் பெண்களும் வருகிறார்கள்.போடா என்று உதறிவிட்டுச் செல்லும் கோபம் கொண்ட மாதர்களும் வருகிறார்கள்.

’சந்திரலேகா’ என்று ஒரு கதை. அக்கதையைச் சொல்லும் ஆண் தனசேகரன். அவனோடு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் சந்திரலேகா. அலுவலகப்பணிகளில் அத்தனை ஒழுங்கைக் கடைப்பிடிப்பவராக சந்திரலேகாவை அறிமுகம் செய்கிறார் சா.க. கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு அவள் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள்.அவள் கையில்,பையில் எப்போதும் புத்தகங்கள், பத்திரிகைகள் வைத்திருப்பாள்.மதியம் எல்லோரும் சாப்பிடப்போகும்போது அவர் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். தனசேகரனோ யாரோ அவரோடு பேச்சுக்கொடுத்தால் அதைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் புத்தகத்தில் மூழ்கியிருப்பார்.புத்தகம் படிப்பதனால்தான் புருசனோடு சண்டை வந்திருக்குமோ என்று தனசேகரன் நினைப்பான்.

“புருஷன் கூட சண்டை போட புத்தகங்கள்தான் காரணமாக இருக்குமா? அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவன்  மனைவி புவனேஸ்வரி அடிக்கடி புத்தகங்கள் படித்துக் கொண்டுதான் இருந்தாள்.

ஒரு நாள், மாலைப்பொழுது, அது ஞாயிற்றுக்கிழமையோ, சனிக்கிழமையோ சரியாக நினைவு இல்லை. காபி கொடுத்துவிட்டு புவனேஸ்வரி ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன, பரிட்சைக்குப் படிச்சிப் புடுங்கறது மாதிரி, எப்பப் பார்த்தாலும் படிச்சிக்கிட்டே இருக்க?”

 புவனேஸ்வரி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னடீ பாக்கற”

அவள் லேசாகப் புன்னகைப் பூத்தாள.

“என்ன இளிக்கற”

 “ஒன்னும் இல்ல”

 “நானும் ரொம்ப நாளா பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன். நீ பாட்டுக்குக் காபி கொடுத்துட்டு, சோறு போட்டுட்டு பெரிய மயிரு மாதிரி, நாளைக்கே பரிட்சைக்குப் போறது மாதிரி படிச்சிக்கிட்டு நிக்கறே”

“பரிட்சைக்குத்தான் படிப்பாங்களா?”

 “பின்ன ?”

புவனேஸ்வரி புத்தகத்தை எடுத்துக் கொண்டு – அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். அவனுக்கு அவள் தலைமயிரைப் பிடித்து அடிக்க வேண்டும் போல இருந்தது. கையில் இருந்து காபி டம்ளரை டக்கென்று கீழே வைத்தான். திடீரென்று அவனுக்கு சந்திரலேகா நினைவுக்கு வந்தாள். தலையை அசைத்துக் கொண்டு பின்னால் சாய்ந்து கொண்டான்.

சந்திரலேகாவை புத்தகம் படிப்பதற்காக அவள் புருஷன் அடித்து இருப்பானா? அதனால் தான் அவனை விட்டு விட்டு ஹாஸ்டலுக்கு வந்து விட்டாளா?  ”

உண்மையில் ஒரு கதையின் அற்புதமான துவக்கம் இது.மனைவியின் புத்தக வாசிப்பைக்கண்டு மனம் வெதும்பி ஆத்திரமடையும் ஆணாதிக்கக் கணவன்மாரின் உளவியலைப் பேசப்போகிறார் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், கதை நம்மை ஏமாற்றி விட்டு வேறு பக்கம் ஓடுகிறது.அதுதானே சா.க.வின் முத்திரை.தனசேகரன் அவனுடைய மகளின் வைத்தியச்செலவுகாக அந்த சந்திரலேகாவிடம் 100 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு பஸ்ஸுக்குக் காத்திருக்கும்போது,யூனியன் செக்ரட்டரியான கதிரவன் வந்து அந்த நூறு ரூபாய்க்கு வேட்டு வைக்கிறான். தனசேகரன் செலவில் ஆப்பமும் பாயாவும் தின்றுவிட்டு மேற்கொண்டு ஐம்பது ரூபாயை தனசேகரனின் பர்ஸிலிருந்து தானே எடுத்துத் தன் பையில் வைத்துக்கொள்கிறான் அந்த சங்கத்தலைவன்.பக்கா வழிப்பறிதான் அது.மகளுக்கு வைத்தியம் பார்க்க என்ன செய்வது என்று தனசேகரன் விழித்து நிற்கிறான்.அந்த சங்கத்தலைவன் தனசேகரனுக்கு கல்லூரியில் ஜூனியர்.இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே சி.பி.எம்.மில் சேர்ந்தவன்.புருசனைவிட்டுத் தனியாக இருக்கும் சந்திரலேகாவை அடித்துக்கொண்டுபோக முயற்சி செய்து மூக்குடைபட்டவன்.

இளவயதில் சி.பி.எம்.மில் சேர்ந்து பின்னர் தொழிற்சங்கவாதியானவன் இப்படி அறமற்றவனாக இருக்கிறான் என்று சா.க. சொல்ல வருவதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால் இப்படியெல்லாம் சா.க. எழுதியிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டுமல்லவா?எங்கோ ஆரம்பித்து இங்கே வந்து இப்படியாக முடிகிறது கதை.

“பிற்பகல்” என்றொரு கதை ரவியும் சாரதாவும் வேலைக்குப் போகிற தம்பதி.சாரதாவுக்குப் பல்வலி.அவளுடைய பல்வலிதான் கதையின் மையமாகச் சுழல்கிறது.ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு பஸ் ஸ்டாப்பில் நிற்கிறாள்.

“சாலையில் ஓர் ஊர்வலம். முன்னூறு முன்னூற்று ஐம்பது ஆட்கள். கையில் சிவப்புக்கொடி பிடித்துக் கொண்டு.

“மத்திய அரசே மூடாதே… மூடாதே தொழிற்சாலைகளை மூடாதே! அரசு தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக் காதே! பறிக்காதே….பறிக்காதே வேலை வாய்ப்புகளைப் பறிக்காதே…” என்று கத்திக் கொண்டு போனார்கள்.

அவள் கத்திக்கொண்டு போகும் ஆட்களையே பார்த்தபடி இருந்தாள். அவர்கள் போடும் சப்தமே பல்வலியைக் கூட்டுவது மாதிரி இருந்தது. மெதுவாகத் தலையசைத்துக் கொண்டாள்.”

இப்படி ஒரு காட்சியை சா.க. எழுதுகிறார்.தொழிற்சங்க ஊர்வலங்கள் பல் வலியைக் கூட்டுவதாக அவர் எழுதுவதாக ஒரு உள்நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை.ஆனால் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டுமல்லவா?

ஓர் ஆணாதிக்க உலகத்தில் ஒரு பெண் வாழ்வதில் உள்ள அவலங்களின் ஒரு பக்கத்தை இக்கதையில்,ஒரு பிற்பகல் நிகழ்வுகளை வைத்துக் கூர்மையாகச் சொல்லியிருக்கிறார்.வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கும் மனைவி கிடைத்தால் மட்டும் சமையலறைக்குப் போய் சிலபல உதவிகள் செய்யும் ஆண்களின் லட்சணத்தை ஒரே ஒரு சின்னக்காட்சியில் அற்புதமாகக் நமக்குக் கடத்திவிடுகிறார் சா.க.பல்வலிக்காக லீவு போட்டு வீடு வந்து சேரும் சாராதா….

“அவள் கதவைச் சாத்திவிட்டு சமையலறைக்குள் சென்றாள்

அடுப்பு மீது டீ வழிந்து காய்ந்து கிடந்தது. டீ வடிகட்டிய டம்ளரில் பாதிக்கு மேலே மீதியிருந்தது. அவள் டீ டம்ளரை எடுத்துக் கொண்டு போய் வாஷ் பேஸினில் போட்டுவிட்டு படுக்கையறைக்குள் சென்றாள். லுங்கிபாதி கட்டிலிலும் – பாதி தரையிலுமாகக் கிடந்தது. அதை யெடுத்து கொடியில் போட்டுவிட்டு தலையணையை முன்னே எடுத்து வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்தாள்.”.

இக்கதையை சா.க.முடித்திருக்கும் விதம் வலி மிகுந்தது.

”மணி விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது.

அவள் ஈரக் காலை மிதியடியில் துடைத்தபடி பாத்ரூமை விட்டு வெளியில் வந்தாள். கதவு படபடவென்று தட்டப்பட்டது. அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னே போய் கதவைத் திறந்தாள்.

ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.

– “எவ்வளவு நேரமா கதவை தட்டிக்கிட்டு இருக்கேன். உள்ள என்ன புடுங்கிக்கிட்டா இருக்க!” அவளை இடித்துத்தள்ளியபடி உள்ளே சென்றான்.

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். மின்னல் கீற்று போல ஒரு புன்னகை தோன்றி மறைந்து சென்றது.”

அந்தப்புன்னகைக்கு எத்தனையோ அர்த்தங்கள் கற்பிக்க முடியும்.அக்கதை முழுதும் பல்வலியால் அவள் படும் வேதனையே விவரிக்கப்பட்டு நம் உள்ளம் அவளுக்காக அவளைப்போன்ற பெண்களுக்காக மனமிரங்கி நிற்கும்போது இப்புன்னகை நம் முகத்தில் அடித்துக் கோபத்தை உண்டுபண்ணுகிறது -ஆண்களின் மீது.

இதே போன்ற முடிப்புக் கொண்ட பல கதைகளை சா.க. எழுதியிருக்கிறார்.

தேவை என்கிற கதை இப்படி முடியும்.

”மெதுவாகயேறிக் கதவைத் தட்டினான். வழக்கத்தைவிட வேகமாகத் தட்டினான். நிற்க முடியாதவன் போல் தட்டினான்.

‘யாரு ? ‘ என்றாள் மஞ்சுளா, உள்ளே இருந்து.

‘தெரியல ? ‘ இவன் கை படாரென்று கதவில் அறைந்தது.

‘இதோ வந்துட்டேன். ‘ விளக்கைப் போட்டுவிட்டு, அவள் கதவைத் திறந்தாள்.

‘எவ்வளவு நேரமா தட்டுறேன், எட்டு மணிக்கெல்லாம் தூக்கமா ? ‘

‘முதல் சத்தத்துக்கே வந்துட்டேனே. ‘

‘–திங்கறது; தூங்கறது ‘ ‘

‘நான் எங்கே தூங்கினேன் ? ‘

‘பேசாதே. கொன்னுடுவேன். ‘

மஞ்சுளா இவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்..”வீட்டுக்குள்

திடீரென்று வெளிச்சம் பரவியது. அவன் மனைவி அவசரம் அவசரமாக வந்து கதவைத் திறந்தாள்.

திறந்த கதவை அடித்துத் தள்ளிக் கொண்டு, “என்னாடீ, அரைமணி நேரமா கதவைத் தட்டுறேன். தூங்கிக்கிட்டு கிடக்கிறே….” என்றான்.

“எங்க தூங்கினேன்? முதல் சத்தத்துக்கு எழுந்திருச்சிட்டேன்…..”

“எங்கடீ எந்திருச்சே….?” என்று அவள் முகத்தில் குத்தினான்.

அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“மொறச்சா கொன்னுடுவேன் கொன்னு….” அவள் பிடரியில் கை வைத்து முன்னே தள்ளினான்.

தடுமாறிக் கீழே விழுந்த அவள் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். –

“எட்டு மணி ஆயிட்டா போதும் தின்னுட்டுப் பரப்பிக்கிட்டுத் தூங்க வேண்டியது.”- இரும்பு நாற்காலியை இழுத்து அவள் முன்னே போட்டுக் கொண்டு உட்கார்ந்தான்.

அவள் எழுந்து அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்..”

’வீர முத்து’ என்கிற கதை இப்படி முடியும்.இரவின் மடியில் என்கிற கதையும் கிட்டத்தட்ட இதே வசனங்களுடன் மனைவி கதவைத்திறந்ததும் அடிப்பதுடன் முடியும்.பல கதைகளில் ஆண்கள்  அற்பக்காரணங்களுக்காகவோ அல்லது அவர்களின் வெளியுலக இயலாமையை அவள் மீது கொட்டுவதற்காகவோ  பெண்களை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.எல்லாக் கதைகளிலும் அடி வாங்கிக்கொண்டு பெண்கள் ஒரு பார்வை பார்க்கிறார்கள்.அல்லது ஒரு புன்னகையை அவன் மீது எறிகிறார்கள்.இந்தப் ’பார்வை’ இந்தப் ‘புன்னகை’ என இந்த இரண்டையும் இவ்வளவு சக்தியுடன் பயன்படுத்தியிருப்பவர் சா.கந்தசாமி மட்டும்தான் என்று சொல்லலாம்.ஆணின் குரூர மனதை மீண்டும் மீண்டும் தோலுரித்துக்கொண்டே இருக்கிறார்-தயவு தாட்சண்யமின்றி.சா.க. தன்  கதைகளில் முன் வைக்கும் மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அரசியல் இது.

கணவனைத் தெய்வமாக மதிக்கும் பழைய பண்பாட்டு மனுஷிகள் இன்னும் இருப்பதையும் சில கதைகளில் படம் பிடிக்கிறார்.”அறியப்பட்டவன்” கதையில் முத்துக்குமாரசுவாமியின் வீட்டுக்கு வரும் நாகராஜன் முத்துக்குமாரசாமியை அவன் மனைவி சுவாமி..சுவாமி..என்று பேர் சொல்லிக் கூப்பிடுவதையும் இவன் ஓடி ஓடிப்போவதையும் பார்த்து பெருமிதம் கொள்கிறான்.மறுநாள் அலுவலகத்தில் நீ முற்போக்கான ஆள் என்று பாராட்டுகிறான்.”வீட்டிற்கு வந்ததும், வச்சலகுமாரியிடம் நாகராஜன் சொன்னதைச் சொன்னேன். அவள் என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள். அப்புறம், “அந்த நாகராஜனுக்குத் தான் புத்தி இல்லென்னா, உங்களுக்கு வேணாம். அவன் சொன்னான்னு வந்து சொல்றீங்களே” என்று கேட்டுவிட்டு அடுத்த கணமே என் கால்களில் விழுந்து “சுவாமி” என்று வணங்கினார்.

எனக்கு நாகராஜனை அறைய வேண்டும் போல இருந்தது.” அவள் சொன்னது அந்த சுவாமி என்று நகைக்கிறார் சா.க.

சின்ன வயதில் ஏற்படும் தாக்கங்கள் எதிர்மறையாகவும் ஒரு மனிதனின்  குணாதிசயத்தைப் பிற்காலத்தில் செதுக்கக்கூடும் என்பதற்கான உதராணமாக அவருடைய ”அறியப்பட்டவன்” கதையில் வரும் இப்பகுதியைக் கூறலாம்:

”யோசித்துப் பார்த்தால், என்னவோ குறைபாடு மாதிரி இருக்கிறது. மனைவியிடம் அவள் சொல்வதிலும், சமைப்பதிலும் குறைபாடு காணவே கூடாது. உப்பு இல்லாமல் என் மனைவி குழம்பு ஊற்றினால்கூட ஒன்றுமே சொல்லமாட்டேன். ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துச் சாப்பிட்டு விடுவேன். அது எங்கள் குடும்பத்தின் குணமில்லை. அப்பா உப்பு குறைந்தால், குழம்பை அம்மா மூஞ்சியில் வீசியடிப்பார்; சோறு குழைந்துவிட்டால் தட்டுப் பறக்கும். அப்பாவிற்குச் சோறு போடும்போது அவர் சாப்பிட்டுவிட்டு எழுந்தரிக்கும் வரையில் அம்மா பதைபதைப்போடு இருப்பாள். மோர் சோற்றில் ஒரு கல் இருந்துவிட்டது. அப்பா கையை நீட்டி அம்மாவைக் கூப்பிட்டார். அம்மா மெதுமெதுவாக வந்தார். அவர் சோற்றைக் காட்டினார். குனிந்து பார்த்தாள். அம்மா மூஞ்சியில் சோற்றைத் துப்பினார்.

“கல்லு, மயிரு இல்லாம சோறு ஆக்க துப்பு இல்ல” என்று தட்டை எடுத்துத் தரையில் அடித்தார். சோறு நாலாபக்கமும் சிதறியது. நான் திரும்பிப் பார்த்தேன்.

“என்ன மொறைக்கற” என்று என் முதுகில் ஓர் உதைவிட்டார். நான் குழம்பு சோறு தின்று கொண்டு இருந்தேன். கருவாட்டுக் குழம்பு. கன்னம், மூக்கு, நெற்றியெல்லாம் சோறும் குழம்புமாகிவிட்டது. ஒரு முள் கண்ணில் குத்திவிட்டது. கண் டாக்டரைப் பார்த்து, மூன்று நாட்கள் வைத்தியம் செய்துகொண்டேன். அப்பாதான் என்னை டாக்டரிடம் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போனார். அதற்குப்பிறகு நான் கருவாடு தின்பதைவிட்டு விட்டேன்.”

சா.க. எழுதியுள்ள ஏராளமான குடும்ப வன்முறை குறித்த  கதைகளில் ஒன்றாகவும் இதைச் சேர்க்கலாம்.

பெண்கள் குறித்த சா.க.வின் மன ஓட்டமாக கீழ்க்கண்ட பத்தியை வைத்து பெண்கள் பற்றிய இப்பகுதியை நிறைவு செய்யலாம்:

”அவளைப்பற்றி நினைக்கவே பாவமாக இருந்தது. ஆபீசில் எத்தனை வேலை பார்க்கிறாள் என்று நினைத்துக் கொண்டான். மனசு இரங்கியது. பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். தலையில் பூவும், கழுத்தில் தங்கமும், முகத்தில் பௌடரும், இடுப்பில் தகதகவென்று பட்டுப் புடவையும் மினுக்கிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் புழுங்கிக் குமைகிற ஜென்மங்கள்தான் என்றுபட்டது.

அம்மா, அப்பாவிடம் எத்தனை கஷ்டப்பட்டு இருப்பாள் என்று நினைத்துப் பார்த்தான். எதற்காக அம்மா அற்பனும், முன்கோபியும் முரடனுமான அப்பாவை உதறிவிட்டு விட்டுப் போகவில்லை? அம்மாவின் முன்னே அப்பா ஒரு புழு. கேடுகெட்ட மனுஷன். இல்லை, அப்பா ஒரு மனுஷனே இல்லை. ஆனாலும் அம்மா அப்பாவைச் சகித்துக்கொண்டு வாழ்ந்தாள். ஏனெனில் அம்மா அந்தக் காலத்து மனுஷி. புருஷன் செய்வதெல்லாம் சரியென்று நினைக்கிறவள். அதுகூடச் சரியில்லை. புருஷனுக்கு மேல் ஒன்றுமே இல்லை என்பதுதான் அம்மா. அதை அம்மா சரியாக அறிவாள் என்றுகூடச் சொல்ல முடியாது.”(கிரிவலம்)

நான்கு

30க்கும் மேற்பட்ட  கதைகளில் மரணம்,அகால மரணம்  கதையின் போக்கை தீர்மானிக்கும் காரணியாக வருகிறது.மனைவியை இழந்த கணவன்மார்கள்,கணவனை இழந்த மனைவிமார்கள்,அப்பா இல்லாத/அம்மா இல்லாத பையன்கள் திரும்பத்திரும்ப சா.க.வின் கதைகளில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.மரணம் துரத்தும் வாழ்க்கை அவருடைய படைப்பு மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.’மரணத்தை முன் வைத்து வாழ்வை விசாரித்தல்’ என்று இலக்கிய உலகில் பேசுவார்களே அதை சா.க.வின் கதைகளில் விரிவாகக் காணலாம்.

ஐந்து

நல்ல தமிழ்ப்பெயர்களோடு உலவும் கதாபாத்திரங்களைத் தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுதியாகப் படைத்தவர் சா.கந்தசாமிதான் என்று அடித்துச் சொல்லலாம். அரசு,கலைச்செல்வி,கதிரவன், காத்தமுத்து,மதுரமொழி,தேன் மொழி,முகில்வேந்தன்,பாரதி இளங்கோவன்,கயல்விழி,முத்துச்செல்வன் என்று நல்ல தமிழ்ப்பெயர்களோடு ,தமிழ்ச்சமூகத்தின் கள யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் விதமாகத் தன் கதாபாத்திரங்களுக்கு சா.கந்தசாமி பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.பெயர்களின் அரசியலில் ஒருவகையில் சரியான நிலைப்பாட்டை சா.க.எடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.ஒடுக்கப்பட்ட சாதிகளின் வாழ்வைக் களமாகக் கொண்ட கதைகள் குறைவென்பதால்,அப்பெயர்கள் இடம் பெற வாய்ப்பற்றுப் போயிருக்கிறது.மீதிக்கதைகளைப் படிக்காமல் இத்ற்குமேல் இப்போது சொல்ல முடியவில்லை.,

ஆறு

இச்சிறுகதைகளை முன் வைத்து சா.க.அவர்களின் கலையின் அரசியல் என்ன என்கிற கேள்வியை எழுப்பினால், அவர் அடித்தட்டு உழைப்பாளி மக்கள்,கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையும் மனுஷிகளையும் பற்றியே கதைகள் எழுதியிருக்கிறார்.அதில் ஆணாதிக்கம்,குழந்தைகள் உரிமை மறுப்பு,அன்பு,கருணை,மன்னிப்பு,சினேகம்,துரோகம்,பொறாமை ,பாலியல் ஒழுங்கு மீறல்கள்பற்றியே எழுதியிருக்கிறார்.பெரும்பாலும் சார்பற்று எழுதியிருக்கிறார்.பத்துக்கு மேற்பட்ட கதைகளில் கணவன் மனைவி அல்லாத ஆண்கள் பெண்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கை பற்றி யதார்த்தமாக அதற்கான நியாயங்களுடன் மனத்தடையின்றி எழுதியிருக்கிறார்.

”வாழ்க்கையென்பது புதிர்த்தன்மை கொண்டது என்பதைச் சொல்லும் படைப்புகளைப் படிக்கிறபோது – வாழ்க்கைக்கு அர்த்தமும் சுவாரசியமும் கூடுகிறது. எந்தத் தலைமுறையை விடவும் – தற்காலத் தலைமுறை அதிகமான அம்சங்களில் அபாரமான அறிவும் தெளிவும் பெற்று இருப்பது போலவே, அறியாமல் இருப்பதையும் அறிந்து கொண்டு உள்ளது. எனவே அறிந்து கொள்ளமுடியாத சூட்சுமத்தை அறிந்து கொள்ளமுடியாத தொனியில் பலரும் தங்கள் அளவில் எழுதி வருகிறார்கள். நில்லாமல் சுழலும் வாழ்க்கையின் சில கணங்கள் எழுத்தில் பிடிபட்டு அதற்கு ஓர் அர்த்தமும் வலுவும் கொடுக்கின்றன. அதில் அடைந்ததை விட, அடைய முடியாமல் போவதுதான் அதிகம். ஆனாலும் அடைய ஆசையும் ஆர்வமும் தொடர்கிற பயணம். இலக்கியத்தில் பயணமே முக்கியம். ஏனெனில் அது பல தலைமுறைகளின் தொடர் பயணம். அதில் பங்கு கொள்வதே பெரும்பேறு.” என்று அவர் 2003இல் வெளியான ‘பத்ரிநாத்’ தொகுப்பின் முன்னுரையில் கூறுகிறார்.

சிறுகதையை,படைப்பிலக்கியத்தை அவர் ஓர் ‘அறிதல் முறை’யாக முன்னிறுத்துகிறார்.இந்த வாழ்வையும் அதன் புதிர்களையும் புரிந்து கொள்ளும் ஓர் அறிவியலாகக் கலையை அவர் முன் வைக்கிறார்.

“நான் கதை சொல்கிறவன். என் கதைகளில் கதையே கிடையாது. சொல்லப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும். ஒருகதையைச் சொல்லப்பார்க்கவே முயற்சி செய்கிறேன். அப்படிப் பலரும் முயன்று இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது அதில் அக்கறை கூடுகிறது.

இந்தக் கதைகளில் தொடக்கம், முடிவு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால் – கதை எங்கே முடிவடைகிறதோ அந்தக் கடைசிப் பக்கத்தில் இருந்துதான் கதையே தொடங்குகிறது.” என்று இன்னொரு முன்னுரையில் சொல்கிறார்.பெரும்பாலான அவருடைய கதைகளுக்கு இந்தக்கூற்று பொருந்துகிறது.

ஏழு

இக்கதைகளைச் சொல்ல அவர் தேர்ந்து கொண்டிருக்கும் மொழி மிகச் சாதாரணமானது.நேரடியானது. சற்றும் பூச்சற்றது.வாசகரை வசீகரிப்பதற்காக எந்த ஒப்பனையும் செய்துகொள்ளாதது.அதுவே நம்மை வசீகரிப்பதற்கான காரணியாக ஆகிவிடுகிறது.

எட்டு

சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் இவர் கதைகளில் இடம் பெறுகின்றனவா எனில், சில கதைகளைச் சொல்ல முடியும்.

’சரபோஜிபுரம்’ என்கிற கதையில் ஒரு சிற்றூருக்கு அருகே திடீரென்று ராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது.ஏற்கனவே தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள ஊரில் அந்த ஊருக்கான தண்ணீர்க்குழாய் ராணுவ முகாமை நோக்கித் திருப்பப்படுகிறது.அதஒ ஒட்டி ராணுவ வீரர்கள் சிலருக்கும் ஊர் மக்களுக்கும் இடையில் ஏற்படும் கைகலப்பில் ராணுவம் ஒரு பெண்ணைச் சுட்டுத்தள்ளிவிடுகிறது.ராணுவத்துக்கு எதிரான மனப்போக்கு இதில் வெளிப்படையாக இருக்கிறது.இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை மீதான எதிர்ப்புணர்வின் கதை வெளிப்பாடோ இது என்கிற சந்தேகம் வந்தது.

‘மே 21’ என்று ஒரு கதை.ஒரு குடும்பத்தில் பூட்டன்,தாத்தா,அப்பா என எல்லோரும் 47 வயதில் காலமாகி விடுவது தொடர்ந்து நடக்கிறது.இப்போது பையனின் காலம்.அவனுக்குப் புற்று நோய் வந்து விட்டது.ஆஸ்பத்திரியில் இருக்கிறான்.அவன் அவன் வயது இப்போது 47.அவன் பிழைப்பான என அழும் அம்மாவைத்தேற்றிவிட்டு ஊர் திரும்பும் அப்பையனின் நண்பன்(சினேகிதன்) மூலமாகக் கதை சொல்லப்படுகிறது.பஸ்ஸில் ஊர் திரும்பும்போது வழியில் ஒரு விபத்தில் குழந்தை அடிபட்டு இறந்ததை ஒட்டிச் சாலை மறியல் பஸ் உடைப்பு.தாமதமாக சென்னை திரும்பியதும் மனைவி சொல்கிறார்.ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பில் இறந்துவிட்டதாக அமெரிக்காவிலிருந்து போன் வந்ததாக பக்கத்து வீட்டுப்பெண் சொன்னதாகவும் இன்னும் டிவியில் நியூஸ் வரவில்லை என்றும் சொல்கிறாள்.வழியில் ஏதும் கலட்டாவா என்று கேட்கிறாள்.ராஜீவ் காந்தி சாகும்போது அவருக்கு வயது சரியாக 47 என்பது கதையில் சொல்லப்படாமல் கதை போகிறது..

‘எங்கள் ஆசிரியர்’ என்கிற கதையில் வரும் அற்புதமான ஆசிரியர் குமரேசன் அவசரநிலைக் காலமாகையால் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டுச் சுட்டுக்கொல்லப்படுகிறார்.அவசரகால எதிர்ப்பு வசனம் ஏதுமே இல்லாமல் இத்தனை அற்புதமான அன்பான ஓர் ஆசிரியரை அவரநிலக்காலம் கொன்றுவிட்டதை மட்டும் காட்டுவதன் மூலம் மௌனமாக ஓர் எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

மூன்றாவது பிரார்த்தனை கதையில் கும்பகோணம் மகாமகத்துக்குப் போகும் பெரியவர் முருகபூபதிப் பத்தர் அன்றைக்கு முதலமைச்சர் அம்மாவும் வந்து நீராடியதால் ஏற்பட்ட நெரிசலில் மிதிபட்டுக் குளத்தில் செத்து மிதக்கிறார்.அவர் சாவதற்கு முன்னால் குளத்தில் மூழ்கி எழுந்து  மூன்று பிரார்த்தனைகளை ஆண்டவனிடம் வைக்கிறார்.ஒன்று அவருக்கு ஒரு பேரன் பிறக்க வேணும்.இரண்டாவது அவர் மகனுக்கு வேலை மாறுதல் கிடைக்க வேண்டும்.மூன்றாவது பிரார்த்தனை நல்ல மழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். மூன்றாவது பிராத்தனை என்று தலைப்பு வைத்து நம் கவனத்தை இப்படி ஒரு அரசியல் தலைவர் குளத்தில் குளிக்க வந்து மக்களைச் சாகடித்தால் அவரது மூன்றாவது பிரார்த்தனை எப்படி நிறைவேறும் என்று சொல்லாமல் சொல்கிறார்.1992 பிரவரி மாதம் 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா அம்ம்மையாரும் சின்னம்மா சசிகலா அவர்களும் மகாமகக்குளத்தில் குளிக்கப்போய்,50 பேர் இறந்து 74 பேர் படுகாயமடைந்து தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த அந்தத் துயரத்தை கதையில் கொண்டுபோய் சேர்த்து முடிக்கிறார்.

இப்படி ஓரிரு கதைகள் சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைத் தொட்டுப் பேசியுள்ளன.

காவல் தெய்வங்கள் ...

ஒன்பது

நாமறிந்தவரைக்கும் பகுத்தறிவாளரான சா.க.அவர்களின் சில கதைகள் அறிய முடியாப் புதிர்களைப் பேசுகின்றன.உதரணமாக ‘அறிந்தும் அறியாதது’ கதையில் வரும் கொக்குச் சாமியின் மகிமைகள்.

ஜாதகம்,சோதிடம் பார்ப்பது தவறில்லை என்று வாதிடுவதாக ஒரு கதையில் வருகிறது.அதை அப்படியே ஏற்க முடியாவிட்டாலும், கேட்க சுவாரசியமாக இருக்கிறது.அப்பகுதி:

                                                                                                                                                                                                                                                                          ”காட்டில் புலி வந்தால், அது முதலில் சிங்கவால் குரங்குகளுக்கும் பறவைகளுக்குந்தான் தெரியுமாம். பறவைகள் பயந்து போய் அலறி துடித்துக் கொண்டு விநோதமாகப் பறந்து போகுமாம். சிங்கவால் குரங்குகள் கத்திக்கொண்டு மரத்திற்கு மரம் தாவி போகுமாம். அதைப் பார்த்துவிட்டு மற்ற பறவைகளும், விலங்குகளும் ஆபத்து வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பான இடத்தைத் தேடி போகுமாம். பறவைகளுக்கும், சிங்கவால் குரங்குகளுக்கும் இந்த அறிவு எப்படி வந்தது. எதற்காக அவை இப்படி விநோதமாக சப்தமிட்டு பறவைகளையும், விலங்குகளையும் எச்சரிக்க வேண்டும். யோசிக்க யோசிக்க ஆச்சரியமாக இருக்கிறது. அதில் இருந்துதான் சோதிடம், ஜாதகம் எல்லாம் வந்திருக்க வேண்டும். தெரியாததில் இருந்து தெரிந்து கொள்வது?

நேற்று வரையில் இல்லாததை இன்னொரு விஞ்ஞானி கண்டு சொன்னால் ஏற்றுகொள்ள வேண்டியிருக்கிறது. அது மாதிரிதான் சோதிடம், கைரேகை, ஜாதகம் எல்லாம். அவையெல்லாம் விஞ்ஞானம் இல்லை. தர்க்கரீதியில் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால் மனசுக்கு தர்க்கம் எல்லாம் தேவையில்லை. ஆறுதலும் சாந்தியும் தேவைப்படுகிறது. அதைத் தரும் விஷயத்தைப் பற்றி தர்க்கம் செய்வது இல்லை. அதுதான் உண்மை . சூரியன் சந்திரனுக்குக் கீழே எல்லா நாள்களும் நல்ல நாள்தான் என்று சொல்கிற பெரிய ஜனநாயகவாதி என்றுதான் சொல்ல வேண்டும் ஏனெனில் எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றை மறுபடியும் மறுபடியும் எடுத்து சொல்லவேண்டும். மனசுக்கு ஆதரவானது எதுவோ அதுவே ஜெயிக்கும். அதில் கெட்ட அம்சம் ரொம்ப குறைவு. ஆனால் கெட்டதே இல்லை என்பது இல்லை. நல்லது உண்டு என்பது மாதிரி கெட்டதும் உண்டு.

அப்படித்தான் சோதிடம், ஜாதகம். நான் ரொம்ப நம்புவதில்லை. ஆனால் நம்பாமலும் இருப்பதில்லை. அதற்கு காரணம், சோதிடம், ஜாதகம் எல்லாம் பெரிய தீமை இல்லை நம்பிக்கை கொடுக்கிறது. நாளைக்கு உனக்கு நல்ல காலம்; கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு உள்ளது என்று சொல்கிறது. வாழ்க்கையே எதிர்காலந்தான். நம்பிக்கை வைக்கத் தூண்டும் ஒன்று எப்படி கெட்டதாகும்.(’ஞானி’ கதையில்)

பத்து

அவர் கதைகளை எழுதிச்சென்றாலும் ,ஏதோ ஒரு சொல்கதை மரபை பின்பற்றியே எழுதுவதாகப் பல கதைகள் கட்சியளிக்கின்றன.கதைகளுக்கு இடையிடையே வரும் கீழ்க்கண்ட வரிகள் அவர் கதையைச் “சொல்கிறார்” என்கிற உணர்வைத் தந்து விடுகின்றன.எழுத்து மரபுக்கும் பேச்சு மரபுக்குமிடையில் ஒரு பாலத்தை –கி.ராஜநாராயணன் ஒரு வழியில் என்றால்-சா.க.அவர் வழியில் கட்டமைப்பதாகத் தோன்றுகிறது:

“”திருவானைக்காவல் சென்றதைச் சொல்ல வந்த நான் வேறு என்னவோ சொல்கிறேன்” (சிங்கப்பூர் சினேகிதன்)

“விளையாட்டைப்பற்றிச் சொல்ல வந்த நான் வேற ஏதோ ஒன்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.எனக்கு எப்பொழுதும் ரயில் மாதிரி ஒரே தடத்தில்  போக முடியாது.”

அவர் கதைகளை முற்போக்கு-பிற்போக்கு என்று வகைப்படுத்த முடியாதபடிக்குத் தன்போக்கில் எழுதிச்செல்பவர் என்று வகைப்படுத்தலாம்.

சிறுகதை என்று எழுதப்படுகின்ற வாழ்க்கை புரிவது மாதிரிநிஜத்தில் இருக்கும் வாழ்க்கை புரிபடாமல் இருக்கிறது என்பது இலக்கியச் சரித்திரமாக இருக்கிறது. இத்தனைக் காலமாகஎத்தனையோ மகாகவிகளும் பேரறிஞர்கள் எழுதியதும்சொன்னதையும்விட வாழ்க்கை என்பது அறியவொண்ணாததாகவும்அறிந்து கொள்ள ஆவலைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இடம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும்போதுமனிதன் என்பதின் மகத்துவம் தெரிகிறது.”

(சாந்தகுமாரி தொகுப்பின் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையில் சா.கந்தசாமி-1999இல்)

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.  

2 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்”
  1. மனதிற்கு நெருக்கமாக மன‌நேர்மையுடன் எழுதியிருக்கிறார் இக்கட்டுரையின் ஆசிரியர். சா.க வின் தொடல்களும் கதைப்போக்குகளும் குறித்து அவரது உளவியலில் இருந்து தொட முயற்சிக்கும் இக்கட்டுரையின் பாங்கு சா.க விற்கு பெருமையையும் அவரது எழுத்து குறித்த வலிமையையும் முன்வைக்கிறது. உதாரணமாக..
    “ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை நதியிலிருந்து ஒரு குவளை நீரை ஒரு சிறுகதையாக நமக்குத் தருகிறார். அதே நேரத்தில்,அதோ அங்கே ஓடிக்கொண்டிருக்கிற நதியிலிருந்து முகர்ந்து வந்த நீர்தான் இது என்பதையும் இதைக் கோரி வந்த பின்பும் நதி அதே போலவே ஓடிக்கொண்டிருக்கிறது பாருங்கள் என்பதையும் நமக்கு உணர்த்தும் விதமாகவும் சா.க.வின் சிறுகதைகள் நகர்கின்றன.” என்கிற இந்த வரிகள் எவ்வளவு தூரம் உண்மையை உரக்கச் சொல்லி விட்டுச் செல்கிறது என்ற வியப்பினை ஏற்படுத்துகிறது.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *