நூல் அறிமுகம்: கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ் (தமிழில்: மு.சிவலிங்கம்) | சுபாஷ் சந்திர போஸ். சுசமீபத்தில் கேரள அரசாங்கம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிகபட்ச  தூக்கு எடையாக 55கிலோவை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. ஒரு தனி மனிதன் எவ்வளவு பாரத்தை தூக்கினால் என்ன? எவ்வளவு தூக்குகிறாரோ அவ்வளவு கூலி!? அப்படித்தானே தற்போதைய முதலாளித்துவ சமூகம் கற்பிக்கிறது. ஆனால் , முரணாக கம்யூனிசம் தனிமனிதனின் சுமையை சமூகத்தின் தலைக்கு மாற்றுகிறது. தனிமனித வாழ்வாதாரம் என்பது சமூக கூட்டுப்பொறுப்பு என்று சொல்கிறது.
Buy The Principles of Communism Book Online at Low Prices in India | The Principles of Communism Reviews & Ratings - Amazon.in
ஜனநாயகத்தின் தேவை.. 
இதைத்தான் சரியாக 173 வருடங்களுக்கு முன்பாக பிரெட்ரிக் எங்கெல்ஸ் தன்னுடைய கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற வரைவில் “தனியார் சொத்துடைமைக்கு எதிராக குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக ஜனநாயகத்தை பயன்படுத்தவேண்டும்” என்று குறிப்பிட்டிருப்பார். அதே போல்தான் கேரளாவில் இடதுசாரி அரசு தேர்தல் ஜனநாயகத்தை பயன்படுத்தி வென்று மக்கள் நல திட்டங்களை, பாட்டாளிகளுக்கான உரிமைகளை மேம்படுத்தி வருகிறது.
 கம்யூனிசம் என்றால் என்ன? தொடங்கி சமகால கட்சிகள்(1847) வரை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட இந்த வரைவு தான் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸால் 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வெளியிடப்பட்ட பாட்டாளி வர்க்க விடுதலை சாசனம் “கம்யூனிஸ்ட்  கட்சி அறிக்கையின்” அச்சாணி ஆகும்.
வரலாற்று பாத்திரம்.. 
தொழிற்புரட்சி மூலம் வரலாற்றில் ஒரு புரட்சிகர பாத்திரத்தை வகித்து தனக்கு முந்தைய சமூகங்களான நிலப்பிரபுத்துவ உடைமை சமூகங்களை நீர்த்துப் போகச் செய்து முதலாளித்துவம் என்ற “பேய் குழந்தை” எப்படி பிறந்தது என்றும் அதனை தொடர்ந்தவாறே முதலாளித்துவம் என்னும் மனிதகுலத்தின் சாபத்தை துடைத்தெறிய பிறந்த “பாட்டாளி வர்க்கம்” எனும் பேராயுதத்தையும், அது நடத்தப் போகும் நீண்ட நெடிய போராட்டத்தையும், அதன் உச்சகட்ட இலக்கையும் வரலாற்றின் வழிநின்று பொருள்முதல்வாத , இயக்கவியல் கண்ணோட்டங்களோடு “கம்யூனிச கோட்பாடுகள்” என்ற வரைவாக எங்கல்ஸ் படைத்திருக்கிறார். இதில் இருக்கக்கூடிய பகுதிகளே ஐந்து அத்தியாயங்களாக “முதலாளிகளும்-பாட்டாளிகளும்” , “பாட்டாளிகளும்-கம்யூனிஸ்டுகளும்” , “சோசலிச இலக்கியமும்-கம்யூனிச இலக்கியமும்” , “தற்கால கட்சிகள் குறித்தான பார்வை” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையாக 1848இல் வெளியானது.


எங்கல்ஸின் தொலைநோக்கு பார்வை.. 
குறிப்பாக “இடதுதிரிபு” ஏற்பட்டு  பல்வேறு அதிதீவிர குழுக்களாக பிரிந்து வெகுமக்களை விட்டு தொடர்பறுந்து பல கம்யூனிஸ்டுகள் கிடப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் பெரும்பான்மையாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் எங்கல்ஸ் அவசரத் தேவையாக “இருக்கின்ற ஜனநாயகத்தைக் கொண்டு பாட்டாளி வர்க்க நலன்களை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் அதன் வழி நின்று எவ்வாறு சோசலிச அரசை நிர்மாணிக்க வேண்டும் அது எவ்வாறு கம்யூனிச சமூகத்திற்கு நம்மை கைப்பிடித்து செல்லும்” என்றெல்லாம் விளக்கியுள்ளார்.அது நிகழ்கால அரசியல் சூழலுக்கும் சால பொருந்துவதாக உள்ளது. குறிப்பாக இன்று வெகு பரபரப்பாக பேசப்படும் தேசிய இன அரசியல் மற்றும் மதம் குறித்தான கம்யூனிச பார்வையையும் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கை போன்ற சனாதான கல்விமுறையை திணிக்க முயற்சிக்கும் இதேவேளையில் கல்வியில் ஏற்பட வேண்டிய நெகிழ்வுத்தன்மை , பல்முனை பார்வையும் , அறிவும் குறித்து 173 ஆண்டுகட்கு முன்பே எங்கல்ஸ் கூறியிருப்பது அவர்கள் வரலாற்றை எந்த அளவுக்கு கற்றறிந்து சமகாலத்தை ஆராய்ச்சிக்குட்படுத்தி  எதிர்காலத்திற்கான முன்முடிவுகளை பெற்றிருக்கிறார்கள் என்பது நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
The Principles of Communism: Graphyco Annotated Edition: Engels, Friedrich, Editions, Graphyco: 9798626989175: Amazon.com: Books
மார்க்ஸின் மெய்மொழி.. 
மார்க்ஸ் சொன்னது போல் “நாங்கள் எழுதுவதெல்லாம் எங்கள் கற்பனைகளில் அல்லது வெறும் எங்கள் மூளைகளில் உதித்தவையல்ல! இதுவரை எழுதப்பட்ட, கூறப்பட்ட அனைத்து அறிவு வளங்களையும் உள்வாங்கி வரலாற்று ரீதியாக , பொருள்முதல்வாத இயக்கவியல் கண்ணோட்டத்தோடு , அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எங்கள் சொந்த ஆய்வு முடிவுகளையும் முன்வைத்து உருவாக்கப்பட்டவை என்பது உண்மையாகிறது. கம்யூனிசத்தின் அடியும் முடியும் அறிய முற்படுவோருக்கு சிறந்த அறிமுகமாக இந்த வரைவு விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சுபாஷ் சந்திர போஸ். சு
மாவட்ட தலைவர் 
இந்திய மாணவர் சங்கம் 
தென்சென்னை.