முதல் தலித் பெண் எழுத்து; ஒரு தலித் சிறுமியின் கலகம் – பிராஜ் ரஞ்சன் மணி (தமிழில் தேவிகாபுரம் சிவா)

 

முக்தாபாய் வயது 11
ஒரு தலித் சிறுமியின் கலகம்
புலேவின் பள்ளியில் படித்த ஒரு மாணவியின் கட்டுரை. (1855ல் தியானோதயா என்ற இதழில் வெளியானது.)

Mang Maharachya Dukhvisayi

கடவுள், என்னைப் போன்ற ஒரு தீண்டப்படாத சிறுமியின் இதயத்தை விலங்கினும் கீழாகக் கருதப்பட்ட மாங்குகள், மகர்கள் ஆகிய எம் மக்களின் வலியாலும் துன்பத்தாலும் நிரப்பியுள்ளார். நான் இந்தக் கட்டுரையை தைரியமாக எழுதத் துணிந்தேன். அதற்கான மனவலிமை எனக்கு இப்போது உள்ளது. நான் கடவுளை வேண்டிய கணத்தில் அனைத்து உயிர்களையும் படைத்திட்ட அந்த கடவுள்தான் இந்த மன வலிமையை எனக்கு அளித்தார். மாங்குகளையும், மகர்களையும் படைத்த கடவுள்தான் பார்ப்பனர்களையும் படைத்தார். அவர்தான் எழுதுவதற்கான அறிவையும் என்னுள் நிறைத்தார். என் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்க அவர் என்னை ஆசீர்வதிப்பார்.

எம்மை வெறுத்தும் தம்மை பெரிதும் உயர்ந்தவர்களாகவும் கருதிக் கொள்ளும் இந்தப் பார்ப்பன தீனிப்பண்டாரங்களின் வாதத்தை, வேதங்களின் அடிப்படையில் நாங்கள் மறுக்க முயன்றால், அவர்கள் வேதங்கள் தங்கள் சொந்த ராஜ்ஜியம் என்றும் தனிப்பட்ட சொத்து என்றும் கூறுகிறார்கள்.வேதம், பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றால், அந்த வேதம் எமக்கு இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். ஆகவே எமக்கு வேதமும் இல்லை- மதமும் இல்லை. வேதங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்றால் நாங்கள் வேதங்களுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டியதில்லை என்றாகிறது. (பார்ப்பனர்கள் சொல்வதுபோல்) நாங்கள் வேதத்தைப் பார்த்தாலே கொடும்பாவம் என்றால் அவைகளை பின்பற்றுவது கடைந்தெடுத்த மடத்தனம் ஆகாதா? முஸ்லீம்கள் அவர்களின் குரான் வழியில் வாழ்கிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களின் பைபிளைப் பின்பற்றுகிறார்கள். பார்ப்பனர்களுக்கு அவர்களுக்குச் சொந்தமான வேதம் உள்ளது.

165 years ago, first female Dalit writer wrote about the 'grief of ...

அவர்கள் எல்லோருக்கும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு மதம் இருக்கிறது அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள். எந்த மதமும் சொந்த மதமாக இல்லாத எங்களை விட அவர்கள் ஏதோ ஒருவகையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஓ கடவுளே! தயவு செய்து சொல் எங்கள் மதம் எது? இறைவா! உன் உண்மையான மதத்தை எமக்கு போதித்திடு! அப்போதுதான் நாங்கள் அதன்படி வாழ முடியும். ஒரு மனிதனை முன்னுரிமை பெற்றவனாகவும் மற்ற மனிதர்களை ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஆக்கும் மதத்தை இந்த பூமியில் இருந்து ஒழிப்போம். அப்படி (பாகுபாடு காட்டும்) ஒரு மதம் ஒரு போதும் நம் சிந்தனையில் நுழைந்திடாமல் தடுப்போம்! வறிய மாங்கு , மகர் சாதியினரான எங்களை எங்கள் சொந்த நிலத்தில் இருந்து அவர்கள் விரட்டியடித்தனர். அந்த நிலங்களை ஆக்கிரமித்து மாடமாளிகைகள் கட்டிக் கொண்டனர். அத்தோடு விடவில்லை. அவர்கள் மாங்குகளையும், மகர்களையும் ஈயச்செந்தூரம் கலந்த எண்ணெய்யைக் குடிக்கச் செய்தனர். எம்மக்களை அவர்களின் கட்டிடங்களின் கடைக்காலில் புதைத்தனர்.

அந்தவகையில் எம் ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக தமக்குச் சொந்தமான இடத்தில் இருந்து துடைத்தெரியப்பட்டனர். பார்ப்பனர்கள் எங்களை ரொம்பவும் தாழ்த்திவிட்டனர். அவர்கள் எங்களை பசுக்களை விடவும், எருமைகளை விடவும் கீழாகக் கருதுகின்றனர். பேஷ்வா பாஜிராவ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் எங்களை கழுதைகளைவிடக்கூட கீழாகக் கருதவில்லையா? நீங்கள் ஒரு நொண்டிக் கழுதையை அடியுங்கள், அதன் உரிமையாளன் உங்களை பதிலுக்குத் தாக்குவான். ஆனால் மகர்களையும், மாங்குகளையும் நசுக்குவதே வழக்கமாக இருந்தபோது அதை ஆட்சேபிக்க யார் அங்கே இருந்தனர்? பாஜிராவ் ஆட்சியின் கீழ் யாரேனும் ஒரு மாங்கோ அல்லது மகரோ உடற்பயிற்சி மைதானம் வழியே செல்ல நேர்ந்துவிட்டால் அவர்கள் அந்த மாங்கு அல்லது மகரின் தலையை வெட்டி, வெட்டிய வாளை மட்டையாடவும் வெட்டியத் தலையை பந்தாகவும் கொண்டு மைதானத்தில் மட்டைப்-பந்து விளையாடுவார்கள்.

Feminism in India on Twitter: "Today's #IndianWomenInHistory ...

அவர்களது வீடுகளைக் கடந்துபோனால் கூட நாங்கள் தண்டிக்கப்பட்டோம். அப்படிப்பட்ட நிலையில் கல்வி பெறுவது பற்றிய கேள்விதான் எங்கே? கற்றலுக்கான சுதந்திரம்தான் எங்கே? யாரவது ஒரு மாங்கோ, மகரோ கொஞ்சம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டால்- அந்த விஷயம் பாஜிராவ்க்கு தெரியவந்தால், ‘மாங்கு அல்லது மகர் கல்வி பெறுவது என்பது ஒரு பார்ப்பனனின் தொழிலை எடுத்து கொண்டதாக ஆகும்’ என பாஜிராவ் சொல்வான். “எவ்வளவு தைரியமிருந்தால் அவர்கள் கல்வி கற்பார்கள்? பார்ப்பனர்கள் தங்கள் அரசாங்க கடமைகளை இவர்களிடம் கொடுத்துவிட்டு இவர்களது சவரப்பெட்டியை எடுத்துக்கொள்ள வேண்டும்; விதவைகளுக்கு மொட்டை அடிக்கும் வேலை பார்க்க வேண்டும் என்று இந்தத் தீண்டப்படாதவர்கள்
எதிர்பார்கிறார்களா?” என்று அவன் கேட்பான். அப்படி கேட்டு விட்டு அவர்களை (மாங்குகளை, மகர்களை- மொ-ர்) தண்டிப்பான்.

இரண்டாவதாக, இந்தப் பார்ப்பனர்கள் எங்களை கல்வி பெறாமல் தடுப்பதோடு நிறைவடைந்துவிடுவார்ககளா என்ன? நிறைவடைய மாட்டார்கள். பாஜிராவ் காசிக்கு போய் அங்கேயே அற்பமான மரணத்தைத் தழுவினான். ஆனால், மாங்குகளுக்கு சற்றும் குறையாத தீண்டப்படாதவர்களான இங்குள்ள மகர்கள் மாங்குகளோடு ஒன்றுசேர்வதைத் தவிர்க்கின்றனர். அவர்கள் சில பார்ப்பன சம்பிரதாயங்களை கற்றுவிட்டு தம்மை மாங்குகளை விட உயர்ந்தவர்கள் என எண்ணுகின்றனர். அவர்களும் மாங்குகளின் நிழல்பட்டால்கூட தீட்டாகிவிடுவர்! தங்கள் உயர்வை பறைசாற்றிக் கொள்ள புனித ஆடை என ஒன்றைப் போட்டுக்கொண்டு ஜம்பமாக சுற்றிவருகிறார்கள் இந்தக் கல்நெஞ்சப் பார்ப்பனர்கள். இவர்கள் எங்களை தீண்டப்படாதவர்கள் என்று முத்திரை குத்திய காரணத்தால் நாங்கள் எந்த அளவுக்கு துயரப்படுகிறோம் என்பதைப் பார்த்தும் இரக்கத்தின் உறுத்தல் கூட இவர்களிடம் இல்லையே! அப்படி இல்லாதது பற்றி எப்போதேனும் இவர்கள் கவலைப்பட்டிருக்கிறார்களா? நாங்கள் தீண்டப்படாதவர்கள் என்பதால் ஒருவரும் எங்களுக்கு வேலை தருவதில்லை. வேலை இல்லை ஆகவே எங்களிடம் பணமும் இல்லை . நாங்கள் வாட்டிவதைக்கும் வறுமையைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.

ஓ படித்த பண்டிதர்களே! உங்கள் சாமியார் தந்திரத்தை சுருட்டி வையுங்கள்!. உள்ளீடு அற்ற உங்கள் அறிவு குறித்த பிதற்றல்களை நிறுத்துங்கள்! நான் என்ன சொல்கிறேன் என்று காதுகொடுத்துக் கேளுங்கள்! எங்கள் பெண்களுக்கு பிரசவம் நடக்கும்போது அவர்கள் தலைக்கு மேல் ஒரு கூரை கூட இருப்பதில்லை. மழையிலும் குளிரிலும் அவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள்! உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து தயவுசெய்து இதை புரிந்துகொள்ள முயலுங்கள். குழந்தையை பெற்றெடுக்கும்போது அவர்களுக்கு நோய் ஏதேனும் ஏற்பட்டால் மருந்துக்கோ மருத்துவருக்கோ பணத்துக்கு எங்கே போவார்கள்? அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் மனிதத்தன்மையுள்ள யாரேனும் எப்போதேனும் உங்களில் இருந்துள்ளீர்களா?

Social revolutionary, feminist and poetess Savitribai Phule ...

மாங்கு அல்லது மகர் குழந்தைகளுக்கு தங்கள் மீது பார்ப்பனச் சிறுவர்கள் கல்லெரிந்து கடுமையான காயத்திற்கு ஆளாக்கினாலும் அவர்கள் மீது ஒரு போதும் புகார் அளிக்கும் தைரியம் வருவதில்லை. அவர்கள் அமைதியாக அந்தத் துன்பத்தை அனுபவித்துக் -கொள்வர். ஏன் எனில் அடுத்த வேலை சோற்றுக்கு அந்த பார்ப்பன அக்ரகாரத்திற்கு போய்தான் கெஞ்சவேண்டும் என அவர்களுக்குத் தெரியும். அய்யோ! ஓ கடவுளே! என்ன துயரம் இது! இந்த அநீதி குறித்து நான் மேலும் எழுதினால் உடைந்து அழுதுவிடுவேன். இத்தகு ஒடுக்குமுறையால்தான், கருணையுள்ள கடவுள் இரக்கமுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை எங்களுக்கு வழங்கியுள்ளார். இந்த அரசாங்கத்தின் கீழ் எங்கள் வலிகள் எப்படி தணிக்கப்படும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

முற்காலத்தில், கோகலே, ஆப்தே, திரிம்காஜி, அந்தாலா, பன்சாரா, காலே, பேரி இன்னும்பலர் (அனைத்தும் பார்ப்பனர்களின் பின்னொட்டு சாதிப் பெயர்கள்)தங்கள் வீட்டில் எலிகளைக் கொன்று வீரம் காட்டுவதுபோல எந்த வித காரணகாரியமும் இல்லாமல் எங்களைக் கொன்றுவிட்டு வீரம் காட்டினர். அவர்கள் கர்ப்பிணிப்பெண்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இப்போது இது நின்றுவிட்டது. மகர்கள் மீதும் மாங்குகள் மீதும் வன்கொடுமையும் சித்ரவதையும் பேஷ்வாவின் ஆட்சிக்கால பூனேயில் சகஜமாக நடந்தது. அது இப்போது நின்றுவிட்டது. இப்போது கோட்டைகள், சத்திரங்கள் கட்டுவதற்கு கடைக்கால் போடும்போது நரபலி கொடுப்பது நின்றுவிட்டது. இப்போது யாரும் எங்களை உயிரோடு புதைக்க முடியாது. முன்பெல்லாம், எந்த ஒரு மகரோ, அல்லது மாங்கோ நல்ல ஆடை அணிந்தால், பார்ப்பனர்கள் மட்டுமே அது போல அணிய வேண்டும் என அவர்கள் கூறுவர்.

దస్త్రం:Jyothirao & savithri bai pule teaching.jpg ...

எங்களை நல்ல ஆடையில் பார்த்தால் முன்பெல்லாம் அத்தகு ஆடைகளை நாங்கள் திருடிவிட்டோம் என குற்றம்சாட்டுவர். தீண்டப்படாதவர்கள் உடல் முழுதும் ஆடை அணிந்தால் அவர்களது மதம் தீட்டுப்பட்டு ஆபத்துத்துக்கு உள்ளாகிவிடும். அப்படி ஆடை அணிந்தவர்களை மரத்தில் கட்டிப்போட்டு தண்டனை தருவார்கள். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில் யார் வேண்டுமானாலும் பணம் இருந்தால் ஆடை வாங்க முடியும்; அணிய முடியும். இதற்கு முன் உயர்சாதியினருக்கு எதிரான எந்த ஒரு தவறான செயலுக்கும் குற்றம்சாட்டப்பட்ட தீண்டப்படாதவரின் தலையை எடுத்துவிடுவர். இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது. அதிகமானவரி, சுரண்டல் வரி நின்றுவிட்டது. சில இடங்களில் தீண்டாமையைக் கடைபிடிப்பது நின்றுவிட்டது. விளையாட்டு மைதானங்களில் நடந்துவந்த கொலைகள் நின்றுவிட்டன. இன்று நாங்கள் கடைத்தெருவுக்கு கூட போக முடியும்.

பாகுபாடு இல்லாத பிரிட்டிஷ் ஆட்சியில் இது போன்ற பல விஷயங்கள் நடக்கின்றன. நான் மேலே எழுதியுள்ளவாறு ஒரு காலத்தில் எங்களை அழுக்கானவர்களாக நடத்திய பார்ப்பனர்கள் இன்று எங்களை எங்கள் துன்பங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என விரும்புகின்றனர் . இதை அறியும்போது எழுதும் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. எல்லாப் பார்ப்பனர்களும் இவ்வாறு இல்லை. சாத்தான்களால் ஆதிக்கம் செய்யப்படும் பார்ப்பனர்கள் முன்புபோலவே எங்களை தொடர்ந்து வெறுக்கின்றனர். எங்களை விடுவிக்க முயலுகின்ற பார்ப்பனர்களை குறிவைத்து அவர்களை சாதி விலக்கம் செய்கின்றனர். சில உயர்ந்த ஆத்மாக்கள் மகர்களுக்காகவும் மாங்குகளுக்காகவும் பள்ளிக்கூடங்களை தொடங்கியுள்ளனர். கருணைமிகு பிரிட்டிஷ் அரசால் இத்தகுப் பள்ளிக்கூடங்களுக்கு ஆதரவும் வழங்கப்படுகிறது.

Savitribai Phule | Velivada

ஓ, மகர்களே! மாங்குகளே! நீங்கள் வறியவர்கள் வாடியவர்கள். அறிவு எனும் மருந்து மட்டுமே உங்கள் நோய்களை குணப்படுத்தும்; காயங்களை ஆற்றும். அறிவு, உங்களை முரட்டு நம்பிக்கைகளில் இருந்தும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் விடுவிக்கும். நீங்கள் நீதியும் நிறையொழுக்கமும் உள்ளவர்களாக ஆவீர்கள். அறிவு உங்கள் மீதான சுரண்டலைத் தடுக்கும். உங்களை விலங்குகளைப்போல் நடத்தியவர்களுக்கு இனி அவ்வாறு நடத்த துணிவு இருக்காது. எனவே தயவுசெய்து கடுமையாக உழையுங்கள் படியுங்கள். கல்வி கற்றவர்களாகுங்கள்; நல்ல மனிதர்களாகுங்கள். ஆனால் இதற்கு என்னால் உத்தரவாதம் தரமுடியாது. எடுத்துக்காட்டாக, நன்றாக கல்வி கற்றவர்கள் கூட சில சமயம் நாம் ஆச்சரியப்படும் வகையில் படுமோசமான செயல்களைச் செய்வார்கள்!

மராத்தி மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்:
பிராஜ் ரஞ்சன் மணி
தமிழில் நன்றியுடன் : தேவிகாபுரம் சிவா
(Book: A Forgotten Liberator, The Life And Struggle Of Savitribai Phule)