கி. மகாராஜபாரதி எழுதிய "நீர், நிலம், கல்வி: ஒடுக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சியும், தாமஸ் பூலோகப் பாண்டியனும் " கட்டுரை | Social Reformer Thomas B. Pandian | www.bookday.in

நீர், நிலம், கல்வி: ஒடுக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சியும், தாமஸ் பூலோகப் பாண்டியனும் – கி. மகாராஜபாரதி

நீர், நிலம், கல்வி: ஒடுக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சியும், தாமஸ் பூலோகப் பாண்டியனும்

– கி. மகாராஜபாரதி

ஐரோப்பிய காலனியாதிக்கம் மெட்ராஸ் நிலப்பரப்பில் காலூன்றி ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்திய முதல் தசாப்தத்தில், புதுப்பிக்கப்பட்ட 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் படி, இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் செலவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்து என்ற வார்த்தை மத ரீதியாக பயன்படுத்தப்படாத காலங்களில் மரபு வழி திண்ணைப் பள்ளிகளிலோ, குருகுலங்களிலோ பார்ப்பனர்களையும், நிலவுடைமையாளர்களான வெள்ளாளர்கள் தவிர்க்க ஏனைய சாதிகள் எதுவும் அனுமதிக்கப்படாத காலத்தில், காலனிய பொருளாதார அமைப்பைக் கட்டமைக்கவும், அதன் இருத்தியலை உறுதி செய்யவும் தாசில்தார் பள்ளிகளும், மாவட்ட தலைநகரங்களில் ஆங்கிலவழி பள்ளிகளும் உருவாக்கப்பட்டன. ஆனாலும், மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு சாதிகள் தவிர, மற்ற சாதியினர் எவருக்கும் இப்பள்ளியில் பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஏனெனில், காலங்காலமாக இருந்து வந்த மரபார்ந்த சமூக, பொருளாதார கட்டமைப்பைப் பாதுகாக்க வெறுமனே உற்பத்தி சக்திகளாகவே 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இருந்து வந்தார்கள்.

காலங்காலமாக செய்து வந்த தொழிலையே காலனிய காலத்திலும் பின் தொடர்ந்தனர். 1843 ஆம் ஆண்டு அடிமை ஒழிப்பு முறை சட்டமாக்கப்பட்டாலும் தொடர்ந்து நிலமற்ற விவசாயக் கூலிகளும், குத்தகை விவசாயிகளும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு சுரண்டப்பட்டார்கள். எண்ணிலடங்காத கொடுமைகளை அனுபவித்து வந்தார்கள். மேற்கண்ட பட்டயச் சட்டத்தின் படி இந்தியாவில் கிறித்தவ சமய பணிகளை விரிவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டது.

சமயப் பணிகளுடன் கல்வி, மருத்துவம் போன்ற துறைகளிலும் கிறித்தவ மிசனரிகள் கவனம் செலுத்தியதால், அடித்தட்டு மக்கள் பள்ளிக்கூடங்களை அணுகுவதற்கு உதவியதாக இருந்தது. இதுதான் பார்ப்பன-வெள்ளாள மற்றும் வசதி படைத்த இசுலாமியர்கள் தவிர்த்து, மற்ற சாதியினரின் அன்றைய யதார்த்தம்.

1870களுக்குப் பிந்தைய காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பஞ்சங்கள், விவசாயப் பணிகளில் இருந்து தங்களை விடுவித்து தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக செல்வதற்கு ஒரு வாய்ப்பை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. விவசாயப் பணிகளுக்கு தட்டுப்பாடு வருமோ என்றளவிற்கு அரசாங்க வட்டாரங்களில் விவாதம் ஏற்படும் அளவிற்கு பசி, பட்டினியால், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் புலம்பெயர்வு இருந்தது.

1891 ஆம் ஆண்டு, துயருற்றுக் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த ஐரோப்பிய மிசனரியான ரெவ். வில்லியம் காடி போன்றோர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் நோக்கத்துடன், அன்றைய மெட்ராஸ் மாகாண அரசாங்கத்தை அணுகினார்கள். அதே ஆண்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைச். திரமென்ஹீர் அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்தார். அதில் ஒன்று தான் பஞ்சமர்களுக்கு நிலம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அது தான் பஞ்சமி நிலங்கள் ஆகும்.

சீர்திருத்தம் (Reclamation), முன்னேற்றம் (Improvement) போன்ற ஐரோப்பிய கண்ணோட்டத்திலான சமூக மேம்பாடு செழித்தோங்கிய காலத்தில் இந்தியாவில், தமிழகத்தில் நிலம் மறுக்கப்பட்டவர்களாக, நல்ல குடிநீர் மறுக்கப்பட்டவர்களாக, கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் அன்றைக்கு இருந்து வந்தார்கள். திரமென்ஹீர் அரசாங்கத்தின் மாவட்ட ஆட்சியராக முன்வைத்த நிலப் பகிர்வோடு இணைந்து, சமூக, பொருளாதார அளவில் பின்தங்கிய அவர்களின் மேம்பாட்டிற்கு குடிநீர், நிலம், கல்வி என்ற தீர்வை முன் வைத்தவர் தான் ரெவ். தாமஸ் பூலோகப் பாண்டியன்.

காலனிய திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த 1863 ஆண்டு மணியாச்சி ஜமீன்தாரி குடும்பத்தில் பிறந்த தாமஸ் பூலோகப் பாண்டியன் 1889 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகரத்தில் சமயப் பணிகளுடன், கல்விப் பணியும் செய்து வந்தார். 1892 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண ஆளுநர் பெய்லி பாரோனுக்கு சமர்பித்த அறிக்கை மிக முக்கியமான ஒன்றாகும். அதன் தொடர்ச்சியாக, 1893 ஆம் ஆண்டு தன்னுடைய முழக்கமான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, குடிநீர் மற்றும் நிலப் பகிர்வு ஆகிய கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு, நிதி நல்கினார். துவக்கத்தில் சென்னை மாநகரத்தில் பள்ளிகள் துவக்கி செயல்பட்டாலும், நிதி நெருக்கடியால் பின்னடவைச் சந்தித்தார்.

இருந்தபோதும், தனது விடாமுயற்சியின் பலனாக 1899 ஆண்டு முதல் 1920 ஆண்டு வரை அன்றைய 150 மேற்பட்ட குடிநீர் கிணறுகளை அன்றைய சென்னை மாகாணத்தில், இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் துவங்கி திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லையான திருநெல்வேலி மாவட்டத்தின் பணகுடி வரை உள்ள நிலவெளியில் இவருடைய ஏற்பாட்டில் தோண்டப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த முயன்ற சமூக நல்லிணக்கத்தின் சாட்சியான தாமஸ் பூலோகப் பாண்டியன் தனது 56 வது வயதில் 1920 ஆண்டு ஜூன் 25 தேதி மறைந்தார்.

📚 எழுதியவர் : 

✍🏻 – கி. மகாராஜபாரதி
ஆய்வாளர்
பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்
பாண்டிச்சேரி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *