ஆழமான மத நம்பிக்கை உள்ள நமது இந்திய சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையோடு உள்ள அணுகுமுறை பற்றிய விவாதம் எப்போதாவதுதான் நடைபெறுகிறது. பகுத்தறிவை காட்டிலும் நம்பிக்கையைக் தான் நாம் நம்புகிறோம்.  ரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில் உள்ள குறைகளை அலசுவதை விட அறிக்கையின் தயாரிப்பின் முதல் சடங்காக கிண்டப்படும் அல்வா பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகத்துறை; இராணுவப் போர் விமானங்களுக்குக் கூட சிறிய எலுமிச்சை கட்டி தொங்கவிடும் வினோதம் நாம் நம்பிக்கையை பொதுவெளியில் வெளிக் காட்டிக் கொள்வதற்கும் தயங்குவதில்லை என்பதற்கான சில உதாரணங்ககளாக சுட்டிக்காட்டலாம்

இவைகளை நம் மனதில் மிதக்கும் நினைவுகளாக கடந்து விடுகிறோம்.   நம் ஒவ்வொருவரில் தங்கி விடும் நம்பிக்கை என்பது நாம் வளரும் சூழல் கட்டமைக்கும் பிடிமானம் என்பதால் இந்தக் கட்டுரை நம்பிக்கை குறித்த வெறுமனே விமர்சனம் அல்ல.  குறிப்பிட்ட சூழலில் நாம் எடுக்கின்ற முடிவுகளும் நாம் ஆற்றும் எதிர்வினைகளும் நாம் இதுவரையில் அடைந்துள்ள வளர்ச்சியின் வெளிப்பாடே மேலும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ள தடத்தின் மீதான நமது பயணமும் கூட.  தீர ஆராயாமல் அவசர கதியான அறிவியல் பூர்வமற்ற முடிவுகள் எத்தகைய அபத்தமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான் தற்போதைய நெருக்கடியான சூழலில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மத நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையில் நீண்ட காலமாக தொடரும் விவாதம் தற்போதைய நெருக்கடியில் நாம் பின்பற்றும் அணுகுமுறையால் மீண்டும் கவனம் பெறுகிறது.  எத்தகைய நெருக்கடியிலும் கலாச்சார தளத்தில் தனது அரசியல் விரிவாக்க திட்டத்தை முன்னெடுக்க துடிக்கும் பா.ஜா.க ஆள்வதால், பயம், மூடநம்பிக்கை, பொய்யான கலாச்சார பெருமிதம் ஆகிய குழப்பமான சிந்தனைகளோடு இந்த நெருக்கடியை எதிர்கொள்கிறோம். 

பார்ப்பன இந்து மதம் | வினவு

இந்தக் கொரோனா தொற்று காலத்தில் நோய் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடித்து விட்டதாக பாபா ராம்தேவ் அறிவித்தது, பின்வாங்கியது  உட்பட பகுத்தறிவற்ற பல அபத்தங்கள் அரங்கேறி வந்துள்ளன.  இந்தியத் தெருக்களில் கொரோனாவிற்கு எதிராக நடைபெற்ற பஜனைகள், கோ மூத்திரத்தை மருந்து என சொல்லி அருந்திய கொடுமை,  குடியிருப்புகளின் மேலிருந்து பாத்திரங்களில் ஓசை எழுப்புவதையும் அரசாங்கமே ஊக்குவித்த காட்சி அபத்தங்களின் உச்சம்.

இதனை தொடர்ந்து கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்களுக்கு “தீபம்” ஏற்றி ஊக்கம் அளித்திட நாட்டின் பிரதமர் அவர்களே அறைகூவல் விடுத்தார்.  தீபம் ஏற்றுவதும், ‘ஜனதா பொது முடக்கம்’ ஆகியவை கொரோனாவிற்கு எதிரான கள வீரர்களின் தியாகத்திற்கு இந்த சமூகத்தின் நன்றிக்கடனாக சொல்லப்பட்டாலும் இந்நிகழ்ச்சிகளோடு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட விசயங்கள் பிற்போக்கான சிந்தனைகள் எந்தளவு நமது சமூகத்தில் வேரூன்றியுள்ளது என்பதை நினைவூட்டியது.  

தங்களது விருப்பமான தலைவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அறிவியல் பூர்வமான விளக்கங்களை கற்பித்து வாட்ஸ் அப் செயலியில் நடுத்தரவர்க்கம் வேகமாக செய்திகளை பரப்பியது சமீபத்திய காலத்தில் மிகப்பெரிய போலி அறிவியல் நிகழ்வாகும்.  அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்கான மக்களுக்கான பொது முடக்கம் ஒன்றே 98 விழுக்காடு வைரஸ் பரவுவதை தடுத்து விடும் என்ற செய்தியுடன் தொடங்கியது போலி அறிவியல் பிரகடனங்கள்.

பாத்திரங்களை ஒன்றோடு ஒன்று பலமாக மோது வதில் ஒலி அலைகள் வெளிப்படுவதாலும் தீபங்கள் ஏற்றுவதனாலும் வைரஸ் பரவல் செயலிழக்கும் என்றெல்லாம் கதைகள் கட்டி இப்படியெல்லாம் செய்யப்பட்டதிலும் பலன்கள் ஒளிந்திருப்பதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டது.  அறிவியல் சார்ந்த சில வார்த்தைகளை பேசுவதாலேயே  பெரும்பான்மை மக்களின் மதிப்பை கவர்ந்து தங்கள் தலைவரின் அறிவியல் ஆற்றலை நம்ப வைத்து விடுகிறார்கள்.   போலி அறிவியல் பரப்புவதில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்வதற்கு சில பிரபல பிரபலங்களும் துணை புரிகிறார்கள்.

ஆண்டுதோறும் பல்லாயிரம் அறிவியல் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதில் பெருமை கொள்கிறோம்.  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் சிறப்பான  இடத்தையும் வகிக்கின்றன. அறிவியல் படிப்பிலும், அதன் பரவலிலும் பெருமைப்பட்டு கொள்ளும் இந்திய சமூகம் பகுத்தறிவுள்ள யாரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய போலி அறிவியலை படித்த பட்டதாரிகள் ஆதரிப்பதன் முரணை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது ?  இந்திய நடுத்தர வர்க்கத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள சிக்கலான உறவை பரிசீலித்தால் இதற்கான சில காரணங்களை கண்டறியலாம்.  

பொறியியல் தன்னிறைவுடனான  மாபெரும் உற்பத்தி சக்தியாக இந்திய தேசம் உருவெடுக்க வேண்டும் என்கிற பண்டித நேரு அவர்களின் கொள்கையிலிருந்தும் பொறியியல் மற்றும் அறிவியல் படிப்பு வழங்கிய பொருளாதார பாதுகாப்பிலிருந்தும் இந்த சிக்கலான உறவு  துவங்குகிறது. 

தேர்வுக்குத் தயாரா? - கைகொடுக்கும் ...

இந்திய அனுபவத்தில் பொறியில் உட்பட இந்த நான்கு பிரிவுகளில் பட்டம் பெறுவது என்பது சமூக அந்தஸ்தை பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக மாறியது.  அதனோடு பொறியியல் படிப்பு என்பது வெறுமெனே தனிநபரின் பொருளாதார தேவையை நிறைவேற்றுவதற்கான சுயநலத்தோடு சுருங்கிவிட்டது.

அறிவியல் கல்வி என்பது வாழ்க்கையில் நல்ல ஊதியம் ஈட்டும் பணி கிடைத்திடுவதற்கு மனப்பாடம் செய்யப்படவேண்டிய கட்டாய பாடத்திட்டமாக மாறிவிட்டது.

இந்திய கல்வி நிலையங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ ஆகிய நான்கு பாடப் பிரிவுகளிலும்,  குறிப்பாக பொறியியல் பிரிவில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் உள்ள செயல்முறைக்கு கவனம் கொடுத்து மாணவர்களை ஊக்குவிக்காமல் கண்டறியப்பட்டுள்ள விடைகளை பிரதானப்படுத்தி கற்பிக்கப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய அணில் போக்கில் என்பவர் முன்வைக்கும் வாதம் நமது கல்வி முறையில் செயல்முறையை காட்டிலும் இறுதி தீர்வுக்கு அளிக்கப்படும் முக்கியத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு.  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சூத்திரதாரியாக பெருமிதம் கொள்ளும் அவர் இந்திய சமூகத்தை உடைந்து ஒழுகிக் கொண்டிருக்கும் குழாய்களை போலவும், உடைப்புகள் பழுது பார்ப்பதால் பொருளாதார சிக்கல்களுக்கான தீர்வுகள் கிடைத்துவிடும் என சித்தரிக்கிறார்.

அத்தகைய அணுகுமுறை நமது பொருளாதாரம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கலான வலைப்பின்னல்களையும், பாதிக்கப்படுபவர்களின் நலன்களையும் பிரதிபலிக்கவில்லை.  பதினாறு வருடங்கள் அறிவியல் பாடங்கள் படித்த பின்பும் கூட குறிப்பிட்ட அறிவியல் தகவல்கள் பாடத்தில் ஏன் இடம்பெற்றன என்றோ சமூகம் எதிர் கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ளவோ நம்மால் முடிவதில்லை.

வரலாற்றில் அறிவியலும் சமூக அறிவியலும் நிகழ்த்தியுள்ள வளர்ச்சியை பற்றிய புரிதல் தேவையில்லை என்பது மட்டுமல்ல பொருளாதார தேவைகளுக்கு அறிவியல் கல்வியை பயன்படுத்துவதில் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.  

அறிவியல் பாடத் திட்டம் நமக்கு செயல்முறையை கற்பிக்கத் தவறுவதும் மேலும் அறிவியல் படிப்பு வாழ்வாதாரத்திற்கான ஏணியாக மட்டுமுள்ள நிலைமையால்  உரக்க எழுப்பப்படும் அறிவியல் வார்த்தைகள் கலந்த முரணான வாதங்களில் சராசரி இந்திய பொறியாளர் மயங்கி விடுகின்றனர்.  ஆகையால்தான் ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் விளக்கங்களுக்கு பொறியியல் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கின்றது.  மதப் பிரசங்கங்களில் அறிவியல் சாயம் கலந்து போதிப்பதில் மதகுருமார்கள்  விற்பன்னர்கள்.

சமூகத்தில் நிலவும் ஆழமான மத நம்பிக்கையும் அணைத்து மதங்களிலும் நம்பிக்கை பிரதானமாக கருடப்படுவதும் தான் இந்த பிரச்சினைக்கு இரண்டாவது பெரிய காரணம்.  போதாமைகளை கடந்து தர்க்கங்களை எதிர் கொண்டு கேள்விகளை அனுமதித்து நவீன அறிவியல் முன்னேறியுள்ளது.  மத நம்பிக்கை போலல்லாமல் அறிவியலின் சிறப்பு கேள்விகளை எழுப்புவதில் உள்ளது.  கேள்வி எழுப்புவதை இயல்பாக கருதாத ஏராளமான அறிவியல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ள முரணான சூழல் இங்கு உள்ளது.  இந்து மத புத்தகங்கள் விவரிக்கும் ஏராளமான தர்க்க விவாதங்களை இதற்கு பதிலாக மேற்கோள் காட்டுவார்கள்.

அறிவியல் கேள்வி எழுப்புவதை அனுமதிக்கின்றது, புதிதாக கண்டறியப்பட்டுள்ளதன் அடிப்படையில் மறு மதிப்பீடுகளை அனுமதிக்கின்றது.  ஆனால் மத புத்தகங்களில் உள்ளவற்றை வெவ்வேறு விதமாக விளக்குவது மட்டுமே சாத்தியம்.  நிகழ்த்தி விட்டதாக நாம் பெருமிதம் கொள்ளும் சில விசயங்களை நவீன அறிவியல் சோதித்துப் பார்க்க அனுமதிக்காமலும் அதே சமயம் அவ் விசயங்களுக்கு அறிவியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

வேதகால அறிவியல், விமானங்கள் பறந்ததாக கூற்று, பண்டைய மருத்துவ முறையின் மகிமை போன்று கடந்த ஆறு ஆண்டுகளில் பண்டைய கால இந்தியாவின் அறிவியல் சாதனைகளாக முன்வைக்கப்படுபவை முற்றிலும் பொருத்தமற்றவை.  இந்திய மத்தியதர வர்க்கம் மேற்கத்திய பாணியில் அறிவியல் பட்டங்களை முடித்துவிட்டு சமகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை புராணகால அறிவியல் சாகச வரலாற்றில் தேடிக்கொண்டிருப்பது முரண்பாட்டின் உச்சம்.

இராவணனின் புஷ்பக விமானத்தை தேடும் ...

உலகளவில்  அதிகமான அறிவியல் பட்டதாரிகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றான நாம் இந்த வரட்டு வாதங்களை அறிவியல் பூர்வமாக ஏன் எதிர்கொள்ள மறுக்கிறோம்?  அறிவியல் பூர்வமான ஒரு விஷயத்திற்கான அடிப்படையை புரிந்து வைத்திருக்கிறோமா? நம் முன் நிறுத்தப்படும் பல விசயங்களுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை வெறும் நம்பிக்கைதான் முன்னிறுத்தப்படுகிறது.

இந்திய மற்றும் மேற்கத்திய அறிவியல் துறைகளுக்கு இடையிலான போராட்டமாக இதை சித்தரிப்பது மிக பெரிய கொடுமை.  தீர்வுகள் மட்டுமல்லாமல் செயல்முறைக்கு, சோதனைகளுக்கு அறிவியல் மரபில் கொடுக்கப்படும் கவனம் நுட்பமான அடிப்படையாகக் கருதப்படுவதை நாம் ஏற்காதது தான்  இந்த நிலைமைக்கான காரணம்.  ஒரு விஞ்ஞானிக்கு தோன்றிட்ட சிந்தனைக் கீற்றாக இருந்தாலும், பழம்பெரும் கல்வெட்டுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சூத்திரங்களாக இருந்தாலும், புராதன கண்டுபிடிப்புக்களானாலும்,  முன்வைக்கப்படும் அறிவியல் உரிமம் ஒவ்வொன்றும் அடிப்படையான அறிவியல் சோதனைக்கு உட்பட்டவையாக இருந்திட வேண்டும்.

எந்த ஒரு விசயமும் அறிவியல் சார்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்வது செயல் முறையும் சோதனையும் தான்.  இந்தப் போராட்டம் இந்திய மற்றும் மேற்கத்திய அறிவியல் துறைகளுக்கு இடையில் ஆனதல்ல. மாறாக உண்மையான அறிவியல் கோட்பாட்டிற்கும் பொய்யான வாதங்களுக்கும் இடையே நடைபெறுகின்ற போராட்டத்தை குறிப்பதாகும்.  

வைரஸ் தொற்றுக்கு மருந்தான “கொரோலின்” பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது பாபா ராம்தேவ் அவர்கள் “மருத்துவ ஆராய்ச்சி ஏன் ஒரு சிலரின் பிடியில் மட்டுமே இருந்திட வேண்டும்?” என பதில் கேள்வி எழுப்புகிறார்.  “ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ முறைகள் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது ? நமது பாரம்பரிய முறையான ஆயுர்வேதத்தின் நோய் எதிர்ப்பாற்றலை நோயை குணப்படுத்தும் ஆற்றலை மக்கள் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.”

பாபா ராம்தேவ் அவர்களின் வாதம் இருபெரும் கலாச்சாரங்களில் மோதலாக, அதிகாரம் படைத்தவருக்கும் இல்லாதவருக்குமான போராட்டமாக,  சராசரி இந்தியனின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக இருந்தாலும் எழுப்பப்படும் அறிவியல் பூர்வமான வினாக்களுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை. ராம்தேவ் அவர்கள் காவியுடை தரித்தவர் என்பதாலோ அல்லது கொரோனில் மருந்து ஆயுர்வேதம் என்பதாலோ விமர்சனங்கள் எழவில்லை.  அடிப்படையில் வைரஸ் நோய்த்தொற்றை எதிர்த்த மருத்துவ குணங்கள் உள்ளதாக சோதனையில் வெற்றி பெற்றுள்ளதா என்பதுதான் கேள்வி.

நோய் தொற்று அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு  பதினான்கு நாட்கள் மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணமடைந்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் உரிமம் கோருகிறது.  கொரோனா நோய்த்தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்கள் மீதுதான் பதஞ்சலி சோதனை நடத்தியதா என்பதே நிச்சயம் இல்லை.  இவ்வளவு குளறுபடிகள் இருந்தும் நமது ஊடகங்கள் ராம்தேவ் அவர்கள் மீது செலுத்திய கவனத்தை அந்த மருந்தின் செயல் ஆற்றல் மீது செலுத்தவில்லை.

Asia Insurance Review > News > View NewsLetter Article

முறையான அறிவியல் விசயங்கள் அதன் பின்னாலுள்ள விஞ்ஞானிகளை கடந்து நிலைத்து நிற்கும்.  தெளிவற்ற சோதிக்கப்படாத அறிவியல் பிரகடனங்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களால் முன்மொழியப்பட்டாலும் மதிப்பு இழந்துவிடும்.

அறிவியல் முன்வைக்கும் ஆதாரபூர்வமான தர்க்கங்களை கலாச்சாரத்திற்கு எதிரான சதியாக மதம் சார்ந்த சமூகங்கள் எடுத்துக்கொள்கின்றன.  நமது நாட்டிலுள்ள மாற்று மருத்துவ முறைகளில் வினோதமான கூறுகள் உள்ளதாலும் நவீன அலோபதி மருத்துவ முறை போல செயல்முறை சோதனைகளுக்கு உட்படாமல் இருப்பதனாலும் அவை மீதான சந்தேகங்கள் தொடர்கின்றன.

சிகிச்சை முறை அல்லது மருந்து பலன் அளிப்பதாகவும், தொடர்ந்து உற்பத்திக்கு வாய்ப்புள்ளதாகவும் இருந்துவிட்டால் அதற்குப்பின் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பது முக்கியமில்லை.  மலேரியா, கேன்சர் போன்ற நோய்களுக்கு எதிரான மருந்துகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றன.  ஆனால் அவை தாவரங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வையாகும். ஆனால் அந்த மருந்துகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணம் அவைகளில் உள்ள மருத்துவ குணங்கள் அறிவியல் சோதனைகளில் சாதகமான முடிவுகளை தந்தது தான்.

இதேபோல பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனிலும் அத்தகைய நுட்பமான மருத்துவ அறிவியல் சோதனைகளை கடந்து வெற்றி பெற்றுவிட்டால் அறிவியல் வட்டாரம் அதனையும் ஏற்றுக்கொள்ளும்.  எப்படி பிரதம அமைச்சரை பற்றிய விமர்சனங்களை தேசத்துக்கு எதிரான அவதூறுகள் என மத்திய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் திரித்து கூறுகிறார்களோ அதைப்போல பதாஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை ராம்தேவ் அவர்கள் ஒரு யோகி என்பதோடு இணைத்துவிடுவதால் நவீன அறிவியலுக்கு துரோகம் இழைக்கின்றோம்.

இதையெல்லாம் கூறுவதால் கடந்த காலத்தில் பெயரோ முகமோ தெரியாத  தனிநபர்கள் செலுத்திய முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்க தவறியதையும் அல்லது அறிவியலின் போதாமையையும் நாம் மறுக்கவில்லை.  “பீப்பிள்ஸ் ஹிஸ்டரி ஆஃப் சயின்ஸ்” என்கிற தலைப்பில் கிளிப்போர்டு டி கானேர் என்பவர் குறிப்பிடுவது போல நவீன அறிவியலின் பல சாதனைகளுக்கு துணை புரிந்துள்ளவர்களில்  பலர் அவர்களது காலத்தில் அறிவியல் துறையின் அதிகார அடுக்குகளில் எங்கும் இடம்பெறவில்லை, பொறுப்புகள் வகிக்கவில்லை.

அறிவியல் என்பது அதன் செயல் வடிவத்தில் தனி நபரை குறிப்பதல்ல, அது ஒரு சிந்தனை மட்டுமே.  கணினி இயக்கத்திற்கு பின்னால் உள்ள மென்பொருள் எழுதுவதிலோ, கணிதத்தில் ஒரு தீர்வை எட்டுதலிலோ மட்டுமே அறிவியல் சுருங்கிவிடவில்லை.  அறிவியல் என்பது உலகம் முழுவதும் கணித சமன்பாடுகளை எக்காலத்திற்கும் மனிதர்கள் புரிந்து கொள்ள உதவும் அனுபவம் ஆகும்.

நடைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் நிறைந்து காணப்படுகின்ற சிக்கலான அறிவியல் கோட்பாடுகள் மனித குலம் முன்னெடுத்துச் செல்கின்ற அற்புதமான அறிவியல் தேடலை ஊக்குவிப்பதற்கு பதிலாக தடுக்கும் வேலையை செய்கிறது.  அறிவியல் கல்வி கற்காத ஒருவர் பகுத்தறிவாளராகவும் முறையாக கற்றவர் அறிவியலுக்குப் புறம்பான சிந்தனையையும் சுமக்கின்றனர்.  இப்பொழுது உள்ளது போல பத்து மடங்கு மேலும் அதிகமான பட்டதாரிகளை இந்தியா உருவாக்கிட முடியும்.

நாம் அறிவியல் உடனான அணுகுமுறையை திருத்தி அமைக்காவிட்டால் இப்பொழுது உள்ளது போல பத்து மடங்கு மேலும் அதிகமான அறிவியல் பட்டதாரிகளை இந்தியா உருவாக்கினாலும் இந்த முரணான நிலையில் மாற்றம் வராது.  கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நாம் தயாராகவில்லை என்றால் அறிவியல் சார்ந்த உயர்கல்வி படிப்புகள் வெறும் வாழ்வாதாரத்திற்கான படிக்கற்கள் ஆகவே தொடரும்.  

(தமிழ் மொழிபெயர்ப்பு நாராயணன் சேகர்)

 

One thought on “அறிவியலுடனான இந்திய நடுத்தர வர்கத்தின் சிக்கல்; கோவிட்-19 வைரஸ் அணுகுமுறை அதற்கான சான்று – திரு.ஸ்ரீவத்சவ ரங்கநாதன் (தமிழில் நாராயணன் சேகர்)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *