நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்

நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். ஆனால் மனிதனுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதன் அவசியம் கருதி உலக நாடுகள் உணவுப் பாதுகாப்பு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக கருத தொடங்கியுள்ளன. இதனை இந்திய உணவுப் பாதுக்காப்பு பாதுகாப்புச் சட்டம் 2013 உறுதிபடுத்துகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் முன்னால் பொது இயக்குநர் ஜாக்கூஸ் டையோப் கூறியது போல “பசி என்பது ஒரு தருமப் பிரச்சனை அல்ல; இது ஒரு நீதிக்கான பிரச்சனை”. எனவே இதனை ஒரு மனித சமூகநீதிக்கான பிரச்சனையாக அணுகுவது அவசியம்.

ஒரு புறம், உலக அளவில் இந்தியா ஐந்தாவது பொருளாதார நாடாகவும், வாங்கும் சக் சமநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. மேலும் உலக அளவில் இந்தியா அரிசி, பால், மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது. அதே சமயம், மனித உடல் ஆரோக்கியத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதை உலக பசி குறியீட்டு எண் மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக பசி நிலையை அறிந்து கொள்ள உலக பசி குறியீட்டு எண் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. இதனை மதிப்பீடு செய்வதில் ஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் எடை, உடல் ஆரோக்கியம், உயரத்திற்கு ஏற்ப எடை, வயதிற்கு ஏற்ப உயரம் போன்றவை முக்கிய அளவுகோள்களாக உள்ளன. அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி பட்டியலில் உள்ள 117 நாடுகளில் இந்தியா 102ம் இடத்தில் உள்ளது என்பது தான் கசப்பான உண்மை. இது அவசர நிலையைக் குறிக்கிறது. அவசரநிலை என்பது இந்தியா உணவுப் பாதுகாப்பில் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை காண்பிக்கிறது. முதலில் உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.உணவுப் பாதுகாப்பு
ஒரு நாட்டின் உணவுப் பாதுக்காப்பை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதாவது வேளாண் உற்பத்தி, காலநிலை, வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, மழை, வருமானம், உணவு உற்பத்தி, உணவுத்தரம், சுகாதாரமான தண்ணீர், சுற்றுப்புறச் சூழல், அரசின் நிர்வாகம், அரசியல் நிலைப்புத் தன்மை, சமூகக் கட்டமைப்பு போன்ற பல காரணிகள் உள்ளன. எனவே ஒரு குறிப்பிட்ட காரணி மட்டும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துவிடாது. இதன் பிண்ணனியை தெரிந்து கொள்வோம்.

உணவுப் பாதுகாப்பின் அவசியம் கருதி 1996ம் ஆண்டு ரோம் நகரின் ஐ.நா சபையின் சார்பில் உலக உச்சி மாநாடு நடைபெற்றது. “பட்டினி அல்லது பஞ்சம் என்ற அச்சுறுத்தலில் மக்கள் வாழ வேண்டிய அவசியம் இருக்காது” என்பது தான் இம்மாநாட்டில் கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான தீர்மானம். உணவுப்பாதுகாப்பிற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வகையில் பொருள் கூறினாலும், ஐக்கிய நாடுகள் சபை இதற்கான தெளிவான இலக்கணத்தை தந்துள்ளது. அதாவது “எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும், போதுமான சத்தான, விரும்பும் வகையில், சமூக-பொருளாதார நிலைக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில், அவர்களின் உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்தோடு வாழ்க்கை நடத்தவும் தேவையான உணவை அளிப்பதுதான்” என்று விளக்கம் தந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு என்பது நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை,
1. உணவு இருப்பு: அதாவது இது நாட்டின் வேளாண்மை உற்பத்தி , உணவு தானிய இருப்பு, இறக்குமதி சம்பந்தப்பட்டவை;
2. உணவை அணுகும் திறன்: இது மக்களின் வாங்கும் சக்தி, வேலைவாய்ப்பு சம்பந்தமானதாகும்;
3. உணவை உடல் ஏற்கும் திறன்: இது தூய்மையான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதி சார்ந்ததாகும்.
4. நிலைப்புத் தன்மை: மேற் சொன்ன மூன்று அம்சங்களும் எல்லா காலங்களிலும், சூழ்நிலையிலும் நீடித்த நிலையாக இருத்தல் வேண்டும். வேளாண்மை, கால்நடைத் துறை, மீன்வளம் நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் மீன்வளம் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த அளவிற்கு பங்கு அளிக்கிறது என்பதை அறிவது மிகவும் அவசியம். மீன் ஒரு உணவுப் பொருள் மட்டும் அல்ல, இது நாட்டின் முக்கியமான வர்த்தகப் பொருளாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவின் மீன்வளம்
உலகின் இந்தியா, மீன் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும், நீர்வாழ் உயிரி வளர்ப்பில் இரண்டாம் இடத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.07 விழுக்காடு பங்கினையும் பெற்று நாட்டின் உணவுப்பாதுகாப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மீன்வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தி 13.42 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். இந்தியாவின் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் மீன் மற்றும் மீன் பொருட்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18 ம் ஆண்டில் மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றுமதி ரூ. 46,589.37 கோடி ம ப்பில் 13.93 இலட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10 விழுக்காடும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடுமாகும். அதன் மூலம் சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைபெற்று பயன் அடைகின்றனர். நாட்டின் மக்கள் தொகைப் பெருகத்திற்கு ஏற்ப உணவுத் தேவை கூடுவதால் மீன் உணவுத்தேவை அதிகரித்து வருகிறது. இவற்றில் உள்நாட்டு மீன்வளம், கடல் மீன்வளம் இரண்டும் நாட்டின் உணவுத் தேவையில் முக்கிய பங்குவகிக்கிறது.தமிழ் நாட்டின் மீன்வளம்:
தமிழ்நாடு 1, 076 கி.மீ நீளமுடைய கடற்கரையையும், 41, 412 ச.கி.மீ கண்டத் திட்டு பகுதியையும், 1.90 இலட்சம் ச.கி.மீ சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் கொண்டிருக்கிறது. இது 5.209 இலட்சம் டன் மீன் உற்பத்திக்கு பங்களிக்கிறது. இந்த ஆதாரங்களில், அதாவது 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள 10.48 லட்சம் கடல்சார் மீனவ மக்களுக்கு முக்கிய வாழ்வதாரங்களாக விளங்குகிறது. நீர்த்தேக்கங்கள், பெரிய நீர்பாசன குளங்கள், சிறிய பாசன குளங்கள், குறுகிய கால நீர்நிலைகள், குளங்கள், ஆறுகள் மற்றும் கழிமுகங்கள் ஆகியவை உள்நாட்டு நீர்வள ஆதாரங்களாக விளங்குகிறது. இதன் நிலப்பரப்பு 3.83 இலட்சம் ஹைக்டேர் ஆகும். இது 2.35 இலட்சம் உள்நாட்டு மீனவ மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மீன் வர்த்தகம் அந்நிய செலாவனி கையிருப்பை பெருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய இறால்களுக்கு வெளிநாட்டு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் வருமானத்தின் மூலம் உள்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வழி ஏற்படுகிறது. மேலும் பல இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு கிடைக்க வகை செய்கிறது. மீன் உற்பத்தியை பொருத்தவரை அறுவடைக்கு முன்பு சுமார் 20 விழுக்காடு பெண்கள் மீன் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அறுவடைக்கு பின்பு அதாவது உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு சேரும் வரை பெண்களின் பங்கு சுமார் 60 விழுக்காடு வரை இருக்கிறது. பெண்களின் வேலை வாய்ப்பு, வருமானம், சுயசார்பு நிலை ஏற்படுவதற்கு மீன் வளம் முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்தியா மீன் உற்பத்தியில் தன்னிறவு அடைந்தாலும், தனி நபர் மீன் நுகர்வு அடிப்படையில் பின்தங்கியே உள்ளது. இந்தியாவிலிருந்து மீன் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் மீன் நுகர்வு மிகவும் குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் தனி நபர் மீன் நுகர்வு ஆண்டிற்கு 25.9 கிலோ கிராம் என்ற அளவில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 9.3 கி.கி ஆகவும், தமிழகத்தில் 9.83 கி.கி என்றளவில் மட்டுமே உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரையின் படி ஆண்டிற்கு குறைந்த பட்சம் 12 கி. கி தனிநபர் மீன் நுகர்வு இருக்க வேண்டும். இது உலக சராசரி மீன் நுகர்வை (20 கி.கி) விட குறைவாகும். ஐப்பானில் ஆண்டிற்கு 86 கி.கி, மியான்மரில் 13 கி.கி, இலங்கையில் 11 கி.கி, வங்காளதேசத்தில் 10 கி.கி. என்றளவில் உள்ளது. மீன் நுகர்வு அளவை பொருத்து பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தியாவை பொருத்த வரை லட்சதீவுகள், கோவா, கேரளா, போன்ற மாநிலங்களில் அதிகமாகவும் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மீன் நுகர்வு மிகக் குறைவாகவும் உள்ளது. இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகம் இருந்தாலும், அதற்கேற்ப நுகர்வு உயரவில்லை. விலை உயர்ந்த மீன்கள் ஏற்றும செய்யப்பட்டாலும் குறைந்த விலையில் கிடைக்கும் மீன்களையாவது வாங்கி உட்கொள்ளலாம். அதற்கான விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் மற்ற மாமிச உணவுகளின் விலை, மருத்துவப் பயன்கள் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மீன் நுகர்வின் மூலம் அதிக பயன்கள் உள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், பொருளாதார பாதுகாப்பிற்கும், உணவுப்பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மீன்வளத்தின் பங்கு மிக அதிகம் உள்ளது. இயற்கையின் உயரிய உணவாக மீன் கருதப்படுகிறது. இது புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் முக்கிய ஆதாரங்களாகவும், ஓமேகா-3, கொழுப்பு அமிலங்கள், அயோடின், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளிட்ட அனைத்து வகையான நுண்ணூட்ட சத்துக்ககளின் ஆதாரமாக மீன் விளங்குகிறது. மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கும், மூலைவளர்ச்சிக்கும், கற்பினி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக அவசியமான உணவாக மீன் இருக்கிறது. எனவே மீன்நுகர்வை அதிகப்படுத்துவதின் மூலம் நாட்டில் நிலவும் மறைமுக பசியை போக்க முடியும்.எனவே எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் குறைந்த விலையில் தரமான மீன்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். மேலும், இந்தியாவின் ஆரோக்கியத்தை உறு செய்ய மீன் ஒரு முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. எனவே மீன் மற்றும் மீன்பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்தலை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மீன் உணவுப் பொருள்களுக்கான விற்பனை மையம் கயலகம் அங்காடியை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். வளர்ப்புக்கேற்ற மீன்களான, சாதாக்கெண்டை, நைல் லேப்பியா, கெளுத்தி மீன், மடவை, ரோகு, கொடுவா, நன்னீர் இறால், கட்லா மற்றும் ரெயின்போ டிரவுட் போன்ற எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மீன்களை வளர்த்து பயன் பெறுவதின் மூலம் உள்நாட்டு உணவுத் தேவையை வளங்குன்றா முறையில் பூர்த்தி செய்ய முடியும்.

மீன்வளம் ஒரு புதுபிக்கத்தக்க வளமாக இருந்தாலும் அவற்றை முழுமையாக சரியாக பாதுக்காக்க வேண்டும். மீன்பிடித்தடை காலங்களில் கடல்பாசி வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்கலாம். கடல்பாசி வளர்ப்பு என்பது வளர்ந்து வரும் தொழிலாகும். இத்தொழிலை மீனவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இது உணவு தேவையையும், அதிக வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் தருவதால் நாட்டின் உணவுப்பாதுக்காப்பு உறுதி செய்யப்படுகிறது. இதன் அவசியம் கருதி 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா நிறுவப்படவுள்ள அறிவிப்பு நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்பில் தற்சார்ப்பு நிலையை அடைய வழிவகுக்கும்.

மக்களிடையே மீன்களை பற்றியும் மீன் உணவின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு அதிகம் ஏற்படும் போது மனிதனுக்கும் இயற்க்கைக்கும் கேடு விளைவிக்கும் தொழில்கள் அழிந்து விடும். முக்கியமாக ஆசிய கெளுத்தி மீன்கள் உற்பத்தி போன்ற சட்ட விரோதமான மீன் உற்பத்தி நடவடிக்கைகள் இல்லாமல் போய்விடும். எனவே மீன் உணவு கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவில் பால் ஒரு சைவ உணவுப் பொருளாக கருதப்படுகிறது. குறிப்பாக மேற்குவங்கத்தில் ஒரு பிரிவு மக்கள் மீன்களை சைவ உணவாக கருதுக்கின்றனர். அதனை போன்று நாடு முழுவதும் மீன் ஒரு சைவ உணவு பொருளாக கருதலாம்.மனிதன் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுமெனில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் படி ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு கிராமப்புரத்தில் 2400 கி.கி கலோரியும் நகர் புறத்தில் 2100 கி.கி கலோரியும் கிடைக்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எவ்வளவோ உணவுப் பாதுகாப்பு திட்டங்கள் இருந்தாலும் சாமானிய மக்கள் அனைவருக்கும் நுண்ணுட்டச்சத்துகள் நிறைந்த உணவு பண்டங்களை வாங்கி நுகரக் கூடிய சூழ்நிலை இல்லை இந்நிலையில் மனிதனுக்கு தேவையான கலோரிமிக்க உணவுக்கு மீன் ஒரு பதிலீடாக இருக்கிறது.

இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, அக்குவாபோனிக்ஸ், ஹைட்ரோபோனிக்ஸ், வண்ணமீன் வளர்ப்பு போன்ற தொழில்களை ஊக்குவிப்பதின் மூலம் குடும்பம், உள்ளூர், உள்நாட்டு உணவுத் தேவைக்கும், வருவாய் பெருக்கத்திற்கு வழி ஏற்படும்.

நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி நீர் தாவரங்களான கடல்பாசி, சுருள்பாசி மற்றும் மனித நலனுக்காக வளர்க்கப்படும் நீர் தாவரங்கள் வளர்ப்பு தொழில்களை ஊக்குவிப்ப ன் மூலம் மனிதனுக்கு தேவையான கலோரி மிக்க உணவையும், வேலைவாய்ப்புகளையும் பெருக்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாவின் மூலமும் நாட்டின் வருமானத்தை பெருக்க முடியும்.

“உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா யல்வது நாடு”

என்று குறள் கூறுகின்றது. அதாவது மிக்க பசியும், தீராத நோயும் வெளியிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இனிதாக நடைபெறுவதே நல்ல நாடாகும். நாட்டின் உணவுப் பிரச்சனையை போக்குவதற்கு மீன் முக்கிய உணவாகவும், மீன்வளம் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாலும் மீன் வளத்தை பாதுகாப்பது அவசியமாகும். உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை. எனவே உணவு பாதுகாப்பின் அவசியம் கருதி மீன் வளத்தை பெருக்குவது ஒவ்வொருவரின் கடமை, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது அரசின் தலையாய கடமையாகும்.

முனைவர் இல. சுருளிவேல்
உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி- 601 204
கைப்பேசி: 9566362894, மின்னஞ்சல்: [email protected]Show 1 Comment

1 Comment

  1. Bharathi Raja

    மிக முக்கியமான நல்லதொரு கட்டுரை நடைமுறையில் சாத்தியமானதும் கூட. ஆனால் ஏனோ இந்தியா போன்ற மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ள நாட்டில் சைவம் அசைவம் என்ற அர்த்தமில்லாத காரணம் தெரியாத காரணங்களால் இது போன்ற மிக முக்கியமான கட்டுரைகளுக்கு பதில் கிடைப்பது சற்று கடினமே – இயற்க்கை நேசன்💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *