ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கு – மேரி டேவிஸ் (தமிழில்: ச. வீரமணி)

ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கு – மேரி டேவிஸ் (தமிழில்: ச. வீரமணி)

 

(பெண்கள் உண்மையில் ‘புரட்சியின் மருத்துவத்தாதி’யாக இருந்தார்கள். புரட்சி பிறக்கும்போதும் இருந்தார்கள், மிகவும் முக்கியமாக பிறந்தபின் அதனை வளர்த்தெடுக்கும் ஆரம்பக் கட்டங்களிலும் இருந்தார்கள்.)

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு உலகம் முழுதும் மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்துமே இப்போதும் நினைவுகூர்வது உதவிகரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. எனினும் 1917இல் நடைபெற்ற இரு புரட்சிகளிலும் ஓர் அம்சம் அவற்றில் பெண்களின் பங்கு குறித்ததாகும். அது இப்போது அநேகமாக முற்றிலுமாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

1917இல் இரண்டு முறை முன்னணியில் தோன்றினார்கள் என்கிற கருத்து பொதுவாக இருந்துவருகிறது. முதல் தடவை என்பது பிப்ரவரி 23 அன்று பெட்ரோகிராடில் தற்காலிக அரசாங்கம் (provisional government) நிறுவப்படுகையில் அதன் கட்டியக்காரர்களாக (harbingers) இருந்தார்கள் என்பதாகும்.

இரண்டாவது தடவை, அக்டோபர் 25 அன்று அரசாங்கத்தின் இயங்குமிடமாக இருந்த குளிர்கால அரண்மனையை போல்ஷ்விக்குகள் தாக்கியபோது அதனைப் பாதுகாத்திடும் விதத்தில் ஒரு பட்டாலியன் ஒன்றின் அங்கமாக இருந்து, பூர்ஷ்வா பெண்கள் ஒரு பிற்போக்குத்தனமான பங்கினை ஆற்றிய சமயத்திலாகும்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் உண்மைதான் என்றபோதிலும், இவ்வாறு இந்த இரண்டினை மட்டும் ஏனோதானோவென்று கூறுவதென்பது, புரட்சி இயக்கம் முழுவதும் பெண்கள் வகித்திட்ட பங்களிப்பினை வெளிக்கொணராது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், உண்மையில் பெண்கள் ‘புரட்சியின் மருத்துவத் தாதி’யாக இருந்தார்கள். புரட்சி பிறக்கும்போதும் இருந்தார்கள், மிகவும் முக்கியமாக பிறந்தபின் அதனை வளர்த்தெடுக்கும் ஆரம்பக் கட்டங்களிலும் இருந்தார்கள் என்று ஜானே மெக்டெர்மிட் மற்றும் அன்னா ஹில்யார் எழுதிய புத்தகத்தின் தலைப்பான ‘புரட்சியின் மருத்துவத்தாதிகள்’ என்பதற்கிணங்க புரட்சியில் பங்கேற்ற பெண்களின் முக்கியமான பங்களிப்பிற்கு அநீதி இழைத்தது போன்றதாகும். மேலும் 1919-20இல் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதும் புரட்சியைப் பாதுகாப்பதில் அவர்களின் கேந்திரமான பங்களிப்பு இருந்தது.

Women and Revolution: Women’s Political Activism in Russia from …

புரட்சியின் பெண்களின் பங்களிப்பு குறித்து மிகவும் சரியாகக் கூற வேண்டுமானால், 1905இல் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை மீளவும் ஆய்வது மிகவும் அவசியமாகும். அப்போதே பெண்களின் சமத்துவத்திற்கான அமைப்பு (League for Women’s Equality) உருவானதிலிருந்தே பெண்களுக்கான இயக்கம் இயங்கத் தொடங்கிவிட்டது.

அந்த சமயத்தில் ஐரோப்பாவில் இதேபோன்று பெண்களுக்காக பல அமைப்புகள் செயல்பட்டதைப் போன்றே, இந்த அமைப்பும் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் குறிப்பாக பூர்ஷ்வா பெண்களின் பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்தின. எனினும், ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா செட்கின் (Clara Zetkin) பெண்கள் வர்க்கங்களின் அடிப்படையில் பிரிந்திருந்ததைப் புரிந்துகொண்டு, உழைக்கும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தார். இதனை அவர் ஸ்டட்கார்ட்டில் 1907இல் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் முன்வைத்தார். அவர் முன்வைத்த ஆவணத்தில் குறிப்பிட்டிருந்த தாவது: “வர்க்க முரண்பாடுகள் உழைக்கும் பெண்களை பூர்ஷ்வா பெண்களின் இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதை சாத்தியமற்றதாக்கி இருக்கின்றன.

இதன் பொருள், பூர்ஷ்வா பெண்கள் கோரும் கோரிக்கையான, அனைவருக்கும் வாக்குரிமை என்கிற கோரிக்கை மீதான போராட்டத்தை அவர்கள் ஏற்கவில்லை என்பதல்ல, மாறாக பல்வேறு முனைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக, அக்கொடுமைகளைப் புரிபவர்களுக்கு எதிராக அவர்களும் எங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும்.”

இந்த செய்தி, ரஷ்யாவில் கொங்கார்டியா சமோய்லாவா (Konkordiya Samoilava), அலெக்சாண்ட்ரா கொலண்டாய் (Alexandra Kollontai), மற்றும் இதர போல்ஷ்விக் பெண்களால், 1907இல், முன்னெடுத்துச்செல்லப்பட்டது. இவர்கள் உழைக்கும் பெண்கள் பரஸ்பர உதவி மையம் (Working Women’s Mutual Assistance Centre) என்ற ஒன்றை உருவாக்கி, உழைக்கும் பெண்கள் மத்தியில் சோசலிசக் கருத்துக்களைப் பரப்பினார்கள், தாங்கள் உழைக்கும் இடங்களில் சட்டபூர்வமாக இயங்கும் தொழிற்சங்கங்களில் பங்கேற்றுச் செயல்பட ஊக்குவித்தார்கள். அதேபோன்று சோசலிஸ்ட் இயக்கமும் பெண்களின் பிரச்சனைகளைத் தன் கையில் எடுக்காது முன்னேறமுடியாது என்பதையும் உத்தரவாதப்படுத்தினார்கள்.

Alegría: Mujeres Combatientes en los días de la Gran Revolución de ...
Joy: Women Combatants in the Days of the Great Revolution of USSR

சர்வதேச மகளிர் தினம் 1910இல் துவங்கப்பட்டது என்றபோதிலும், அது 1913வரை ரஷ்யாவில் கொண்டாடப்படவில்லை.

லெனின், உழைக்கும் பெண்களின் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை விடாது ஆதரித்துவந்தார். அதேபோன்று பெண்களின் பிரச்சனைகளை முன்வைத்து ‘உழைக்கும் பெண்தொழிலாளி’ என்று பொருள்படும் ‘ரபோட்நிட்சா’ (The Woman Worker) என்னும் புதிய இதழ் வெளியிடுவதற்குக் காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்த இதழ் 1914இல் முதலில் வெளிவந்தது.

அந்த ஆண்டு முதல் உலகப் போர் வெடித்ததானது, தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் பெரிய அளவில் உடைப்பினை ஏற்படுத்த உதவியது. ஐரோப்பாவில் செயல்பட்ட சோசலிஸ்ட்டுகள் மத்தியில் இடதுசாரி/வலதுசாரிப் பிரிவுகள் உருவாயின.

இவ்வாறான பிரிவு ரஷ்யாவில் மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. அங்கே 1903இலேயே செயல்பட்டுவந்த ரஷ்யன் சமூக ஜனநாயக மற்றும் தொழிலாளர் கட்சி (RSDLP– Russian Social Democratic and Labour Party) போல்ஷ்விக்குகள் பிரிவு என்றும், மென்ஷ்விக்குகள் பிரிவு என்றும் இரண்டாகப் பிரிந்தன. ஆனால், போல்ஷ்விக்குகள் மிகவும் பிரபல்யமான யுத்த எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றிய அதே சமயத்தில், மென்ஷ்விக்குகள் மக்களை வெறுப்படையச் செய்யக்கூடிய விதத்தில் யுத்தத்தை ஆதரித்தனர்.

இவ்வாறு யுத்தத்திற்க ஆதரவு/எதிர்ப்பு என்கிற பிரச்சனை மாதர் இயக்கத்திலும் எதிரொலித்து வர்க்கப்பிரிவினைகளை ஏற்படுத்தியது.

பிரிட்டனில் எம்மலின் பாங்குர்ஸ்ட் தலைமையில் இயங்கிய பூர்ஷ்வா மாதர் இயக்கம் யுத்தத்தை ஆதரித்தது. போல்ஷ்விக் சகோதரிகளின் செல்வாக்கின்கீழ் இயங்கிவந்த உழைக்கும் மாதர் அமைப்பு முதல் உலகப் போருக்கு எதிராக இயங்குவது அதிகரித்துக்கொண்டிருந்தது.

1917இல் தொழிற்சாலைகளில் பெண்கள் ஏராளமாகப் பணியில் சேர்ந்தார்கள். அங்கே வேலைபார்த்து வந்த ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டதால் அந்த இடங்களில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். 1917 பிப்ரவரி 23 அன்று (கிரிகோரியன் காலண்டரின்படி இப்போதைய மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் வேலைநிறுத்தங்களாலும், பெண்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்களாலும் அனுசரிக்கப்பட்டது.

(1917இல் சர்வதேச மகளிர் தினத்தன்று, பெட்ரோகிராடில் நடைபெற்ற மகளிர் பேரணி)

இது புரட்சிக்கு இட்டுச் சென்றது என்று போல்ஷ்விக் இதழான பிராவ்தா குறிப்பிட்டது.: “…புரட்சியின் முதல் நாள் மகளிர் தினமாகும். … பெண்கள் … ராணுவ வீரர்களின் தலைவிதியைத் தீர்மானித்தார்கள். அவர்கள் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கொட்டடிகளுக்குச் சென்றார்கள், ராணுவ வீரர்களிடம் பேசினார்கள், அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் புரட்சியுடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். … வீரப் பெண்மணிகளே, உங்களுக்குத் தலைவணங்குகிறோம்.”

ஆயினும், பாரம்பர்யமாகக் கூறப்பட்டுவரும் கருத்துக்கு முரணாக, புரட்சிகர நடைமுறையில் உழைக்கும் பெண்கள் ஈடுபட்டதன் துவக்கம்தான் இது. பூர்ஷ்வா பெண்ணியலாளர்களைப் பொறுத்தவரை இதுவே அவர்களது முடிவாக மாறிவிட்டது.

பூர்ஷ்வா பெண்கள் முதலில் எல்வாவ் (Lvov) ஆலும், பின்னர் கெரன்ஸ்கியாலும் வழிநடத்தப்பட்ட புதிய தற்காலிக அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்றார்கள். அவர்களது பிரதானமான கோரிக்கை, “யுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்” என்பதேயாகும்.

இத்தகைய யுத்தத்திற்கு ஆதரவான பெண்களின் மத்தியிலிருந்துதான் ஒரு பெண்கள் பட்டாலியன் உருவாக்கப்பட்டது. ஜெர்மானியர்களையும், போல்ஷ்விக்குகளையும் எதிர்த்துப் போரிட அது கேட்டுக்கொள்ளப்பட்டது. யுத்தத்தைத் தொடர்ந்து நடத்திடுமாறு கெரன்ஸ்கியைக் கேட்டுக்கொள்வதற்காக வந்த பாங்குர்ஸ்ட், 1917 ஜூலையில் அவர்களைச் சந்தித்தார்.

எனினும், பெண் தொழிலாளர்கள், முழுமையாக யுத்தத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் நின்றார்கள். இதன்காரணமாக அவர்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. சேவைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைக்கூட வேலைக்குத் திரும்புமாறு அவர்களால் கேட்டுக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, 1917 மார்ச் மாதத்தில், சோஃபியா கொன்சார்ஸ்கயா என்னும் போல்ஷ்விக்கால் தலைமை தாங்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் நான்கு வாரங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தார்கள்.

1917 ஏப்ரலில் ஒரு லட்சம் ராணுவவீரர்களுடைய மனைவிகள், பேரணியாகச் சென்று, “சிறந்த ரேஷன் வழங்கு”, என்றும், “யுத்தத்திற்கு முடிவு கட்டு” என்றும் முழக்கமிட்டார்கள். கொலந்தாய் இவர்களது பேரணியில் உரையாற்றினார்.

போல்ஷ்விக்குகள் பெண்களின் மத்தியில் கிளர்ச்சிப் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார்கள். பெண்களின் இதழான ரபோட்னிஸ்டா மீண்டும் வெளிவந்தது. அதன் விற்பனை 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை சென்றது. நடேஷா குரூப்ஸ்காயா மற்றும் இனெஸ்ஸா அர்மாண்ட் இதன் ஆசிரியர் குழுவிலிருந்து செயல்பட்டார்கள்.

புரட்சிக்கு எதிராக ஆகஸ்ட்டில் சதியில் ஈடுபட்ட கொர்னிலாவின் முயற்சிகளை எதிர்ப்பதில் பெண் தொழிலாளர்கள் மிகவும் முனைப்புடன் செயல்பட்டார்கள். அவர்கள் தடை அரண்களை எழுப்புவதில் உதவியதுடன், “செஞ் சகோதரிகள்” (“Red Sisters”) என்ற பெயரில் மருத்துவ உதவிகளுக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

Big Sister, Little Sister, Red Sister — the three sisters of China …

செப்டம்பரில், சமய்லாவா பெண் தொழிலாளர்களின் முதல் மாநாட்டை நடத்தினார். அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் அது மீளவும் கூட்டப்பட்டது.

புரட்சிக்கு முன்பும் பின்பும் கூட ஏராளமான பெண்கள் செஞ் சேனையினராகத் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளனர். படைவீரர்களாகவும் சென்று போரிட்டுள்ளனர்.

புரட்சிக் காலத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பிற்கு முக்கிய சான்றாவணமாகத் திகழ்வது, அக்டோபர் 18 அன்று சோசலிஸ்ட் அரசாங்கம் பிறப்பித்த முதல் ஆணைகளில் (first decrees) ஒன்று, திருமணம் மற்றம் குடும்பம் குறித்த சட்டம் (Code on Marriage and the Family) ஆகும். இந்தச் சட்டம், பெண்களின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக உறவுகளின்மீது ஒரு புரட்சிகரமான பார்வையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது.

ரஷ்யப் புரட்சியின் பெண்களின் பங்களிப்பு குறித்து 1920இல் செட்கின்னுடன் நடைபெற்ற உரையாடலின்போது தோழர் லெனின் மிகவும் சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறார். அப்போது அவர், “பெண் தொழிலாளர்கள் புரட்சியின்போது மிகவும் அற்புதமானமுறையில் செயல்பட்டார்கள். அவர்களில்லாமல் எங்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது.”

இப்போது, நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தோழர் லெனின் கூறிய வார்த்தைகள், பெண்களின் புரட்சிகரப் பங்களிப்பு குறித்த முனைப்பான நினைவூட்டலாக இருந்திட வேண்டும்.

(நன்றி: மார்னிங் ஸ்டார்)

(கட்டுரையாளர், லண்டன் பல்கலைக் கழகத்தின், ராயல் ஹாலோவேயில் உள்ள லண்டன் பல்கலைக் கழகத்தின், தொழிலாளர் வரலாற்றுத்துறை, வருகைப் பேராசிரியராவார். )

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *